இலக்கியம்!!!

“என்னை இளைச்சிட்டே?

அப்பெண்டிக்ஸை வெட்டி வீசிட்டாங்க”

இலக்கியம் பற்றிய பழைய ஜோக். அக்கால விமர்சகர் ஒருவர் திருவனந்தபுரம் காலேஜில் பேசி முடித்ததும் ஒரு மாணவன் கேட்டான். “வளவள பேச்செல்லாம் வேண்டாம். இலக்கியத்தை எப்படி புரிந்துகொள்வது? அதைச் சொல்லுங்கள்”

விமர்சகர் சொன்னார். “இலக்கியத்தை புரிந்துகொள்கிறோமா?” மோவாயை வருடி மீண்டும் சொன்னார் “இலக்கியத்தை புரிந்துகொண்டவர்கள் உண்டா?” இன்னொரு வருடலுக்கும் பெருமூச்சுக்கும் பின் “புரிந்துகொள்ளத்தான் வேண்டுமா?”

மாணவன் சொன்னான். “புரிந்தது”

விமர்சகர் கேட்டார் “என்ன?”

“இலக்கியம்!”

அவ்வாறாகத்தான் யூனிவர்சிட்டி கல்லூரியில் இலக்கியம் பற்றிய தெளிவு உருவாகி நீண்டநாட்கள் நீடித்திருக்கிறது

”புத்தகம்கிறது மூளைக்கு உணவுன்னா இதிலே உப்பு புளி வெண்ணை எல்லாம் சேத்து தாளிச்சிருந்திருக்கணும்”

கேரளப் பல்கலைக் கழகங்கள் எப்போதுமே புரட்சிக்கனல் மூட்டப்பட்டவை. சமோவர் வைத்தால் டீ கொதிக்கும். புரபசர் எம்.கே.சானு ஒரு பல்கலையில் பேசும்போது ஒரு புரட்சி மாணவன் எழுந்து “இலக்கியத்தால் புரட்சிக்கு ஒன்றுமே செய்ய முடியாது” என்று கூச்சலிட்டான்

சானு பணிவாக “ஆமாம், ஆகவே புரட்சிக்கு எதிராகவும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்க எங்க பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துகிடறோமே?” என்றார். மாணவன் கருணை காட்டி வெளியே சென்றதாகக் கதை உண்டு.

”புனைவு ஏரியாவிலே இருந்து இலக்கியம் ஏரியாவுக்கு மாத்திட்டாங்கிறதனாலே அவன் ஒண்ணும் நம்மளவிட பெரிசா ஆயிடலை”

ஒரேநாளில் நான் இரண்டு எல்லைகளில் இருந்து தாக்கப்பட்டேன்.எங்கள் தமிழய்யா “இலக்கை இயம்புவதுதான் இலக்கியம்’ என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அன்றே மலையாளம் முன்ஷி ராமச்சந்திரன் நாயர் என்னிடம் ‘ச ஹிதம் சொல்லப்படுவதே சாகித்யம். இனிமையாக இதமாகச் சொல்லப்படுவது அது” என்றார்.

நான் அவர்களிடமிருந்து கைமீறிப்போய் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவை இரண்டுமே இலக்கியமல்ல என்று கற்றுக்கொண்டேன். இலக்கியத்திற்கு இலக்கு இல்லை. அது இதமாக இருக்கவேண்டும் என்பதுமில்லை. அது பாட்டுக்கு இருக்கலாம்.

”ஆமா, அவன்தான் என்னைய புடிச்சு உள்ள இழுத்து வச்சிருந்த புக்கோட எழுத்தாளர்”

அந்த விடுதலையை அடைவதற்கு முன்பு நான் மரபுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். எதுகைமோனைக்கு பின் எஞ்சிய இடங்களை நிரப்புவதற்காக நாட்கணக்கில் தவம் செய்த பொன்னாட்கள். ஆனால் அதனால் ஒரு நன்மை உண்டு. மரபுக்கவிதை இயற்கையையும் பெண்களையும் அழகாக ஆக்கிவிடுகிறது. அப்படி நம் அகம் மாறியபின் புறம் அப்படி மாறாமலிருக்க முடியுமா என்ன?

என்னுடைய மரபுக்கவிதைகளை ரசிக்க சிலர் அன்றிருந்தனர். ஆசாரி நாணுக்குட்டன் “நல்லா எளுதுதாண்டே” என்று என்னை பாராட்டினார். “நம்ம நச்சத்திரம்மா குறிசொல்லுத மாதிரி இருக்கு கேக்க” என்று அவர் சொன்னபோது நான் கொஞ்சம் ஐயப்பட்டேன்.

”அதுவா செல்லம்? அதெல்லாம் புத்தகம். அதிலே இருந்துதான் சினிமாக்களை எடுக்கிறாங்க”

இந்நாட்களில் என்னென்ன இலக்கியவகைமைகள் வழியாக கடந்து வந்திருக்கிறேன். கைசுருட்டி ஓங்கி கழுத்துபுடைக்க கூவும் புரட்சியிலக்கியம். மளிகைக்கடை அண்ணாச்சி பட்டியலிடும்போது தொகையை கூட்டிக்கொள்வதுபோல ஒலிக்கும் ‘அந்தரங்கமான, கறாரான, மிகையே இல்லாத, சொற்கச்சிதமான, ஓசையே எழாத’ நவீனத்துவ இலக்கியம், சாமிவந்த பூசாரிக்கு ஆய் வந்ததுபோன்ற தானியங்கிச் சொற்பெருக்கி இலக்கியம், பூடகமே உலகம் என்னும் கொள்கை கொண்ட கவிதைகள்..

மறுபக்கம் இலக்கியக் கருத்துக்கள், விமர்சனங்கள். கநாசு பாணி 36-28-36 அழகியல் விமர்சனம், துண்டுப்பிரசுரத்தில் இருந்து இலக்கியம் வந்தது என்னும் கைலாசபதியின் பரிணாமவாதம், கதையறியாமல் ஆட்டம் பார்க்கும் தமிழவன் பாணி கோட்பாட்டு விமர்சனம், கல்வித்துறையின் அட்டவணைப் பரிதாபங்கள்,பாக்டீரியாவுக்கு வைரஸ் தொற்று வந்ததுபோன்று மார்க்ஸியத்தில் பெண்ணியம் ஏறி மேயும் எழுத்துக்கள், நாட்டாரியலில் வீட்டாரியலை கண்டுபிடிப்பவை, கட்டுடைத்து கூடையில் அள்ளி அப்பால் கொட்டும் நாகார்ஜுனவாத விமர்சனங்கள்…

 ‘கிளாஸிக்ஸ்- முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டும்’ செக்‌ஷன்

”உண்மையச் சொன்னா அதைமட்டும்தான் படிக்கிறாங்க. அதான்…”

இப்போது இரண்டு உலகப்போர்களுக்குப் பின்னர் ஓய்வுபெற்ற ராணுவ வீரனாக உணர்கிறேன். “தோஸ் ஆர் த டேய்ஸ்” என்று கண்களைச் செருகிச் சொல்லலாம்தான். ஆனால் போர்களில் உண்மையாக ஈடுபட்டவர்கள் மீண்டுவருவதில்லை, மீண்டு வந்தவர்கள் வேடிக்கை பார்த்தவர்கள்தான் என்பதை அடுத்த தலைமுறையினர் அறிந்திருக்கிறார்கள்.

காலச்சலிப்பை கடந்து எஞ்சியிருப்பவை ஆங்காங்கே காதில் விழுந்து நெஞ்சில் நிறைந்த பகடிகள். அவற்றில் பலவற்றை நெஞ்சிலேயே வைத்துக்கொள்ளவேண்டும், நாலுபேருக்குத் தெரிந்தால் கௌரவமில்லாமல் இருக்கும். “கோவி மணிசேகரனுக்கு நல்ல வெங்கலக் குரல் தெரியுமோ, ஆனா அவரோட கதைகளை வாசிக்கையிலேதான் அது நமக்கு கேக்கும்” என்ற அசோகமித்திரனின் கண்களில் சிரிப்பு இருந்ததா, இல்லை சோடாப்புட்டி உருவாக்கிய மாயம்தானா?

தர்க்கவியல், ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி

சுந்தர ராமசாமி சிரிப்பதில்லை. சிரியஸாக நீல பத்மநாபனைப் பற்றி “அவரு தமிழிலே ஒரு whiner மரியா ரில்கே” என்றார். அந்தப் பகடியை புரிந்துகொள்ள நாம் அவரை ஆழ்ந்து அறிந்திருக்கவேண்டும். அதைவிட நீல பத்மாநாபனை. நான் புன்னகைக்க, என் கூட இருந்த பேராசிரியர் “ஆமாங்க, இப்பல்லாம் நெறைய கவிதைகள் எழுதுறார்” என்று சொன்னார்.

பிரமிள் பற்றிய ஓர் உரையாடலில் “கடுமையா உழைப்பார், கவிஞர் மாதிரி தெரியறதுக்கு” என்றார். ஒரு வீட்டில் விருந்தினராகச் சென்ற பிரமிள் அங்கே ஓர் இடத்தில் எறும்புகள் புற்றுக்குள் சென்றுவருவதை பார்த்தபடி இரண்டு மூன்று மணிநேரம் அமர்ந்திருந்தார், அக்குடும்பத்தில் இருப்பவர்கள் அதை விசித்திரமாகவும் திகைப்பாகவும் பார்ப்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின்.

மெல்லிய பொறுக்கித்தனம் கொண்டவை  புனத்தில் இக்காவின் வரிகள். “புனைவில் உள்ள அந்தரங்க எழுச்சி நம்மை தொடவேண்டும். பஸ்ஸில் அப்படி பலமுறை நடந்திருக்கிறது”

”எனக்கு நிரந்தர உண்மைகளையும் நீதியையும் அறத்துணிவையும் குடுக்கிற கிளாசிக் புத்தகம் வேணும், ஆனா அந்த புத்தகம் என்னோட நம்பிக்கைகளை மாத்திடக்கூடாது” 

அன்றாடத்திலிருந்து உவமைகளை எடுப்பது ஆற்றூர் ரவிவர்மாவின் வழக்கம். “பேக்கேஜ் மெட்டீரியல்களை எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்து வைக்கிறது நம்ம பழக்கம். பழைய பொருட்களை தூக்கி வீச மனசில்லாம வீடுமுழுக்க நிறைச்சு வைச்சிருப்போம். நம்ம இலக்கியத்தோட பிரச்சினையே அதுதான்”

அவருடைய பாணியில் இருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா இக்காவின் பேச்சுமுறை கொஞ்சம் மாறுபட்டது. “அன்றெல்லாம் இஸ்லாமியப் பெண்டிர் குண்டாக இருப்பதே அழகென நம்பப்பட்டது. அறைக்கல் பீபி தன்னுடைய இடுப்பில் அரைநாண் கொடியில் சாவியை கட்டி வைத்திருந்தார்.நகைகள் வைக்கும் ரகசியப்பெட்டியின் சாவி. அரைநாண்கொடி அறுந்ததில் சாவி தொலைந்துவிட்டது. வீடெல்லாம் தேடினார்கள், கிடைக்கவில்லை . பல மாதங்களுக்குப் பின் கிடைத்தது. பீபியின் இடுப்பு மடிப்புகளில் ஒன்றுக்குள் இருந்தது”

”அறிவியல் மாயப்புனைவு”

அதைச் சொன்னது மகாகவி ஜி.சங்கரக்குறுப்பின் நூற்றாண்டுவிழாவில். “ஜி கவிதைகள் அணியலங்காரச் செறிவு கொண்டவை. ஆனால் பொலிவு கொஞ்சம் கூடுதலாகி சாவி அதில் மறைந்துவிடுகிறது. தேடி எடுப்பது அத்துமீறலாகவும் ஆகிவிடுகிறது.” அதை விழாக்குழுவினர் பாராட்டாகவே எடுத்துக்கொண்டார்கள்.

சுந்தர ராமசாமி பேசும்போது நகைச்சுவையை உத்தேசிக்கிறாரா என்பதுதான் நாம் கூர்ந்து புரிந்து கொள்ளவேண்டியதாக இருக்கும். “கவிஞர்களை மனைவிகள் மதிக்கிறதில்லை” என்று ஒருமுறை சொன்னார். அப்பால் நடந்து போகிறவரை காட்டி “ஆனா மனைவி மதிக்காததனாலே கவிதை எழுதுறவரு அவரு”. சோகமாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

”வாசகரை சந்தியுங்கள்!’ நிகழ்ச்சி

”என்னோட ரெண்டு புக்க நீங்க படிச்ச விதம் சந்தோஷமா இருக்கு”

ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது “இவர் அவரோட கோஸ்ட் ரைட்டர்னு சொல்றாங்க” என்றார். இன்னொருவரை உத்தேசித்து “அவரு?”என்றேன். “சேச்சே அவரு டெவில்”. உண்மையில் டெவில் ரைட்டிங் என்று ஒன்று இருக்க முடியுமா? இன்றுவரை ஐயம்தான் எனக்கு. சிலர் நினைவுக்கு வராமல் இல்லை.  Think of the devil என்ற சொல்லாட்சியும் நினைவுக்கு வருகிறது.

பல்கலைக் கழகத்தின் கவிதைக் கருத்தரங்கு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்திருந்தார் ஆற்றூர் ரவிவர்மா. நல்ல களைப்பு. நான் “கவிதையைப் பற்றி என்ன பேசினாங்க?”என்றேன். அவர் மேலும் களைப்புடன் அவருடைய இளவயது அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஜேன் ஆஸ்டினின் பிரைட் ஆண்ட் பிரஜுடீஸ் சுருக்கமாக.

”நான் உன்னை வெறுக்கறேன்!”

[சில விஷயங்கள் நடக்கின்றன]

”நான் உன்னை விரும்பறேன்!”

அது குரோட்டன்ஸ்கள் வந்த காலம். வண்ணஇலைச் செடிகள் மேல் பெரும் மோகம் கொண்ட ஆற்றூர் அவற்றைக் கொண்டுசென்று தன் வீட்டின் முற்றத்திலும் வேலியிலும் வளர்த்தார். வண்ணப்பொலிவின் பரவசம்.

ஆனால் லீவுக்கு ஊருக்கு வந்தபோது ஒரு நாள் அம்மா அதன் இலைகளை பறித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். “என்ன பண்றே?”என்றார்.

“பொரியல்வைக்க கீரை பறிக்கிறேன். ஏன்டா?”

“அய்யோ அம்மா, அது கீரை இல்லை, அது குரோட்டன்ஸ்”

”கீரேட்டன்” என்று அம்மா சொன்னார்

“அதைச் சாப்பிடக்கூடாது… அது சாப்பிடுறதுக்கு உள்ளது இல்லை”

”டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு. அது வெறும் உருவகம்தான்”

“பின்னே எதுக்கு இப்படி முளைச்சு தழைச்சு நின்னுட்டிருக்கு?” என்றாள் அம்மா “தண்ணி வேற தினசரி ஊத்துறோமே?”

“இது வெறும் அழகுக்கு… அழகுக்காக”

“அழகா?”என்று அம்மா குரோட்டன்ஸை பார்த்தாள். “அழகுன்னா ஏதாவது பிரயோஜனம் வேண்டாமா?”

“அழகுதான் அதோட பிரயோசனம்”

“போடா, அழகான் செடிய அப்டி சும்மா விட்டா அது தெய்வத்தை அவமானப்படுத்துற மாதிரி” என்று அம்மா அடுக்களைக்கு குரோட்டன்ஸ் இலைகளுடன் சென்றார். “ஆறுமாசமா இதுதான் சமைக்கிறேன். உங்க மாமாவுக்கு இந்தக் கீரைதான் ரொம்ப பிடிச்சிருக்கு”

”எழுத்தாளருடன் கண்கள் சந்திப்பதை தவிர்க்கவும்” அறிவிப்பு

ஆற்றூர் மாமாவிடம் கேட்டார் ”உங்களுக்கு இது பிடிச்சிருக்கா அம்மாவா?”

“ருசி ஒருமாதிரித்தாண்டா இருக்கு. ஆனா மலச்சிக்கலுக்கு நல்லது” என்றார் அம்மாவன். “மலச்சிக்கல் இல்லாம ஆனதனாலே எப்ப அதைப்பாத்தாலும் நல்ல அழகா தெரியுது!”

நான் சிரித்துக்கொண்டே “பல்கலைகழகத்தில் யாருக்குமே எந்த சிக்கலும் இருக்காது” என்றேன்.

அருகே இருந்த எம்.கங்காதரன் உரக்கச் சிரித்து “பேராசிரியர்களுக்குக் கவிதை விமர்சனம் என்பது உழிச்சில்காரன் பெண்ணுகெட்டியது போலே” என்றார். [ஆயுர்வேத மசாஜ் செய்பவன்]

”போதும் வில்லியம், நான் கெளம்பறேன். உன் நாடகத்தை இதுவரை நம்பினதுபோதும்”

ஏறத்தாழ இதே காட்சி பி.பத்மராஜனின் ஒரிடத்தொரு ஃபயல்வான் சினிமாவிலும் வருகிறது. பயில்வான் ஆண்மையற்றவர். உடலைப்பேணுவதற்காக அப்படி ஆக்கிக்கொண்டவர். திருமணம் செய்துகொள்கிறார். முதலிரவில் மனைவியை தூக்கி போட்டு பிடித்து விளையாடி மகிழ்கிறார்.

இன்றுவரை நான் கல்விநிலையங்களில் கவிதை ஆய்வுசெய்பவர்களை, அங்கிருந்து கிளம்பிவந்து பொது ஊடகங்களில் கவிதை மேய்வு செய்பவர்களை காணும்போதெல்லாம் அந்த வரி நினைவுக்கு வந்து வெடித்துச் சிரித்துவிடுவேன். பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? கவிதைக்கு உடற்பயிற்சியும் தேவைதானே?

”இலக்கியத்தில் டாக்டர்கள் யாராவது இருக்கீங்களா? அவசரம்!”

பொதுவாக இலக்கியத்தில் கெட்டவார்த்தைகள் நேரடியாகப் புழங்குவதில்லை, அவற்றுக்கு இலக்கியநயம் கம்மி. கவிதை என்பது மறைபொருள். வேறுசொற்கள் கெட்டவார்த்தையாகப் புழங்கும். நான் வணிகவியலுடன் ஆங்கில இலக்கியம் பயின்ற கல்லூரி நாட்களில் ‘பெண்டாமீட்டர்” கெட்டவார்த்தையாக புழங்கியது.‘இயாம்பிக் பெண்டாமீட்டர்’ கடும் கெட்டவார்த்தை. [திருட்டுத் தாழ்வாரம் என்று சொல்லும் உச்சரிப்பில் சொல்லவேண்டும்]  “இன்னொருதடவ சொல்லிப்பாருலே, ஏலே, ஆம்புளையானா சொல்லிப்பாருலே” என்று கத்தியை உருவிய ராஜசேகரன் இப்போது பேராசிரியர்.

நவீனத் தமிழிலக்கியத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் உள்ளொளி [லே, இந்த உள்ளோளித்தனம் எங்கிட்ட வேண்டாம் கேட்டியா?] கட்டுடைப்பு [இவனையெல்லாம் மாப்ள, புடிச்சு நல்லா கட்டுடைச்சு விட்டாத்தான் அடங்குவான்] நுண்ணரசியல் [பீயிலே நுண்ணரசியல் பொறுக்குறவன் அண்ணாச்சி அவன்] போன்ற பல சொற்கள் கெட்டவார்த்தைகளாகப் புழங்கியிருக்கின்றன. சில சொற்கள் கிளுகிளுப்பாகவும் [நல்ல அமைப்பியல் உள்ள குட்டியாக்கும் அவ] பின் அமைப்பியலும் உண்டு.

”யுலிஸஸ் முதல் எடிஷன் மியூசியத்திலே இருக்கா, ஏன்?”

”யாருமே வாசிக்காத புத்தகம் அது” 

முன்பு தினமணியில் நூல்களின் பின்னட்டையையே மதிப்புரையாக போட்டுவிடுவார்கள். அதற்கான ஒரு சாஃப்ட்வேர் இருந்திருக்கலாம். சகட்டுமேனிக்கு நூல்மதிப்புரைகள் இருக்கும். “அகவெளியில் வெளிச்சம் பாய்ச்சி இருளகற்றி ஆழத்திற்குள் நுழைந்துசெல்லும் கதைகள் இவை”என்பதுபோல. வாசிக்கும்போது அக்கதைகள் வால் சுழல துளைத்துத் துளைத்து இறங்கிச் செல்வதை கற்பனைசெய்தால் நமக்குப் பின்பக்கம் கூசும்.

ஆனால் கோயில்பட்டியில் மாயஇலக்கியம் செழித்தோங்கி தமிழ் மஸாஜ் வைத்தியத்திற்கு ஆளான அந்நாட்களில் ஒரு கவிதைத்தொகுதியின் பின்னட்டை இப்படி இருந்திருக்கிறது. “இருப்பின் வெளிப்பில் வெளிப்படும் இருப்பின் முகங்களில் ஊறும் வெறிப்பில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறபடிப்பில் ஆழ்ந்துசெல்லும் மணல்கோடுகளின் மலைகளால் சூழப்பட்டது அப்பாசின் பேனாவில் ஊறி ஆச்சரியங்களில் அலையும் மை”. தினமணியின் மென்பொருள் இப்படி புரிந்துகொண்டது. ”அப்பாவின் மை எவ்வளவு சிறப்பானது என்று சொல்லும் நூல் இது”

புத்தகப்புழுக்களின் விமர்சனம்.“ஏமாற்றம்”  “சுவையேஇல்லை” “உறைஞ்சுப்போயிருக்கு”

ஆனால் தினத்தந்தி அளவுக்கு உச்சகட்ட இலக்கிய நகைச்சுவையை அளித்த இதழ் வேறில்லை என்று வேதசகாயகுமார் சொன்னார்.  “அகிலனுக்கு ஞானபீடப் பரிசு!!!” என்று மூன்று ஆச்சரியக்குறி போட்டிருந்தார்கள்.

“அதிலே எவனோ வெவரமான ஆளு இருந்திருக்கான்” என்று சுந்தர ராமசாமி சொன்னார்.

28 ஏர்போர்ட்!

27விற்பனை!

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைமதார் விருது, நிறைவு
அடுத்த கட்டுரைநீர் எனும் வாழ்க்கைநாடகம்- தேவதாஸ்