“ஒரு நல்ல சேல்ஸ்மேன் கஸ்டமரோட விருப்பத்தை நிறைவேத்திவைக்கணும். நீ இப்பவே வெளியே போகணும்னு நான் விரும்பறேன்”
கோபால் பல்பொடிதான் விளம்பரம் என்றாலே என் நினைவுக்கு வருவது. அன்றெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாவனத்தின் [அப்படித்தானா? இல்லை கூட்டுத்தாவரமா? கூட்டுத்தாமதம்?] இடைவிடாத ஒலிபரப்பினூடாகத்தான். இலங்கை, இந்தியா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அந்தச் செங்கல்பொடி பிரபலமாக பல்தேய்க்கப்படுகிறது என்ற செய்தியை நான் நம்பவில்லை, ஆனால் என் மூளையில் அதை ஸ்குரூவால் திருகி இறுக்கிப் பதியவைத்துவிட்டனர்.
அன்றெல்லாம் சின்னப்பிள்ளைகள்கூட “கோபால் பல்பொடி! இலங்கை இந்தியா…”என்ற வசனத்தை அழுத்தமாகச் சொன்னபடி இடதுகையால் அவிழும் நிஜாரைப் பிடித்துக்கொண்டு வலதுகையை வீசி ஊளைமூக்கை உறிஞ்சிக்கொண்டு ஓடிவிளையாடும் வழக்கமிருந்தது. அது அந்தரங்கவாயு போல எங்களிடமிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. எங்கிருந்து ஊறி வருகிறதென்று தெரியாது. உணர்ந்ததுமே அசௌகரியம். வெளியேறியதும் நிம்மதி.
“முதல் ரூல், கஸ்டமர் அவரோட வழியிலே போகட்டும். ஆனா அதுக்கு முன்னாடி அது உன்னோட வழியா இருக்கிறமாதிரி பாத்துக்கோ”
கோபால் பல்பொடியை எங்களூரில் எவருமே பயன்படுத்துவதில்லை- ஏனென்றால் உமிக்கரியுடன் உப்பை கலந்து பொடித்து வைத்து பல்தேய்ப்பதுதான் உகந்தது என்பது எங்களூர் நம்பிக்கை. மாமர இலை, வேப்பங்குச்சி, ஆலவிழுது போன்றவற்றையும் பயன்படுத்துவதுண்டு. கோபால்பல்பொடி உயர்குடி, உயர்சாதியினருக்கு உரியதாக இருக்கலாமென நம்பப்பட்டது.
அப்படிப்பட்ட ஊரில் ஒருவன் வந்து நூறு பாக்கெட் பல்பொடி விற்றுவிட்டுச் சென்றான். ஒரு சிறு பையன் பொட்டலத்துடன் உடன்வர, கோட் சூட் அணிந்து கறுப்புக் கண்ணாடி போட்ட ஒருவர். “புரபசர் மேனன்”என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். வீட்டுக்கு வரும் மற்ற விற்பனையாளர்களைப் போல அல்லாமல் வந்ததுமே அப்பாவை பார்த்து “குட் மார்னிங்” என்றார். நேராக ஏறி அப்பாவின் முன் நாற்காலியில் அமர்ந்து திரும்பி என்னைப் பார்த்து “ஹாய்”என்றார்
”முப்பத்தஞ்சு வருசமா உங்களை என் கிளையண்ட் ஆக்க முயற்சி பண்ணினேன். இப்ப நாம ரெண்டுபேருமே இங்க வந்திட்டோம். முடிவின்மை வரை முயற்சி பண்ண நேரமும் இருக்கு… உக்காந்து பேசுவோம்”
நான் காற்றாக “ஹாய்”என்றேன்
“ஃபேன் இல்லையா?”என்றபின் “ஒரு விசிறி…கொஞ்சம் தண்ணி” என்று எனக்கு ஆணையிட்டபின் அப்பாவிடம் “பேசலாமா?”என்றார். அப்பா எழமுயல “பரவாயில்லை, உக்காருங்க. மரியாதை மனசிலே இருந்தாப்போரும்”
“சார்?” என்றார் அப்பா பணிவாக.
“நான் மிரக்கிள் டூத்மேஜிக் தயாரிப்பாளர் புரபசர் மேனன்… பைதபை ஐயாம் புரடியூஸிங் டூத்மேஜிக். இது பல்பொடி இல்லை. மேஜிக். அதனாலே அப்டி பேரு வைச்சிருக்கோம்… ஆக்சுவலி…”
அவர் பொட்டலத்தை காட்டினார். ஒரு சிவப்பு பொடி. “இந்தப் பொடியை தயாரிக்க நாங்க ரிசர்வ் பேங்கிலே லோன் வாங்கியிருக்கோம்”
“கோபால் பல்பொடி கேட்டிருக்கேன்” என்றார் அப்பா
”நல்ல கஸ்டமர் சர்வீஸ்ங்கிறது அபூர்வம். அபூர்வமானதெல்லாம் மதிப்புள்ளது. மதிப்புள்ளதெல்லாம் வெலை ஜாஸ்தி. கஸ்டமருக்கு செலவு வைக்கக்கூடாதுன்னுதான் நாம மோசமான கஸ்டமர் சர்வீஸை குடுக்கிறோம்”
“ச்சே, அதெல்லாம் வெறும் செங்கல்பொடி. இது மேஜிக். அமெரிக்காவிலே இருந்து வரவழைச்ச ஆறுவகை ரசாயனங்களை ஒரு விசித்திரமான வகையிலே கலந்து இதை தயாரிக்கிறோம். இதை தயாரிக்கிற இடத்தைச் சுற்றி பத்து ஃபர்லாங் தூரம் அன்னியர் வரமுடியாது. காவல் உண்டு. அப்டி ரகசியமானது…. ஸீ, ஐ வில் டெமான்ஸ்ட்ரேட்”
அவர் ஒரு துருப்பிடித்த சைக்கிள் ரிம்மின் துண்டை எடுத்தார். “ஸீ, இப்ப உங்க பல்லு எப்டி இருக்கு? தோ இப்டி… வேறவழியில்லை. வெத்திலைபோட்டா பல்லு அப்டி ஆயிடும். நோ வே…” அவர் அதன்மேல் அந்தப்பொடியை தூவினார். திரும்பி என்னிடம் “ஒரு துண்டு துணி…”என்றார்.
”எங்க கம்பெனியிலே சேல்ஸ்மேனா ஆகிறதுக்கு முன்னாடி நீங்க யூரின் டெஸ்ட் குடுக்கணும். போயி பதினஞ்சு நிமிசத்திலே இந்த யூரினை வித்து காட்டுங்க”
நான் துண்டுத்துணி கொண்டுபோய் கொடுத்தேன். அவர் அதைவைத்து அந்த ரிம் துண்டை துடைத்தார். அதன்பின் ஒரு பெரிய மஞ்சள்துண்டால் துடைத்தார். எடுத்துக் காட்டினார். அப்போது செய்யப்பட்ட புதிய ரிம்மில் உடைத்து எடுத்த துண்டு போல வெள்ளி மின்னியது.
“எந்தக் கறையும் போயிரும். இரும்பிலே வெள்ளி வரும். வெள்ளியிலே மின்னல் வரும்… வெத்திலைப் பல்லிலே வெளிச்சம் வரும். பல்லிலே வெளிச்சமிருந்தால் சொல்லிலே வெளிச்சம். சொல் வெளிச்சமானால் சிந்தனையிலே வெளிச்சம்… சிரிக்கிறவனுக்கு சொற்கமுண்டுன்னு குருகாரணவன்மார் சும்மா சொல்லலை. ஒரு பொட்டலம் அஞ்சே அஞ்சு ரூபாய்”
”அப்டியே கண்ண மூடுங்க. எங்களோட இந்த பிராடக்டை தேவைக்குமேலே விலைகுடுத்து வாங்குற அளவுக்கு நீங்க வசதியா இருக்கிறதா கற்பனை பண்ணுங்க. ஜாலியா இருக்குல்ல?”
“அஞ்சு ரூபாயா?” என அப்பா பவ்யமாகக் கேட்டார்.
“அஞ்சு பொட்டலம் இருபது ரூபாய்தான்…டேய் சாருக்கு அஞ்சுபொட்டலம் எடு…” என்றார் புரபசர் “எல்லாருக்கும் வேணும்… கேக்கிறவங்களுக்கு இல்லேன்னு ஆயிடக்கூடாது. அஞ்சு போதும்”
“அஞ்சுன்னா….”
“மாசம் ஒண்ணு… ஆறுமாசம் கழிஞ்சுதான் எங்களாலே வரமுடியும். இல்லேன்னா எங்க ஏஜெண்டுகள் வருவான்… டேய் சாருக்கு ஆறா வைச்சிரு. ஆறு பொட்டலம் இருபத்தஞ்சு ரூபாய்…தேங்யூ சார்”
அப்பா அதுவரை பணத்தை எடுக்கவில்லை. ஆனால் தேங்க்யூ சொன்னபின் ஒன்றும் செய்யமுடியாது. அவர் வெள்ளைக்காரன் மரபுகளை மீறுபவர் அல்ல. ”நோ மென்ஷன் ப்ளீஸ்” என்று சொல்லி பணத்தை கொடுத்தார்.
”இந்த செல்போனிலே கால் மசாஜுக்கு ஆப் இருக்கு. வைப் மோடிலே போட்டுட்டு மிதிச்சாப்போரும்”
புரபசர் மேனன் “தென், பை. ஸீ யூ சர்” என்று கிளம்பினார். அப்பா அவரிடம் “நைஸ் டு மீட் யூ” என்று முறைப்படிச் சொன்னார்
நான் அவர்பின்னாலெயே சென்றேன். கோயில் முற்றத்தில் அவர் போற்றியிடம் “மொத்தம் நூறுதான் கொண்டுவந்தேன். ஆறு பொதி வக்கீல்சார் வாங்கியாச்சு. போதுமான்னு சந்தேகமா இருக்கு”என்றார்
“வக்கீல் இல்லை, ரிஜிஸ்டராப்பீஸ்” என்று நான் சொன்னேன்.
“ஆமா, ரிஜிஸ்டராப்பீஸ்”
“உள்ளதாக்குமா?”என்றார் போற்றி என்னிடம்
நான் தலையசைத்தேன். போற்றி ஐயம் தீராமல் கண்களால் வினவ நான் ஆம் என கண்களால் தெரிவித்தேன். அவ்வாறுதான் போற்றி அவர் வாழ்க்கையில் எண்ணி வருந்திய முடிவுகளில் ஒன்றை எடுத்தார்
”வீட்டிலே கரையான் நிறைய இருக்கு இல்ல?சரி, சுவையான மொறுமொறுப்பான வீடுன்னு விளம்பரத்திலே சேத்துக்கறேன்…”
அதேபோல மாஜிக் காட்டப்பட்டது. நூறு பொட்டலம் விற்கப்பட்டு புரபசர் குலசேகரம் பஸ்ஸிலேறி மறைந்தார். அவர் முதலில் காட்டிய அந்த துருவேறிய ரிம் துண்டும் வெள்ளிமின்னும் துண்டும் மீண்டும் மீண்டும் வந்தன என்பதை நான் கண்டுபிடித்தேன். ஆனால் அதை நாலுபேரிடம் சொல்வதற்குள் அவர் குலசேகரம் தாண்டிவிட்டிருந்தார்.
டூத்மேஜிக் பரவலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதைத்தேய்த்த பற்களில் எந்த மாற்றமும் வரவில்லை. முன்புபோலவே கூழாங்கற்கள், புளியங்கொட்டைகள் மாதிரியே பற்கள் நீடித்தன. கணவர்கள் பல் தேய்ப்பதைக் காண திரண்டு கூடிய மனைவிகள் “எல்லாருக்கும் பல்லு வெளுக்குது. இதுக்க பல்லுக்கு அரம்போட்டு ராவணும்…நாசமா போறதுக்கு’ என வசைபாடினர்.
”உங்கிட்ட இன்சூரன்ஸ் பத்தி பத்து நிமிசம் பேசிட்டேன்னு வை, இந்த ஹாலிடேயை பிசினஸ் டிரிப்பா கணக்கெழுதிருவேன்”
“ஆனா மனசாட்சி உள்ளவனாக்கும். வல்ல வெடிமருந்தையும் கலந்து நம்ம வாய புண்ணாக்காம போனானே. இது நல்ல செங்கல்பொடிதான்… கொஞ்சம் சூடம் கலந்திருக்கான், மணத்துக்கு” என்று அப்பா சொன்னார்.
“முன்னாடி இப்டித்தான் ஒருத்தன் முடித்தைலம் வித்தான். அதை போட்டவனுக முடியெல்லாம் போயி தலை சட்டி மாதிரி ஆயிட்டுது…பிறவுதான் அவன் சொன்ன பேரு எல்லாருக்கும் ஞாபகம் வந்தது. வைத்தியர் கிட்ட அர்த்தம் கேட்டாங்க. கேசஹாரிணி. அதாவது தலமுடியை அழிக்கிறது.அவன் பொய் சொல்லல்லேன்னு வைத்தியர் சொல்லிட்டார். நியாயமாத்தான் ஏவாரம் செஞ்சிருக்கான்” என்றார் தங்கையா நாடார்.
”இந்தச் சரிவு அடுத்த மேட்டிலே பாய்ஞ்சு ஏறுறதுக்குண்டான ஓட்டம்தான்”
எங்களூருக்கு விற்பனை உத்திகள் புதியவை அல்ல. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக எண்ணி இயற்றி மெருகேற்றப்பட்டவை. கடற்கரையில் இருந்து மீன் வாங்கி கூடையில் கொண்டுவருபவர்கள் அருகே ஒரு இடத்தில் கூடைகளை இறக்கி சுடச்சுட கடல்மணலை கொட்டி மீன்களை புரட்டி எடுப்பார்கள். ’பிடிச்சமணல் போகாத புதியமீன்!’ அதற்காக மணலை கடற்கரை முதல் இருபது கிமீ தொலைவு சைக்கிளில் வைத்து மிதிக்க முடியுமா?
அப்படி பல உத்திகள். “ துள்ளுத மீனு, பிடைக்குத மீனு!” என்று கூவும்பொருட்டு ஒரு கலத்தில் நீர் விட்டு அதில் உயிருள்ள மீன்களை கொண்டுவந்து கூடைக்கு இரண்டுவீதம் போட்டுவிடுவதுண்டு. கூடைக்கு அடியில் காலைவைத்து நெம்பி நெம்பி அசைவை உருவாக்குவதுமுண்டு.
”பார்மஸிக்கு வந்து தேவையில்லாத எல்லா மருந்தையும் வாங்கிட்டுப்போறதுதான் நீங்க முன்னாடி வாங்கின மருந்தோட சைட் எஃபக்ட். சொல்ல விட்டுப்போச்சு…ஸாரி”
நான் ஒரு சூரை மீனை வாங்கினேன். அது வாய்திறந்து மூடிக்கொண்டிருந்தது. புத்தம்புதியது, உயிர் முழுக்கப்போகாதது என்றார் ஸ்டனிஸ்லாஸ். அம்மா முகர்ந்து பார்த்ததுமே அது நாய் மட்டுமே உண்ணத்தக்கது என்று சொல்லிவிட்டார். ஆனால் வாய் திறந்ததே?
“உள்ள வெரலவிட்டு ஆட்டியிருப்பான்… அவன் அதைச் செய்யுத ஆளுதான்”என்று தங்கம்மை சொன்னாள்
“அதுக்குண்டான ஆளைப் பாத்துத்தான் செய்வான்!”என்றாள் அம்மா
உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அந்த மீனில் பாதி ஏற்கனவே வெட்டி விற்கப்பட்டுவிட்டது. அதன்பின் அது எப்படி மூச்சுவிடமுடியும்?
”ஓகே சார். நீங்க கடைசி முடிவெடுக்க தயங்குறீங்கன்னு நினைக்கிறேன். நான் மறுபடி வரேன்”
மரவள்ளிக்கிழங்கை சேற்றில்புரட்டி கொண்டுவருவதுண்டு. உள்ளூர்க்காரரான சங்கரன் மாமா காதி பார்சோப் வாங்கி அதை கொஞ்சம் ஓடிகொலோன் கலந்த கொழுத்த சிவப்புச் சாயத்தில் முக்கி வெள்ளித்தாளில் பொட்டலம் கட்டி குளியல்சோப்பாக விற்று வீடுகட்டுமளவுக்கு லாபம் ஈட்டினார்.
அதிலும் விளம்பர உத்தி உண்டு. சோப்புகளை வீடுதோறும் அவருடைய மகன்களே சப்ளை செய்வார்கள். ஆர்டர் பிடிக்கும்போதும் அடுத்த ஒருமாசமும் அளிக்கும் சோப்புகள் உண்மையான குளியல்சோப்புகள். அதற்கு மனம் ஒப்பிவிட்டால் பிறகு காதிசோப்புகள் மேல் ஐயம் வருவதில்லை.
”கனிகள் கேட்டப்ப கடவுள் உனக்கு லெமன் மட்டுமே குடுத்தார்னு வை. செயற்கையான லெமன் தட்டுப்பாட்டை உண்டுபண்ணி விலையை ஏத்து. லெமனை நல்ல லாபத்துக்கு வித்து மத்த கனிகளை வாங்கிடு”
எங்களூரில் பீட்ரூட் “ரெத்தக்காய்!” என்று விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்பட்டது. அதைச் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். அதைப்பிழிந்து காட்டி “பாருங்கம்மிணி, அம்பிடும் ரெத்தம்! நல்ல சூடுள்ள ரெத்தமாக்கும்!” என்று காய்கறிக்காரி செல்லம்மை சொல்லி நாடெங்கும் பரப்பினாள்.
ஆனால் அவளுடைய அம்மா காணியம்மைதான் தக்காளியை அப்படி பரப்பியது. அது காய் அல்ல, அதை ஒரு விலங்கு குட்டியாகப் போடுகிறது என்றுகூட அவள் சொல்லிச் சிலரை நம்பவைத்திருக்கிறாள். “அதுக்க மேனியப் பாருங்க… பச்சப்பிள்ள, இப்பம் பெத்ததுன்னு ஆருக்கும் தெரியுமே!” பச்சைப்பிள்ளையை தின்பதில் குற்றவுணர்வுகொண்டு வாங்காதவர்களும் இருந்தனர்.
”என்னை மாதிரி வெற்றிகரமான சேல்ஸ்மேன் ஆகணும்னா நிதானமா அன்பா கனிவா பேசத்தெரிஞ்சிருக்கணும். புரிஞ்சுதாடா மரமண்ட நாயே?”
நாகர்கோயிலில் இருந்து வருபவற்றுக்கு மேலதிக மதிப்பு இருந்தது.காலாயம் வீட்டு தம்பி பசுநெய் போன்ற உள்ளூர் பொருட்களை நம்பி சாப்பிட மாட்டார். அவருக்காக சிறப்பான டால்டா நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் அனுப்பி வைக்கப்படும் “என்ன மணம்ங்கியே? பசுநெய்யிக்க நாத்தம் உண்டுமா?அப்டி ஒரு மணமில்லா?”
ஆனால் நான் டப்பாவை பார்த்திருக்கிறேன். பசுநெய் போலவே மணமும் குணமும் கொண்டது என்றுதான் விளம்பரம் செய்திருப்பார்கள். அதை சொல்லப்போனபோது தங்கையா நாடார்”சும்மா இருடே, அதுவும் இதுவும் ஒண்ணா? அந்த டப்பாவுக்க வெலையிலே ஒரு பசுவ வாங்கிப்போடலாமே?”என்று சொல்லிவிட்டார்.
”நம்ம சேல்ஸ்மேன்களுக்கு நல்ல சேல்ஸ்மேன் ஆகச் சொல்லிக்குடுக்கிறதுக்குப் பதிலா நம்ம கஸ்டமருக்கு நல்ல கஸ்டமராகச் சொல்லிக் குடுக்கலாமே”
மேட்டிமை என்பது நுகர்வின் அடிப்படையாக இருந்தது. எங்கள் வீட்டில் தங்கை மட்டுமே பௌடர் போடுவாள். அதற்கு ரெமி பவுடர் ஒரு டப்பா வாங்கினால் மூன்றுமாதம் வரும். பக்கத்துவீட்டு பார்கவி அக்கன் “எங்க வீட்டிலே ஒரு பெரிய டப்பா குட்டிக்கூரா வாங்கினா ஒரு வாரம் வரும்”என்றாள். அம்மா வியப்பாக தலையாட்டிவிட்டு அவள் போனதும் “அவங்க வீட்டிலே எருமைக்காக்கும் குட்டிக்கூரா போடுதது”என்றாள்.
நான் பள்ளிக்கூடத்தில் பேசும்போது எம்ஜிஆர் அவருடைய மெட்ராசிலுள்ள வீட்டில் ஆண்டுதோறும் குட்டிக்கூரா பௌடரையே கரைத்து வெள்ளையடிப்பதாகச் சொன்னேன். எம்ஜிஆர் ரசிகனாகிய கே.விஸ்வநாதன் அதை உடனே ஏற்றுக்கொண்டு அருமனை வட்டாரங்களில் பரப்பினான். ஆறுமாதத்திற்குள் அது நிறுவப்பட்ட உண்மையாக ஆகி என்னிடமே பலரும் சொல்லத் தலைப்பட்டனர்.சிவாஜி வீட்டில் லக்ஸ் சோப்பால் வெள்ளையடிக்கிறார்கள் என்ற செய்தி சில மாதங்களிலேயே வந்து சேர்ந்தது.
”சரி, இந்த கிராஃபையே கருப்பு பின்னணியிலே நல்லா மின்னுற மாதிரி கலர்லே செஞ்சிரு. எதிர்காலம் பிரகாசமா இருக்கிறமாதிரி தெரியும்”
அதன்பின்னர் டிவி வந்தது. விளம்பரங்களே வாழ்க்கை என்றாகியது. அரசியல்தலைவர்கள், ஆன்மிகச்செம்மல்கள் கூட விளம்பரத்தால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார்கள். “ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம்ங்க. விளிச்சா விளி கேட்கும். ஆனால் போதுமான அளவு விளம்பரம் இல்லே…”என்று சொல்வதை கேட்கமுடிகிறது. “அவரு பெரிய ஞானிங்க. ஆனா விளம்பரத்தை விரும்புறதில்லை”என்ற விளம்பரம் மிகப்பரவலாக உள்ளது.
சினிமாவிற்குச் சென்றபின் பலவகையான ‘சேல்ஸ் டாக்’ களை நான் கேட்டிருக்கிறேன். இடைநிலையாளர்கள் சினிமாவை பிரமோட் செய்யும் வகையே அலாதி. “நாலு ஃபைட், அஞ்சு சாங், எட்டு செண்டிமெண்டு, மூணு டைலாக் சீன் இருக்குங்க. படம் தீயா இருக்கு. டிகே போட்டிரலாங்களா?”
இலட்சியத்தை அடைதல் பட்டறை. “உங்க முதல் பத்து இலட்சியங்களை ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவை காகிதத்திலே எழுதிக்கிடுங்க. மிச்சம் நேரமிருந்தா அதிலே எதையாவது அடைய வாய்ப்பிருக்கு”
“ஆனா அதுதான் எல்லா படங்களிலேயும் இருக்கே…”
”ஆமாங்க. ஆனா இதிலே வேற மாதிரி பண்ணியிருக்காங்க… நாலுஃபைட்டிலேயும் ஈரோ ஈரோயினிய கட்டிப்புடிச்சுக்கிட்டே சண்டை போடுறாரு”
“ஆனா அதைக்கூட விஜயகாந்து பண்ணியாச்சே”
“ஆமா, அந்தப்படம் நூறுநாளுங்க… இதும் பிச்சுக்கிட்டு ஓடும்…நான் சொல்லுறேன், குறிச்சுக்கிடுங்க”
”இப்ப நம்ம விளம்பரத்துக்கு என்ன தேவைன்னா, நல்ல புதிய ஒரிஜினல் தேய்வழக்குகள்”
டிவி உரையாடல்கள் ஒருவகை ’சேல்ஸ் டாக்’ . நான் கடவுள் படம் வந்தபோது அதற்கு எப்படி டிவி உரையாடல் வைக்கலாம் என்று நான் பாலாவிடம் நடித்துக் காட்டினேன்
“முதல்ல பாலா இந்த படத்தோட ஒன்லைனை எங்கிட்ட சொன்னப்ப நான் ரொம்பநேரம் ஒண்ணுமே பேசல….அப்டியே சைலண்ட் ஆயிட்டேன்” கொஞ்சம் நாடக இடைவெளி. மோவாயை தடவியபின் “அப்றம் நினைச்சுகிட்டேன். இந்தாளு என்ன லூசா?”
அப்படி பல வசனங்கள். ”எனக்கும் பாலாவுக்கும் இந்தப்படத்திலே கெமிஸ்ட்ரி நல்லா வர்க்கவுட் ஆயிருக்கு” இடைவெளிக்குப்பின் “அக்கவுண்டன்ஸியிலேதான் சில பிரச்சினைகள் இருக்கு”
”எப்டி தெருவுக்கு வந்தேன்னா கேக்கிறீங்க? நான் ஒவ்வொரு நாளும் என் லட்சியங்களை எழுதி மனப்பாடம் பண்ணி திரும்பத்திரும்பச் சொல்லி கற்பனை பண்ணி பாத்திட்டிருந்தேன். மத்த சேல்ஸ்மேன்லாம் சேல்ஸ்கால் பண்ணிட்டிருந்தாங்க”
வேடிக்கைக்ககாச் சொல்லப்போய் அந்த மாதிரியே பிரமோவை வைத்துக்கொள்ளலாம் என்று பாலா துடிப்பு கொள்ள அவரைச் சமாதானம் செய்வதற்குள் டன் கணக்கில் ஆற்றல் வீணடிக்கப்பட்டது.
கடைசியாக பாலாவை சந்தித்தபோது ‘எர்வாமார்ட்டின்’ வைத்திருந்தார். என் தலையைக் கொலையார்வத்துடன் பார்த்து “முடியெல்லாம் கொட்டிப்போச்சே. இருங்க, போறப்ப எர்வா மார்ட்டின் தாறேன். தேச்சுப்பாருங்க. முடிக்கு நல்லது”
”ஏஜென்ஸி எடுத்திருக்கீங்களா?” என்றேன் நையாண்டியாக.
“சேச்சே, வாங்கி வைச்சிருக்கேன். வேண்டியவங்களுக்கு கொடுப்பேன்”
“எதுக்கு வாங்கி வச்சிருக்கீங்க?”
“எனக்கு நல்ல பிரயோசனம் இருக்கே?”
”இத வாங்கினவங்க அதையும் வாங்கினாங்க”
அவருக்கு சீப்பே சிக்கிக்கொள்ளும் அடர்முடி. நரையும் இல்லை. “உங்களுக்கு எதுக்கு எர்வா மார்ட்டின்?”என்றேன்.
“முடி உதிராம இருக்கத்தான்…”
“அதன உதிரலியே”
“பாத்தீங்களா? அதைத்தான் சொல்றேன்…நல்ல பிரயோசனம் இருக்கு”
மேற்கொண்டு விவாதித்தால் சிக்கலாகிவிடும் என உணர்ந்து நான் மெல்ல கேட்டேன். “நம்ம மொட்டை ராஜேந்திரனுக்கு குடுத்தீங்களா?”
“சேச்சே, அதெல்லாம் செவ்வாய்க்கிரகம் மாதிரி. ஆக்ஸிஜனே இல்லாத எடம்”