அன்பின் ஜெ,
கடலூரில் வசிக்கும் எழுத்தாளர் வளவ துரையன் இலக்கியச் சூழலில் நீண்ட காலமாக பன்முகத்தன்மை கொண்டு இயங்குபவர், குன்றாத செயலூக்கத்திற்கு எடுத்துக்காட்டு. அவரது இடையறாத உழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு சிறு முயற்சியாக ஆவணப்படம் ஒன்று தயாரித்துள்ளோம். நீண்ட தயக்கத்திற்குப் பின் வளவ துரையன் ஐயா இதற்கு இசைந்தார் . இதன் முக்கிய பகுதிகளை கொரானா ஊரடங்கிற்கு முன்பே பதிவு செய்தமை எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆயினும் ஊரடங்கு இதற்காக நாங்கள் மேற்கொள்ளவிருந்த பயணங்களை தவிர்க்க செய்தது, குறிப்பாக எழுத்தாளர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் போனது எங்களுக்கு தனிப்பட்ட இழப்பே.
ஆவணப்படத்திற்காக வளவ துரையனின் செயல்பாடுகள், படைப்புகள் குறித்த கருத்துக்களை பேசிய மூத்த எழுத்தாளர்களுக்கு வணக்கங்கள். இவ்வழிக்கு எம்மை ஆற்றுப்படுத்தும் கடலூர் சீனுவுக்கும், எழுத்தாளர்களை அணுக உதவிய விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். நண்பர்களின் ஆர்வமும் ஊக்கமும் மட்டுமே இதன் முதலீடுகள். இது எங்கள் எளிய முதல் முயற்சி, இனிவரும் காலங்களில் தரமான ஆக்கங்களை மேற்கொள்ள தொடர்ந்து முயல்வோம்.
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி