முகமது மதார் முகைதீன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1993-ஆம் ஆண்டு சாகுல் ஹமீது, மும்தாஜ் சாய்பா தம்பதியின் இளைய மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர் சகோதரி ஆயிஷா பப்பி. பதினொரு வயதில் கவிதை எழுதத் தொடங்கி, கல்லூரி நாட்கள் முதல் இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்டு கவிதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘வெயில் பறந்தது’ குழந்தையின் கள்ளமற்ற மொழிகளையும், துக்கத்தை ஓரமாக வைத்துவிட்டு தன் பணியைச் செய்யும் வாலிபனையும் வேடிக்கைப் பார்த்து எழுதும் விளையாட்டுச் சிறுவனுக்கு உரியது. இவ்வருடத்திற்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெரும் மதாரை எழுத்தாளர் தேவிபாரதி வீட்டில் சந்தித்தோம்.
மதார்- தமிழ் விக்கி
கேள்வி: பெரும்பாலான கவிஞர்கள் தங்கள் முதல் கவிதையை காதலிக்காகவே எழுதியிருப்பார்கள். விரைவில் திருமணம் ஆகப்போகும் தருணத்தில் உங்கள் முதல் காதல் கவிதைப் பற்றிச் சொல்லுங்கள்?
மதார்: முதல் கவிதை நீங்கள் சொல்வது போல் காதல்கவிதை தான். ஆனால், அது காதலிக்காக எழுதியதல்ல. என் பள்ளி நாட்களில், வகுப்பாசிரியர் தலைக்கு ஒரு கவிதை எழுதி வரும்படி கேட்டிருந்தார்.
முதலில் நான் பக்கத்து வீட்டு அண்ணன் நன்றாக கவிதை எழுதுவார் என அறிந்து அவரிடம் கேட்கலாம் என்றிருந்தேன். அன்று அவர் இல்லாததால் நானே ஒன்றை முயற்சி செய்தேன்.
முயற்சி என்றில்லை வழக்கமாக எல்லா விடலைப்பருவத்தினரும் செய்யும் யுக்தி தான். பத்திரிகையில் படித்த கவிதையை நமக்குத் தோன்றுவது போல் மொழியை மாற்றி எழுதி சமர்ப்பிப்பதை தான் அன்று செய்தேன்.
கேள்வி: அந்த முதல் கவிதை நினைவில் இருக்கிறதா?
மதார்: அந்தப் பத்திரிகையில் வாசித்த கவிதை கூட நினைவில் உள்ளது. பத்திரிகையில், “கண்ணுக்கு விருந்து அவளது காட்சி, காதுக்கு விருந்து அவளது பேச்சு” என்றிருந்தது. அதனை நான் கொஞ்சம் மாற்றி, “கண்ணுக்கு விருந்து இரவின் காட்சி, காதுக்கு விருது பகலின் பேச்சு” என்று எழுதினேன். அது தான் என் முதல் முயற்சி. ஒரு காதல் கவிதையை, இயற்கையின் மீதான காதலாக மாற்றிப் பார்ப்பது.
அதற்கு பின் கல்லூரி நாட்களில் நிறைய காதல் கவிதை முயற்சி செய்தேன். கிட்டத்தட்ட இரண்டு தொகுப்பு அளவிற்கு காதல் கவிதைகள் மட்டும் சேர்ந்துவிட்டபின் தான் தெரிந்தது, இதெல்லாம் காலாவதியான காதல் கவிதைகள் என.
தீவிர இலக்கிய வட்டத்திற்குள் வந்த பின் ஒரு சில காதல் கவிதைகளும் முயற்சி செய்திருக்கிறேன்.
கேள்வி: இந்த வகை பொது பத்திரிகைத் தளத்திலிருந்து நீங்கள் தீவிர இலக்கியத்திற்குள் வந்த பயணம் பற்றி?
மதார்: நான் பள்ளி நாட்களிலேயே கவிதை எழுதத் தொடங்கியிருந்தேன். ஆனால், தீவிர வாசிப்பு அந்நாட்களில் ஏற்படவில்லை. பெரும்பாலும் சிறுவர் இதழ்களே எனக்கு வாசிக்கக் கிடைத்தன.
பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டிறுதியில் மூன்று வரி எழுதியிருந்தேன், “கழிவறையில் அமர்ந்து மலம் கழுவ மறுத்தேன், விளிம்பில் ரயில் பூச்சிகள்” அந்தக் கவிதை எனக்கு ஒரு கவிதையாக வெற்றியடைந்ததாகப் பட்டது.
அதனை ஒட்டி பிற கவிதைகள், நூல்கள் வாசிக்கலாம் எனக் கல்லூரி நாட்களில் தொடங்கியது தான் வாசிப்புப் பழக்கம். ஆனால் அப்போது வணிக இலக்கியம் மட்டும் வாசிக்கவில்லை. முதலில் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இரண்டாவது, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குத் தாவிவிட்டேன். தீவிர இலக்கியம், வணிக இலக்கியம் என்ற பேதமில்லாமல் தான் வாசித்தேன். அன்று நூலகத்தில் கையில் கிடைக்கும் நாவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் மொழிப்பெயர்ப்பு நாவல்கள்.
கேள்வி: உங்கள் நூல் தேர்வு ஆச்சரியமானது. பொதுவாகவே வளரும் காலங்களில் நேரடியாகவோ நூல்கள் வழியாகவோ சில ஆசிரியர்களின் கைகளைப் பற்றியிருப்போம். தீவிர – வணிக பேதத்தில் நூல்களை அணுகாவிட்டாலும் அதன் ஆதாரமான வேறுபாடுகளை உணரும் தருணம் இளம் படைப்பாளியின் முக்கிய தருணம். அது பற்றி கேட்கிறேன்?
மதார்: வெயில் பறந்தது தொகுப்பை நான் லஷ்மி மணிவண்ணனுக்கும், ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் சமர்ப்பணம் செய்தேன். ஸ்ரீநிவாசன் என் பள்ளித் தோழன், அவன் தான் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தவன். கல்லூரி நாட்களில் அவனை பின் தொடர்ந்து அவன் வாசிக்கும் நாவல்களை, கவிதைத் தொகுப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன்.
கல்லூரி முடிந்ததும் என்னுள் தன்னியல்பாக அந்த உடைவு நிகழ்ந்தது எனச் சொல்லலாம். அப்போது தான் என் ரசனை சார்ந்த நூல்களை மட்டும் தேர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அக்காலக்கட்டத்தில் தான் எனக்கான கவிதை மொழியும் உருவாகி வந்தது என நினைக்கிறேன்.
நட்ஹாம்ஸனின் பசி நாவல், தமிழில் க.நா.சு மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அது தான் என் புனைவு வாசிப்பின் முதல் சவால் என்று சொல்லலாம். அந்த நாவலில் உள்ள பசியென்ற படிமம் என்னை அலைகழித்தது. பல நாள் பசிக்கு பின் கதாநாயகன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று என்ன சாப்பிடலாமென கேட்பான். பால் குடிக்கச் சொல்லி அங்கு வந்திருக்கும் மற்றொருவன் சொல்வான். அந்த தருணத்தை என் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் காண நேர்ந்த போது நாவல் என்னுள்ளே மேலும் வளர்ந்தது.
அதன் பின்பு தொடர்ந்து மொழிபெயர்ப்பு நாவல்கள் வாசித்தேன்.
கேள்வி : பிரபல ஏடுகளில் உள்ள கவிதைகளிலிருந்து விலகி வருவதற்கு உங்களுக்குத் தடையாக இருந்தது எது? அல்லது யார்?
மதார்: தடையென பிரபல ஏடுகளையே சொல்லலாம். தொடர்ச்சியாக அதில் தீவிரமாக செயல்பட எண்ணிய போது ஒருவகை சலிப்பு உருவாகியது. அதிலிருந்து தன்னிச்சையாக ஒரு விலக்கமும் உருவாகியது.
கேள்வி: கல்லூரி படித்து முடித்ததற்கு பின்பான நாட்கள் தனிப்பட்ட வாழ்விலும் ஒரு முக்கியமான காலகட்டம் என உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது அக்காலகட்டத்திலேயே உங்கள் கவிதை மொழி உருவாகி வந்ததாக சொல்கிறீர்கள். அந்த காலகட்டத்தை பற்றி சொல்லுங்கள்?
மதார்: என் தனிப்பட்ட வாழ்க்கையில் அது ஒரு நெருக்கடியான காலகட்டம் தான். வேலை சார்ந்து, என் ஆர்வம் சார்ந்து சில தேடல்கள் இருந்தன. அதனை ஒட்டிய குழப்பங்களும் சேர்த்து. ஆனால் அந்த காலகட்டத்தில் தான் என் மனதிற்கு நெருக்கமான பல கவிதைகளை எழுதியுள்ளேன்.
உதாரணமாக, துபாயில் வேலையில் இருந்த நாட்களில், நான் வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவர் ப்ரஷை தெறித்த போது வானத்தில் அவருக்கு பின்னால் ஏரோபிளைன் பறந்தது. அவர் விட்ட வண்ணத்தில் இருந்து அந்த பிளைன் பறந்தது போல் காட்சியிருந்தது.
அந்த தருணம் நான் சென்றுக் கொண்டிருந்த நெருக்கடியான பல லௌகீகச் சிக்கல்களின் பாதையிலிருந்து விடுவித்தது. அதனை ஒரு கவிதையாக்க முயற்சி செய்தேன். இன்றுவரை என் கவிதையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமையை அந்த தருணத்தின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். ஒரு வரியில் சொல்வதென்றால், சிக்கலான புறச்சூழலிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள இந்த பாதையை தேர்ந்தெடுத்தேன் எனச் சொல்லலாம்.
கேள்வி: உங்கள் கவிதையில் வெளிப்படும் ஒரு விளையாட்டுத்தனம் அதன் நீட்சி தானா? அந்த நெருக்கடியான மனநிலையில் இருந்து உங்களை ஒரு வேடிக்கைப் பார்ப்பவனாக ஆக்கிக் கொண்டீர்கள் எனச் சொல்லலாமா?
மதார்: உண்மைதான். அந்த மனநிலை அந்நாட்களில் பருவடிவம் கொண்டது எனச் சொல்லலாம். ஒரு வரி மனதில் தோன்றினால், எங்காவது சென்று அந்த ஒரு வரியை மட்டும் மீட்டிக் கொண்டிருப்பது, அந்த வரியை மட்டுமே தாங்கிக் கொண்டு நாட்களைக் கழிப்பது என இருந்திருக்கிறேன்.
அவ்வரிகள் என்னிடம் உள்ள போது நான் எங்கே செல்கிறேன் என்பதைக் கூட பல நாள் மறந்து சென்றிருக்கிறேன். லௌகீக வாழ்வில் இது ஒரு பெரும் சிக்கலும் கூட. ஆனால் ஒரு கவிஞனுக்கு அது வரம்.
அந்நிலை மொத்த இருளில் ஒரு இடத்தை மட்டும் டார்ச் அடுத்துக் கொண்டு அதில் மட்டுமே லயித்திருப்பது. முதலில் அதனை இங்கிருந்து வெளியேறும் தந்திரமாகவே கையாண்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது எனக்கான பாதையாக மாறியது என்று இப்போது தோன்றுகிறது.
கேள்வி: அப்படி நீங்கள் செல்லும் இடங்களில் மனதிற்கு அணுக்கமான இடம் எதுவும் உள்ளதா? அல்லது உங்கள் பயண அனுபவம் பற்றி?
மதார்: திருநெல்வேலி வ.உ.சி மைதானம் என் மனதிற்கு ரொம்ப அணுக்கமான இடம். நான் சென்று பெரும்பாலான நேரங்களில் அங்கே அமர்ந்திருப்பேன். இந்த தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அங்கே எழுதியவை தான். உதாரணமாக, பந்து கவிதை, அதே போல் பலூன் கவிதை எனப் பல கவிதைகளைச் சொல்லலாம்.
பயண அனுபவத்தைப் பற்றி கேட்டிருந்தீர்கள். என் பெரும்பாலான அந்நியநிலப் பயணம் வேலை நிமித்தமாக செய்தது. இப்போது இருக்கும் ஒரு நிலையான வேலை கிடைக்கும் வரை கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் நிறைய இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். ஒவ்வொரு சூழலும் நம்மையறியாமல் நம்முள் ஒரு மாற்றத்தை நிகழ்த்துகின்றன. அந்த அறிய முடியாமையின் வெளிப்பாடே கவிதை என நினைக்கிறேன்.
நீங்கள் என் கவிதைகளில் வெயில் என்ற படிமம் தனி இடத்தை பிடித்திருப்பதை காணலாம். அது தன்னிச்சையாக என் கவிதையில் வந்தமர்ந்தது. ஒன்றை திட்டமிட்ட ஒரு கவிதைக்காக சென்று பார்ப்பதில்லை. வெவ்வேறு காலநிலையில், வெவ்வேறு பிரதேசத்தில் தன்னிச்சையாக நிகழ்ந்த பயணம் மூலமாக, நான் அறியாமலே உருவாகி வெளிப்பட்ட படிமமாகத்தான் அது அமைந்திருக்கிறது.
மேலும் காலம், இடம் போன்றவற்றை நான் பிரக்ஞாப் பூர்வமாக கவிதையில் திணிப்பதில்லை. அப்படி ஒரு கவிதை முயற்சித்தால் அது கவிதையாக ஆகாமல் நின்றுவிடும்.
இந்த வெயில் மீதான obsession கூட நான் எழுதும் போது கவனித்ததில்லை. இந்த தொகுப்பிற்காக கவிதைகளை திருப்பிப் பார்க்கும் போதே எனக்கு தெரிந்தது, வெயில் பற்றி என் கவிதையில் இத்தனை வந்திருக்கிறது என.
நமக்கு அணுக்கமான ஒரு சூழல் நம்மையறியாமலே நம் உறவினர்கள், நண்பர்கள் போல் உடன் கலந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன்.
கேள்வி: உங்கள் பணி இடங்கள் பற்றி?
மதார்: கல்லூரி முடித்ததும் முதலில் சென்னையில் ஒரு வீடியோ கேம் கம்பெனியில் சில நாட்கள் வேலைப் பார்த்தேன். பின் துபாயில் ஒரு எட்டு மாத காலம் இருந்தேன். என்.சி.பி.ஹெச் புத்தகக் கடையில் ஒரு ஆறு மாதம் இருந்தேன். ரயில்வே வயரிங் சார்ந்த வேலையிலும் ஆறு மாதம். திருநெல்வேலியில் எஃப்.எம் ஸ்டேஷனில் சில நாட்கள் வேலைப் பார்த்தேன்.
இக்காலகட்டத்தில், திருநெல்வேலியில் மாணவர் பத்திரிக்கை அலுவலகம் தொடங்க சிறு முயற்சி செய்தேன். பின் சென்னை சென்றதும் அங்கும் முயற்சித்தேன். சில காரணங்களால் அவை முடியாமல் போனது. பின் என் அலுவலக வேலைகள் எழுத்திற்கான நேரத்தை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, நிலையான அரசு வேலைக்கு முயற்சி செய்து தேர்ச்சி பெற்றேன்.
கேள்வி: இலக்கியம், பயணம், வேலை நேரங்கள் போக வேறு தனிப்பட்ட கலை ஆர்வம் உண்டா?
மதார்: ஓவியம் சார்ந்த ஈடுபாடு உண்டு. கல்யாண்ஜி நன்றாக ஓவியம் வரையக்கூடியவர். என்னால் வரைய முடியாததால் என்னை பார்வையாளனாக நிறுத்திக் கொண்டேன்.
பாடல்கள் கேட்கும் வழக்கமும் உண்டு. பெரும்பாலும் அதன் சந்தத்திற்காகவே பாடலைக் கேட்பேன். ஒரு பாடலைக் கேட்டால் அதன் டியூன் நாள் முழுவதும் மண்டையை நிறைத்திருக்கும். அந்த துணுக்குகளுக்காக மட்டுமே பாடல் கேட்பது வழக்கம்.
நண்பர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சினிமா பார்ப்பதுண்டு. என் பள்ளி நாட்களில் நான் இயக்குனர் ஜனநாதனின் ‘இயற்கை’ படத்தை காரணமின்றி பல முறைப் பார்த்திருக்கிறேன். பின்னால் அது தஸ்தோவ்யெஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது இன்னும் நெருக்கமானது.
எனக்கான படங்களாக நான் நினைப்பது பெரும்பாலும், மனிதர்கள் குறைவான படங்கள். ‘Post Men in the Mountains’ என்ற ஒரு சீனப் படம் உண்டு. ஒரு மனிதன், ஒரு மலை, ஒரு நாயைச் சுற்றி நடக்கும் கதை, அதே போல் மனிதர்கள் குறைவான சூழல் கொண்ட படங்கள் மனதிற்கு நெருக்கமானவை.
கேள்வி: உங்கள் கவிதைகளில் சில கவிதைகள் நீங்கள் சொல்லும் சந்த நடையில் அமைந்துள்ளன. உதாரணமாக, கூவிக் கூவிக் கூவித் திரியும் குருவி. மரபு இலக்கியத்தின் மீது ஆர்வம் உண்டா? இல்லை பாடல் மெட்டுகள் இதனை உருவாக்கியதா?
மதார்: மரபு இலக்கியத்தில் பெரிய பரிச்சயம் இல்லை. ஆனால் ஆர்வம் உண்டு. இந்த கவிதை என்னுள் ஒரு சொல் வழியாகவே உருவாகியது. ’கூவிக் கூவிக் கூவித் திரியும் குருவி’ என்ற வரி பிறந்ததும் அதனை ஒரு மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தேன். பலமுறை பாடிக் கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட இசை மெட்டிற்கு ஏற்ப அமைந்த வரி.
அத்தனை முறை என்னையறியாமல் அந்த வரி என்னுள் சென்ற பின்னர் தான் அந்த கவிதையை எழுதத் தொடங்கினேன். ஒரு பிரக்ஞையற்ற நிலையிலேயே அந்த கவிதையை எழுதினேன்.
இதே வடிவத்திலேயே இரண்டு, மூன்று கவிதைகள் முயற்சி செய்திருக்கிறேன். அவற்றுள் சில வடிவம் சார்ந்த முயற்சிகள் மட்டுமே. உதாரணமாக, ‘தலைகீழாக திருப்பாதீர்கள்’ என்ற கவிதை, அந்த கவிதை அச்சில் தலைகீழாக இருக்கும். ஆனால் இந்த தொகுப்பிற்காக கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது அந்த கவிதை தனியாக துருத்திக் கொண்டிருந்தது. அதனால் அதனை நீக்கி விட்டேன்.
இதே போல் எல்லா வடிவத்திலும் கவிதை முயற்சி செய்வதுண்டு. ஆனால் அது கவிதையானால் தான் வெளியிட வேண்டுமென்ற தீர்மானமும் உள்ளது.
கேள்வி: ‘தலைகீழாக திருப்பாதீர்கள்’ எனக் கவிதையின் தலைப்பு சொன்னீர்கள். வெயில் பறந்தது தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளுக்கும் தலைப்பு இல்லை அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
மதார்: அப்படி யோசித்து எந்த கவிதைக்கும் செய்வதில்லை. கவிதை எழுதி முடித்தவுடன் தன்னிச்சையாக ஒரு தலைப்பு வந்தால் அதனைப் போட்டுவிடுவேன். தலைப்பிற்காக யோசித்து தலைப்பிடுவதில்லை.
கவிதையில் தலைப்பு இரண்டு காரணங்களுக்காக வைக்கலாம்.ஒன்று, அந்த தலைப்பு கவிதைக்கு கூடுதலான அர்த்தத்தை தர வேண்டும் அல்லது அந்த கவிதைக்கு கூடுதலான அழகை சேர்க்க வேண்டும். இப்போது எழுதும் கவிதைகளில் இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே தலைப்பிடுகிறேன்.
சமீபத்தில் எழுதிய ஒரு கவிதை, ’பறவை ஒன்று நிலவை கடக்கும் போது ஓராண்டு பின்னோக்கி செல்கிறது. பறவையும் ஒரு வருஷம் பின்னோக்கி செல்கிறது, நிலவும் செல்கிறது, ஒரு வயது குழந்தையும் செல்கிறது’ என அந்த கவிதை முடியும். அந்த கவிதைக்கு கர்ணன் எனத் தலைப்பிட்டிருந்தேன். அந்த குழந்தை நிலவின் மைந்தனாக வரும், கர்ணன் சூரியனின் மைந்தன். இது போல் கூடுதலான அர்த்தம் வரும் பட்சத்தில் மட்டுமே கவிதைக்கு தலைப்பிடுகிறேன்.
கேள்வி : பொதுவாகவே புனைவுக்குள் நுழையும் இளைஞனுக்கு அதுவரை அத்துறையில் நடந்த உரையாடல்கள் மீதும், அறிவு சார்ந்த விவாதங்கள் மீதும் ஈர்ப்பு இருப்பதுண்டு. நீங்கள் மிக இயல்பாகக் கவிஞராகத் திரண்டு உருவாகியுள்ளீர்கள். கவிதையில் அதுவரை பேசப்பட்ட சாரம், வடிவ சோதனை, கோட்பாட்டுச் சுமை உங்கள் கவிதை மனதை எவ்வாறு பாதித்தது?
மதார்: முன்னோடிகளின் நூல்களை நான் எப்போதும் கோட்பாடு சார்ந்து அணுகியது இல்லை. எந்த ஒரு சாரமோ, வடிவ சோதனையோ என் ரசனை சார்ந்து இருந்தால் அதனை முயற்சித்துப் பார்ப்பேன். மேலே சொன்ன தலைகீழாக திருப்பாதீர்கள் கவிதை அந்த வகை முயற்சி தான்.
கமல் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பார்வையாளனுக்கும், படைப்பாளிக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி பேசியிருப்பார். ’ஒரு படத்தை டெக்னீஷினாக பார்க்கும் போது அதிலுள்ள டெக்னிகல் சார்ந்த விஷயங்கள் தான் மண்டையில் ஓடும். ‘எங்கே கேமரா இருக்கிறது’ போன்ற விஷயங்களே பார்வையில் முதலில் படும். அதனை தாண்டி ஒரு ரசிகனாக நான் பார்ப்பது சற்று சிரமம் தான்’ என்றார். கவிதைக்கும் அது பொருந்தும் என நினைக்கிறேன். நான் புனைவு வாசிக்கும் போது டெக்னீஷனாக என்னை ஆக்க விரும்பவில்லை. அதன் ரசிகனாக இருக்கவே விரும்புகிறேன்.
கேள்வி: உங்கள் கவிதை உங்களுள் நிகழும் தருணம் பற்றி சொல்லுங்கள்?
மதார்: கவிதை நிகழும் தருணம் எனச் சொல்ல முடியாது. கவிதை புறச்சூழலில் இருந்து தோன்றிய கணங்களைப் பற்றிச் சொல்ல முடியும். உதாரணமாக,‘கட்டையாகவும் நெட்டையாகவும் ஒரு திருமணப் பந்தல் ஜோடி’ இந்த கவிதை என் நண்பனின் காதல் திருமணத்தன்று எழுதியது. ‘பந்து’ கவிதை நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது எழுதியது. ‘தனிமையைப் பகிர ஆளிலா கிழத்தி’ எனத் தொடங்கும் கவிதையில் உள்ள தனியான ஆச்சி பாளையங்கோட்டையில் எங்கள் வீடிருக்கும் தெருவில் உள்ளவர். அவரை நினைத்து எழுதியது அந்த கவிதை. இப்படி ஒவ்வொரு கவிதையும் நிகழ ஒரு புறவுல செயல் காரணமாக இருந்தது எனச் சொல்லலாம். எண்ணில் அடங்காத உலக சாத்தியத்தில் இருந்து என் கவிதைக்கான ஊற்றைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் என நினைக்கிறேன்.
கேள்வி: உங்கள் கவிதையில் துக்கம் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கும் பரிசுப்பொருளாக அல்லது காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கிறது. பொதுவாக தமிழ் கவிதையில் தென்படும் கடும் துக்கமும், கசப்பும் அற்றி உங்கள் கவிதைகள் பற்றி?
மதார்: இதுவும் நான் முதலில் சொன்னது போல் தான், முதன்மையாக புறவுலக பயங்கரத்தில் இருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள நான் கவிதை எழுதுகிறேன்.
நான் அந்த வகை கவிதைகளை ஆரம்ப நாட்களில் எழுதியிருக்கிறேன். அவை கவிதை ஆகாமல் வெறும் புலம்பலாக நின்றுவிட்டதோ எனப் பின் தோன்றியது.
என் கவிதையில் மறுபடியும் அந்த பயங்கர துக்கமும், கசப்பும் வந்து நிரம்பக் கூடாது என விரும்பினேன். ‘துக்கம் ஒரு பரிசுப் பொருள்’ கவிதை எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடித்தமான கவிதை. நான் நின்றிருந்த லௌகீக நிலையில் இருந்து வேறொருவனாக அந்த கவிதை என்னை எனக்கே காட்டியது. அந்த மனநிலையே பிற கவிதைகளிலும் பிரதிபலிப்பதைப் பார்க்கிறேன்.
இந்த பார்வை ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஆனால் என் தனிப்பட்ட பார்வையில் அவை என் மேசையின் ஓரமாக அமர்ந்திருக்கும் ஒரு எளிய பரிசுப் பொருள் மட்டும் தான்.
கேள்வி: இது இந்த காலகட்டத்தின் மனநிலை என நினைக்கிறீர்களா? அல்லது உங்கள் தனிப்பட்ட பேசுப் பொருள் எனப் பார்க்கிறீர்களா?
மதார்: அந்த கவிதை என் தனிப்பட்ட வெளிப்பாடு என்றே பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும் அது மாறுபடலாம். அது இக்காலகட்டத்தின் பொது தன்மை எனக் கூற முடியாது.
கேள்வி: ஜெயமோகன் உங்கள் வெயில் பறந்தது நூல் வெளியீட்டு விழாவில் பேசியது போல், நான் என்பது கடந்த காலகட்டத்தின் மிகப் பெரிய பேசுப் பொருள் ஆனால் உங்கள் கவிதையில் நான் சுத்தமாக இல்லை. மறைந்திருக்கும் நானும் ஒரு வேடிக்கைப் பார்ப்பவனாக மட்டுமே இருக்கிறான். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
மதார்: ஒவ்வொருவருக்கும் கவிதை எழுதுவதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கும், அதைப் பொறுத்து தான் அந்த கவி ஆளுமை வெளிப்படும். ‘நான்’ என்ற பேசுபொருளும் அப்படி தான் உருவாகி வருகிறது.
இது இக்காலகட்டத்தின் ஒட்டுமொத்த மனநிலை எனச் சொல்வதற்கில்லை. முந்தைய தலைமுறையில் இருந்த தன்னை சுமக்கும் கனம் குறைந்து வந்திருக்கிறது எனச் சொல்லலாம்.
ஆனால் நான் அது மறைந்துவிட்டதாக சொல்லவில்லை. ‘நான்’ என்ற ஆளுமை இத்தலைமுறையில் வேறு வேறு மாற்று வடிவம் கொண்டு பேசுப் பொருளாக நிற்பதைப் பார்க்கிறேன்.
உதாரணமாக, கவிஞர் வெயிலின் ஒரு கவிதை உண்டு. அப்பா மகனிடம் ஒரு சோகமான பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். ‘நாம தோத்துட்டோமா’ என்று முணுமுணுத்துக் கொண்டு நடப்பார். பையன் வளர்ந்து பெரியவனான பின் தன் கிராமத்தை துறந்து பெருநகர வாழ்வில் நிற்கும் நிலையில் ஒரு நாள் அவனை அறியாமல் அந்த பாடலை முணுமுணுப்பான். இந்த கவிதை இந்த கேள்விக்கான சிறந்த பதில். அந்த அப்பா பேசிய ‘நான்’ ஒரு காலகட்டத்தின் மனநிலை என்றால் பையனிடம் தன்னிச்சையாக பயின்று வரும் ‘நான்’ வேறொரு மனநிலை.
ஆனால் நான் சொன்னது போல் அதனை ஒவ்வொரு கவிஞர்களும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே இத்தலைமுறையின் கேள்வி.
கேள்வி: ‘நான்’ என்பது போல், என் சோகமும் போன தலைமுறையின் மிகப் பெரிய எடை. நீங்கள் அந்த எடையை தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டீர்கள். இந்த மனநிலை பற்றி உங்கள் கருத்து என்ன?
மதார்: அதனையும் ஒரு காலகட்டத்தின் மனநிலை என நான் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கவிதையில் அதனை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்றே பார்க்கிறேன். அது அவர்களின் ஆளுமையை வரையறுப்பது கூட. எனவே இது காலகட்டத்தின் மனநிலையாக நான் நினைக்கவில்லை.
தேவதேவன் கவிதையில் சோகத்திற்கு ஒரு எடை கூட்டிச் சொல்வது போல் இருக்கும். தேவதச்சன் அதனை போகிற போக்கில் சொல்லிக் கொண்டு செல்வார். ஞானக்கூத்தன் அதனை பகடி செய்து பார்ப்பார். மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் சோகத்தை நேரடியாக பேசுவது போல் அமைந்திருக்கும்.
அது அந்த கவிஞனின் வெளிப்பாடு தான் அதனை அவன் எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறான் என்றே பார்க்கிறேன். என் கவிதையில் நான் சோகத்தின் எடையை என் மேல் ஏற்றாமல் ஒதுங்கி நின்றுக் கொள்கிறேன் அவ்வளவு தான்.
ஆனால் அதனை நான் மறைக்க விரும்பவில்லை, இல்லையென்றும் நிறுவ முயற்சிக்கவில்லை. தேவதச்சனின் ஒரு கவிதையில், டிவியில் ஒரு துப்பாக்கி வந்து குழந்தையின் கண்களை குத்துவது போல் ஒரு படிமம் வரும். அதில் அந்த துக்கத்தை மறைத்து வேறொன்றாக ஆக்க விரும்புகிறார். என் கவிதையில் துக்கத்தை நான் மறைக்கவில்லை அதனோடே உரையாடுகிறேன். அதுவும் ஒரு ஓரமாக நிற்கட்டுமே என்ன இப்போ?
ரூமியின் ஒரு கவிதை உண்டு. ‘மனிதனுள் துக்கம், சந்தோஷம் எல்லாம் விருந்தினர் போல் வந்து செல்கிறது. அதனை நாம் வரவேற்று அனுப்ப வேண்டும்’ என அந்த கவிதை முடியும். அதனை வாசித்த போது அதற்கு நெருக்கமாக என் துக்கம் ஒரு பரிசுப் பொருள் கவிதையை உணர்ந்தேன்.
கேள்வி: ரொமான்டிக் காலகட்டம் கவிஞனின் இலட்சியக் காலகட்டம். உங்கள் கவிதையில் நீங்கள் அதனை தொட முயற்சிக்கிறீர்களா? நவீனத்துவ கவிதைக்கு பின் மீண்டும் அது திரும்பி வருகிறது என நினைக்கிறீர்களா?
மதார்: ஆமாம் ஒரு காலகட்டத்தில் அந்த ரொமான்ஸ் தன்மை சலிப்பை ஏற்படுத்தியது. அதனால் கவிஞர்கள் அதனை மறுத்தே தங்கள் கவிதைகளை எழுதத் தொடங்கினர். பாரதி, அவருக்கு அடுத்தான காலகட்டத்தில் அத்தகைய மீறலின் தேவையும் இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவே அவர்கள் திரும்ப திரும்ப அதனை வலியுறுத்தினர்.
உதாரணமாக, பாரதியின் காலகட்டத்தில் அரசியல் கவிதையின் மிகப் பெரிய பேசுபொருளாக அமையும் தேவை இருந்தது.
இக்காலகட்டம் அரசியலும், ‘நான்’ என்ற சின்ன சட்டகத்துள் தன்னை அடைத்துக் கொள்ளும் பார்வையும் அருகி வரும் காலகட்டம். கவிஞன் அல்லாத பொது மனநிலையும் அவ்வாறே. அப்படி பார்க்கும் போது இப்போது ரொமான்டிக் காலகட்டம் முற்றிலும் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியாது. ஆனால் அதனைப் பற்றிய ஏக்கம் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது எனச் சொல்லலாம். அதனை முற்றிலும் நிராகரித்துவிட்டோமோ என்ற ஏக்கம். சில கவிதைகள் ஏதோ ஒரு வகையில் அதன் பிரதிபலிப்பாக அமைகிறது.
கேள்வி: பாரதி அரசியல் பற்றி பேசியிருந்தீர்கள். உங்கள் கவிதைகள் முற்றிலும் அரசியல் அற்றவை. அதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மதார்: அதனை எழுதக் கூடாது என்றில்லை. ஆத்மநாம் தொடர்ந்து நிறைய அரசியல் கவிதை எழுதியிருக்கிறார். அதே போல் தனி மனித துக்கம், தத்துவம் அவரது பேசுப் பொருளாக ஒரு பக்கம் இருக்கும். மறுபக்கம் முற்றிலும் மாறுபட்ட, மனதை எளிதாக்கக் கூடிய கவிதைகள் எழுதுவார், ‘நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக் கூடாது சலனமற்று வானைப் பார்த்தப்படி பாறைகளுடன் பேசிக் கொண்டு’ என்று ஒரு வரி இருக்கும். முதல் வகை கவிதையை எழுதிக் கொண்டு நேர் எதிராக இரண்டாவது சொன்ன எளிய கவிதை அவரை எளிதாக்கிக் கொள்ள தேவைப்படுகிறது. பாரதியின் பல கவிதைகளைச் சொல்லலாம். அரசியல் எந்த காலத்திலும் ஒரு கவிஞனின் முழு பேசுபொருளாக இருந்ததில்லை.
அப்படி முழுவதும் அரசியல் பேசுவது எந்த வகை கவிதையாக இருக்கும் எனத் தெரியவில்லை. கவிஞனின் மனநிலை என்பது இப்படி வெவ்வேறு இடங்களில் முயங்கிச் செல்ல வேண்டும்.
வெறும் அரசியல் மட்டும் தொடர்ந்து எழுதப்படும் போது அவை வெறும் Statement ஆக மாறி நிற்பதைப் பார்க்கிறேன். நல்ல கவிதைகள் ஒரு சொல்லில் இருந்து மேலெழுந்து செல்ல வேண்டும். அந்த சொல்லில் இருந்து நழுவி மேலே பறக்கத் தொடங்கிவிடும். கவிதை ஒரு எல்லை வரைக்கும் தான் கவிஞனின் கைப்பிடியில் இருக்கும். கவிஞனின் கை மீறிய கவிதையே எப்போதும் சிறந்த கவிதை. கவிதை சிறுவனின் கையில் இருந்து பறக்கும் பலூன் போல், அது அவனுக்கு சந்தோஷம் தான். நம் பலூன் வானில் பறக்கிறது என ஆனந்தம் கொள்ளும் சிறுவனின் மனநிலையை கவிஞனுடையதும்.
அப்படி ஒரு அரசியல் பேசும் கவிதை அமைந்தால் அது எனக்கு அணுக்கமானது. உதாரணமாக யவனிகா ஸ்ரீராமின் ஒரு கவிதை, ‘உலகம் இசக்கியை உழைக்கவே சொல்கிறது’. ’இன்னைல இருந்து வேலை செய்ய வேண்டாம்’ என ஒருவன் காலையைத் தொடங்குவான், கடைசியில் உலகம் அவனை உழைக்கத்தான் சொல்லும் என முடியும். அந்த கவிதை அரசியல் பார்வை கொண்ட கவிதை தான். ஆனால் அதில் பலூன் பறக்கும் இடம் ஒன்று இருக்கிறது.
மற்றொரு யவனிகா ஸ்ரீராமின் கவிதையிலும் இது நிகழும் ஒரு மந்திரவாதி தன் மந்திரத்தால் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டு வருவான், காட்டை ஒரு சொல்லாக, உலகம், வரலாறு எல்லாம் வேறு வேறு வடிவில் மாறி வரும். அரசியல் கவிதை தான் ஆனால் இந்த கவிதையில் கவிதைக்கான ஒரு மாயம் இருக்கும்.
‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் ஜெயமோகனின் ஒரு மொழிபெயர்ப்பு கவிதை வரும், ‘அம்மா தன் மகனை போரில் பறிக்கொடுத்து குழியைத் தோண்டிக் கொண்டிருப்பாள். தோண்டி தோண்டி பூமியை முழுவதும் தோண்டிவிட்டாள்’ என்று கவிதை முடியும். முன்னர் சொன்னது போல் ஒரு பறக்கும் பலூன் இந்த கவிதையில் இருக்கிறது. அப்படி இருந்தால் அரசியல் கவிதை எழுதலாம் என்றே நினைக்கிறேன்.
கேள்வி: அரசியல் சார்ந்த கவிதை வெறும் Statement ஆவதைப் பற்றிச் சொன்னீர்கள். கவிதையிலேயே உரைநடையை ஒட்டிய Plain poetry முயற்சிக்கப் படுகிறது அவை Statement ஆகாமல் எப்படி தப்பிக்கிறது என நினைக்கிறீர்கள்?
மதார்: Plain poetry யில் சபரிநாதன் கவிதையை உச்சமாக சொல்லலாம். சபரிநாதன் ஒரு நேர்காணலில் சொல்லியது போல, ‘நவீன கவிதை என்பது உரைநடைதான்’. அவர் கவிதைகள் பெரும்பாலும் Plain poetry தான் ஆனால் அதில் ஒரு பலூன் பறக்கும்.
சமீபத்தில், ‘கலீலியோவின் இரவுகள்’ என்று ஒரு கவிதை சபரிநாதன் எழுதியிருக்கிறார். கனலி இதழில் வந்திருந்தது. கலீலியோ ஒரு இரவை எப்படி எதிர்கொள்கிறார் என அக்கவிதையை எழுதியிருப்பார். அந்த கவிதையில் உயரமான கோபுரங்கள் இறங்கி நீரில் மிதந்துக் கொண்டிருக்கும். அருகில் இளநீர் ஓடும் உடன் மிதந்துக் கொண்டிருக்கும். இதே போல் ஒரு படிமம் கவிதையை மேலெழச் செய்ய வேண்டும்.
ஸ்ரீனிவாச இராமநுஜன் பற்றிய ஒரு சபரிநாதன் கவிதை. அந்த கவிதை அவர் வாழ்க்கை வரலாற்றை உரைநடையில் எழுதியது போல் இருக்கும். ஆனால் வாசிக்கும் போது அந்த உரைநடை எங்கே கவிதையாகிறது என நம்மால் கணிக்க முடியாது. மற்ற கவிஞர்களில் இருந்து சபரிநாதன் வேறுபடக் கூடிய இடமும் அது தான்.
நான் அதனை முயற்சி செய்யாதன் காரணம். எனக்கு எப்போதுமே ஒரு சொல் கவித்துவம் கூடியே நிற்க வேண்டும். என் கவிதையில் ஒவ்வொரு சொல்லும் கவிதையாக வேண்டுமென்பது என் விருப்பம். அந்த கணம் வரை அதனை முயற்சிப்பேன்.
கேள்வி: உங்கள் கவிதைகளில் பல கவிதைகள் தன்னிச்சையாக குழந்தையின் கள்ளமின்மையை சென்று தொடுகின்றன. அது சாதாரண இயல்பல்ல. அந்த இயல்பை நீங்கள் எவ்வாறு ஈட்டிக் கொண்டீர்கள்?
மதார்: அது என் அம்மாவிடம் இருந்து வந்தது எனச் சொல்லலாம். சிறு வயதில் நம் சுற்றமும், சூழலும் அந்த கள்ளமின்மையுடனே நம்முள் நிறைகிறது. என் நண்பர்களும், நான் பார்த்த மனிதர்களும் அப்படி தான் இருந்தனர். ஒரு கட்டத்தில் நாம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்துவிட்டதாக எண்ணி அந்த குழந்தைமையை இழந்துவிடுவோம். கவிஞனாக அதனை நான் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென நினைத்தேன்.
கேள்வி: உங்கள் கவிதையை வாசிக்கும் போது தேவதேவன், தேவதச்சன் இருவருக்கும் அணுக்கமாக இருக்கிறீர்கள் அவர்கள் இருவரும் உங்களுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி சொல்ல முடியுமா?
மதார்: தேவதேவனுடன் அதிகம் உரையாடியுள்ளேன். தேவதச்சன் நேரில் பார்த்த நாட்கள் குறைவு தான். ஆனால் தொலைபேசி தொடர்பு உண்டு. கல்யாண்ஜியை பார்த்து பேசியிருக்கிறேன்.
துபாய் செல்வதற்கு முன் தேவதச்சனை நேரில் சந்தித்தேன். அந்த உரையாடல் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது அதனை முழுவதுமாகத் தொகுத்துக் கொண்டேனா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் பின்னால் அவருடனான உரையாடல் என்னுள் தாக்கத்தை செலுத்தியிருப்பதைப் பார்க்கிறேன். தனிப்பட்ட வாழ்விலும் சரி, ஒரு கவிஞனாகவும் சரி இரண்டு தளத்திலும் அந்த உரையாடல் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவர் பேசியவற்றில் சில சொற்கள் திடீரென்று மனதுள் உதிக்கும் மாயம் கொண்டது.
தூத்துக்குடியில் தேவதேவனை அடிக்கடி சந்திப்பது வழக்கம். தொகுப்பு வருவதற்கு முன்பாகக் கூட பல முறை சென்றிருக்கிறேன். உரையாடல் ஒரு நாள் முழுவதும் நீளும். ஒரு கவிதையை எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி பல மணி நேரம் பேசியுள்ளார். அந்த கவிதையின் சாத்தியம் என்ன? அதனை எப்படி எழுதிப் பார்த்திருக்கலாம்? சில கவிதையில் ஏன் அது கவிதையாகவில்லை, என்பதை விளக்குவார்.
நான் துபாய் செல்லும் முன் இருவரும் அறிவுரை கூறினர். அதிலிருந்து இருவரையும் வரையறுக்கலாம் என நினைக்கிறேன். ‘லௌகீக வேலையில் இருந்து நமக்கு தேவையான வற்றை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு மேல் அங்கே நாம் உரையாடுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை’ என தேவதேவன் சொன்னார். தேவதச்சன் பணியிடத்தில் என் ஆளுமையை நான் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டுமென விளக்கினார்.
இருவரில் தேவதேவன் உடன் தான் அடிக்கடி உரையாடியிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் இந்த தொடர் உரையாடலே அவர்கள் என் கவிதையில் தாக்கம் செலுத்துவதற்கு காரணமாக இருக்கலாம். தமிழின் தலைசிறந்த கவிஞர்கள் இருவரின் நினைவு என் கவிதை மூலம் வாசகர்களுக்கு வருவது என் நல்லூழ் என்றே கொள்கிறேன்.
அவர்கள் இருவரை தவிர, பாவண்ணன் உடனான தொடர் உரையாடலில் இருந்துள்ளேன். மின்னஞ்சல் வாயிலாக பல சந்தேகங்களை அவரிடம் கேட்டுள்ளேன். எனக்கான Comfort Zone-ல் உள்ள ஒரு முன்னோடி என பாவண்ணனைச் சொல்லலாம். அவரிடம் எந்த தயக்கமும் இல்லாமல் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததும் என் பேறு.
லஷ்மி மணிவண்ணன், இந்த தொகுப்பை தயார் செய்ததே அவர் தான். அவரிடம் அதிகம் உரையாடியிருக்கிறேன்.
கேள்வி: லஷ்மி மணிவண்ணன் உடனான உங்கள் தொடர்பைப் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
மதார்: போன கேள்விக்கு சொன்னது போல் அவர் தான் ‘வெயில் பறந்தது’ தொகுப்பை தயார் செய்தது. இந்த தொகுப்பு அவ்வளவு கச்சிதமாக வந்ததற்கு காரணம் அவர் தான். முதலில் நிறைய பேர் வாசித்தனர். ஆனால் லஷ்மி மணிவண்ணன் ஒரு கவிஞர் என்ற நிலையை விட்டு வாசகராக அதனை வாசித்தார்.
அவர் ஆளுமையை, ’கேட்பவரே’ தொகுப்பிற்கு முன்பான லஷ்மி மணிவண்ணன், அதற்கு பின்பான ஒருவர் என இரண்டாகப் பிரிக்கலாம். அப்படி இரு நேர் எதிர்நிலைக் கொண்ட ஒரு மாற்றம் உலக அளவில் கூட மிகச் சிலருக்கு தான் நிகழ்ந்திருக்கிறது. தமிழில் வேறு ஒருவரை அப்படி சொல்ல முடியாது. அத்தகைய ஆளுமை என் கவிதைகளைத் தொகுத்ததும், அவரை அருகிலிருந்து அறிய முடிந்ததும் என் நல்லூழே.
இந்த தொகுப்பை தொகுத்து முடித்த போது அவர் சொன்னது, “இதில் ஒரு கவிஞனின் குரல் உள்ளது. ஒரு சிற்பம் செதுக்குபவன் அருகில் சென்று செங்கல்லை தூக்கிவீசி ஒரு சிலையை உருவாக்குகிறீர்கள். அது ஒரு சிற்பம் போல் அமைந்து வருகிறது. ஆனால் அது பார்ப்பவரின் கண்களுக்கும் சிற்பமாக அமைய வேண்டும். சிலர் அதனை கல்லெனக் கொள்ளலாம். சிலர் அபாரமான சிற்பமாகவும் கொள்ளலாம். அந்த சாத்தியமே உங்கள் கவிதையில் உள்ளது.” என்றார்.
ஒவ்வொரு கவிதையையும் நான்கு, ஐந்து முறை வாசித்துள்ளார். நான் சந்தேகத்துடன் தொகுப்பில் சேர்த்த கவிதைகளை சரியாக எந்த வரியில் பிரச்சனை என்று சொல்லி நீக்கியுள்ளார். அவர் பங்களிப்பு தான் இந்த தொகுப்பை இத்தனை நேர்த்தியாக உருவாக்கியது எனச் சொல்லலாம்.
கேள்வி: இன்றெழுதும் இளம் கவிஞர்களை வாசிக்கிறீர்களா? அவர்களுடனான உங்கள் தொடர்புகள் எவ்வாறானவை?
மதார்: என் சமகால கவிஞர்கள் அனைவரின் கவிதையையும் வாசிப்பது உண்டு. எல்லோருடனும் தொலைபேசி உரையாடலில் இருக்க முயற்சி செய்வேன். சபரிநாதன், வே.நி.சூர்யா இருவரும் என் வாசிப்பிற்கு அணுக்கமானவர்கள்.
கேள்வி: இன்று கவிதைக்கான வாசகர்கள் குறைந்துவிட்டனர் என்றொரு பேச்சு உண்டு. அது உண்மையா? அதற்கும் கவிஞனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
மதார்: நாவல், சிறுகதையை விட கவிதைக்கான வாசகர்கள் குறைவுதான். அது வாசகனிடத்தில் கவிதை விடும் சவாலும் கூட. ஆனால் எனக்கு வாசகர்களின் எண்ணிக்கை சார்ந்த அளவீடுகள் இல்லை. ஒரு நல்ல வாசகன் மட்டும் என் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தால் கூட எனக்கு மகிழ்ச்சி தான்.
கேள்வி: அடுத்த திட்டம் என்ன? உரைநடை எதுவும் முயற்சி செய்யும் எண்ணம் உள்ளதா?
மதார்: ஒரு சில உரைநடை முயற்சி முன்னரே செய்துள்ளேன். துபாயில் இருந்த போது ‘அடிக்கோடுகள்’ என ஒரு சிறுகதை எழுதினேன். துபாயில் உள்ள எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து ‘ஒட்டக மனிதர்கள்’ என்ற தொகுப்பைக் கொண்டு வந்தனர். அதில் அந்த கதையும் வெளியாகியது.
அந்த சிறுகதை கூட யூமா வாசுகியின் ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்டே எழுதினேன்.
கவிஞர்கள் உரைநடை எழுதுவதற்கான சிக்கல், கவிதையில் பெரும்பாலும் காலமும், கதாப்பாத்திரமும் இருப்பதில்லை. கவிதையின் மொழியும் வேறு வகையாக இருக்கும். இந்த மொழியில் புழங்கிக் கொண்டு உரைநடை மொழிக்கு வருவதில் சிக்கல் இருந்தது.
யுவன் சந்திரசேகர் அதனைக் கடந்து இரண்டு தளத்திலும் எழுதுகிறார். அதே போல் சிறுகதை, நாவலும் எழுதும் எண்ணமும் உண்டு.
ஆனால் இப்போது என் மொழி கவிதை தான். கவிதையை மட்டுமே என் பாதையாகப் பார்க்கிறேன்.
***
பேட்டி ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்