இளையராஜா அவர்களின் கலைக்குப் பின்னால் உள்ள தனிமனிதனைப் பற்றிய என்னுடைய உரை.Muthalvan Media என்னும் அமைப்புக்காக நண்பர் தமிழ் முதல்வன் இளையராஜா பற்றி ஒருங்கிணைக்கும் தொடர் உரையாடல்களில் ஒன்றாக 12-6-2021 அன்று மாலை 5 மணிக்குப் பேசியது.
இந்த உரையை சரியாக ஆற்றியிருக்கிறேனா என்று தெரியவில்லை. அந்த ஐயத்தால் திரும்பக் கேட்க முனையவில்லை. இன்னும் நீண்டநாட்களுக்கு பிறகுதான் இதை என்னால் கேட்கமுடியுமென நினைக்கிறேன். வழக்கம்போல உச்சரிப்பில் சொற்கள் மறைந்திருக்கும். வழக்கம்போல உணர்ச்சிவசப்படும் இடங்களில் மெல்லிய மூச்சிளைப்பு இருந்திருக்கும்.
இது பொதுவாசகர்களுக்குரியது அல்ல. தர்க்கபூர்வமாக எவரிடமும் நான் ஏதும் சொல்வதற்கில்லை. எவரையும் சொல்லிப் புரியவைக்கவும் முயலவில்லை. இது என் கலையின் தருணத்தை நான் இன்னொரு இடத்தில் கண்டடைந்ததன் விவரிப்பு மட்டுமே. ஒரு மனிதன் அவனுடைய உடலெனும் எல்லையில் இருந்து, உள்ளமென்னும் எல்லையில் இருந்து, அவனுடைய வாழ்வெனும் எல்லையிலிருந்து மீறிப் பறந்தெழும் தருணங்கள் கலையால் இயல்வதைப் பற்றிச் சொல்லமுயன்றிருக்கிறேன்.
ஆனால் சூம் அதற்கான ஊடகமல்ல. நான் எவருடன் பேசிக்கொண்டிருந்தேன் என எனக்கு தெரியவில்லை. எனக்குநானே சிலவற்றைச் சொல்லிக்கொண்டேன். எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.
இளையராஜாவின் இசையை நுணுகி அறிந்து, நூல்பிரித்து ஆராயும் நிபுணர்களை எனக்குத் தெரியும். நண்பர் சுகா, இசைஆய்வாளர் நா.மம்முது, வெவ்வேறு மலையாள இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் பேசும்போது ராகங்களின் ஒழுங்கும் ஒழுங்குக்குலைவும் எப்படி ராஜாவிடம் வெளிப்பட்டிருக்கிறது என்று பேசியும், பாடியும், கருவிகளில் வாசித்தும் கேட்டிருக்கிறேன். தொல்லிசையுடன், நாட்டாரிசையுடன், மேலைச்செவ்வியலிசையுடன் அவரை ஒப்பிட்டு பேசப்பட்டவற்றை கேட்டிருக்கிறேன். உளக்கிளர்ச்சியூட்டும் அறிதல்கள் அவை.
ஆனால் இது அவர் இசையை உருவாக்கும் தருணம், அவருடைய ஆளுமையிலுள்ள இசையம்சம், இசையெனும் ஊடகம் வழியாக அவரிடம் வெளிப்பட்ட இன்னொன்று, அவரில் திகழும் அவரைக்கடந்த ஒன்று பற்றிய ஒரு வெளிப்பாடு. சொல்லவேகூடாது என நான் நினைப்பது- சொல்லிப்பார்த்திருக்கிறேன்.
அவரைவிடச் சிறந்த இசையமைப்பாளர்கள் இருக்கலாம் என்று நான் சொன்னதைப் பற்றி ஒரு நண்பர் கேட்டார். இசையில் இரு அம்சங்கள் புறவுலகு சார்ந்தவை. அதன் தொழில்நுட்பம், அதன் உலகியல்வாழ்க்கைக் கூறு. அவையிரண்டும் சிறப்பாக வெளிப்படும் பாடல்கள் இசைக்கலையின் மிகச்சிறந்த வெளிப்பாடாக அமையலாம். அதுவே இலக்கியத்திலும். நான் சொல்வது அதற்கப்பாலுள்ள ஒன்று. அது இசையென வெளிப்படுகையில் பலசமயம் முழுமையாக தன்னை வெளிப்படுத்துவதில்லை. பலசமயம் கையில் அது வந்திருந்தமையின் தடத்தால் மட்டுமே நாம் அதை உணர முடிகிறது.
ஆகவே எந்த எதிர்வினையையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் சொல்வதைப் புரிந்துகொள்ள தமிழகத்தில் சில ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்களுக்காக மட்டுமே இந்த உரை.