மதார்- தமிழ் விக்கி
ஆசிரியருக்கு,
கவிதை என்பது ஒரு கண நேர தரிசனத்தை அல்லது காட்சியை சொற்களாக்குவது என்றும் கூறலாம். பொதுவாக துயர் அல்லது வியப்பே பெரும்பாலான கவிதைகளுக்கு கருப்பொருளாக இருந்துள்ளது. ஆனால் கவிஞர் மதாரின் “வெயில் பறந்தது” தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைவரும் அறிந்த ஒரு காட்சியை வேறொரு கோணத்தில் காட்டுகின்றன. அவை எதையும் விளக்குவதில்லை. வியப்பதுமில்லை. வாசிக்கும் போதுதான் இத்தனை நாள் இந்தக் கோணத்தில் காணவில்லையே என நமக்கு வியப்பு எழுகிறது.
ஒருநாள் காலை நடை செல்கையில், என் மனைவி தன் அத்தை மீதான புகார்களை வாசித்துக் கொண்டிருந்தாள். “ம்” கொட்டிக்கொண்டிருந்த என் விழிகளுக்கு மரங்கொத்தியின் வடிவத்தில் வேறு வண்ணக் கலவையுடன் வாலை உதறியபடி பறந்த புது மாதிரியான குருவியொன்று தென்பட்டது. அக்கணம் அப்படியே திகைத்து அது சென்ற திசையையே நோக்கிக் கொண்டிருந்தேன், மனைவி கையால் அசைக்கும்வரை. ஒரு அரிய காட்சி நம் மனதை வெறுமையாக்கி இனம் புரியாத இனிமையை நிரப்பிவிடுகிறது. கவிஞர் மதாரின் சில கவிதைகள் அதே போன்று இனிய கணத்தினை அளிக்கின்றன.
எதிர்ப்படும் ஒருவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முகமன் கூறும்போது எத்தனை மகிழ்ச்சியாக இயல்பாக எதிர்தரப்பிலிருந்தும் எழுகிறது. ஆனால், ஏதாவது வேண்டுதல் இருந்தால் இருதரப்பிலுமே ஒருவித இளிப்பும் அலுப்பும் தோன்றிவிடுகிறது. மதாரின் இக்கவிதை எதிர்பார்ப்போ, பிரார்த்தனையோ இல்லாத மனதின் மகிழ்வை அழகாகக் காட்டுகிறது.
பிரார்த்தனை
பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்
கைகளில்
ஜில் காற்று
வீசிக் கொண்டே இருந்தது
கைகளை அப்படியே வைத்திருந்தேன்
பிரார்த்தனை செய்வதை விடவும்
அது நன்றாக இருந்தது
நம்மிடம் இருக்கும் ஒன்று குறைந்தால் அதற்காக வருந்துபவர்களே மிகுதி. ஆனால் ஒன்று குறையும்போது அதன் எதிர்விகிதத்தில் கூடும் மற்றொன்றை யாரும் கண்டு கொள்வதில்லை. அது பல நேரங்களில் நலம் பயப்பதாக இருந்தபோதிலும்.
உயரம் குறையக் குறையக்
உயரம் கூடுவதைக்
காண்கிறது
கிணறு
என்ற மதாரின் கவிதையை வாசித்தபோது மனதில் பெரும் துள்ளல் எழுந்தது.
“டெய்ரி மரம்” என்ற கவிதையில் மகிழ்ச்சியின் விதையை நட்டு மகிழ்ச்சிக் காட்டை உருவாக்கி அதில் தனித்தனியாக தொலைவதைக் காட்டுகிறார். துக்கத்திற்குதானே துணை தேவை. மகிழ்ச்சியை கொண்டாட தனிமையே இனிமைதானே.
நீ தின்ற
டெய்ரி மில்க் சாக்லேட்டுக்குள்
ஒரு விதை இருந்ததாக
பயந்தபடி சொன்னாய்
நான் நம்பவில்லை
துப்பிக் காட்டினாய்
அன்று முதல்
நாம் டெய்ரி விதைகளை
விதைக்க ஆரம்பித்தோம்
அது மரமென வளர்ந்தபோது
அதில் காய்த்திருந்த
டெய்ரி சாக்லேட்டுகளை
எடுத்துத் தின்றோம்
இவ்வாறாக
டெய்ரி மரங்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்தது
ஒரு அதிசய
காலை விழிப்பின் போது
நாம்
டெய்ரி காட்டுக்குள்
தொலைந்திருந்தோம்
ஒருவரை ஒருவர்
தேடிக் கொள்ளவில்லை
“கர்ப்பிணி பெண்ணுக்கான
பிறந்தநாள் பரிசு” என்ற கவிதையில்
கடவுள்
தன் பரிசை
உன் வயிற்றில் வைத்திருக்கிறார்
உருண்டையாகக் கட்டி
பிறந்தநாளின் பரிசைப் பிரிக்க
பரிசின் பிறந்தநாள் வரை
நீ காத்திருக்க வேண்டும்
என்று கூறும்போது தனக்குள்ளேயே பதித்து வைக்கப்பட்டுள்ள சிறந்த பரிசுக்கென காத்திருக்கத்தானே வேண்டும் என்று தோன்றியதுடன், கடவுளின் அப்பரிசைக் கையிலேந்தும்போது அப்பெண் அடையும் பேருவகையினை நானும் அடைந்தேன்.
குழந்தைகள் தங்களுடன் விளையாட குழந்தைகளையே சேர்த்துக் கொள்ளும். பெரியவர்கள் அவர்களுடன் இணைய வேண்டுமென விரும்பினால் தங்களை குழந்தையாக உருமாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கவிதையில் குழந்தையின் சொல்லை தூக்கிப் போட்டு விளையாட எப்படி உருமாற வேண்டுமென்பதைக் காட்டியுள்ளார்.
அப்போது தான்
பேசத் தொடங்கியிருக்கும் குழந்தை
மரத்தடியின் கீழ் நிற்கிறது
நான் அதன் அருகில் அமர்வேன்
சம்மணமிட்டு
அப்போது வரை
பேசிக் கொண்டிருந்த
என் சொற்ளையெல்லாம்
துறந்து விட்டு
எதிரெதிரே
பந்து பிடித்து
விளையாட்டு
அது கொடுக்கும்
சொல்லை
அதனிடம் அதனிடம்
தூக்கிப் போட்டு
இத்தொகுப்பின் சிறப்பென விளங்கும், மனதை சிறகின்றி பறக்க வைக்கும் கவிதைகளுக்கு மிகப் பொருத்தமானவை கீழ்காணும் கவிதைகள். ஆற்றும்போது நறுமணம் கமழும் ஆவி பறக்கும் காஃபியைப் போல அனல் பறக்கும் வெயில் காலத்தையும் ஆற்றி, அருந்தும் பதத்மிற்கு தரவல்ல ஒரு மாஸ்டர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
காஃபி ஆற்றும்போது
நறுமணக்கிறது
காற்று
வெயில் காலத்தை
ஆற்ற
ஒரு மாஸ்டர் தேவை
****
வாசல் தெளிப்பவள்
மழையாக்குகிறாள்
நீரை
வாளி வகுப்பறைக்குள்
இறுக்கமாக அமர்ந்திருந்தவை
இப்போது தனித்தனியாக
விளையாடச் செல்கின்றன
வாளி நீரை மழையாக்கி விளையாட அனுப்புபவளைக் கண்டு உற்சாகம் கொள்ளும்போதே இந்த மழைத்துளிகள் போலவே வீட்டறைகளிலும் வகுப்பறைகளுக்குள்ளும் அடைந்துகிடக்கும் பிள்ளைகளும் உற்சாகமாக விளையாடும் காலம் வரவேண்டுமே என மனம் ஏங்குகிறது.
நிறைவாக இத்தொகுப்பின் முதன்மையான கவிதையென நான் கருதும் கவிதை.
ஒரு பூக்கடையை
முகப்பெனக் கொண்டு
இந்த ஊர்
திறந்து கிடக்கிறது
பூக்கடைக்காரி
எப்போதும் போல்
வருகிறாள்
பூக்களைப் பின்னுகிறாள்
கடையைத் திறப்பதாகவும்
கடையை மூடுவதாகவும்
சொல்லிக்கொண்டு
ஊரையே திறக்கிறாள்
ஊரையே மூடுகிறாள்
தன் பூக்களின் வண்ணங்களாலும் வாசத்தாலும் மலர்வினாலும் ஊரையே உயிர்தெழவும் உறங்கவும் வைக்கிறாள் பூக்காரி. அவள் வரவில்லையென்றால் ஊர் திறக்கப்படாமலேயே கிடக்கக்கூடும். மதார் இக்கவிதைகளின் எளிய காட்சிகளின் மூலம் வாசிப்பவர்களின் உள்ளத்தை எடையற்று மலரவைக்கிறார். இக்கவிதைகளை வாசிக்காதவர்கள் எடையற்றுப் பறப்பதை அறியாமலேயே வாழக்கூடும்.
குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் மதார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
கா. சிவா