துறவும் இலக்கியவாசிப்பும்- ஒரு கடிதம்

ஒரு மனிதன் எதன் பொருட்டு தனது வாழ்வில் மிக முக்கியமான ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வருகிறான் என்பதை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏதோ நமக்குத் தெரிந்த வகையில் இது முக்கியம் அது முக்கியம் என்று விவாதத்தில் தொண்டை கிழிய பேசலாம். விவாதம் முடிந்தவுடன், இதெல்லாம் தேவையா சும்மா இருக்கிறத விட்டுட்டு எதுக்கு சாமி இந்த வம்பெல்லாம் என்று யோசித்து தூக்கம் கெடுத்து கொள்ளலாம்.

ஏனோ இதை தங்களுக்கு தெரிவிக்க தோன்றியது. இவையெல்லாம் நமக்கு தேவையா என்கின்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுகிறது. மனம் சும்மாயிரு சும்மாயிரு என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒடுங்கி அமர்தல் மட்டுமே உனக்கான பாதை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

மிக்க அன்புடன்

அன்புள்ள _  அவர்களுக்கு,

இலக்கிய விவாதத்தில் ஈடுபடுவதைப் பற்றி கேட்டிருந்தீர்கள். தாங்கள் அறியாதது அல்ல. விக்ஷேபணம் என்பது அகத்தே கருவாக, விதையாக கிடப்பவற்றை செயலாக வெளிப்படுத்தி வெளியேற்றிவிடுவது. செயல்கள் அனைத்தும் அகத்துளிகளின் உமிழல்கள்தான்.

நீங்கள் இலக்கிய வாசிப்பு -விமர்சனத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு அதற்கான தேவை இருக்கிறது, அதற்கான கரு உள்ளே இருக்கிறது என்றே பொருள். அதை மூடி உள்ளே தடுத்துவைக்க முடியாது. அது உள்ளே இருக்கும் வரை அதை இல்லாமலாக்கவும் முடியாது, அதிலிருந்து விடுபடவும் முடியாது.

வாசித்தும் பேசியும் ஒரு கட்டத்தில் அதை நீங்கள் கடந்துவிட்டால், உள்ளிருக்கும் விதைகளெல்லாம் முளைத்துவிட்டால் விடுபடுவீர்கள். பாலைவனத்தில் வீடுகட்ட மண் எடுக்கும்போது நீர் தெளித்து நாலைந்துநாள் வைப்பார்கள். விதைகளெல்லாம் முளைக்கும் அதை மீண்டும் காய வைப்பார்கள் மீண்டும் நீரூற்றி குழைத்து கட்டுவார்கள் இல்லையென்றால் சுவர்களில் செடிகள் முளைக்கும். அதைப்போல. நீரூற்றி எல்லா விதைகளையும் முளைக்கவைப்பதே விதைகளை அகற்றுவதற்கான வழி. இது

ஆனால் காமகுரோதமோகங்களுக்குப் பொருந்தாது. அவை முளைக்கும், ஆனால் அவற்றைவிட பெரிய எதிர்வினைகளை விளைவுகளை உருவாக்கும்.

ஆகவே ஒரு துறவிக்கு இலக்கியம் – இலக்கியப் பேச்சு தவறென நான் நினைக்கவில்லை. அவ்வாறு நித்யா சொன்னதும் நினைவில்லை. ஆனால் அதை கூர்ந்து கவனித்துச் செய்யவேண்டும். அது வெறும் ஆணவ வெளிப்பாடாக, பூசலாக ஆக விடக்கூடாது. அது கொந்தளிப்பை கசப்பை உருவாக்கக்கூடாது.

இலக்கியம் ஒருவகை உலகியல் என்பதனால் அதை உள்ளத்தின் ஒரு பெட்டியிலும் பிற சாதனைகளை இன்னொரு பெட்டியிலும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாமல் நடத்தவும் வேண்டும். இதுவே நான் அறிந்தது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். இத்தருணத்தில் சொல்வடிவை அளிப்பதே நான் செய்வது.

இங்கே சொல்லவேண்டிய இன்னொன்று உண்டு. இலக்கியம் காமகுரோதமோகங்களால் ஆனது. வாழ்வின் அலைக்கழிப்புகளால் ஆனது. அவற்றை கவனிக்கும் ஒரு யோகசாதகர் அவற்றிலிருந்து மெய்மையை நோக்கிய ஒரு பயணத்தையே செய்கிறார். அதை விழிப்புநிலையில், தெளிவாகச் செய்வதே உகந்தது. இலக்கியவாசிப்பை நீங்கள் கற்ற, உணர்ந்த மெய்மைநாட்டச் செயல்பாடுகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றால் இரண்டும் துலங்கக்கூடும்

உங்களுக்கு இருக்கும் தேவை என்பது அறிவார்ந்த செயல்பாடாக இருக்கலாம். அதுவே ஒருவகை யோகம்தான். பிரதிஃபா யோகம் என்பார்கள். சிலருக்கு அதுவும் தேவைப்படுகிறது. அந்தத் தேவை நிறைவுறாமல் அவர்களால் மேலும் செல்லமுடியாது. முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு துறவியிடம் கீதைக்கு ஓர் உரை எழுதும்படி நித்யா சொன்னார். அவர் சென்றபின் ‘கீதைக்குத்தான் ஏராளமான உரைகள் இருக்கின்றன, நீங்களும்கூட எழுதியிருக்கிறீர்கள்” என்றேன், சற்று நையாண்டியாகத்தான்.

நித்யா சொன்னார். “அவன் எழுதப்போவது அவனுடைய உரை. அவன் அறிந்த அனைத்தையும் தொகுத்துக்கொள்வான், அறியாத சிலவற்றை அடைவான். அதன்வழியாக முன்னால் செல்வான். அது ஒரு யோகசாதனை. அவன் எழுதி முடித்தபின் அந்நூலை எரித்துவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை”

அதையே சொல்ல விரும்புகிறேன். நீங்கள் உங்கள் மெய்ஞானத்தேடலை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் தீவிரமான அறிவுத்தளப் பணி ஒன்றைச் செய்யலாம். அது உங்களை முழுமையாக ஆட்கொள்ளலாம். அதற்கான விழைவு  நிறைவேறும், அதனூடாக நீங்கள் கடந்தும் செல்லக்கூடும். அந்த அறிவுச்செயல்பாட்டுக்கான தேவை ஒரு தடையென இருக்கவேண்டியதில்லை.

அந்த அறிவுப்பணியில் இந்த இலக்கியவாசிப்பு ஒரு பங்கை ஆற்றலாம். இதை அதனுடன் இணைத்து உங்களுக்கான உசாவல்களையும் கண்டடைதல்களையும் நிகழ்த்திக்கொள்ளலாம்.

இவை ஆலோசனைகள் அல்ல. அப்படி ஓர் இடத்தில் என்னை வைத்துக்கொள்ளவில்லை. நான் அறிந்ததை பகிர்ந்துகொள்கிறேன், அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியம், இடதுசாரிகள், தலித்தியர்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி பற்றி…