அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘கதா நாயகி’ குறுநாவலுக்கு என் தளத்தில் எழுதிய வாசிப்பனுபவம்:
முதல் பார்வைக்கு இக்குறுநாவல் சிக்கலான, புதிர் போன்ற ஒரு அமைப்பு கொண்ட கதையாகத் தான் தோன்றியது. தொடர்ச்சியாக அனைத்து அத்தியாயங்களையும் ஒரே அமர்வில் வாசிக்கும் போது தான் இக்கதையின் முழு அமைப்பும் வசமானது. கதை ஒவ்வொரு நாளாக வெளிவருகையில், மெய்யன் பிள்ளையைப் பற்றி வரும் பகுதிகள் சுவாரஸ்யமானவையாகத் தோன்றின; முழுக்க வாசிக்கையில் கதையின் கடந்த காலத்தில், கதாநாயகிகளைப் பற்றி வரும் பகுதிகள் மிகுந்த சுவாரஸ்யம் அளிப்பவையாக இருக்கின்றன. வடிவம் சார்ந்து, ஒரு ஆங்கில நாவலின் பழமையான ஆங்கிலம் எடுத்தாளப் பட்டு, அதன் அர்த்தத்தோடு, ஆசிரியரின் கற்பனையும் கலந்து உருவாகியுள்ளது இப்படைப்பு. முன்பு எந்நாவலிலாவது இங்கனம் நிகழ்ந்துள்ளதா?
ஒரு கோணத்தில், இக்கதையை ‘எழுத்தின்’ கதை எனச் சொல்லலாம். வேட்டையாடும் போது, தன் உடல் சமிக்ஞைகளையே மொழியாகப் பயன்படுத்துகிறான் ஒரு காணிக்காரன் இக்கதையில். மிகச் சிறந்த முறையில் தொடர்புறுத்துபவனாக அவனே அக்குழுவில் திகழ்கிறான். மொழியின் இலக்கு தொடர்புறுத்துதல். ஆயினும், அது எழுத்தாக எழுதப் படும் போது, அதில் பேய்களும், தெய்வங்களும், மாயங்களும் குடி கொள்கின்றன என்கிறது இந்நாவல்.
துப்பனுக்கும், கோரனுக்கும், உச்சனுக்கும் ‘எழுத்து’ தெய்வத்தின் வடிவம் தான். கோரன் ‘எ’ என்னும் எழுத்தை தன் நாய்ச் சாமியாகவே பார்க்கிறான். தன் கையில் அதை எழுதிக் கொண்டு, இனி எந்த பாம்பும், தன்னைத் எதுவும் செய்ய முடியாது என தைரியம் கொள்கிறான். துப்பனுக்கும் ‘சா’ எனும் எழுத்து, சாத்தனும் அவன் எதிரில் அமர்ந்திருக்கும் நாயாகவுமே தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்தையும் தனக்கே உரிய வகையில், துப்பன் விவரிக்கும் பகுதிகள் மிகவும் அழகானவை, கவித்துவமானவை. அந்த மலையின் காணிக்காரர்களுக்கு, பட்டினியின்றியும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு துப்பன் மூலமாக வழி காட்டிய தெய்வம் தான் எழுத்து. இங்கு எழுத்தின் வழி தெய்வம் எழுந்து வருகிறது.
அதே எழுத்தில் ஹெலெனாவும், எவ்லினாவும், ஃபிரான்ஸஸ் பர்னியும், விர்ஜீனியாவும், தம் ஆழமான உள்ளுணர்வுகளையும், ஏக்கங்களையும், நிராசைகளையும், அவமானங்களையும் இறக்கி வைத்ததாலேயே, பேய்களாக, நிறைவுறா ஆன்மாக்களாக எழுந்து வருகிறார்கள். இவ்வெழுத்து இருக்கும் வரை, வெவ்வேறு கதைகளின் வழியாக, வாசகரோடு உரையாட அவர்கள் அதில் காத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இக்கதாநாயகிகள் ஒரு vertical அடுக்காக இக்கதையில் அடுக்கப் பட்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் எவருடைய கதைக்கும் சென்று வர முடிகிறது. ஹெலெனா, மெய்யன் பிள்ளை அமர்ந்து வாசிப்பதை தன் காலத்திலேயே கண்டு விடுகிறாள். மெய்யன் பிள்ளை ஹெலெனாவை ஸ்தூல உருவாக, தொடு உணர்வாக அறிகிறான். இவ்விடத்தில் காலத்தின் வரையறை முழுவதுமாக அழிந்து விடுகிறது.
எழுதுபவளும், எழுதப்படுபவளும், வாசகியும் ஒரேயிடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். மெய்யன் பிள்ளையோ ஹெலெனாவோ வாசிக்கும் போது, அவர்கள் மனதில் உள்ளது தான் புத்தகத்தில் வரிகளாக வருகிறது. மீண்டும் அதைத் தேடும்போது அது அவ்வாறாக இருப்பதில்லை. புற விவரணையாக இது இக்கதையில் வந்தாலும், நுட்பமாக, எப்புத்தகமும் வாசகர் மனதில் இவ்வாறே அல்லவா நிகழ்கிறது.
இங்கு காலமும், இடமும், அர்த்தமும் அழிந்த மாய உருவைக் காட்டுகிறது எழுத்து.
விர்ஜீனியாவும், ஃபிரான்ஸஸ் பர்னியும், எவ்லினாவும், ஹெலெனாவும் என இந்த நான்கு பாத்திரங்களும் ‘அதிகாரத்திற்காக சுரண்டப் படுதல்’ என்னும் சரடினால் இணைக்கப் பட்டிருக்கிறார்கள். இச் சுரண்டல ஒவ்வொருவர் கதையிலும் ஒவ்வொரு வேடம் போட்டுக் கொள்கிறது. விர்ஜீனியாவின் கதையில் பாசம், குடிப்பெருமையை பாதுகாத்தல் என்னும் வேடம், ஃபிரான்ஸஸ் பர்னிக்கு இலக்கியம் , எவ்லினாவுக்கு மதம், ஆன்மீகம் என்னும் வேடம், ஹெலெனாவுக்கு காதல் என்னும் வேடம்.
கிழட்டுப் புலி தன் அதிகாரத்தை பிரகடனப் படுத்த, தனக்கு உபயோகமில்லாத பொருட்களின் மீதும் சிறு நீர் கழித்து வைப்பதைப் போன்றது தான், இக்கதையில் வரும் கிழட்டு கனவான்கள் கதா நாயகிகளின் மீது செலுத்தும் அதிகாரம், என்று எனக்குத் தோன்றியது. கர்னல் சாப்மென் ஹெலெனாவின் உடல் மீது செலுத்தும் வன்முறையை, புலி பாய்ந்து பிடிக்க வருவது போலத் தான் கற்பனை செய்து கொள்கிறாள் அவள்.
இக்கதையின் ‘கனவான்கள்’ அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் விர்ஜீனியாவின் கதையினால், அவள் விர்ஜீனியஸால் தலை சீவி கொலை செய்யப்படும் நிகழ்வால், இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார்கள். கர்னல் சாப்மன், ‘கள்ளமின்மையைத் தயக்கமின்றி கொல்வதே அதிகாரத்தை அடைவதற்கான வழி’ என்று வெளிப்படையாகவே ஹெலெனாவிடம் பிரகடனம் செய்கிறான். வரிசையாக வந்தமரும் குரங்குகளில் தாட்டான் குரங்கையும், அன்னை குரங்கையும், விவரம் புரியாமல் தந்தையை இழுத்துப் போக முயலும் குட்டிக் குரங்கையும் தயக்கமின்றி கொன்று விட்டு, பெருமை பட்டுக் கொள்கிறான். ஹெலெனாவின் உடல் மீதும் அதே போன்று தயக்கமின்றி அத்துமீறலை நிகழ்த்துகிறான். இவற்றைக் கண்டும் கேட்டும் அனுபவித்தும் கொண்டிருக்கும் ஹெலெனா, புலி பூனையாகி காத்திருப்பதைப் போல, அனைத்திற்கும் புன்னகை என்னும் வேடத்தை இட்டுக் கொண்டு காத்திருக்கிறாள்.
சரியான சமயத்தில் புலியை நோக்கி ஒரே உதையில் அவனைத் தள்ளி விடுகிறாள் ஹெலெனா. அவன் கொடுத்த பிரேஸ்லெட்டையும் அவன் மீதே கழற்றி வீசி விட்டு ஓடுகிறாள். மெக்கன்சியை கொன்றதும் அவளாக இருக்கலாம். அவள் கொடுக்கும் உதை, சுரண்டப் பட்டவர்கள் அனைவருக்காகவும் அவள் அதிகாரத்தின் மீது கொள்ளும் பழி என்று கொள்ளலாம்.
கர்னல் சாப்மெனோடு வருபவர்களில் ஃபிரேஸர் மட்டும் பளிச்சென்று அவள் கண்ணுக்குத் தெரிவதும், ஒரு தலையசைப்பும் வாழ்த்தும் மட்டுமாக ஒரு நாள் முழுவதுக்குமான, அவளோடான உரையாடலை அவன் நிறுத்திக் கொள்வதும் கவித்துவமான பகுதிகள். இவை வேறொரு கதையைத் தீற்றிச் செல்கின்றன.
ஃபிரான்ஸஸ் பர்னி தன் மார்பகங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு விடுதலையுணர்வு அடைவதை, அவள் உடல் மீதும், அவளின் பெண்ணெனும் தன்னிலையின் மீதும், அவளின் ஆன்மா மீதும், நடந்த அத்துமீறலுக்கான எதிர்வினையாக புரிந்து கொள்ளலாம், கேன்ஸருக்காகத் தான் என்றாலும்.
ஃபிரான்ஸஸ் பர்னியின் அதீத கசப்பும் காழ்ப்பும் கொண்ட பேச்சுகள், பெண்களைப் பற்றிய அதீத கருத்துகள் இவையெல்லாமே அவளுடைய எதிர்வினையின் பகுதிகள். அவளிடமிருந்த கேன்ஸர் கட்டிகள் அவை என்று தோன்றுகிறது. பெண்களுக்கிடையே வாள் உரசிக் கொள்வது போல நடக்கும் பேச்சுகள் அவர்களுக்கு நடந்த ஒரு விதமான mental conditioning என்று தான் தோன்றுகிறது. பெண்களையே பெண்களுக்கான checks and balances ஆக உபயோகப்படுத்திய காலத்தின் பிரதிபலிப்பு அது. (இப்போதும் அது அவ்வாறு தான்) பெண்களின் இத்தகைய பேச்சுகள் ஒரு set of accepted transactions-ன் பகுதிகள். யாரிடமோ, எங்கோ validation தேடுபவை. ‘To belong/to conform’ என்னும் நிர்ப்பந்தத்துக்காக செய்யப்படுபவை. யாராவது ஒரு பெண் அக்காலகட்டத்தில் புதிதாக சரியாக ஏதாவது பேசியிருந்தாலும் தனிமைப் படுத்தப் பட்டிருப்பாள். (ஏன், இக்காலத்தில் கூட, ஒரு பெண், expected/conditioned lines-ஐ மீறுவது scandulous தான். அடுத்த தலைமுறையில் அது அவ்வாறு இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலளிக்கக் கூடியது, என்று நான் நம்ப விரும்புகிறேன்.)
இக்கதையில் ஒரே நேரத்தில், வெவ்வேறு உலகங்கள் காட்டப் படுகின்றன. ஒரு எழுத்து கூடத் தெரியாத, குரங்குகள் சாப்பிட்ட மிச்சத்தையும் உண்ணும், மின்சாரத்தை புலியை வெல்லும் தெய்வமாகப் பார்க்கும் காணிக்காரர்களின் கற்கால உலகம்; தங்கைகளுக்கு திருமணம், தாய் தந்தையரின் கடமைகள் என அனைத்தையும் தன் தோள் மேலேற்றிக் கொண்டு, வாய் பேசாத, காது கேட்காத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகும்-லௌகீகத்தில் கழுத்தளவு புதைந்திருக்கும் மெய்யனின் சமகால உலகம்; 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயர்களின் தளுக்கும், பூடகப் பேச்சுக்களும், நாகரீகம் என்னும் பெயரில் செய்யும் அனைத்து சுரண்டல்களும், அதிகாரத்தின் மீதான வேட்கையுமென ஒரு மேட்டுக்குடி உலகம்; எப்படியும் இப்பள்ளியை நடத்தி காணிக்காரர்களுக்கு எழுத்தறிவித்து விட வேண்டும் என்று மெய்யனின், எப்படியும் கல்வி கற்று விட வேண்டும் என்று துப்பனின் லக்ஷியங்களால் நிறைந்த ஒரு உலகம், என பல விதமான உலகங்கள் இங்கு co-exist செய்கின்றன. எந்த சமுதாயத்திலும் இது போன்ற வித விதமான உலகங்கள் ஒரே நேரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன அல்லவா? இவ்வுலகங்களுக்கிடையே செல்வது தான் time travel என்று சொல்லத் தோன்றுகிறது.
இத்தனை உலகங்களில் விடுபட்ட ஒரு உலகம் மெய்யனின் அகவுலகம். Schizophrenia-வின் அனைத்து நிலைகளும், அறிகுறிகளும், சிகிச்சையும், ஆலோசனைகளும் கூட இக்கதையிலேயே கொடுக்கப் பட்டிருக்கின்றன. இது வலிமையான ஒரு தர்க்க ரீதியான கோணத்தை கதைக்கு அளிக்கிறது.
தர்க்கரீதியாகவும், மாயங்கள் நிறைந்ததாகவும், அதிகாரத்தின் கதையாகவும், பெண்களின் கதையாகவும், காட்டின் கதையாகவும், மலைக்குடிகளின் கதையாகவும், லக்ஷியவாதிகளின் கதையாகவும், காணிக்காரர்களுக்கு நடைபெறும் ஒரு காலமாற்றச் சித்திரத்தை, வரலாற்றுப் பார்வையில் அளிப்பதாகவும், அனைத்துமாகவும் இருக்கிறது இக்கதை.
அன்புடன்,
கல்பனா ஜெயகாந்த்.