தனிநடிப்பு- பிரசன்னா

வணக்கம் ஜெ,

நலம் தானே? ஏப்ரல் 14 அன்று மதுரையில் தங்களை நேரில் சந்தித்து சில மணி நேரம் தங்களின் அருகாமையில் இருந்தது மன நிறைவாக இருந்தது. கொரோனாவிற்கு மத்தியிலும் பெங்களூரிலிருந்து மதுரைக்கு வர மூன்று காரணங்கள் இருந்தன.

1) நீங்கள் பங்கு பெரும் கூட்டங்களுக்கு வந்து சென்றால் எழுத்தில் ஈடுபடும் உத்வேகம் அதிகமாகும். இது பலர் உணர்ந்தது தான். 4 மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றிற்கு சென்று வந்து விட்டால் அதனுடைய kick சில நாட்களுக்கு தங்கும்.

2) சிவராஜ் அண்ணாவின் சிரிப்பு. சிவராஜ் அண்ணாவை முதல் முறை “டமருகம்” துவக்க நாள் நிகழ்வில் கண்டேன். அந்த சிரிப்பில் உண்மையிலேயே மயங்கி வீழ்ந்தேன் :) மனம் விட்டு நிறைவுடன் கூடிய சிரிப்பென்பது அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை. ஆனால், அதை அடைவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்கு ஒரே வழி செயல் தான் என்பது தன்மீட்சி நூல் தெள்ளத்தெளிவாக உணர்த்தியது.

3) தன்மீட்சி நூலை வாசித்து நான் எழுதிய கட்டுரை தேர்வாகியிருந்தது. நித்யாவின் புகைப்படத்துடன் உங்களுடைய வாசகமும் கூடிய அந்த பெரிய ஃபிரேம் போட்ட புகைப்படம் இப்போது என் சுவரில் அமைதியாக இருக்கிறது. மூன்றாவது காரணத்திற்காக தான் மதுரைக்கான பயணமே என்றாலும் முதல் இரண்டு காரணங்கள் என்னளவில் மிகவும் முக்கியம்.

தன்வெளிப்பாடு பற்றி அண்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தீர்கள். அதன் விளைவாக உருவான “ஒளி” என்ற நாடகத்தையும் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. உங்களுடைய எழுத்துக்காகவும், நரேனின் நடிப்பிற்காகவும். நண்பர் ஆனந்துடன் அதைப் பற்றி பேசிய போது என் மனதில் அந்நாடகம் மேடையில் அமைந்திருந்தால் எப்படி அமைத்திருக்கலாம் என்றெண்ணத் தொடங்கினேன். ஆறு பேருக்கும் focus light (with different colors). ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ண விளக்கு. எவர் பேசுகிறாரோ அவர் மீது மட்டும் ஒளி பாய்ச்சப் பட வேண்டும். அவர்கள் அனைவருமே ஒரு பெட்டியில் அடைப்பட்டுக் கொண்டிருப்பது போன்று set அமைக்க வேண்டும். ஆனால், சில கதாபாத்திரங்கள் சில காட்சிகளில் அதெல்லாம் கற்பனை என்பது போல் உடைத்து வெளி வந்துக் கொண்டே இருக்க வேண்டும். கடைசி சில நிமிடங்களில் வந்து வந்து மறையும் ஒரு அமானுஷ்ய ஒளி பார்வையாளர்கள் பக்கமும் மேடையிலும் தெரிய வேண்டும். மேடையை சுற்றிலும் சிறைக் கம்பிகள் வரையப்பட்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் தோன்றிக் கொண்டே இருந்தது.

நான் கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது நாடகத்தில் நடித்து வருகிறேன். கேமெராவிற்கு முன் நடிப்பதற்கும் மேடையில் தோன்றி நடிப்பதற்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது போல் தோன்றியது. எழுத்தில் வெளிப்படும் நான், நடிக்கும் போது மாறுபடுகிறேன். ஆனால், எழுதும் போதும் நடிக்கும் போதும் நம்மையே மறந்து அடையும் உச்சம் எனக்கு நிறைவைக் கொடுக்கிறது. அந்த உச்சம் ஒன்றே போல் இருப்பதாக தோன்றியது. என்னை மறந்து முழுதாக எழுத்திலோ நடிப்பிலோ லயித்தல். தர்க்கத்துக்கு நேர் எதிரான மன நிலை அது. ஆனால் நான் புழங்குவது, Data Analytics. எண்களால் சூழப்பட்டு, 2+2 = 4 என்று ஒரே முடிவாக வகுக்கப்பட்ட ஒற்றைப் பாதையில் எவ்வித பிசகும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்ததும் எழுதவோ, நடிப்பிற்கான பயிற்சியையோ செய்து கொண்டிருக்கிறேன். காலை என்பது தவறவிடக் கூடாத உன்னதப் பொழுதென்பதை உணர்ந்தேன். மூளை தர்க்கத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறது. எழுத்து மற்றும் நடிப்பிலிருந்து எண்களின் உலகிற்கு எளிதாக gear மாற்ற முடிகிறது. ஆனால், vice-versa herculean task (என் போன்றவர்களுக்கு).

எதையோ சொல்ல வந்து எங்கோ சென்றுக் கொண்டிருக்கிறேன். ஊரடங்கு காலம் தொடங்கிய உடனே எங்கள் குழுவின் நாடக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திபோடப் பட்டன. எப்போது மீண்டும் நடைபெறும் என்று தெரியாத குழப்பம். அப்போது என் மொத்தக் குழுவும் கவலையில் சுருண்டனர். நானும் ஏமாற்றத்தில் திளைத்தேன். அதை வெல்ல ஏதாவது வழி கிடைக்குமா என்றெண்ணி, பாவாவின் கதை சொல்லும் வீடியோக்களினால் உந்தப்பட்டு, எனக்குப் பிடித்த வகையில் என்னை பாதித்த மற்றும் “சொல்லக்” கூடிய கதைகளை நடித்துப் பார்க்கலாம் என்றெண்ணினேன். மேடையில் கையை காலை குரலை உயர்த்தி நடித்தப் போது வந்த சுந்தந்திர உணர்வு கேமெராவிற்கு முன் முற்றிலும் கட்டுப்பட்டது. ஆனாலும் வேறு வழி இல்லை. ஊரடங்கில் வெறும் வாசிப்பு, சினிமா மற்றும் எழுத்து மட்டும் போதாது. உடல், கை கால் முகம் அனைத்தையும் இயக்கி உள்ளுக்குள் ஓருணர்வை தக்கவைத்துக் கொண்டு வெளிப்படுத்தும் நடிப்பும் எனக்கு மிகத் தேவையான வெளிப்பாடாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் வாக்கில் இது போன்று எப்போதெல்லாம் ஒரு கதை அல்லது கரு என்னை உந்தித் தள்ளுகிறதோ, அதை கூறும் படியாகவும் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து “சொல்லிப்” பார்த்தேன். என் நண்பர் ஒருவர் பெங்களூரில் ஒரு முழு நேர கதைசொல்லி. அவரிடமும் வேறு சிலரிடமும் காண்பித்து சில தவறுகளை திருத்திக் கொள்வேன். ஆனால், technical சமாச்சாரங்களை நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நடிக்கும் போது தேவையான ஒரு spontaneity, flow, honesty, keeping up and staying at a certain emotional level எல்லாம் technical விஷயங்களில் கவனம் செலுத்தும் போது மறைந்து விடுவதாக எண்ணுகிறேன்.

கிட்டத்தட்ட 8 வீடியோக்கள். அதிலொன்றை இன்னும் ஏற்றவில்லை. அது தான் நான் செய்து பார்த்த முதல் முயற்சி. இந்த எட்டைத் தவிர குழந்தைகளுக்கான 3 கதைகளை கூறி ஒரு என்.ஜி.ஓவின் இன்ஸ்டாகிராமில் ஏற்றுவதற்காக பதிவு செய்து கொடுத்தேன். வெண்முரசு நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து செய்ய பெரு விருப்பம் உண்டு. சந்தோஷ் லா.ஓ.சி. ஒரு கதையை அனுப்பினார். அதை செய்ய வேண்டும். அதற்கு நடுவே வேறு சில கதைகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன. ஏன் இப்போது இந்த காணொளிகளை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், அனுப்ப வேண்டும் தோன்றிற்று. இலக்கிய கதைகள் பலவற்றை பலர் இப்போது audio book ஆக வெளியிடுகின்றனர். தமிழ் படிக்கத் தெரியாத பல செந்தமிழர்களுக்கு அது உதவுகிறது.

நான் முயன்று பார்த்திருப்பது ஒரு வகையான dramatic acting. இன்னும் முழு திருப்தியுடன் ஒரு காணொளியை என்னால் பதிவேற்ற முடியவில்லை. எனக்கு எழுந்து ஓடியாடி நடிக்க வேண்டும். அதற்கு இன்னொரு மனிதத் துணைத் தேவை.  கீழே இரண்டு காணொளிகளுக்கான Youtube link இருக்கிறது. ஒன்று எஸ்.ராவின் குறுங்கதையிலிருந்து. மற்றொன்று தீப்பாதி என்ற தன்னனுபவ கதையிலிருந்து (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு). முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. இவ்வனைத்து காணொளிகளையும் கண்டால் என் நடிப்பின் வளர்ச்சி தெறியும் அல்லது தெரியாமல் போகலாம், தாடியின் வளர்ச்சி நிச்சயம் தெரியும்.

நன்றி

எஸ்.பிரசன்ன கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமுதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்
அடுத்த கட்டுரைவிசை- கடிதங்கள்