தொழில்நுட்பம்

”உங்க எக்ஸ்ரேயிலே விலாவெலும்பு உடைஞ்சது தெரிஞ்சது. ஃபோட்டோஷாப்லே அதை ஒட்டி சரிபண்ணிட்டோம்”

நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்.எங்களூரில் தொழில்நுட்பமும் சாத்தானும் இணையாகக் கருதப்பட்டன. பூச்சிமருந்து அடிக்கும்போது அந்த பம்பை தரையில் வைத்த அந்தோணி அது ஸ்ஸ்ஸ் என பின்னால் நகர்வதை கண்டு அஞ்சி ஓடி சர்ச்சுக்குப் போய் கதற ஃபாதர் செறியான் ஃபிலிப் வந்து அந்த பம்புக்கு முன்னால் ஜெபம் செய்து சாத்தானாகிய கொடிய பாம்பை துரஅத்தி அவன் அச்சத்தை தணித்த கதையெல்லாம்கூட உண்டு.

நானே உயர்தர நைலான் உடையை ரேசர்பிளேடால் கிழிக்க முடியாது என்று நினைத்து முயன்று, தொடைவரை அதை கிழித்து ,மனமுடைந்து அழுதிருக்கிறேன். அதை உருக்கி ஒட்டிவிடலாம் என முயன்று, ஒருகால் முழுக்க சுருங்கி நாற வைத்திருக்கிறேன். அதை கைப்பிடித் துணியாகப் பயன்படுத்தலாமென முயன்ற எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா செம்புதவலையில் அது உருகி ஒட்டிக்கொள்ளச்செய்து பின்னர் சட்டுவத்தால் சுரண்டி எடுக்கவேண்டியிருந்தது.

”ஆ! மனுஷப்பண்பாட்டோட அடையாளம் தெரியுது!”

அப்படிப்பட்ட நான் நேராக தொலைபேசித் தொழில்நுட்பத்தை சென்றடைந்தேன். அதுவரை நான் தொலைபேசியை காதிலேயே வைத்திருக்கவில்லை. பல இடங்களில் அதைக் கண்டதுண்டு. ஆனால் அதை எடுத்துப் பேச தைரியம் வந்ததில்லை. ஆகவே நான் பணியாற்றிய அலுவலகத்தில் முதல்நாள் ஜேஇ ஃபோனை எடுத்து காதில் வைக்கச் சொல்லி “என்ன சத்தம் கேக்குது?”என்றபோது “பூனை தூங்குற சத்தம்” என்றேன்.

சற்றுநேரம் பிரமித்தபின் “சரி, அப்டீன்னா அப்டி”என்றார். “அதுக்குப்பேருதான் டயல்டோன். அது இருந்தாத்தான் ஃபோனிலே கனெக்சன் இருக்குன்னு அர்த்தம்”. அவ்வாறு நான் பழைய ஸ்டிரௌஜர் தொழில்நுட்பத்திற்குள் சென்றுசேர்ந்தேன். டெல்லியில் இருந்து கம்பிவழியாகவே காசர்கோடுவரை எப்படி பேசமுடியுமென்பதை கண்டுகொண்டேன்.

”கண்ட்ரோல் ரூம்! இந்த கிரகத்திலே தண்ணி இருந்ததுக்கான தடையம் இருக்கு”

அன்றுமின்றும் தாங்கள் ஓர் உயர்தொழில்நுட்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஊழியர்களை நம்பவைப்பது நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறது. இன்று கணினிநிரலாளர்களை பொறியாளர்கள் என்று சொல்லி நம்பவைத்திருப்பதுபோல அன்று எங்களையெல்லாம் தொலைபேசி இணைப்பாளர்கள் என நம்பவைத்தனர். “வி கனெக்ட் பீப்பிள்” என்ற தற்பிரகடனம் அத்தனை உயர்வானதல்ல என்பதை பல ஆண்டுகளுக்குப் பின் அதை ஒரு பைம்பீகர் [பிம்ப் என்பதன் சம்ஸ்கிருத வடிவம்] சொல்வது வரை அறிந்திருக்கவில்லை.

அன்று ஃபோன் என்பது அரிதினும் அரிது. பெரும்பாலானவர்களுக்கு ஃபோனில் பேசத்தெரியாது. அதைக் கண்டதுமே கூப்பாடுபோடுவார்கள். பெரும்பாலான பேச்சுக்களில் எண்பது சதவீதம் வரை ஹலோ என்ற சொல்தான் இருக்கும். எஞ்சிய இருபது சதவீதத்தில் பாதி ‘கேக்கல்லே”என்பதாக இருக்கும்.

”நான் கூகிளிலே டயக்னைஸ் பண்ணிட்டேன் டாக்டர். செகண்ட் ஒப்பினியனுக்காகத்தான் வந்தேன்”

மத்திய அமைச்சராக ஆன ஒருவருக்கு ஃபோன் வேலைசெய்யவில்லை. பலமுறை சரிசெய்தாலும் அவர் அது வேலைசெய்யவில்லை என்று சொல்லி கோபித்துக்கொண்டார். ஜெனரல் மானேஜரே நேரில் சென்றார். ஃபோன் வேலைசெய்தது.

“ஒரு முறை டயல்செய்து பேசிப்பாருங்கள் சார்” என்று ஜெனரல் மானேஜர் சொன்னார். அவர் டயல்செய்தார். அதைப்பார்த்தபோதுதான் விஷயம் புரிந்தது. அவர் ரிசீவரை ஸ்டாண்டிலிருந்து எடுக்காமலேயே டயல் செய்தார். அதன்பின் ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.

”உங்க மூளை ஏகப்பட்ட பாஸ்வேர்டாலே கிளாட் ஆகியிருக்கு”

அதன்பின் சலிப்புடன் சொன்னார். “சாலையில் கார்கள் ஓடும் சத்தம் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே டெலிபோன் எக்ஸேஞ்சில் சன்னல்களை திறந்து போட்டிருக்கிறீர்கள்!”

ஜெனெரல் மானேஜரால் உண்மையைச் சொல்லமுடியவில்லை. ”இருங்கள் சார், நான் டயல் செய்கிறேன்” என்று டயல் செய்தார். அதை அமைச்சர் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குப் புரிந்துவிட்டது.

“கிடைக்கிறது சார்” என்றார் ஜெனெரல் மானேஜர்

“சரி, பார்க்கிறேன்” என்றார் அமைச்சர்

கண்களைச் சந்திக்காமல் அவர்கள் விடைபெற்றனர். கண்கள் சந்தித்திருந்தால், அரைத்துளி சிரிப்பு ஜிஎம் கண்ணில் எஞ்சியிருந்தால் வேலை போயிருக்கும்.

”அந்தக்காலத்திலே இருந்த நியூஸ்பேப்பர்ஸ் எல்லாம் எவ்ளவு சௌகரியமான டெக்னாலஜி!”

ஆனால் தொழில்நுட்பர்கள் எப்போதும் தொழில்நுட்பர்கள்தான். நான் காசர்கோட்டில் வேலைபார்த்தபோது லைன்மேன் கே.கே.வி நாராயணன் எக்ஸ்ரே எடுக்கப்போனார்.அந்த  இயந்திரம் நின்றுவிட்டது. ஏதோ பிரச்சினை.

சட்டென்று எழுந்து ஸ்க்ரூ டிரைவரை எடுத்து அதை கழற்றிவிட்டார். அங்கிருந்து ஃபோனில் அழைத்து கண்ட்ரோல் ரூமிலிருந்த டெக்னீஷியனிடம் “ஒரு ரிங் குடுங்க,செக் பண்னணும்” என்றார்.

“எந்த நம்பர்?”

“நம்பரில்லை, இது எக்ஸ்ரே மிஷின்”

“அடப்பாவி, அது டெலெபோன் இல்ல. அதுக்கு ரிங் குடுக்க முடியாது”

“டயல்டோன் இருக்கே!” என்றார் கேகேவி.

“டயல்டோன் பூனையிலேகூடத்தான் இருக்கும். வைய்யா ஃபோனை”

”நான் அனுப்பின ஈமெயில் எல்லாம் பாத்துட்டீங்களான்னு கேட்டு ஒரு லெட்டர் அனுப்பியிருந்தேனே, கிடைச்சுதா?”

மூன்றரை மணிநேரம் கழித்து வந்த கே.கே.வி நாராயணன் சொன்னார். “சரியாக்கி குடுத்திட்டுதான் வர்ரேன்”

“என்ன பண்ணினே?”

“டயல்டோன் வரவழைச்சேன்”

எப்படி என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் மூன்றுமாதம் கழித்து டாக்டர் டெலெபோன் எக்ஸேஞ்சை கூப்பிட்டார் “எக்ஸ்ரே மிஷின் ஓடலை. ஆளனுப்புங்க..”

“சார், இது டெலெபோன் எக்ஸ்சேஞ்ச்… நாங்க டெலெஃபோன்தான் ரிப்பேர் செய்வோம்”

“போனவாட்டி உங்க ஆள்தானே சரி பண்ணினான்” என்றார் டாக்டர் “இப்ப டயல்டோன் இல்ல. சரி பண்ணி குடுங்க!”

“அவன் லூசு சார். எப்டியோ தற்செயலா சரிபண்ணிட்டான்…”

“அவனை அனுப்புங்க… நான் இப்ப கண்ணூருக்கு சொன்னா அவங்க அடுத்தவாரம்தான் ஆளனுப்புவாங்க”

“அதெல்லாம் ஆளனுப்ப முடியாது சார்… இது டெலெஃபோன் எக்ஸேஞ்ச்”

”மூணு சான்ஸ் இருக்கு. நீங்க செத்தாச்சு, இல்ல கர்ப்பமா இருக்கீங்க, இல்லேன்னா  எங்க கம்ப்யூட்டர் ஹேக் ஆயிருக்கலாம்.”  

ஆனால் பதினைந்து நிமிடத்தில் டிவிஷனல் ஆஃபீசரே கூப்பிட்டார். “யார்யா அது கம்ப்ளெயிண்ட் செக்‌ஷனிலே? டாக்டரோட எக்யூப்மெண்ட் டயல்டோன் வரலேங்கிறார். சரிபண்ணி குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களா?”

“சார், அது ஃபோன் இல்லை. எக்ஸ்ரே மிஷின்”

“ஓ” என்றார் டி.இ. நடந்ததைச் சொன்னபோது “டாக்டர் ஒரு அச்சு பிடிச்ச ஆள். ஆனா என் மனைவிக்கு அவர்தான் பாக்கிறது. கேகேவியையே அனுப்பி வையுங்க. அவன் என்னமாம் கொண்டாடட்டும்”

கே.கே.வி. வழக்கமான டூல்கிட்டுடன் போனார். நான்குமணிநேரம் கழித்து ஃபோனில் சொன்னார். “டார், டாக்டர் எக்யுப்மெண்ட் ஓக்கே. ஓடுது.ஃபால்ட் ரெக்டிஃபைட். எழுதிக்கிடுங்க”

“டாக்டர் கிட்டே குடு”

டாக்டர் மலர்ச்சியுடன் “ஓடிட்டிருக்கு. தேங்க்ஸ். இதை நான் மேலே கூப்பிட்டுச் சொன்னாத்தான் செய்றீங்க…பேட் செர்வீஸ்” என்றார்.

“சார், இது டெலெஃபோன் எக்ஸேஞ்ச். அவன் என்ன பண்றான்னே எங்களுக்கு தெரியாது”

“சரியாக்கிட்டானே? அப்றம் என்ன?”

”என்னோட ஸ்மார்ட்போனும் ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட் வாட்சும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டதை நான் கேட்டேன். என்னைய ஸ்டுப்பிட்னு சொல்லி சிரிச்சுக்கிட்டுதுங்க”

மறுநாள் கேகேவியை எல்லாரும் சூழ்ந்துகொண்டு கேட்டனர். ‘என்னடா செஞ்சே? எப்டி ரிப்பேர் பண்ணினே?”

“டயல்டோன் வரவழைச்சேன்”

“அதான் எப்டி?”

“எனக்கு சொல்லத்தெரியாது. இப்ப வந்தீங்கன்னா அதை கழட்டி டயல்டோன் வராம ஆக்கி மறுபடி வரவழைச்சு காட்டுறேன்”

ஆனால் கேகேவியின் நண்பன் குமாரனுக்கு ஆச்சரியமே இல்லை.  “அவன் ரத்தமே டெலெபோன் ரத்தம்சார். பதிமூணு வயசிலே மஸ்தூரா வந்தவன். இருபத்தேழு வருச சர்வீஸ்… இந்திய டெலெபோன் சர்வீஸே அவன் மேலேதான் உருண்டு வந்திருக்கு…. போன வருஷம் வீட்டு கிளாக்கிலேயே டயல்டோன் வரவழைச்சிட்டான் சார்!”

”ஒயர்லெஸ் தொழில்நுட்பம் ரொம்ப அட்வான்ஸா போய்ட்டுதுன்னு நினைக்கிறேன்”

அத்தனைபேரும் ‘உயர்தொழில்நுட்ப’ உலகில் வாழ்ந்துகொண்டிருந்த அந்த பொன்னாட்களில் நாங்கள் கண்ட சிக்கல் என்னவென்றால் எவருக்கு எந்த மனச்சிக்கல் வந்தாலும் உயர்தொழில்நுட்பம்தான் அதற்குக் காரணமாக அமைந்தது என்பதுதான். ஃபோன்மணி ஓயாமல் அடிப்பது, ஃபோனை எடுத்தாலும் அடிப்பது, காதுக்குள் போன் கேட்டுக்கொண்டே இருப்பது  பலருக்கும் உருவாகும் பிரச்சினை.

வீட்டிலிருக்கும் அயர்ன்பாக்ஸ், ரேடியோ எல்லாமே மணியடிக்க ஆரம்பிப்பது அடுத்த கட்டம். சட்டிபானைகள் மணியடிப்பது முற்றுதல். அவற்றில் எல்லாம் அழைப்புகள் வர ஆரம்பிக்கும்போது கைமீறிப் போயிருக்கும்.சாதாரணமாக அப்போதுதான் மனைவியர் ஏதோ சிக்கல் இருக்கிறது என உணர்ந்து அழைத்துக்கொண்டு வருவார்கள்.

“டெக்னிக்கலா பாத்தா இந்த விமானம் பறக்க வாய்ப்பில்லை”

ஆர்.எஸ்.ராமன் மனச்சிதைவுக்கு ஆளானபோது அவரிடம் மைக்ரோவே டவர்களே நேரடியாக தொடர்பு கொள்ளத் தொடங்கின. அவருடைய இரு காதுகளும் ஆண்டனாக்களாக மாறி சிக்னல்களைப் பெற்றுக்கொண்டன. சிக்னல்களுக்கேற்ப அவை திரும்பவும் தொடங்கின என்று அவர் சொன்னார்.

இந்தப்பிரச்சினைகளை தோழர் நந்தகுமார்தான் ‘டீல்’செய்வார். ஆனால் ராம்குமாருக்கு வந்த பிரச்ச்னையை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவனிடம் பேசிக்கொண்டிருந்தது டிவி டவர்.

“புது டெக்னாலஜி அழிவைத்தான் கொண்டுவரும்! சக்கரம் ஒழிக!”

மங்களூர் உளமருத்துவர் கிருஷ்ண பட் மிக எளிதாக ராமனை குணப்படுத்தினார். “சஜஷன் தெரப்பிதான்… அப்டியெல்லாம் மைக்ரோவேவ் டவர் நேரடியாக மனிதனிடம் தொடர்புகொள்ளாது, அது மனப்பிரமை என்று ராமனை நம்பவைத்தேன்” என்றார்

“ஆனால் அவர்தான் எதையும் கேக்கிற நிலைமையிலே இல்லியே” என்று நான் கேட்டேன்.

“நான் அந்த மைக்ரோவ் டவர் வழியாகத்தான் தொடர்பு கொண்டு அவருக்கு அதையெல்லாம் சொன்னேன்” என்றார் கிருஷ்ணபட் “அவ்ளவு ஈஸியா நேரடியா உள்ள போகிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கு. இனிமே ஹிப்னாட்டிசம், சைக்கோ அனலிஸிஸ் எல்லாம் வேஸ்ட்”

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்
முந்தைய கட்டுரைசூமுலகம்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா