அன்புள்ள ஜெமோ,
சிட்னி கார்த்திக் உங்கள் Egalitarians அமைப்பின் அம்பேத்கார் பற்றிய பேச்சு சார்ந்து கீழ்வரும் பதிவை பேஸ்புக்கில் போட்டிருந்தான்.
அது சார்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது, அம்பேத்கார் நம் சமூகத்தில் தலித் சிந்தனைவாதியாக மட்டுமே தொடர்ந்து முன்வைக்கப்படும்போது அது ஒற்றைப்படையாகி, ஒரு தரப்புக்கான சிந்தனையாளராக மட்டுமே கருதப்படுகிறார், அதைத்தாண்டி விரிவான தளத்தில் அவர் ஒரு அறிவுத்தரப்பாக முன்வைக்கபட வேண்டிய அவசியத்தை, தேவையை இருவரும் ஏற்றுக்கொண்டோம். நீங்கள் முன்னெடுப்பது அப்படி ஒற்றைபடையாக தலித்திய சிந்தனையாளராக மட்டுமே புரிந்துகொள்ளப்பட்ட/ அந்த தளத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்ட அம்பேத்காரை வரலாற்றாசிரியராகவும் முன்னெடுப்பது. ஆனால் இந்த முன்னெடுப்பு மிக சிரமமானது என்பது நிகழ்ச்சியின் இறுதியில் மீண்டும் மீண்டும் சாதிய/அரசியல் தளத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்ட கேள்விகளால் புரிந்தது. நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களை இந்த தளத்துக்கு கொண்டு வந்து சிந்திக்க வலியுறுத்த வேண்டி இருந்தது. நீண்ட காலமாக சாதியம் சார்ந்து மட்டுமே அம்பேத்காரை புரிந்து கொண்ட பொதுவாசகர்களால் இன்னொரு தளத்தில் அவரை வைத்து சிந்திக்கவே இயலவில்லைதான்.
ஆனால் அப்படி ஒற்றைப்படையாக அடையாளப்படுத்த வேண்டிய நடைமுறை தேவை, அவசியம் அரசியல் தளத்தில் இன்னும் இருக்கிறது என்றான் கார்த்திக். இன்று அம்பேத்கர் என்பது சாதிய எழுச்சியின் ஒரு குறியீடாக இருக்கிறது, அது அவ்வாறு இருக்கும்போதுதான் அது தீவிரமாக இருக்கும், அறிவுத்தரப்பு என்பது அதை பரவலாக்கி, அதன் வீச்சை குறைத்துவிடுமோ என்றான். இந்த வரலாற்று நோக்கு என்பது அறிவார்ந்த தளத்தில் ஆராய்ச்சி நோக்கில் விரிவாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் பொதுத்தளத்தில் அல்லது அரசியலில் இந்த ஆராய்சிசார் பிம்பம் கலக்காமல் இருப்பதே தற்போதைக்கு நல்லது என்றான். அம்பேத்காரை அகெடெமிக்கலாக, அறிவார்ந்த தளத்தில் ஆராய்சினோக்கில் பொதுதளத்தில் வைத்துப்பார்ப்பது, அவருக்கு ஏற்கனவே இருக்கும் பிம்பத்தின் வீரியத்தை குறைக்கிறது என்பது அவன் எண்ணம். அவன் சொல்வது ஒருவகையில் உண்மை என்றுதான் தோணுகிறது.
அம்பேத்காரை அறிவுத்தளத்தில் விரிவாக வைப்பது என்பது அவரை எல்லா தரப்புக்குமான ஒரு பொது ஆளுமையாக ஆக்குவதன் நோக்கத்தைக் கொண்டிருக்கிறதா?அப்படியான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது எனில், அவரை இன்றைய நிலையிலேயே, ஒரு சாதியச் சிந்தனையாளராகவே எல்லோருக்குமான பொது ஆளுமையாக ஏற்கவைக்க முடியாததன் நம் சமூகத் தோல்வி என்று கொள்ளலாமா?இல்லை, இது எதுவும் இல்லாமல், நீங்கள் சொன்னதுபோல் இந்த சாதியபிரட்ச்சனைகள் எல்லாம் தொலைந்துபோகும் ஒரு எதிர்காலத்தில் (ஒருநூறுவருடத்துக்குப்பின்?) அவரை ஒரு தத்துவஞானியாக நிலைநிறுத்தும் நோக்கம் மட்டும்தானா?
இன்றைய நம் சமூகத்தில் அம்பேத்காரை சாதியச் சிந்தனையாளராகவே எல்லோருக்குமான பொது ஆளுமையாக ஏற்கவைக்க முடியாததன் நம் சமூகத் தோல்வியை நாம் ஒத்துக்கொள்ளலாம் என்றே தோணுகிறது. இதில் பூசிமொழுக அவசியமில்லை, இன்றும் அம்பேத்காருக்கு பெரியார். காந்தி, நேதாஜி, சே க்வாரா போன்று ஒரு பொதுமனிதனின் டிசர்டில் இடம் இல்லைதான். அந்த அடையாளத்தை அதீத கவனத்துடன் தவிர்க்கும் ஒரு நிலைதான் நம் சமூகத்தில் இன்றும் இருக்கிறது. இதைத்தாண்டி, பொதுசிந்தனைத்தளத்தில் அம்பேத்கார் உருக்கொண்டெழ தடையாக இருப்பது, அதீதமாக அவரை பாதுகாப்பதோ என்றும் தோணுகிறது.
அவரை விமர்சித்து ஒரு வார்த்தையும் யாரும் பேசிவிடக்கூடாது என்ற மற்றவர்களின் கண்டிப்பும், தாம் அப்படி பேசிவிடக்கூடாது என்ற ஒருவரின் அதீத தற்கவனமும், பயமுமோ என்று தோணுகிறது. (இன்றைய நிலையில் அதன் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்தே இருக்கிறேன்) இது அவரை ஒரு சிறு வட்டத்துக்கு் மட்டுமேயான பேசுபொருளாக குறுக்கிவிடுகிறது. அவரை எல்லோருக்குமான பொதுமனிதராக ஆக்குவதற்கான கடும் தடையாக இருக்கிறது என்பது என் எண்ணம். அவரை ஒரு பொதுவெளி பேசுபொருளாக்கும், ஏற்க்கும் & விமர்சிக்கும் வசதி அவரை சிந்தனைத்தளத்தில் விரிவு கொள்ளவே செய்யும், அது மிக அவசியம்.
இன்று காந்தியையும் பெரியாரையும் எவரொருவரும் எதிர்த்து பொதுவெளியில் எழுதிவிடலாம், உடனே ஆதரித்தும் நாலுபேர் எழுதுவார்கள்… இரண்டும் சரிசமமாக தொடர்ந்து சிந்தனைத்தளத்தில் உள்ளாடி இயங்கிக்கொண்டே இருக்கிறது. இது அம்பேத்காருக்கு நிகழவில்லை எனில் அவர் சிந்தனைகள் இறுகிப்போய் புனித பிம்பமாக வணங்க மட்டுமேபடும் ஒரு ஆளுமையாக நிலைகொள்ளும் அபாயம் இருக்கிறது.
சரவணன் விவேகானந்தன்
கார்த்திக்கின் பேஸ்புக் பதிவு.
அம்பேத்கரின் வரலாற்று பார்வை
Egalitarians அமைப்பின் சார்பாக அம்பேத்கர் குறித்து ஜெ ஆற்றியிருக்கும் இந்த உரை முக்கியமானது . பெரும் ஆளுமைகளை நாம் பொதுவாக ஒருவாறு சுருக்கி திரட்டி வலுவான ஒற்றை அடையாளமாக ஆக்கிக்கொள்வது இயல்புதான் . காந்தி என்றால் அகிம்சை , போஸ் என்றால் வீரம் என்பது போல .
ஒருவர் முக்கியமாக எதற்காக நின்றார் ,எதில் சிறந்து விளங்கினார் , எதற்காக பாடுபட்டார் எவ்விதம் வெளிப்பட்டார் என்பது ஒரு ஒற்றை அடையாளமாக இருக்கும்போது தான் அதன் மூலம் பெரும் திரளாக மக்களை அடையவும் அவர்களை திரட்டவும் முடியும் . அந்த ஆளுமைகள் கொள்ளும் விசையும் வீரியமும் இவ்வாறு மக்கள் மனதில் அடையாளங்களாக பதிவதன் மூலமாகவே உருவாகிறது . ஆனால் ஆளுமைகள் ஒற்றைப்படையானாவர்கள் அல்ல .
இவ்வாறு ஒற்றை அடையாளமாக திரண்டு வருதலுக்கு இணையாகவே அவர்களின் மீதான முழுமைப் பார்வையும் அறிவுத்தளத்தில் அவசியமாகிறது . அவர்கள் முன்வைத்த சிந்தனை , பார்வை கோணங்கள் போன்றவற்றை அவர்கள் விட்ட இடத்தில் இருந்து முன்னெடுத்துச்செல்ல இந்த முழுமைப்பார்வை அவசியம் ஆகிறது . அந்த கோணத்தில் அம்பேத்கர் அவர்களை முழுமையாக வரையறை செய்யும் உரை இது .
ஓரளவு கல்லூரி விரிவுரைகளை ஒத்த ஆனால் சுவாரசியமான கட்டுக்கோப்பான உரை . மிக விரிவாக தொன்மங்களில் ஆரம்பித்து , வரலாறு , வரலாற்றின் வகைகள் , வரலாற்று எழுத்தின் வகைகள் (Historiograhy ) என்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த வெவ்வேறு வரலாற்று பார்வைகளை ஆராய்கிறது . அந்த வரலாற்று பார்வைகளில் உள்ள போதாமைகளை, விடுபடுதல்களை பேசுகிறது.
இதில் அம்பேத்கர் முன் வைக்கும் வரலாற்று பார்வை கோணம் எவ்வாறு Historic Positivism என்பதை ஒத்திருக்கிறது என்பதை நோக்கி உரை செல்கிறது. இது வரை புழக்கத்தில் இருந்த வரலாற்று பார்வைகளை எல்லாமே ஏதோ ஒரு வகையில் தலித்துகளை வெளியே வைத்துவிட்டே தான் பேசியிருக்கின்றன. தொன்னூறுகளில் உருவாகிவந்த sub altern வகை வரலாற்று கோணம் கூட தலித் என்னும் அடையாளத்தை விளிம்பு நிலை என்னும் அடையாளத்தோடு சேர்த்தே பேசி வந்திருக்கிறது .
தலித் வரலாறு விளிம்பு நிலை வரலாறு அல்ல அவர்கள் எக்காலத்திலும் சமூகத்துக்கு வெளியே நின்றவர்கள் அல்ல , மாறாக ஒட்டு மொத்த சமூகமே அவர்களின் மேல் தான் அமர்ந்திருக்கிறது என்னும் பார்வை முக்கியமானது . அம்பேத்கர் பயன்படுத்தும் depressed class என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த உரை அடிக்கோடிடுகிறது .
அம்பேத்கரின் வரலாற்று முடிவுகளின் இருக்கும் போதாமைகள் குறித்த நியாயமான விளக்கங்களை முன் வைக்கிறது . அவர் பார்வையில் துலங்கி வரும் அற நோக்கை (ethics ) முக்கியத்துவப்படுத்துகிறது . அம்பேத்கர் பெளத்தத்தை தழுவியது சனாதன எதிர்ப்பு மட்டுமல்ல அது அவரின் ஆன்மீக புரிதலையும் உள்ளடக்கியது .(அம்பேத்கரின் “தம்மம்” குறித்து ஜெ ஏற்கனவே முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார் . )
இறுதியாக அம்பேத்கரின் முக்கிய வரலாற்று தத்துவ பார்வைகளான Historic positivisim , non-sentimentalism , peoples history , objective view of myths போன்றவைகளை உள்ளடக்கிய, பெருமிதங்கள் அற்ற ஒரு புதிய வரலாற்று பார்வையை எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற ஒரு blueprint ஐ அளிக்கிறது. இப்படி வால்டேரில் இருந்து நொபுரு கராஷிமா வரை , தொன்மங்களில் இருந்து மனித ஆன்மீக பரிணாமம் வரை ( ரஜினியோ மதங்களோ பேசும் ஆன்மீகம் அல்ல இது ) ஒரு கோட்டை இழுக்கும் பிரிதொரு உரை கேட்கக்கிடைப்பது அரிது .
ஜெ “இன்றைய காந்தி” தொடரை எழுதியபோதே அவர் அதே போன்று அம்பேத்கர் குறித்தும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் இந்த உரை அமைந்திருக்கிறது. காந்திய நோக்கும் அம்பேத்கரிய நோக்கும் அவர்கள் காலத்தில் நடைமுறை சார்ந்த சில முரண்களை கொண்டிருந்தாலும் அதன் அற அடிப்படையில் ரொம்பவும் வேறானதல்ல என்பதை உணரமுடிகிறது.
தனிப்பட்ட முறையில் இந்த புள்ளியில் இருந்து இந்தியா என்பது குறித்த ஒரு புதிய நவீன integrated & inclusive view வை உருவாக்க தேவையான இணைவுகளை இந்த உரை அளிப்பதாக உணர்கிறேன் .