கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நீர்க்கோலத்தில் நளன் வழியாக சுவையை அறியும் நிஷாதர் அதிலிருந்து நுண்மை நோக்கிச் செல்லும் சித்திரம் அற்புதமானது. நாச்சுவை சொற்சுவையாகவும் செவிச்சுவையாகவும் விழிச்சுவையாகவும் வளர்ந்து அதன் மூலம் சித்தம் நுண்மை கொண்டு அதன் உச்சியை அடைய  அவர்களிடையே கலைகள் பிறப்பெடுக்கும் என கதை செல்லும்.

வனவாசம் வாசிக்கையில் நாம் நடைமுறையில் நிஷாதரின் வளர்ச்சிக்கு நேர்மாறான பாதையில் நெடுந்தொலைவு சென்றிருப்பதைக் காண முடிகிறது. சாமியப்பாவும் குமரேசனும் சுப்பையாவும் மட்டுமான ஒரு அற்புதமான உலகத்தில் அவர்கள் நுண்ணிதின் சுவை தேர்கிறார்கள்.  உணவில் ஆரம்பிக்கும் சுவைதேர்தல் சங்கீதத்தில் தொடர்ந்து  இறுதியாக கூத்தில் உச்சம் பெற்று முடிகிறது.  இருவரிடமும் இருந்து சுப்பையா சுவை தேர்தலை கற்றிருப்பான். இந்தஉச்ச தருணத்தை இம்மூவரும் அன்றி வேறு யாரும் அறியப்போவதில்லை.

நான் பிறந்து வளர்ந்ததும் இப்போது வசிப்பதும் நகரத்திலேயே.    கிராமத்து திருவிழாக்கள் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கதை ஆரம்பித்த நொடியில் இருந்தே கிராமத்து சூழலை உணர ஆரம்பித்தேன். சுப்பையாவின் பொங்கும் ஆர்வம், சாமியப்பாவின் நிதான கம்பீரம், குமரேசனின் உற்சாகம் , திருவிழா ஏற்பாடுகள் என கதை ஒரு நிகர் வாழ்வை சமைக்கிறது.  பழைய சோற்றிலும் சுவை தேர்ந்து ருசிக்கும், பின்னர் விருந்தில் அரசனைப் போல உண்ணும் சாமியப்பாவும் , உற்சாகமாக பேசிக்கொண்டே சுவைக்கும் குமரேசனும் சுப்பையாவிற்கும் நமக்கும் கற்பிக்கிறார்கள். நிதாந்தாகாசம் குறித்து சாமியப்பா விளக்குவது இன்னொரு உச்சம்.

குமரேசன் அல்லியாக மாறிய பின் அதில் பெண்மையின் கம்பீரத்தை காணும் சுப்பையா அதே போல் அர்ஜுனனிலும் அப்பெண்மை தோற்கும் ஆண்மையை காண்கிறான் .  பிறகு அல்லி-அர்ஜூனனின் முழு வாழ்க்கையையுமே காண்கிறான். ஆரம்பத்தில் வரும் கட்டற்ற இன்பமும் பிறகு வரும் கடும் பிரிவுத் துயரும் இரண்டையுமே அனுபவிக்கிறான். அவனுக்கும் அவனுடன் சேர்ந்து நமக்கும் கதார்ஸிஸ் நிகழ்கிறது.

கலையின் உச்சத்தை அடைந்த கலைஞர்களுக்கும் அதை கண்டறியும் ரசிகர்களுக்கும் நிஜ வாழ்க்கை வனவாசமாகவே இருக்கும். ஒருவேளை அப்படி இருப்பதையே அவர்களும் விரும்புவார்கள் போலும். நடைமுறை வனவாசம் நிகர் வாழ்வை மேலும் சுவை கூட்டும்.

சூழ்திரு கதையில் அனந்தன் தந்தையிடமிருந்து சுவைதேர்தலை அறிவான். இங்கு மீண்டும்.ஒரு நிகர் வாழ்வை வாழ, சுவை தேர்தலை  கற்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஜெ.

சங்கரன். இ.ஆர்

***

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு நீங்கள் எழுதிய கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அன்னம் கதை வாசித்து கண்ணீர் விட்டேன். மகத்தான கதை. சோற்றுக்கணக்கு போல ஒன்று. ‘அதனாலென்ன?’என்ற வரி ஒரு மாபெரும் ஆப்த வாக்கியம்.

மிக எளிதாக எழுதிச்சென்றுவிட்ட கதைகள். ஆனால் அவற்றின் வடிவமும் கதாபாத்திரங்களின் ஒத்திசைவும் மிகையாகாத ஆனால் குறையாத உணர்ச்சிகளும் கலை என்பது பிறப்பதே ஒழிய செதுக்கிச் செதுக்கி உருவாக்குவதல்ல என்பதற்குச் சான்றுகளாக உள்ளன. செதுக்கிஎழுத ஆரம்பித்தால் இந்த வகையான கதைகளை எழுதி முடிக்கவே முடியாது.

தி.ஜானகிராமன் அவர் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லும்போது நீண்டகாலம் மனதில்கிடந்தவற்றை எழுதவே முடிந்ததில்லை என்கிறார். மலர்களுக்கோ இதழ்களுக்கோ கதைகேட்டு பல கடிதங்கள் வரும். அவசரம் தலைக்குமேலே போகும்போது சரமாரியாக நாலைந்து கதைகளை எழுதி அனுப்பிவிடுவார். அவற்றை பிரசுரிப்பார்கள். பிறகு புத்தகம் வரும்போது திருத்திக்கொள்ளலாம் என்று நினைப்பார். ஆனால் அதற்குள் அந்த கதையில் இருந்து நகர்ந்திருப்பார்.

கலை அப்படித்தான் நிகழமுடியும் என நினைக்கிறேன். மூன்றுநான்கு மாதங்கள் உச்சியிலேயே இருந்திருக்கிறீர்கள்

ஆனந்த் ராம்

***

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் வாசிப்பு- மஞ்சுநாத்
அடுத்த கட்டுரைஹெ.எஸ்.சிவப்பிரகாஷின் குரு