யானைடாக்டர் – கடிதம்

அன்பின் ஜே,

இனிய வணக்கங்கள், நேற்று அனைத்து காணொளிகளிலும் உடுமலைபேட்டையில் யானையை சுற்றி நின்று கற்களைக் கொண்டு தாக்குகிறார்கள். நாய்கள் சுற்றிலும் குரைத்துக் கொண்டே துரத்த முற்படுவதைக் கண்டபோது இதயம் பதைக்க அமர்ந்திருந்தேன். எங்கள் ஊரில் காடர்கள் இவ்வாரே யானைகளை எதிர்கொள்வதாக அறிந்திருந்தேன்

நான் வால்பாறையில் பிறந்து வளர்ந்தவன் சிறு வயது முதல் யானைகளை பற்றிய கதைகளையும் புனைவுகளையும் கேட்டே வளர்ந்தவன், எனது பதின் பருவம் முழுவதும் அங்கேதான். யானை டாக்டர் படிக்கும் வரை கேட்டவையெல்லாம் கதைகள் என்றே ௨ணர்ந்திருந்தேன், ஆனால் இப்போது உண்மை என்றே படுகிறது. முதலாளிக்காக உயிர் கொடுத்த ௯ப்பு யானை முதல், காலில் தாகை குத்தி சீழ் பிடித்து காலுன்ற முடியாமல் நின்ற கொம்பன் வரை.

துதிக்கை தூக்கி அழைத்து எவரும் அருகில் செல்லவில்லை, இதனை கூர்ந்து கவனித்த ஒருவர் திடமாக அருகில் சென்றுள்ளார், அவன் தன் காலை உயர்த்தி காண்பித்திருக்கிறான், மிகக் கூர்மையான தாகை உள்ளிரங்கி ஒடிந்திருக்கிறது சீழ் கட்டி பெருவேதனை அவனுக்கு, வேகமாக செயல்பட்ட அவர் கைகளில் பற்றி இழுக்க முயன்றிருக்கிறார் முடியவில்லை வேறு வழியின்றி பற்களால் கடித்து இழுத்திருக்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர, இறுதியாக முழு வேகத்துடன் இழுக்க மொத்தமாக வெளியேறி ரத்தமும் சீழுமாக அவர் முகத்தை நனைத்திருக்கிறது ஓடோடி வீட்டிற்கு சென்று மஞ்சளை அரைத்து முழுவதுமாக பூசி துணி சுற்றி விட்டிருக்கிறார். டாக்டர் கே சொன்னதுபோலயானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…’’. அதுமுதல் அவன் அவர் அவ்வழி நடக்கும் போதெல்லாம் துதிக்கை தூக்கி பிளிரலோசை எழுப்புவானாம்.

யானைகள் காடுகளை விட்டு கீழிறங்க மனிதர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். அங்குள்ள அடர்காடுகள் எல்லாம் சூரிய ஒளி நிலத்தில் படாதவை, விறகு சேகரிக்கச் சென்ற எனது சித்தப்பா வழிமாறி சென்றுவிட செடிகளையெல்லாம் வெட்டி புதிய வழியை உருவாக்கி தப்பித்து வீடு சேர்ந்தார். இப்போது அந்த வனமெல்லாம் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. கூப்புக்கு மரம் வெட்டுதல் என்ற பெயரில் அழித்தொழித்தார்கள். நான் பள்ளிக்குச் செல்லும்போதுபிரபுஎன பெயரிடப்பட்ட லாரியை கண்டாலே உள்ளூர ஒருவித அச்சம் எழும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓங்கி வளர்ந்த மரங்கள் இரண்டு அல்லது மூன்றுபேர் கட்டிப்பிடிக்குமளவு பெரிய மரங்கள் எவ்வித தயக்கமுமின்றி வெட்டி அழிக்கப்பட்டது. அவற்றை இழுக்க கேரளாவிலிருந்து யானைகள் நடந்தியே கொண்டுவரப்படும். எங்கள் கண்களில் பட்டதெல்லாம் இந்த கூப்பு யானைகள்தான் அல்லது பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொண்டுவரப்படும் யானைகள்.

நாங்கள் பார்த்ததெல்லாம் செந்நாய்களும் காட்டுப்பன்றிகளும் தான், மனிதர்களை அவை ஒன்றுமே செய்ததில்லை. விடிய விடிய விறகிற்காக மரம் வெட்டிச் சுமப்பார்கள் எங்கள் ஊர்காரர்கள், மாலை ஏழு மணிக்கு கிளம்புவார்கள் ஒரு மரத்தை சாய்த்து பங்கிடுவார்கள், நடந்து வால்பாறை வருவார்கள் இரவு ஆட்டம் சினிமா, திரும்பி வருகையில் மரத்தை தூக்கி வந்துவிடுவார்கள், அப்போதே உடைக்கப்பட்டு பரண்களில் ஏற்றப்படும். மிருகம் தாக்கி ஒரு மனிதன் கூட செத்ததில்லை, யானையோ சிறுத்தையோ, புலியோ அனைத்தையும் அரிதாகவே பார்த்தோம்.

கூப்பிற்காக காடுகள் அழிக்கப்பட்டதால் உணவும் நீருமின்றி அவை அத்துமீறி மனித குடியிருப்பிற்குள் வர ஆரம்பித்தன, யானைகள் பெரும்பாலும் வீட்டருகிலுள்ள வாழை மற்றும் பலா இவற்றையெல்லாம் உண்டன. இதில் இடர் என்னவெனில் யானை தாக்கிவிடுமோ என்ற அச்சமே எதிர்வினையாற்ற வைத்தது மேலும் குட்டியானைகள் செய்யும் குறும்பு, அவை வீட்டின் எதாவது ஒரு பகுதியில் நுழைந்தால் அதன் அன்னை வீட்டையே இடித்துவிடும். ஒருமுறை வந்துவிட்டால் அவை திரும்பத் திரும்ப அவ்விடத்திற்கு வரும்.

எனது இருபது வயது வரை ஒரிருவர் மட்டுமே யானை தாக்கி கொல்லப்பட்டனர். எனது தூரத்து உறவினர் ஒருவர் புல்லறுக்கச் சென்றவர் குட்டி யானை விளையாடும் நோக்குடன் ஓடிவர அன்னை யானை அவரை மிதித்துப் போட்டது. மற்றவர் தவசித்தேவர், யானைகளை துரத்துவதில் வல்லவர். அவர் வசித்த சின்கோனா 7வது பிரிவு, வாழை பயிரிட்டு வளர்ப்பவர்கள் அப்பகுதியினர். யானை கூட்டத்தை பந்தம் கட்டி விரட்டுவார்கள். நீண்ட கிளைகளில்  பந்தம் கட்டுவார்கள் கும்பலாக சேர்ந்து துரத்துவார்கள்முன்னின்று செல்பவர் இவரே. அவர் வீட்டிலேயே கூட்டம் கூடும், அன்றும் அவ்வாறே கூடினர் தருணம் நோக்கி. சிறுநீர் கழிக்க கோடிப்பக்கம் வந்தவர் அசையாது நின்ற கொம்பனை எதிர்நோக்கவில்லை, வாரி சுருட்டினான் கொம்பன், ” ஏலேய் யான என்ன புடுச்சிட்டுடா கொன்னுபுடும், பிரத்தால கதவ தெரந்திட்டு ஓடுங்கலேஇறுதியாய் பேசிவிட்டு மிதிபட்டு இறந்தார்.

ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் மனித கொலைகள் அதிகம், ஏழு பேரை கொன்றான் ஒற்றை கொம்பன், அவன் மூன்று கால்களிலே நடந்தவன், பேருருவத்தான். கொதிக்கும் சாம்பலை அவன் வரும் பாதையில் கொட்டினார்கள் ஒரு காலின் அடிப்பகுதி முற்றிலும் வெந்துபோனது. அவனைப் பிடிக்க உத்தரவு வந்தது. மயக்க ஊசிகளுடன் காட்டிலாகாவினரும், சில பழங்குடியினரும் சேர்ந்து முற்றுகையிட்டனர், அளவை மீறி அனைவருமே சுட்டனர், மயக்கம் அடையவேயில்லை இறுதியில் அவன் ஒரு பெரிய ஓடைக்கு அருகில் விழுந்த செத்தான் (திட்டமிட்ட கொலை). அவனுடைய பேருடல் எவராலும் தூக்க இயலாததானது, ஒடையின் பள்ளத்தில் இருந்து மேலே கொண்டுவர முடியாது வாகனங்களும் ஓடைக்கருகில் செல்ல இயலவில்லை. அதன் பாதங்களை அளவிட்ட வனத்துறை அதிகாரி இந்திய யானைகளில் இவன் மிகப்பெரியவர்களில் ஒருவன் இதுபோன்ற ஒன்றை கண்டதில்லை என்றார்.

கடின முடிவு எடுக்கப்பட்டது, துண்டுதுண்டாக வெட்டப்பட்டான், எத்தனை பெரிய செல்வம் எத்தனை கொடுமையான இழிசாவு. அங்கே திரு. கே சொன்னதுபோல் சங்க இலக்கியம் எரிக்கப்பட்டது. எத்தனை பெரிய கொடை அவன், ஆப்பிரிக்க காடுகளின் யானை டாக்டர் காணொளியை கண்டேன் அதில் வரும் பழங்குடியினர் சொன்ன வார்த்தை நெஞ்சை உலுக்கி எடுத்தது. அவர் சொன்னார்இந்த காடுகளெள்ளாம் இதுக உருவாக்கினது, எங்கயாவது யானை வேரோட மரத்த அழிச்சு பாத்திருக்கீங்களா ஒடிச்சுதான் சாப்பிடும், வேற இடத்தில கழிவுகளை வெளியேற்றும் அங்கே புதுசா மரம் வளரும் இப்பிடித்தான் இந்த வனம் பெருகியது”. மனுசனுக்கு எல்லாத்தையும் அவன் உண்டாக்கினாங்கிற மமதை, ஆனா எல்லாத்தையும் வேரறுத்துட்டான்.

என்னைப்போன்று ஒவ்வொரு மலைப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களைக்கொண்டு பல நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும். இப்போது செய்யவேண்டுவதெல்லாம் அவற்றிற்கான உணவையும் தண்ணீரையும் வனத்திற்குள்ளே உருவாக்குவது ஒன்றே அது ஒன்றே ஊருக்குள் நுழைவதைத் தடுக்கும். எந்தஆட்சியாளரும் இதனைப் பொருட்டென கொள்ளப்போவதில்லை, தனியார் அமைப்போ, தன்னார்வலர்களோ இதில் ஒன்றும் செய்ய இயலாது. பேரச்சம் மட்டுமே எஞ்சுகிறதுஆப்பிரிக்கக் காடுகளிளெல்லாம் கடுமையாகவே வேட்டையாடப்படுகின்றன யானைகள். மனிதன் சுற்றத்தை அழித்து தான் மட்டும் எஞ்சவே விழைகிறான் போலும்.. !

இன்று மீண்டும் யானை டாக்டர் வாசித்தேன் (குறைந்தது 200 முறை), கண்ணீர் ஒழுக பதிவுசெய்தேன், நான் எப்போதும் குறுஞ்செய்திகளை அனுப்ப வெறுப்பவன் அவசியமெனில் உடனே அழைத்து பேசிவிடுவேன். பதிவு செய்ய இன்று நீண்ட நேரம் பிடித்தது  சளி மற்றும் காய்ச்சல் வேறு (கொரோனா இல்லை). இன்னும் விரிவாக எழுத வேண்டும், தங்கள் ஆசிகள் என்றும் உடனிருக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
ராஜன்
திருப்பூர்

***

 

ஜெயமோகன் மின்நூல்கள் வாங்க

 

முந்தைய கட்டுரைதொற்றிலக்கியவாதிகள் என்னும் இனம்
அடுத்த கட்டுரைவாசகன் அடிமையா?- கடிதங்கள்