அறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்

அறமென்ப…  [சிறுகதை]

பிழைப்பொறுக்கிகள் – கடிதம்

பிழைசுட்டுபவர்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன்

அவர்களுக்கு,

வாகன விபத்து வழக்குகளில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் பொறுப்பு அந்நிறுவனத்திற்கு உண்டு. நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கலாகும் போது அந்நிறுவனம் அதன் வழக்கறிஞர் மூலம் முன்னிலையாகும். அவ்வழக்கறிஞர் விபத்து மற்றும் தொடர்புடைய பொருண்மைகள் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் உரிய அறிவுறுத்தல் பெற்று எதிருரை தாக்கல் செய்வார். அதன் பின்பு அவ்வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.

இதில் காப்பீடு நிறுவனம் ஒரு முக்கியமான விஷயத்தை உறுதி செய்வது வழக்கம். அது அவ்விபத்து உண்மையாக நடந்ததா என்பதை தன் புலனாய்வு அலுவலரால் காப்பீடு நிறுவனம் விசாரித்துக் கண்டடையும். இதற்கு ஒரு வரலாறு உண்டு. தென்னை மரத்திலிருந்து விழுந்தவர்கள், குளியலறையில் வழுக்கி விழுந்தவர்கள் என எலும்பு முறிந்தவர்கள் பலர் தங்களுக்கு வேண்டிய வாகனங்களை வைத்து அதன் ஓட்டுனர் மீது விபத்து நடந்தாகப் பொய்யான புகார் கொடுத்து வழக்கு பதிவார்கள். விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக் கொள்வார்.

மரணத்தை ஏற்படுத்தும் விபத்து தவிர சாதாரண காயம் மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்தும் விபத்து வழக்குகளுக்கு இன்றளவும் குற்றவாளிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த குற்ற வழக்கு மேஜிஸ்ட்ரேட் கோர்ட் எனப்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இது குற்ற வழக்கு. வாகன உரிமையாளர் மீதும் காப்பீடு நிறுவனத்தின் மீதும் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கலாகும். நஷ்ட ஈடும் கிடைக்கும்.

இந்த நஷ்ட ஈடு வழக்கு M.C.O.P. எனப்படும். இவ்வழக்குகள் சார்பு நீதிமன்றம் நிலையில் இருக்கும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவது வழக்கம். இது சிவில் வழக்கு. இது போன்ற வழுக்கி விழுந்த விபத்து வழக்குகளைத் தொழில் முறையில் செய்து கொடுக்க தரகர்கள், காவல் அதிகாரிகள், குமாஸ்தாக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உண்டு.

சுமார் 10 ஆண்டுகளுக்கு  முன்பு திருச்சியில் நடந்த உண்மை சம்பவம். ஒரு காப்பீடு நிறுவனம் அதன் பேரில் தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈடு வழக்குகளின் உண்மைத் தன்மைகளை விசாரிக்கிறது. சுமார் 7 வழக்குகளில் ஒரே பதிவெண் கொண்ட ஒரு TVS 50 வாகனம் விபத்தை ஏற்படுத்தியுள்ளது கண்டு நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாகிறது. மீண்டும் பழைய வழக்குகளை பரிசீலிக்க ஏற்கனவே அதே வாகனம் விபத்துக்களை ஏற்படுத்தியதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அதில் நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த அதிர்ச்சி அனைத்து வழக்குகளையும் தாக்கல் செய்தது ஒரே வழக்கறிஞர். அனைத்து வழக்குகளிலும் குற்ற வழக்கு பதிவு செய்தது ஒரே காவல் நிலையம். வெவ்வேறு தேதிகளில் ஒரே இருசக்கர வாகனம் ஒரே காவல் நிலைய ஆளுகையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தனை விபத்துக்களிலும் காயம்பட்ட நபர்கள் விபத்து நஷ்டஈடு வழக்குத் தாக்கல் செய்ய ஒரே வழக்கறிஞரை அணுகியிருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவன் சொல்லிவிடுவான், அதற்கு வாய்ப்பில்லையென்று.

விபத்தில்லாத பல்வேறு சம்பவங்களில் காயம்பட்ட நபர்களை தரகர்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அவர் தனக்கு வேண்டிய ஒரு வாகனத்தைப் பயன்படுத்தி ஒரே காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கிறார். வழக்கறிஞருக்கு வேண்டிய காவல் ஆய்வாளர் குற்ற வழக்குகளை செவ்வனே பதிவு செய்து சம்பவம் உண்மைதான் என்று இறுதியறிக்கை தாக்கல் செய்து குற்ற வழக்கை முடித்துத் தருகிறார். பின்பு நஷ்டஈடு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.

இத்தனையும் கண்டறிந்த காப்பீடு நிறுவனம் காவல் நிலையத்தில் மோசடி குற்றத்திற்கான புகாரைத் தருகிறது. புகார் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்கள், தரகர்கள், காவல் ஆய்வாளர் என சுமார் பத்து நபர்கள் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.   திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றதில் குற்ற வழக்கு நடந்து வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றார்கள். தண்டனை பெற்ற எதிரிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு திருச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதியானது. அதற்கு மேல் மீண்டும் எதிரிகள் தாக்கல் செய்த சீராய்வு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போதும் நிலுவையில் உள்ளது.

இது போல் இந்தியா முழுவதும் பல ஆயிரம் மோசடி நஷ்டஈடு வழக்குகள் அதையொட்டி தாக்கலான மோசடி குற்றவழக்குகள் இன்றளவும் நடக்கிறது. பல வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்டும் விட்டார்கள்.

இந்த நீண்ட முன்னுரை ‘அறமென்ப’ சிறுகதையை ஒட்டி நடந்த விவாதத்தை குறித்துப் பேச அவசியமாகிறது. ‘அறமென்ப’ சிறுகதையில் எவ்வித பொருண்மைப் பிழையும் இல்லை. அக்கதை எவ்விதத்திலும் வழக்கறிஞர்களின் மாண்பைக் குலைப்பதாக இல்லை. விபத்து நஷ்ட ஈடு வழக்குகளில் சில வழக்கறிஞர்கள் கீழ்மையின் எல்லைகளைக் கடந்து பல காதம் சென்றுவிட்டார்கள். என்பதுகளின் இறுதி வரை விபத்து நஷ்ட ஈடு வழக்குகளின் நஷ்ட ஈடுக் காசோலை வழக்கறிஞர்கள் பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தது. வழக்கறிஞர் கட்டணத்தை நஷ்டஈடாக கொடுத்துவிட்டு, நஷ்டஈட்டை தங்கள் கட்டணமாக சில வழக்கறிஞர்கள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததும்தான் காசோலை பாதிக்கப்பட்டவர் பெயருக்கு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட சம்பவங்களை வைத்துப் பார்த்தால் கதையில் பேரம் பேசிய வழக்கறிஞர்களில் செயல் ஒன்றுமே இல்லை. இதை ஒட்டி ஆட்சேபனை, அதற்குப் படைப்பாளியின் பதில் என்பது சட்டத்துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் எனக்கு மிகப்பெரிய அயற்சியை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு அடிப்படையாகத் தெரியும் ஒரு விஷயத்தை அதை விளங்க மறுக்கும் ஒருவருக்கு விவரிக்கத் தொடங்கும் போது ஒரு அயற்சி ஏற்படும் தெரியுமா? அந்த அயற்சியே இக்கடிதத்தைக்கூட தாமதப்படுத்தியது.

அந்தக் கதை முடிவில் ஏமாற்றப்பட்ட நாயகன் ஒரு சந்தோஷ மனநிலைக்கு வருகிறான். இனியும் அவன் காயம்பட்டவனைக் கண்டால் உதவக்கூடும். ஏன்? அதைக் கண்டடைய வேண்டியதே ஒரு வாசகனின் மனநிலையாக இருக்க வேண்டும். அதில் விவாதிக்க நிறைய உண்டு. அதை விடுத்து கதையில் பொருண்மைப் பிழை, தகவல் பிழை என்பதெல்லாம் அறியாமை இல்லை, பேதமையின் உச்சம்.

அன்புடன்,

ஆர். பிரேம் ஆனந்த்.

***

அறமென்ப, திரை – கடிதங்கள்

அறமென்ப, எச்சம்- கடிதங்கள்

***

குமரித்துறைவி இரு கலைஞர்கள் வான் நெசவு
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் உடையாள்
பத்து லட்சம் காலடிகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிகடன் பேட்டி – கடிதங்கள்