மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் லெட்டர். நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். ஓரளவு வாசிப்பு பழக்கம் உண்டு. இப்போதுதான் நவீன இலக்கியத்திற்குள் வந்திருக்கிறேன். சிங்கப்பூர் இலக்கியத்தில் இருப்பவர்களை ஓரளவுக்குத் தெரியும். சமீபத்தில் இலக்கிய விவாத சண்டை ஒன்றில் வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விவாதம் பாதி புரிந்தது. மீதி புரியவில்லை. உங்களுக்கு எழுதினால் தெளிவாண பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு இளம் வாசகராக இந்த லெட்டரை எழுதுகிறேன்.
அது சிங்கப்பூரில் வெளியான கவிதை நூல் பற்றிய விவாதம். அந்த நூலில் இருக்கும் கவிதைகளை தமிழ்நாட்டில் இருக்கும் யாரோ பெரிய கவிஞர் எடிட் செய்ததாகவும் அது கிட்டத்தட்ட Ghostwriter வேலை போலதான் என்று பேசினார்கள். ஒரு கவிதைத் தொகுப்பை எடிட் செய்ய கொடுப்பது தப்பா? இதே போல ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கும் நடந்திருப்பதாக சொன்னார்கள். ஒரு பெண்னால் எழுதப்பட்ட அந்தத் தொகுப்பு தமிழ்நாட்டின் பிரபல ஆண் எழுத்தாளரால் எடிட் செய்யப்பட்டது. வாசித்தவர்கள் இது பென் எழுத்து இல்லை ஒரு ஆணிண் எழுத்து என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள். ஒரு புத்தகத்துக்கு எடிட்டிங் முக்கியமில்லையா? இந்த குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து விளக்கவும்.
கிருஷ்ணன்
சிங்கப்பூர்
***
அன்புள்ள கிருஷ்ணன்
ஒரு கவிஞர் தான் எழுதிய கவிதைகளை புறவயமான ஒரு பார்வைக்காக இன்னொரு கவிஞர் அல்லது விமர்சகரிடம் கொடுப்பது தமிழில் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். அக்கவிஞரால் தன் கவிதையை புறவயமாக பார்க்க முடியாது. இன்னொருவர் பார்த்துச் சொல்லும்போது அந்த கவிதைகளை சரியாக அணுகமுடிகிறது
படைப்புகளின் வடிவத்தை அவ்வாறு சரிபார்க்கலாம். வெட்டியும் கூராக்கியும் செம்மைசெய்யலாம். எந்தெந்த படைப்புகள் வெளியிடத்தக்கவை என முடிவெடுக்கலாம். கவிதைகளைப் பொறுத்தவரை அதை இன்னொரு கவிஞரே செய்ய முடியும். ஆகவே தமிழில் எப்போதுமே ஒரு கவிஞரின் கவிதையை இன்னொருவர் செம்மையாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்.
சிங்கப்பூரில் அதை திருட்டு எழுத்து என்கிறார்கள் என்றால் அது அறியாமையால்தான். ஆனால் ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரின் மொழியை தன்மொழியாக ஆக்கினால், அவருடைய பார்வையை தன் பார்வையாக மாற்றினால் அது அத்துமீறல்.
ஜெ