விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்

விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

அன்புள்ள  ஜெயமோகன்  அவர்களுக்கு

கடந்த ஏப்ரல் மாத நற்றுணை கலந்துரையாடலுக்கு பிறகு விஷ்ணுபுரம் நாவலை இரண்டாம் முறை வாசித்தேன். அந்த அனுபவத்தை உங்களிடம் முடிந்த வரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் :)

ஸ்ரீபாதம் 

முதலில் விஷ்ணுபுரநகர், கோவில், மூல விக்ரகம், அதன் கோபுரங்கள் மற்றும் சோனா நதியின் வர்ணனையே திகைப்பூட்டுவதாக இருந்தது. அதை படித்துவிட்டு சிறுது நேரம் நகரின் விரிவை கற்பனை செய்ய முயன்றேன். அடுத்ததாக கதையில் உள்ள பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. பிங்கலன், திருவடி, சங்கர்ஷணன், சாருகேசி, லலிதாங்கி, லட்சுமி, வல்லாளன், ஆழ்வார், வீரநாராயணர், நரசிங்கர் என எத்தனை விதமான கதாபாத்திரங்கள்!!  இவர்களில் குறிப்பாக சிந்திக்கும் மனது உடையவர்களான பிங்கலன் மற்றும் சங்கர்ஷணனின் அலைக்கழிப்பை மிக நன்றாக உணர முடிந்தது. இவை தவிர்த்து சிரவண மகாபிரபு மற்றும் அக்கார அடையின் வாடையை வெறுக்கும் வீமன் ஆகியோரும் நினைவில் நீங்காமல் உள்ளனர்.  ஆனால் வீரன் யானையின் மரணம் தான் வலி மிகுந்த அனுபவமாக இருந்தது.

அடுத்ததாக இவ்வளவு பெரிய நகரின் நிர்வாகத்தில் உள்ள அரசியல் விளையாட்டு மிகத்தெளிவாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. சூர்யதத்தருக்கும் பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் ஈகோ போர், வல்லாளனின் தந்திரங்கள், அதில் அவன் அடையும் பின்னடைவு, திருவடி ஆழ்வார் ஆன பின்பு அவனை(அவரை) பயன்படுத்த நினைக்கும் பீதாம்பரம் மாமா என அந்த விளையாட்டு நீள்கிறது.

மேலும் இதில் உள்ள mystical ஆன அம்சம் பெரும் வசீகரிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நகர் வாசிகளே தாங்கள் ஒரு பாணன் சொல்லும் கதையின் ஒரு பகுதி என அவ்வப்போது உணருவது. அந்த மூல விக்கிரகம் பற்றிய ஒவ்வொரு கதையுமே பெரும் பரவசத்தை அளித்தது. சித்திரை, சிற்பி ப்ரசேனர் மற்றும் மஹாகாஷ்யபர் ஆகியோரின் ஆளுமையில்  உள்ள மர்மம் அவர்கள் மீது பெரும் ஈர்ப்பை உண்டுபண்ணியது. மஹாகஷ்யபர்  எப்படி அவ்வளவு ஆண்டு வாழ்கிறார் ? அவருடன் ஒட்டி இருக்கும் அந்த இளைஞனுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன.

கௌஸ்தூபம் 

இந்த பகுதியில் வரும் ஞானசபை விவாதத்தின்  மூலம் நமது மரபில் உள்ள பல்வேறு தரிசனங்களை அறிய முடுந்தது. “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ” நூலில் படித்த விஷயங்கள் இந்த விவாதத்தின் மூலம் இன்னும் தெளிவு பெற்றது. அத்துடன் பௌத்த தரிசனம் பற்றிய புரிதலும் ஏற்பட்டது. ஒவ்வொரு ஞானகுருவும் தன் தரிசனத்தை முன்வைக்கும் போது அந்த தரிசனம் தன் அளவில் சிரியானது என்றே என்னால் உணர முடிந்தது.

ஊட்டுப்புரை நிகழ்வு பற்றிய வர்ணனை பெரும் புன்னகையை வரவழைத்தது. எனது சொந்த அனுபவத்தில் இருந்து அது உண்மை தான் என்பதை உணரவும் முடிந்தது. ஞானசபையில் உள்ள பலருக்கு அந்த விவாதங்கள் புரியாமல் இருப்பதையும் அவர்களின் அகங்காரத்தையும் நீங்கள் குறிப்பிடாமல் இல்லை.

சித்தனுக்கும் காஷ்யபனுக்கும் உள்ள குரு சீட உறவு நெகிழ்வூட்டுவதாக இருந்தது. அதில் எவ்வளவு அன்பு !! குட்டி காஷ்யபனை உங்கள் வர்ணனைகள் மூலமாக கற்பனை செய்து பார்ப்பதே மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த நடனம் மற்றும் அதை ஒட்டிய சித்தனின் பாடல் பெரும் கிளர்ச்சியை அளித்தது.

மணிமுடி 

இந்த பகுதியில் நீங்கள் படிப்படியாக அந்த பெரும் பேரழிவை நோக்கி இட்டுச்சென்ற விதம் மிகவும் கவர்ந்தது. விஷ்ணுபுரநகர் முழுக்க வஞ்சகமும், கசப்பும், சோர்வும் நிறைந்த மக்களே உள்ளனர். ஊரே பெரிய இடிபாட்டுக் குவியலாய் கிடக்கிறது. அந்த பாம்பு இறக்கும் விதமும், பறவைகள் கூட்டமாக கோட்டை சுவற்றில் மோதுவதும் பிறகு அவற்றின் உடலை மாபெரும் மீன்கள் உண்பதும் ஒரு பயம் கலந்த mystical அனுபவமாக இருந்தது. விஷ்ணுபுரத்தின் கடைசி மஹாவைதிகன் பற்றிய சிற்பமும் அந்த வினோத மிருகம் பற்றிய தொன்மமும் அந்த அனுபவத்தை மேலும் விரிவாக அளித்தது.

இந்த நிலையிலும் தேடல் கொண்டவர்கள் நகரில் இருக்கிறார்கள். பத்மன், பாவகன், யோகாவிரதர் போன்றோர் பிங்கலனும் சங்கர்ஷணனும் அனுபவித்த அதே அலைக்கழிப்பை அனுபவிக்கிறார்கள். அவர்களின் உரையாடல் மூலமாக தொன்மம் உருவாகும் சிக்கலான முறையையும் உணர முடிந்தது. சூர்யதத்தர் தொன்மத்தால் தெய்வ அம்சம் நிறைந்தவராக சித்தரிக்கப்படுகிறார். கோபிலர் சங்கர்ஷணன் மற்றும் திருவிக்ரமரின் காவியங்கள் காலப்போக்கில் ஒன்றாகின்றன. அத்ரி சுமந்திரர் போன்றோர் பின்னாளில் பெரும் ஞானாசிரியர்கள் ஆனது பெரும் வியப்பை அளித்தது.

மனித மனத்தின் நுண்ணிய தளங்களையும் மிக அழகாக சித்தரித்திருந்தீர்கள். இறக்கும் தருவாயில் மஹாவைதிகருக்கு வேததத்தன் மீது அன்பும் பத்மன் மீது கசப்பும் எழுவது, பாட்டியை கைவிட்டுச்செல்லும் ப்ரியையின் குடும்பம், திருவடி மடத்தின் சீடனின் ஒரு வித வஞ்சகம் கலந்த விவேகம் ஆகியவை உதாரணங்கள். ஆனால் நீலி மட்டும் உயிர் துடிப்புடன் இருக்கிறாள். இறுதியில் அவளே தெய்வம் ஆகி தன் தோழிகளை மீட்கிறாள்.

நாகர்கோவிலில் மே மாதம் நிலவிய வானிலை மற்றும் ஊரடங்கினால் நிலவிய அமைதி இந்தப்பகுதியை படிக்க மிக உகந்ததாய் இருந்தது. கடைசி chapter ஐ முடித்ததும் பெரும் வெறுமையே மனதில் நிறைந்தது. ஆனால் அடங்கலில் கிரீஷ்மன் பாணன் மீண்டும் கதை சொல்ல ஆரம்பித்ததும் எல்லாம் கால சுழற்சியின் ஒரு பகுதியே என்ற ஆசுவாசமும் ஏற்பட்டது.

விஷ்ணுபுரம் பற்றிய உரையாற்றிய சீனு அவர்களுக்கு மிக்க நன்றி. முதல் வாசிப்பை விட இரண்டாம் வாசிப்பில் நிறைய கிரகிக்க முடிந்ததற்கு அவரின் உரையே காரணம். மே மாத கலந்துரையாடலுக்கு பிறகு கொற்றவையை இரண்டாம் முறை வாசிக்க எத்தனித்துள்ளேன். விரைவில் வெண்முரசையும் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த முறை  கிருஷ்ணன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. ஆனால் அதை விட மிக பிரம்மாண்டமான ஸ்ரீபாத விழாவை அனுபவிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி.Lockdown முடிந்தவுடன்  திருவட்டாறு கோவிலுக்குச்செல்ல வேண்டும்!!

அன்புடன்

கார்த்திக் 

கிருஷ்ணன்கோவில், நாகர்கோயில்

விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்

விஷ்ணுபுரம் -கடிதம்

விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்

முந்தைய கட்டுரைஒளி, நீலம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகைச்சுவை- கடிதங்கள்