பாலையாகும் கடல் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கிருஷ்ணன் சங்கரனின் எதிர்வினையைப் படித்தேன்.அவர் நான் எழுதியதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை எனப் புரிகிறது.
கடல் சார் வளம் அழிவதற்கான காரணங்களில் அதீத கடல் உணவை உண்ணும் பழக்கமும், தேவையற்ற கடல் மிருக வேட்டைகளும் மிக முக்கியக் காரணம். அத்துடன், வளரும், வளர்ந்த நாடுகள் கடலில் கொட்டும் ப்ளாஸ்டிக் வேஸ்ட். இன்னும் 30 ஆண்டுகளில், கடல் ப்ளாஸ்டிக் வேஸ்டால் நிரம்பி, நம்ம கூவம் போல ஆகிவிடும் அபாயம் உள்ளது.
முதலில் உணவு. அசைவ உனவு குறிப்பாக கடல் சார் உணவு அதிகரித்திருப்பது போலவே, அதீத சைவ உணவுப் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. நாம் நம் தேவைக்கு 2-3 மடங்கு அதிகமாக உண்கிறோம் என்பது உண்மை.குறிப்பாக மாவுச்சத்துக்காக உண்ணும் உணவு தானியங்கள். புலாலைப் போலவே கார்போ ஹைட்ரேட்டும் அடிமைப்படுத்தும் ஒரு பழக்கம்தான். இந்தியர்கள் நொறுக்குத் தீனி தின்பதும்.
பொருளாதாரம் 7-8% வளர்கையில், நொறுக்குத் தீனித் தொழில், 20-25% வளர்கிறதென்றால், மத்திய, மேல் வர்க்கச் சராசரி நுகர்வு பல மடங்கு அதிகரித்திருக்கிறது என அர்த்தம். சிறு கடைகளாக இருந்த அடையாறு ஆனந்த பவனும், கிருஷ்ணா ஸ்வீட்ஸும் வளர்ந்த வேகத்தை நாம் கண் முன்னால் பார்த்தோம்.
ப்ரகாஷ் சங்கரன் தன்னைச் சுற்றி ‘கவிச்சி இல்லாமல் சாப்பிட முடியாத மக்களைப் பார்க்கையில் எரிச்சல் வருகிறது எனச் சொல்லியிருந்தார். சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால்,
‘மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
என்னும் பேச்சுக்கள் கேட்டிருக்கும்.. ஆண்கள், ரத்னா பவன் ரவா தோசை, அகர்வால் ஸ்வீட்ஸ் பெண்கள், ப்ளாக் ஃபாரெஸ்ட் சாக்லட் என உருகியிருப்பார்கள்.. ஐஸ்க்ரீம் சீசனிங் போன்ற தாவரக் கொழுப்புகள், பாமாயிலில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.. உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவையும் அந்த எண்ணெயில் தான் பொரிக்கப்படுகின்றன.. இந்த் தாவர எண்ணெய் உற்பத்திக்காக, உலகின் மிக உன்னதமான பல்லுயிர்க்காடுகள் அழிக்கப்படுகின்றன.
சைவமோ / அசைவமோ – இந்த வர்க்கம் உண்ணும் உணவு, உடலின் தேவைகளை விட மிக அதிகமான அளவு. This excess and unwanted consumption is diet agnostic.
என் கடிதம் சொல்வது அதையே.
ஆனால், சமூகப் பொருளாதாரப் பிரமிடில், பெரும் மக்கள் தொகை கீழே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் உடல் உழைப்பில் இருப்பவர்கள்.. அவர்களுக்கு அரிசியும், புரதமும் தேவைப்படுகிறது.. அவர்களது அண்மையில் கிடைக்கும் உணவு தானியத்தையும், புரதத்தையும் உண்பவர்கள். அங்கே பற்றாக்குறை உள்ளது. நாம் அவர்களை இங்கே பேசவில்லை.
அன்புடன்
பாலா