ஞானி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஞானி பற்றிய உங்கள் கட்டுரைத்தொடர் முக்கியமானது. நான் அவரைப்பற்றி மேலும் பலர் எழுதுவார்கள் என எதிர்பார்த்தேன். எதையும் காணமுடியவில்லை. ஆகவே அனேகமாக இதுவே அவரைப்பற்றிய ஒரே பதிவாக இருக்கும். ஏற்கனவே சுந்தர ராமசாமி பற்றி நீங்கள் எழுதிய நூலை வாசித்தபோதும் இதை உணந்தேன். அவரைப்பற்றி அதற்கு பிறகும்கூட ஒரு நல்ல நூல் வரவில்லை.

இந்நூலில் ஞானியின் புறவுலகம், அவருடைய அறிவுத்தேடல் மட்டுமே உள்ளது. சுந்தர ராமசாமி நினைவுகளிலும் அப்படித்தான். முழுமையாகவே நீங்கள் அவரைப்பற்றிய அகவய நினைவுப்பதிவுகளை தவிர்த்துவிட்டீர்கள். அவர்களின் குடும்பம் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.

அப்போது அது விசித்திரமாகத் தோன்றியது. இப்போது ஏன் என்று புரிகிறது. இந்த நூலில் ஞானி வாழ்ந்த அறிவுச்சூழல், அவர் செயல்பட்ட விவாதக்களங்கள் விரிவாக உள்ளன. ஐம்பதாண்டுக்காலம் இங்கே இடதுசாரி அறிவுக்களத்தில் நிகழ்ந்த அனைத்துமே சுவாரசியமாக பதிவாகியிருக்கிறது.

சு.ரா நினைவின் நதியில் போலவே அவ்வப்போது வெடித்துச் சிரித்தபடி வாசிக்க வைத்த நூல்

ஜெயராம் கணேஷ்

அன்புள்ள ஜெ

ஞானி பற்றிய உங்கள் கட்டுரைகள் எனக்கு நிறைய புரிதல்களை அளித்தன,  எனக்கு இந்து மதத்தின் அன்றாட தளத்தில் இருக்கும் சமத்துவமின்மை பற்றிய வருத்தங்கள் இருந்தன,  அதில் எப்படி கொண்டுவர முடியும், அதற்கான சாத்தியம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டியதிருந்தது,  இது பற்றியெல்லாம் யோசித்து பார்பேன்.

ஞானியின் தேடல் பற்றிய நீங்கள் அளித்த சித்திரம் என் தேடலுக்கு நேரெதிர் திசையில் இருந்தது, அதாவது அவர் மனித சமத்துவத்தை முன்வைக்கும் தரிசனத்தை கையில் வைத்து கொண்டு அதை ஒட்டிபோகும் பண்பாட்டிலுள்ள  கூறுகளை தேடுகிறார்.  எஸ் என் நாகராஜன் வழியாக அடைகிறார்,  மனித சமத்துவம் என்பதை விட மேலான ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பொருளும் கூட கொண்ட அனைத்தையும் ஒன்றாக காணும் அத்வைதம் இந்த இடத்தில் வருவது எனக்கு பெரிய உற்சாகம் அளித்தது,  இந்துமத சீர்திருத்த வாதிகள், அடித்தள மக்களை உள்ளுக்குள் கொண்டுவந்த  பக்தி இயக்கம் என வாசிக்கும் போது முன்பே சமத்துவத்தை அடைவதற்கான வழி இங்கு இருந்திருக்கிறது, இருக்கிறது என்பதை அறியும்போது உற்சாகம் வருகிறது.

மார்சியத்தில் பண்பாட்டு கூறுகளை உள் கொண்டுவருவதை விட பண்பாட்டு பின்னணிக்குள் மார்க்சியம் முன்வைக்கும் சமத்துவத்தை பண்பாட்டிலிருந்தே எடுத்துக்கொள்வது, அடைவது,  அதை மதத்தின் பிராதன இயல்பாக மாறுவது இன்னும் சிறந்தது என்று தோன்றுகிறது.  ஞானி மார்க்சியம் என்ற கோணத்தில் அணுகாமல் அது முன்வைக்கும் விஷயங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று பார்த்திருந்தால் மார்க்சியத்தை கைவிட்டு அத்வைத பின்னணியை நோக்கி போயிருப்பார் அல்லது போயிருக்க கூடும்.

இன்னொன்று ஒரு அறிதலை அடைத்த பிறகு கிடைக்கும் பார்வையை கைவிடுவது என்பது சாத்தியம் என்ற விஷயம் எனக்கு உறுத்தியது, அதாவது எல்லா மக்களும் ஒன்று என என்னும் சர்வதேசியத்தை கொண்டிருக்கும், பார்வை தெளிவை கொண்டிருக்கும் ஒருவர் குறுகுழு மனநிலைக்குள் சென்று அமைகிறார் என்பது எனக்கு வருத்தமளித்தது.  ஒருவர் தான் நிராதரவு ஆகும்போது தன் பிறப்பிலான அடையாளத்திற்குள் சென்று அமைந்து ஆதரவு தேடி கொள்கிறார் என்று தோன்றுகிறது.  நிராதரவு மனநிலை நம்மை அடையாளமற்றவனாக ஆக்கிக்கொள்கிறது போல, இந்த வெறுமையை அழிக்க தனது பிறப்பு சார்ந்த சொத்தான மண்ணின்மைந்தன் தளத்திற்குள் வந்து விடுகிறார்கள் போல.

இந்த கட்டுரைகள் ஞானி பற்றியது மட்டுமில்லாமல் உங்கள் முதல் மூன்று பெரிய நாவல்களை எப்படி அணுகவேண்டும் எனும் புரிதலை உங்கள் விளக்கங்கள் மற்றும் உங்கள் நூல்கள் பற்றி ஞானி சொல்கிற விமர்சனங்கள் வழியாக வெகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த கட்டுரைகள் தொடர்ச்சியாக ஈ எம் எஸ்ஸும் கேரள தேசியமும் எனும் இரு கட்டுரைகள் வாசித்தேன்,  அந்த தொடரை நீங்கள் முடித்தீர்கள் என்றால் எனக்கு தேசியம் சார்ந்து இன்னும் உள்வாங்கி கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

ராதாகிருஷ்ணன் 

 

 

முந்தைய கட்டுரைஇரு கேள்விகள்
அடுத்த கட்டுரைநீர்வழிப்படூம்,நாகம்மாள் – கடிதம்