இந்து என உணர்தல் – மறுப்பு
வணக்கம் ஜெ
அந்தியூர் மணி அவர்கள் எழுதிய கட்டுரை முக்கியமானது. சாதி குறித்த இன்றைய விவாதங்களில் அவர் சரியான கோணத்தை முன்வைக்கிறார். இன்று, எதிர்ப்பாளர்கள் மதத்தை Code of Conduct என்றே நம்ப விரும்புகிறார்கள். எனவே, அந்தச் சட்டங்களில் உள்ள போதாமைகளைச் சுட்டிக்காட்டி மதம் அழிய வேண்டும் என்று வாதிடுகிறார்கள். எதிர்தரப்பின் பலவீனமான பகுதியில் அடித்துவிட்டு, தன்னை கலகக்காரர்களாகவும், அறிஞர்களாகவும் எண்ணிக்கொள்கிறார்கள். எதிர்தரப்பின் பலமான பகுதியை எதிர்ப்பதே மெய்யான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைபுரியும். மற்றவை வெறும் அன்றாட அரசியலுக்கு மட்டுமே பயன்படும்.
***
மேலும், மணி அவர்கள் ‘ஆழ்படிமம்’ குறித்து விரிவாக, அதை மறுக்கும் தரப்பாகப் பேசியிருந்தார். அதுதொடர்பாக சில விஷயங்களை சொல்லலாம் என்றே இக்கடிதத்தை எழுதுகிறேன். அவர் பேசியிருக்கும் விஷயத்தின் சரியான கோணத்தையே முன்வைக்கிறேனா எனத் தெரியவில்லை. என்னால் புரிந்துகொண்டமட்டும் சொல்கிறேன்.
1) ஆழ்படிமங்கள் அறிதலுக்குப் பயன்படும் சாத்தியக்கூறை வைத்து, அது உருவான காலகட்டத்துக்கு மட்டும் பொருந்துவதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு படிமம் அறிதலுக்கான கருவியாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. மேலும், அது ‘அழகியல்’ உணர்வோடும், ‘வரலாற்று’ உணர்வோடும் தொடர்புடையதாக உள்ளது. புதிய படிமங்களை உருவாக்கி அதை அறிதலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பழைய படிமம் அறிதலுக்கோ, அழகியலுக்கோ, வரலாற்றுணர்வுக்கோ பயன்படும் பட்சத்தில் அது உயிர்ப்புடன் இருக்கவே செய்யும்.
(i) அழகியல் உணர்வு, அறிதலுக்குச் சமமான அளவு முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன். உதாரணமாகச் செம்மஞ்சள் நிற தீபத்தைக் கொள்ளலாம். அது படிமத் தன்மையை அடைந்து குறியீடாக இருக்கிறது. சிலவற்றை விளக்க (அறிதல் முறை) அச்சுடர் ஒளி பயன்படுகிறது. ஆனால் ஒரு நவீன மின் விளக்கு தீபத்தை விட விஷயங்களை விளக்குவதற்கு இன்றைய சூழலில் கச்சிதமாகப் பொருந்தலாம்; தீபத்தைவிட கூடுதலான பயன்மதிப்பும் அந்த மின் விளக்கிற்கு உண்டு. ஆனால் தீபம் அளிக்கக்கூடிய அழகியல் உணர்வை அம்மின் விளக்கு அளிந்துவிடுமா ? காலமாற்றத்தால் அழகியல் உணர்வும் மாறும் என்றால், இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தீபத்தின் இடத்தை மின் விளக்கு பெற்றுவிடுமா ? தெரியவில்லை.
(ii) இதே போல வரலாற்றுணர்வும் முக்கியம் எனக் கருதுகிறேன். சூலத்திற்கும், வேலுக்கும் இன்று எந்தப் பயன் மதிப்பும் இல்லை. வில்லை விட நவீன துப்பாக்கி துல்லியமாகவும் விரிவாகவும் அறிதலுக்குப் பயன்படலாம். ஆனால், வில்லும் வாளும் அளிக்கக்கூடிய வரலாற்றுணர்வை துப்பாக்கி அளிப்பதில்லை. முருகன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால் அதை நம் மனம் ஏற்பதில்லையே ! ஆயுதம் தாங்கிய தெய்வ வடிவங்களை நாம் இன்னும் புறக்கணிக்கவில்லை. வில்லேந்திய ராமனும், வாளேந்திய சோழனும் அளிக்கும் பெருமிதத்திற்கான தேவை இன்னும் இல்லாமல் ஆகிவிடவில்லை.
* இப்படி வம்படியாக வரலாற்றுப் பெருமிதங்களைப் பிடித்து வைத்துக் கொள்வது ஏன் ? வரலாற்றுப் பெருமிதங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். அத்தகைய பெருமிதத்தால் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளும் நேரலாம். ஆனால் வரலாற்றுப் பெருமிதங்களை புறந்தள்ள வேண்டும் என்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
2) சில ஆழ்படிமங்கள் விரிவாக்கத்துக்கு உட்படாமல் உறைபடிமங்களாகத் தேங்கவைக்கப் படுகிறது. இந்த உறைதலையும் மேற்சொன்ன அழகியலுக்கும், வரலாற்றுணர்வுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். ஆழ்படிமங்களை நாம் விரிக்க மறுப்பதால் (உறையவைப்பதால்) பல்வேறு சாத்தியங்களை நாம் இழக்கலாம். ஆகையால், உறைதல் என்பது பாதகமான அம்சத்தையும் கொண்டிருக்கிறது என்பது உண்மையே. பொருள் படிமமாவது, அது ஆழ்படிமமாகி குறியீட்டுத் தன்மையை அடைவது, அது காலத்தில் உறையவைக்கப்படுவது, என்கிற இந்த செயல்முறை அதிகார அமைப்புகளால் மட்டுமே செய்யப்பட்ட ஒன்றாகக் கருத முடியவில்லை.
பழைய சூத்திரங்களையோ செய்யுள்களையோ எடுத்தவுடனேயே விரிவாகப் பொருள் அறிந்து படித்துவிட்டு மூடிவைத்துவிடுவது என்றில்லாமல், அதை அப்படியே வார்த்தை மாறாமல் மனப்பாடம் செய்யும் முறை நம் மரபில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம், ஒன்று, அதை அடுத்தடுத்த காலகட்டத்துக்கு அப்படியே கடத்துவது. அதன் பக்கவாட்டுப் பரப்பில் அதை விரித்தும் விவாதித்தும் கொள்ளலாம். ஆனால் மையத்தில் அது அப்படியே சரமாகச் செல்லும். இரண்டு, என்றேனும் ஒரு கணத்தில் ஏதாவதொரு திறப்பை அது நம்முள் ஏற்படுத்தும். அதாவது அறிதலுக்கான சாத்தியங்களையோ, கவித்துவத் தன்மையையோ அது தம்முள் கொண்டிருப்பின், ஒரு சந்தர்ப்பத்தில் அது நம்முள் அறிதலை நிகழ்த்தும்; ஒன்றைத் தொடும். ஆனால் அந்த சூத்திரத்தின் நேரடியான பொருளை மட்டும் விரிவாக எழுதிவைத்துக் கொண்டு, அச்சூத்திரத்தை நாம் அழித்துவிட்டால், மேற்சொன்ன சாத்தியங்களை நாம் இழந்துவிடுவோம்.
இது படிமங்களுக்கும் பொருந்தும். படிமமானது அதேபோன்று கவித்துவத் தன்மையை தம்முள் கொண்டிருக்குமாயின், அதை உறையவைத்து, ஒரு மூலையில் அடுக்கி வைக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதை வேறு இடத்தில நாம் விரித்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உறைந்த வடிவம் அதற்கான இடத்தில் அப்படியே இருக்கட்டும். தொல்பொருள் போல.
ஆனால், விரிவாக்க முடியாமல் அதிகாரமானது தடுக்கிறது என்பது பிரச்சனைக்குரிய விஷயம்தான். அதை முன்கூட்டியே திட்டமிட்டுத் தவிர்க்க முடியும் என்று எண்ண முடியவில்லை. ஏனெனில், வெகுஜனத் தன்மைக்குள் புழக்கத்திற்குள் வரும் படிமம் எளிதில் அதன் சமகால அரசியலுக்குள்ளும் ஊடுருவும். நாம் அதற்கான எதிர்விசையை உருவாக்கலாம்; அதன் அதிகாரமயப்படுத்துதலை மட்டுப்படுத்தலாம்; பல்வேறு தரப்புகள் வழியே சூழலில் சமநிலையைத் தோற்றுவிக்கலாம். அதை மட்டுமே செய்யமுடியும் என்றே எண்ணுகிறேன்.
ஆழ்படிமங்களைப் பயன்படுத்தும் சிறு கூட்டத்திற்காக அதை உறையவைப்பதில் ஏற்படும் அழிவுகளுக்கு யாரைப் பொறுப்பாக்குவது ? அப்படி யாரையும் பொறுப்பாக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்தந்த காலகட்டத்து அறிஞர்களாலும், படைப்பாளிகளாலும், அத்தகைய உறைபடிமங்கள் அழிவுக்காகப் பயன்படுத்தப்படப் போவதை நோக்கிச் செல்லாமல், சரியான விளக்கம் அளிக்கப்பட்டு, சமநிலையைப் பேணலாம். இதை மட்டுமே செய்யமுடியும் என்று தோன்றுகிறது. ஒரு அரசியல் கட்சி, வழிபாட்டுக்குரிய அல்லது புனித நூல்களில் குறியீட்டுத் தன்மையுடன் பயன்படுத்தப்பட்ட ஒரு புனிதப் பொருளை தனது சின்னமாகக் கொண்டுள்ளது என்றால், அது ஒரு விளைவு மட்டுமே; தொடக்கம் அல்ல. தாமரை, பிறை சந்திரன், சிலுவை, சூரியன் என அனைத்துக் குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதானது, வரலாற்றுப் பெருமிதத்தையும், அந்தப் பொருள்களின் மரபார்ந்த தன்மையையுமே காரணமாக் கொண்டுள்ளது.
3) காலத்தால் அந்தப் படிமத்தின் தேவை தொடர்ந்து இருந்துகொண்டிருத்தால் (அதன் நீண்டகால பயன்பாட்டினால்) மட்டுமே, அது ஆழ்படிமமாக ஆக முடியும் என்பது உண்மையே. அந்த நீண்டகால பயன்பாடு என்பது ‘அறிதல்’ என்கிற பயன்மதிப்பை மட்டுமே கொண்டிருக்க வேண்டியதில்லை. கவித்துவத்தையோ, அழகியலையோ தன்னுள் கொண்டிருக்குமாயின், வரலாற்றுணர்வை அளிக்கும் ஒரு வடிவமாகப் பயன்படுமாயின் அதுவும் பயன்பாடே. அதுவும் காலத்தால் நீடிக்கப்பட வேண்டியதாகிறது. நவீன படிமங்களை உருவாக்கிக் கொள்வதால் பழைய படிமங்களைக் கைவிட வேண்டியதில்லை. எல்.இ.டி. விளக்கை படிமமாக்கி ஒருவன் கவிதை எழுதலாம்; தத்துவ விளக்கத்திற்குப் பயன்படுத்தலாம். ஆனால், யாரோ ஒருவன் உள்ளத்தில் இன்னும் செம்மஞ்சள் நிறச் சுடர் அல்லது தீ எரிந்து கொண்டிருப்பின் அந்தத் தீயின் தேவை இன்னும் உள்ளது என்றே பொருள்.
***
நான் இக்கடிதத்தில் சொல்ல விரும்பியது, ஆழ்படிமங்கள் அதன் அறிதல் செயலுக்காக மட்டுமல்லாமல், வெறுமனே கவித்துவத்திற்கும், அழகுணர்ச்சிக்காகவும், வரலாற்று உணர்ச்சிக்காகவும் காக்கப்படவேண்டும் என்பதே.
ஜெ. வின் வரியை இங்கு நினைவுகூறுகிறேன். ”உருள்பெரும் தேர் நம் ஆலயத்தில் நிற்கட்டும்; சாலையில் கார் ஓடட்டும்.” இவ்வரியை உணரத்தான் முடியும். அதன் பயன் மதிப்பு பற்றி கூற முடியாது. செம்மஞ்சள் நிறத் தீ நம் கற்பனையை நிறைக்கட்டும்; வேலும் வாளும் நம் வரலாற்றுணர்வை நிறைக்கட்டும்.
விவேக் ராஜ்