பாலையாகும் கடல் – கடிதம்

பாலையாகும் கடல்- கடலூர் சீனு
பாலையாகும் கடல்- கடிதம்
பாலையாகும் கடல், கடிதம்- பாலா

அன்புள்ள ஜெ.,

‘பாலையாகும் கடல்’ குறித்த பாலாவின் கடிதம் கண்டேன். பாலையாகும் கடல், கடிதம்- பாலா நான் நீராகாரமும் ஊறுகாயும் சாப்பிட்டால் சூழலியல் மேம்படும் என்கிறார். அவர் என்னை பட்டினி கிடக்கச் சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். போன ‘சஷ்டி’யின் போது ஆறுநாள் விரதம் இருந்தேன். முதல் இரண்டுநாட்கள் கடுமையாகத்தான் இருந்தது. சாப்பாட்டு நினைவாகவே இருக்கும். இன்னும் ஐந்துநாட்கள் இருக்கிறதே என்று மலைப்பாக இருக்கும். ஆனால் மூன்றாவது நாளிலேயே உடலில் ஒரு ஒழுங்கு அமைந்துவிட்டிருந்தது. நாலாம், ஐந்தாம் நாட்கள் இயல்பாகக் கடந்தன. விரதம்முடிந்து மறுநாள் சாப்பாட்டுத்தட்டின் முன் உட்கார்ந்தபோது அண்ணா ஹசாரேயை நினைத்துக்கொண்டேன்.

இவ்வளவு கடும்விரதத்தை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். ஆனால் ஒருநாள் விரதம் யாரும் எளிதாக இருக்கமுடியும்.  ஒரு வருடத்திற்கு முன் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தேன். காலையில் ஓட்ஸ் கஞ்சி. இரவு படுக்கும்முன் வாழைப்பழம். நடுவே ஒரு கைப்பிடியளவு கோதுமைமாவும் வெல்லமும் சேர்ந்த சத்துமா ஒரு உருண்டை, இரண்டுமுறை. காப்பி உண்டு. உப்பு கிடையாது.மனதை தொடர்ந்து வெவ்வேறு செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டால் நேரம் போவதே தெரியாது. இன்றுவரை ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கிறது. இதுதவிர வாரம் ஒருநாள் காலை உணவைத் தவிர்த்து விடுவேன். காலை பத்தரை மணிக்கு ஓட்ஸ் கஞ்சி. அப்புறம் இரவு சிற்றுண்டிதான். நடுவே காப்பி மட்டும் உண்டு. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாரம் மூன்று நாள் அரிசிச்சாப்பாட்டைத் தவிர்த்தாலே உடல்எடை குறைவதைக் கண்முன்னால் காணலாம். அந்த நாட்களில் பப்பாளிப் பழம் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

சில நாட்களுக்குமுன் ‘வாட்சப்’ பில் நீராகாரத்தை ‘சாஷே’ க்களில் அடைத்து நூறு டாலருக்கு விற்றுக்கொண்டிருக்கும் படங்களை என் அம்மாவிடம் காண்பித்தேன். பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று கண்கலங்கி அழுதுவிட்டார் ‘இந்த நீராகாரம் கூடக்கெடைக்காம எத்தனைதடவை வெறும்வயித்தோட பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கோம்’ என்று. என் அப்பாவின் நிலைமையும் அதைவிட மோசமே. சிறு வயதில் வயிறு நிறையவேண்டுமே என்பதற்காக இருப்பதிலேயே நல்லபெரிய வெள்ளரிக்காயாகப் பார்த்து வாங்கிவருவாராம். இளம்வயதில் தலைவனை இழந்த குடும்பங்களின் கதி அதோகதிதான்.

நாங்கள் சிறுவயதில் நீராகாரம் சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டிற்கு வேலைக்குவரும் நாகம்மாள் என்ற பெண்மணி காலையில் வந்தவுடனேயே முதலில் நீராகாரம் தான் கேட்பார். எனவே நீராகாரம் எங்களுக்கு இயல்பாக மறுக்கப்பட்டது. ஆனால் பழையசாதம் சாப்பிடுவோம். எப்படியோ அந்தப் பழக்கமும் காலப்போக்கில் ஒழிந்தது. இன்று நீராகாரம் குடல்நோய் உட்பட பலநோய்களுக்கு மருந்து என்கிறார்கள்.பட்டினி கிடப்பது ‘ஸ்டெம் செல்’ செயல்பாடுகளில் சிறந்த முன்னேற்றத்தைக் கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

https://news.mit.edu/2018/fasting-boosts-stem-cells-regenerative-capacity-0503  

நிற்க. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, இன்று ‘ரேஷன்’ கடைகளிலும் இலவசமாக வழங்கப்படும் இந்தச் சூழலில், சூழியல் சுரண்டலுக்கெதிராக நான் கூறிய மீன் தவிர்ப்பும், பாலா கூறும் அரிசி தவிர்ப்பும் ஒன்றேதானா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரை‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  
அடுத்த கட்டுரைமதார் கவிதைகள்- வேணு தயாநிதி