அன்பு ஜெ,
அன்றாட அரசியலலைப் பின்தொடர்வது எனது நேரம், ஆற்றல் மற்றும் மனநிலையை பாதிக்கிறது. பல பல சுய முயற்சிகளை சோதனை செய்து பார்த்து விட்டேன். சிறிய அளவில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து நீட்டிக்க முடியவில்லை. பல நாட்கள் தவத்தை, காற்றில் வரும் ஒரு சிறிய செய்தி கலைத்து அன்றாட அரசியல் சுழலுக்குள் இழுத்துக் கொள்கிறது.
அனைத்தையும் துறந்தவருக்கு இந்த அரசியலை மட்டும் துறக்கவியலாது போலும் என்று விதுரன் சார்வாகனைக் கேட்பார்.
இந்த அன்றாட அரசியல் அடிமையில் சிக்காமல் நீங்கள் எப்படி கடந்து செல்கிறீர்?
நீங்கள் கையாளும் வழிமுறைகள் அல்லது பரிந்துரைகளை விளக்கினால் என் போன்ற சிலருக்குப் பேருதவியாக இருக்கும்.
அன்புடன்,
சக்தி, கோவை.
***
அன்புள்ள சக்தி,
அன்றாட அரசியலில் இருந்து முற்றிலும் விடுபடுவது எளிதல்ல. அது இன்றியமையாததும் அல்ல. நீங்கள் ஆன்மிகப்பயணத்தில் இருந்தால், அல்லது ஆழ்ந்த கலைப்பயணத்தில் இருந்தால் மட்டுமே அது உகந்தது. மற்றபடி நாம் அரசியலை கவனிக்கவேண்டும் நமக்கான புரிதல்களும் இருக்கவேண்டும்.
ஆனால் இங்கே அரசியல் என்பது உச்சகட்ட பிரச்சாரத்தாலானது. முன்பு அப்பிரச்சாரம் தேர்தல்களை தவிர்த்தால் நாளிதழ்களில் மட்டுமே இருந்தது. டீக்கடை அரட்டைகளில் கொஞ்சம் இருக்கும். அவ்வளவுதான். இன்று சமூகவலைத்தளச் சூழலில் பெரும்கூச்சலாக மாறி நம்மைச் சூழ்ந்திருக்கிறது. நாம் வேறேதும் சிந்திக்க முடியாதபடி நம்மை ஆக்ரமித்திருக்கிறது. அதைக் கவனித்தோமென்றால் நமக்கென சிந்தனையோ, நமக்கென ரசனையோ உருவாகாது. நாம் அவர்கள் திரட்டும் மொண்ணைக்கும்பலில் ஓர் எண்ணாகச் சுருங்கிவிடுவோம்.
சமூகவலைத்தளத்தில் அரசியல் பேசப்படும்போது முதல்முறையாக தொண்டர்களின் குரல்கள் மிஞ்சி ஒலிக்கின்றன. எவர் கடுந்தொண்டரோ அவருடைய குரல் மேலோங்குகிறது. அதில் தர்க்கமோ தகவலோ இருப்பதில்லை. வெறும்பற்று, வெறும் கூச்சல் மட்டுமே. அதன் உள்ளடக்கமாக இருப்பது எப்போதுமே சாதி- மதக் காழ்ப்பு. அதை அரசியல்கோட்பாட்டுச் சார்பாக உருமாற்றி முன்வைக்கிறார்கள். அந்த உலகம் எதிர்மறை உணர்வுகள் நிறைந்தது. நம்மை இருட்டால் நிறைப்பது.
அதைத்தவிர்க்கும் வழி அதை கவனிக்காமலிருப்பதே. அரசியலில் எது தேவையோ அதை மட்டும் கவனிப்பது. ஒருநாளில் பதினைந்து நிமிடம் அரசியல் செய்திகளைக் கவனித்தால்போதும். அதற்குமேல் அரசியலென இங்கே ஏதுமில்லை. நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை அரசியலைக் கவனித்தாலே கூட போதுமானது.
அத்துடன் ஏதேனும் கருத்தை உருவாக்கிக் கொள்வதாக இருந்தால், கருத்தைச் சொல்வதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டுவாரம் எடுத்துக்கொள்ளலாம். இன்றைய சூழலில் ஒருவாரத்திற்குள் பேசி கொப்பளித்து சொற்களை கழித்துவிட்டு கடந்துசென்றிருப்பார்கள். தேவையானவற்றை வாசித்து என்ன என்று முடிவுசெய்ய அரைமணிநேரம் ஆகும். அவ்வளவுதான் விஷயம் இருக்கும். அதற்குள் அதன் சூடும் ஆறியிருக்கும். மெய்யாக அதன் பெறுமதி என்ன என்பதும் தெரிந்திருக்கும். மாறாக அந்தவிவாதங்களுடன் கூடவே சென்றால் முழுநாட்களும் அதற்கே செலவாகும்.
என் வழி இதுதான். குறைவாக அரசியலை கவனிப்பது. ஏதேனும் கருத்தை உருவாக்கிக் கொள்வதென்றால் முழுச்சூடும் அடங்கும் வரை காத்திருப்பது
ஜெ