’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021
திருநெல்வேலி வாசிகள் எப்போதுமே வெயில் பிரியர்கள். நான் ஒருமுறை போத்தீஸ் சென்ற போது அங்கே லிப்ட் இயக்குபவர் இப்படி புலம்பிக் கொண்டிருந்தார், “ஒரு வாரமா ஒரே மழ ஒன்னும் ஓடல பாத்திக்கிடுங்க… இன்னைக்கி தான் சத்த வெயிலு தலயக் காட்டுது” என்றார். இந்நகரின் வாழ் மக்களின் மனநிலையை சொல்லும் வாக்கியம் அது. இங்குள்ளவர்கள் வெயிலில் மட்டும் தான் சமநிலையில் வாழப் பழகியவர்கள் சிறு மழையோ, பனியோ அவர்களின் உடல் அல்லது மனதின் சமநிலையை குலைத்துவிடும்.
இங்குள்ள சிறுதெய்வங்கள் பலவற்றின் பெயரில் அதனைக் காணலாம். எங்கள் குல தெய்வத்தின் பெயர் ‘வெயிலுகந்த சாஸ்தா’. அதே போல் வெயிலுகந்த அம்மன், வெயிலுந்த மாடன் என பல சிறு தெய்வங்கள் இங்கே உண்டு. இவர்கள் அனைவரும் வெயிலை தாங்கியே நிற்பர். கோவிலுக்கு பெரும்பாலும் மேற்கூரை இருக்காது. அவர்களுக்கான பூஜை உச்சி மதியத்திலேயே நடக்கும். கால் சுட சுட சாஸ்தா கோவிலின் வாசலில் நின்ற என் குழந்தைப் பருவ நினைவுகள் மதார் கவிதைகளை வாசிக்கையில் எழுகிறது. வெயில் சுட சுட தான் ஆனந்தம், அந்த அனலோனின் தித்திப்பும், திகிலும் அதன் உக்கரத்திலேயே அமைந்திருக்கிறது.
கடும் வெயில் காலம்
முகம் கழுவுதல் என்பது
முகம் கழுவுதலாய் இருப்பதில்லை
முகத்திற்குத் தண்ணீர் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
மீண்டும் ஊற்றினேன்
வெயில் கழுவினேன்
முகம் கழுவ இவ்வளவு நேரமா
என்ற வெளிக்குரல்
அது அறியாது
நான் வெயில் கழுவி
முகம் தேடும் திகிலை.
யோசித்துப் பார்த்தால் தமிழர்கள் குறிப்பாக திருநெல்வேலி வாசிகள் வெயிலோடு உறவாடியது போல், மழையோடோ, பனியோடோ உறவாடியிருக்க மாட்டார்கள். எங்களுக்கு வெயில் என்பது ஒரு விளையாட்டு, தினம் தோறும் உடன் வரும் தோழி.
மேலே சொன்ன கவிதையில் முகம் தேடும் திகில் பின்னால் வரும் மதார் கவிதையில் வேறொன்றாக மாறுவதைக் காணலாம்.
நதி நீரில் ஒரு இலை
குளிக்கத் துவங்கும்போது
நதி நீர் குளியல் நீர்
ஆகிறது
துவட்டும் வெயிலுக்கு
இந்த இரகசியம்
தெரியாது
வெயில் பறந்து பறந்து
குளியல் நீர்த் தொட்டிகளை
எங்கெங்கும் தேடுகிறது
ஆழ சமுத்திரமுங்கூட
வெயில்
நீராட்
அனுமதிப்பதில்லை
ஒரு வாளி நிறைய
நீர் எடுத்துக் கொண்டு
உதடு நிறைய
புன்னகை எடுத்துக் கொண்டு
வெயில் மீது வீசினேன்
கிடைமட்டமாய்ப் பறந்து
தரையில் போய் விழுந்தன துளிகள்
மண்ணை எடுத்து
கையில் வைத்துப் பார்த்தேன்
வெயில் தும்மிய ஈரம்
மண்ணை விட்டுப் போகவே இல்லை
உதட்டில் புன்னகையை எடுத்துக் கொண்டு வெயில் மீது வீசினேன் என்ற வரிக்கு நிகராக வந்து நிற்கிறது இக்கவிதையின் இறுதி வரியில் வெயில் தும்மிய ஈரம்.
மதாரின் இக்கவிதையிலும், பிறக் கவிதைகளிலும் தென்படும் இன்னொரு அம்சம் குழந்தையின் கள்ளமின்மை. அந்த கள்ளமின்மையே மேலே வெயிலை அழகாக்குகிறது. பிறிதொரு கவிதையில் வீட்டின் கதவாய் வந்து நின்ற மரத்தை,
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டோம்
ஞாபகப்படுத்திச் சொன்னேன்
‘மரம் தானே நீங்க’
கதவு சொன்னது
‘ஏ! குட்டிப் பயலே’
வேறொரு கவிதையில் அப்போது பேசத் தொடங்கிய குழந்தையின் குழந்தைமை நோக்கி செல்லும் நானின் சொற்கள்,
அப்போது வரை
பேசிக் கொண்டிருந்த
என் சொற்களையெல்லாம்
துறந்துவிட்டு
எதிரெதிரே
பந்து பிடித்து
விளையாட்டு
அது கொடுக்கும்
சொல்லை
அதனிடம் அதனிடம்
தூக்கிப் போட்டு
இறுதியாக அந்த கள்ளமின்மை தெய்வச் சிலையின் புன்னகையில் வந்து அமர்கிறது,
பிரார்த்திக்கும் அம்மாவின்
முந்தானையைப் பிடித்திழுக்குது குழந்தை
கண்ணாமூச்சி விளையாட்டின்
மூன்றாம் நபர் போல்
கடவுள் உதட்டில் கை வைத்துப் புன்னகைக்கிறார்
குழந்தை புன்னகைத்தபடியே கடவுளைப் பார்க்கிறது
அம்மா கண் திறக்கவும்
கடவுள் விளையாட்டிலிருந்து
காணாமல் போகிறார்.
இந்த காணாமல் போன கடவுளையே மதார் தன் ஒவ்வொரு கவிதையிலும் தேடி விரிகிறார். கைகளால் கண்ணைப் பொத்தி அதனோடு கண்ணாமூச்சி விளையாடிப் பார்க்கிறார். அந்த கள்ளமின்மையே அவர் கவிதையை அழகாக்குகிறது.
மதாருக்கு என் வாழ்த்துக்கள் !
நன்றி,
என். நிரஞ்சனா தேவி
வெயில் பறந்தது தபாலில் பெற :