பார்ப்பான் பிறப்பொழுக்கம்

சமண வள்ளுவர்

வணக்கம் ஜெ,

இந்த குறளில் வரும்  “பார்ப்பான்” என்னும் சொல், அந்தணரைக் குறிக்கிறதா?  காண்பவன் என்ற பொருளும், சரியாக இருப்பதாகத் தோன்றவில்லையே ?

எல்லா உரைகளிலும் அந்தணர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.  உங்கள் கருத்து என்ன?

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்குறள் 134

[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

அன்புடன்

கோபிநாத்,     

சேலம்.

அரசாங்க வள்ளுவர்

அன்புள்ள கோபிநாத்

குறளின் பொருளை கொள்ளும்போது அது உருவான காலகட்டத்தின் பொதுவான சமூகச்சூழல், அன்றிருந்த அறவியல், குறள் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் பார்வை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் பொருள்கொள்ளவேண்டும்.

குறள் சமணப்பண்பாடு தமிழகத்தில் வேரூன்றிய களப்பிரர் காலகட்டத்தில், ஒரு சமணக் குரவரால், இங்கு அவர்கள் உருவாக்கிய கல்விப்பணிகளின் பொருட்டு எழுதப்பட்ட அறநூல் என்பது என் எண்ணம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஏறத்தாழ எல்லாமே சமண – பௌத்த பின்னணி கொண்டவை. தங்கள் கல்விப்பணிகளின்பொருட்டு இலக்கணநூல்கள், அறநூல்கள் ஆகியவற்றை இந்தியாவெங்கும் சமணர் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் குறள் சமணத்தை போதிக்கும் நூல் அல்ல. பொதுவான அறத்தையே அது முன்வைக்கிறது. சமணம் இன்று நம்மில் கற்பிதம் செய்வதுபோல வேதமதத்திற்கு எதிரானது அல்ல. மாற்றான பார்வை ஒன்றை முன்வைத்தது, கொள்கையளவில் முரண்பட்டது எனலாம். ஆனால் வைதிகமதத்திற்கும் சமணத்திற்கும் பொதுவான தொன்மங்களும் அறங்களும் தத்துவங்களுமே மிகுதி.

இக்குறள் அந்தணரின் ஒழுக்கம் பற்றியே பேசுகிறது. சங்கப்பாடல்கள் தொட்டு தமிழிலக்கியத்தில் எங்கெல்லாம் அந்தணர் குறிப்பிடப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் இரண்டு இயல்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஒன்று அவர்களின் நோன்பு வாழ்க்கை. இரண்டு அவர்களின் மூவேளை எரியோம்பும் கடமை. அந்தப் பார்வையின் நீட்சியே இதில் உள்ளது.

ஆனால் நுட்பமான ஒரு வேறுபாடும் உள்ளது. வைதிகமதத்தைப் பொறுத்தவரை கற்றவேதத்தை மறப்பதே அந்தணம் சென்றடையும் அறுதியான இழிநிலை. குறள் அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம் தன் குடிக்குரிய ஒழுக்கநெறிகளை அவன் கைவிடுவது அதைவிடவும் கீழானது என்கிறது. உடைமையின்மை, கொல்லாநெறி, இன்சொல் என அந்தணருக்கான ஒழுக்கநெறிகள் அன்று வகுக்கப்பட்டிருந்தன. அவையே முதன்மை, வேதமோதுவதோ வேள்வியோ அல்ல என்று குறள் சொல்கிறது. அது சமணத்தின் பார்வையாக இருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஆலயம் – எஞ்சும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒருபாலுறவு