பாலையாகும் கடல், கடிதம்- பாலா

பாலையாகும் கடல்- கடலூர் சீனு

பாலையாகும் கடல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பாலையாகும் கடல் என்னும் சீனுவின் கட்டுரையும், அதற்கான கிருஷ்ணன் சங்கரனின் கடிதத்தையும் பார்த்தேன்.

நான் முன்பு பணிபுரிந்த கவின்கேர் நிறுவனம் வாங்கிய இந்தியக் கார, இனிப்பு வகைகள் தயாரிக்கும் தொழிலில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்தத் தொழில் வருடம் 20-25% வளர்கின்ற தொழில்.. தீபாவளி சமயத்தில் மட்டும் 300 டன் சோன் பாப்டி என்னும் இணிப்பு உற்பத்தியாகும்.. எங்களை விட ஹல்திராம் 50 மடங்கு பெரிய நிறுவனம். அவர்கள் எவ்வளவு சோன் பாப்டி உற்பத்தி செய்வார்கள் என யூகித்துக் கொள்ளலாம்.

நுகர்வு இன்று நிறுத்த முடியா வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. எனது வீட்டில் 5 ஆம் வகுப்பு வரை மின்சாரம் கிடையாது. இன்று மூன்று அறைகளிலும் குளிர்பதன சாதனம் உள்ளது. குளிர் பெட்டி உள்ளது. இரண்டு கார்கள்.கல்லூரி வரை 4-5 சட்டைகள் மட்டுமே இருந்தது. இன்று 25 உள்ளது.

சென்னை வெயிலிலும் வென்னீர்க் குளியல் தான்.  நீங்கள் ஒருநாள் வென்னீர் போட உபயோகிக்கும் மின்சாரம், லடாக்கில் ஒரு குடும்பத்துக்கு 3 நாள் மொத்த மின்சாரத் தேவை என்கிறார்.. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வென்னீர்க் குளியலை நிறுத்தினால், அல்லது, சூரிய வென்னீர் அடுப்பை உபயோகித்தால், சில ஆயிரம் மெகாவாட் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களை மூடலாம் என்கிறார் லடாக்கின் சூழலியல் செயல்பாட்டாளார் சோனம் வாங்சுக்.

காவிரியில், அமராவதியில் மணற் கொள்ளை அடிக்கும் வட்டச் செயலாளர்களை வையும் நாம், அப்படி கொள்ளையடிக்கும் மணல் யாருக்கு வீடு கட்டப் பயன்படுகிறது என்பதையும் கொஞ்சம் யோசிக்கலாம்.  The Wild East – Criminal Political Economics in South Asia  – என்னும் புத்தகம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிறக்கி, அதில் தமிழ்நாட்டில் மணல் மாஃபியா வளர்ந்த கதையைப் படிக்கலாம்.

இன்று உலகமே வியந்து பார்க்கும் சீனாவின் சாலைக்கட்டமைப்புக்காக 2011-13 என மூன்றாண்டுகளில் மட்டும், அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டில் உபயோகித்த மொத்த சிமெண்டையும் உபயோகித்திருக்கிறது..  ஒரு ஏர்போர்ட்டை ஏசி வசதி கொண்ட மாநகரம் போல அமைத்து வரும் துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், கட்டுமானத்துக்குத் தேவையான மணலை வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன.. வெளிநாடுகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு, சிங்கப்பூர் தன் நிலப்பரப்பை 25% அதிகரித்திருக்கிறது.

கடல் வளம் கொள்ளையடிக்கப்படுவதும், அது நீடித்து நிலைக்க வழியில்லா வண்ணம் அழிக்கப்படுவதும் ஒரு முக்கியமான அழிவு.. ஆனால், அதைத் தாண்டி, ஆடம்பர நுகர்வுக்காக மனிதன் அழிக்கும் இயற்கை வளம் அதை விட அதிகம்.

நம்மைப் போன்ற மனிதர்கள், தேவைக்கு 2-3 ம்டங்கு அதிகமான உணவை உண்கிறோம். உலகத்தின் மிக அதிக நீரை உபயோகிக்கும் உணவு தானியம் நெல். அந்த வயல்களில் இருந்து உருவாகும் மீத்தேன் வாயும் உபரிக் கெடுதல்.

எதுக்கெடுத்தாலும், நாங்கள் வரிக்கட்டறோம்னு இந்திய அரசாங்கத்தை நோக்கி விரலுயர்த்தும் மக்களாகிய நாம் 1% தாம் இதன் முழுமுதல் குற்றவாளிகள் .. இந்த 1% செய்யும் அராஜகத்துக்கே உலகம் இந்தப்பாடு படுகிறது என்பதுதான் பீதியளிக்கும் நிஜம்.. காவிரியில் வெள்ளம் வந்தால் கூட, கால்வாய்களில் செல்ல வியலா வண்ணம் மணலை அள்ளி விட்டோம்.. நமக்கு 3 பெட்ரூம் வீடு வேணும் என்பதற்காக..  அதை விடுத்து வட்டச்செயலாளர் மீது அறச்சீற்றம் கொண்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறோம்.

மாற வேண்டியது நாம் அனைவருமே.. இல்லையெனில், அடுத்த 30 ஆண்டுகளில், கடலில் மீன்களை விட ப்ளாஸ்டிக் அதிக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதில் இன்னுமொரு முக்கியப் பிரச்சினை மிக அண்மையில் பயன்பாட்டுக்கு வந்த ப்ளாஸ்டிக்..  அது பற்றிய ஒரு குறிப்பை கீழே தருகிறேன்

அன்புடன்

பாலா

கிருஷ்ணன் சங்கரன் – மீன் சாப்பிடுபவர்கள், வாரம் ஒருநாள் மட்டும் சாப்பிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.. சைவ உணக்காரராகிய அவர், காலை வேளையில் நீராகாரமும், ஊறுகாயும் என மாறினாலும் சூழல் அதே அளவு மேன்மையடையும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்

Bala

ப்ளாஸ்டிக்: நாம் தூக்கி வளர்க்கும் துயரம்!

1865 ஆம் ஆண்டு, யானைத் தந்தங்களின் பற்றாக்குறை காரணமாக, தந்தத்தில் செய்யப்படும் பில்லியர்ட்ஸ் பந்துகளுக்கு மாற்றாக செயற்கைப் பந்தை உருவாக்குபவர்க்கு 10 ஆயிரம் டாலர் பரிசு கொடுப்பதாக ஒரு நியுயார்க் நகர விளையாட்டு நிறுவனம் அறிவித்தது. ஆன் வெஸ்லி ஹயாத் என்பவர், செல்லுலோஸ் நைட்ரேட்டையும், கற்பூர எண்ணெயையும் கலந்து செயற்கையான பந்தைத் தயாரித்து, அந்தப் பரிசைப் பெற்றார். செயற்கை பாலிமர் உருவாக்கத்தின் வரலாறு இதிலிருந்து துவங்குகிறது எனச் சொல்லலாம்.  இதையடுத்த பெரும் கண்டுபிடிப்பு, 1907 ஆம் ஆண்டு பேக்லேண்ட் என்பவர் கண்டுபிடித்த பேக்கலைட்.

இந்தக் கண்டுபிடிப்புகள், நவீன உலகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. அதுவரை, பல மனித உபயோகங்களுக்கு, மரம், விலங்குகளின் எலும்புகள், கற்கள், கொம்புகள் போன்றவை உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. அவை கிடைப்பதும், அவற்றின் வடிவங்களும் உபயோகத்துக்குத் தேவையான பொருட்களை உருவாக்குதலில் பல சிக்கல்களை உருவாக்கின. ப்ளாஸ்டிக் பொருட்கள், இந்தச் சிக்கல்களுக்கான பெரும் தீர்வாக உருவாகி வந்தன. தொழில்நிறுவனங்கள், ப்ளாஸ்டிக் பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடத் துவங்கின.

இரண்டாம் உலகப்போர்க்காலத்தில், உலோகப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட, ப்ளாஸ்டிக் பொருட்கள் மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. 1935 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நைலான், போர்விமானங்களில், பாரச்சூட்களில் உபயோகப்படுத்தப்பட்டது. பொருட்களைப் பொதிந்து எடுத்துச் செல்ல அதுவரை பயன்படுத்தப்பட்ட மரம், உலோகம், கண்ணாடி போன்றவற்றுக்கு, மலிவான மாற்றுப் பொருளாக ப்ளாஸ்டிக் வந்தது. இன்று கம்ப்யூட்டர் முதல் கண்புரைச் சிகிச்சையில் பயன்படும் செயற்கை விழித்திரை வரை ப்ளாஸ்டிக் ஆட்சி செய்கிறது. ப்ளாஸ்டிக் இல்லா ஒரு உலகை, இன்று நாம் கற்பனை செய்ய முடியாது.

ஆனால், இந்தப் பொருளுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. மனிதர்களின் பல்வேறு உபயோகங்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இவை மக்காத பொருட்கள். பெரும்பாலும், ஒரு முறை உபயோகிக்கப்பட்ட பின் தூக்கி எறியப்படுபவை. உலகைக் குப்பை மேடாக்கும் மிகப்பெரும் மாசுக் காரணி. மலிவான, மனிதனுக்கு மிகவும் உபயோகமான, இதன் உற்பத்தியும், நுகர்வும், கற்பனை செய்ய முடியாத அளவில் பெருகி, அதன் கழிவுகள், மனித இனத்தின், கடல் வளத்தின், வன உயிர்களின் பெரும் எதிரியாக விஸ்வரூபமெடுத்து பயமுறுத்துகின்றன.

கடந்த ஆண்டு மட்டுமே 38 கோடி டன் ப்ளாஸ்டிக் பொருட்கள் உலகில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.  உலகம் இதுவரை 830 கோடி டன் ப்ளாஸ்டிக்கை உற்பத்தி செய்திருக்கிறது, அதில் 630 கோடி டன் ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படாமல், குப்பையாகக் கிடக்கிறது என்கிறது நேஷனல் ஜியாக்ரஃபிக். ஆண்டுக்கு 80 லட்சம் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. உலகக் கடற்கரையின் ஒவ்வொரு அடிக்கும், ஆறு ப்ளாஸ்டிக் பைகள் அளவுக்கான ப்ளாஸ்டிக் கழிவு கொட்டப்படுகிறது. சீனா, தன் உற்பத்தியில் 30% கழிவைக் கடலில் கொட்டுகிறது.  2050 ஆம் ஆண்டில், கடலில், மீன்களை விட ப்ளாஸ்டிக் அதிகமாக இருக்கும். இனியும் தாமதம், மனித இனத்தைப் பேரழிவுக்குக் கொண்டு செல்லும்.

ப்ளாஸ்டிக் மறுசுழற்சி:

மனிதர்கள், பாலியெத்திலீன் (தண்ணீர் பாட்டில்கள்), பாலி ப்ரொப்பிலீன் (ஷாப்பிங் கவர்கள்),  பாலிவினைல் குளோரைட் (ப்ளாஸ்டிக் ட்ரேகள்) என்னும் ப்ளாஸ்டிக் வகைகளையும், பல ப்ளாஸ்டிக் வகைகள் இணைக்கப்பட்ட லேமினேட் (சமையல் எண்ணெய்க் கவர்கள்) எனப் பலவிதமான பொருட்களை உபயோகிக்கிறார்கள். இவற்றை ஒன்றாகச் சேர்த்து மறு சுழற்சி செய்ய முடியாது.

எனவே, இன்று உலகெங்கும் மலையாய்க் குவிந்திருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளுக்கும், இனிமேல் உற்பத்தி செய்யப்போகும் ப்ளாஸ்டிக் பொருட்களால் உருவாகப்போகும் கழிவுகளுக்கும், ஒரு முழுமையான தீர்வு, உடனடியாக எட்டப்படவேண்டும். இந்தியாவில் தினமும் 16000 டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என தேரி என்னும் இந்திய எரிசக்தி ஆய்வுக்கழகம் சொல்கிறது. தில்லி, கொல்கத்தா, அமதாபாத் நகரங்கள் இந்தியாவின் மிக அதிக ப்ளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகின்றன. இவை பெரும்பாலும், நகரத்துக்கு வெளியில் மலைகளாகக் குவிக்கப்படுகின்றன. மும்பை, கேரளக் கடல்பகுதிகள், ப்ளாஸ்டிக் குப்பைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

திடக்கழிவு மேலாண்மை, உள்ளாட்சி நிர்வாகங்களின் முதன்மையான பொறுப்பாக உள்ளது. வீடுகளில், ப்ளாஸ்டிக் கழிவுகள் தனியே பிரிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு, விதி மீறல்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். நமது உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மை ஓரளவு நன்றாக நடக்கின்றது. மக்கும் கழிவுகள் தனியே பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்பயன்படுகின்றன. ஆனால், ப்ளாஸ்டிக் குப்பைகள் வணிகர்களுக்கு விற்கப்பட்டுவிடுகின்றது. ஆனால், உருவாகும் எல்லாப் ப்ளாஸ்டிக் கழிவுகளும் இந்தச் சுழற்சிக்குள் வருவதில்லை.

ஒவ்வொரு மாநிலமும், ப்ளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தையும், கிடங்குகளையும் அமைக்க வேண்டும். மறு சுழற்சி பல வகைப்படும். அதில் முக்கியமானது,  சாலைகள் அமைப்பதில் ப்ளாஸ்டிக் கழிவுகள் உபயோகப்படுத்தப்படுவது. மத்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், கிராமப்புரச் சாலைகள் அமைக்கும் திட்டத்தில், ப்ளாஸ்டிக் கழிவுகள் 10 சதம் அளவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிகளை வகுத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில், தற்போது, சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மிக அவசரமாக முன்னெடுக்கப்பட்டு, இந்தியாவின் தேசிய, மாநில, கிராமச் சாலைகள் என அனைத்துச் சாலைகளிலும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

டேராடூனில் உள்ள இந்தியப் பெட்ரோலியக் கழகமும், மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து, ப்ளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் (பெட்ரோல்) உற்பத்தி முறையை உருவாக்கியுள்ளன. சோதனை முறையில், பூனே, கோவா நகரங்களில், ப்ளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.  ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கணித்து, அந்த மாநிலத்தில் உள்ள சாலைகளின் தேவைகளுக்கேற்ப ப்ளாஸ்டிக் உபயோகத்தையும் கணித்து, மீதிப் ப்ளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றுவதற்கான சரியான அலகுகள் கொண்ட தொழிற்சாலைகள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனங்களும், மாநில ப்ளாஸ்டிக் சேகரிப்பு நிறுவனமும் இணைக்கப்பட்டு, ப்ளாஸ்டிக் கழிவுகள், பொது வெளிக்குச் சென்று விடாத வகையில், எரிபொருள் நிறுவனங்களுக்குச் சீராக ப்ளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கும் வகையில், ஓட்டைகள் இல்லாத கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும், ப்ளாஸ்டிக் நுகர்வு மற்றும் சுழற்சி இரண்டையும் சம அளவில் மேலாண்மை செய்து, சில வருடங்களில், ப்ளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாநிலமாக உருவாவதைக் கட்டாயமாக்கும் சட்டம் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 16 ஆயிரம் டன் மக்காக் குப்பை நம் தலைமீது குவிகிறது என்னும் அவல நிலையை அனைவரும் உணர வேண்டும்.

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – நியூ ஜெர்ஸி அனுபவம்
அடுத்த கட்டுரைமதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்