ஒரு முகம், ஒரு குரல்.
அன்பு ஜெயமோகன்,
உங்களின் ஓஷோ உரையை மீண்டும் கேட்கத் துவங்கி இருக்கிறேன். முதன்முறை மூன்று அமர்வுகளில் அவ்வுரையை வெகுநிதானமாய்க் கேட்டிருக்கிறேன் என்றாலும், ஓஷோவின் கீதை உரையை வாசித்து விட்டு மீண்டும் கேட்கும் போது அது இன்னும் விரிவான அர்த்தம் பெறுவதாகத் தோன்றுகிறது. விரைவில், அவ்வனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன், பார்ப்போம்.
சமீபமாய் நான் ’அதிர்ச்சி’ அடைந்தது அருண்மொழி அக்காவின் வெண்முரசு ஆவணப்பட உரையைக் கண்டும், கேட்டும்தான். ஒரு நிகழ்த்துகலைஞர் போல சரளமான உடல்மொழி. எங்கும் தயக்கமின்றி புன்னகையுடனான உரையாடல். ஓயாமல் படபடத்துக் கொண்டிருக்கும் காற்றைப் போன்ற உற்சாகம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். சில அமர்வுகளில் படமாக்கப்பட்டிருந்தாலும் அக்காவின் முகத்தில் அலுப்பே இல்லை. ஓவியர் ஷண்முகவேலின் சித்திரங்கள் இன்னும் அழகு.
மகாபாரத மறுஆக்கம் என்பதாகச் சொல்லப்படும் வெண்முரசை அரசியல் இந்துத்துவாவுக்கு அல்லது சங்பரிவார் அமைப்புகளுக்கு வலு சேர்க்கும் ஆதரவுத்தரப்பாகவே பெரும்பாலான இலக்கியவாதிகளும், திறனாய்வாளர்களும் கருதுகின்றனர். அதனால்தான், யாரும் அதை எதிர்மறையாகக் கூட விமர்சிக்கவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களை பொதுவெளியில் பார்வைக்கு வைத்திருக்கும் ஒரு சமகால எழுத்தாளரைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதில் தவறில்லை; அவரின் படைப்புகளை ஒதுக்குவதில் வருத்தமும் இல்லை. பிழைபடப் புரிந்து கொள்வதும், அப்புரிதலை வருந்தலைமுறைக்கு ஆவேசமாகக் கடத்துவதும்.. கடந்து போய்த்தான் தீர வேண்டி இருக்கிறது.
சமீபமாய், ஒரு தோழரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் உங்கள் படைப்புகளை வாசித்திருக்கிறார். வெண்முரசைப் படிக்க முயன்று கொண்டிருக்கிறார். மகாபாரதம் என்றாலே அரசியல் இந்துப்பிரதி என பலகாலம் நம்பி வந்ததால் பாத்திரங்களின் பெயர்களைக் கண்டாலே வெறுப்பு வருகிறது, மேற்கொண்டு வாசிக்க முடிவதில்லை என்றார். அதுதான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் என நான் அவரிடம் சொன்னேன். மேலும், ”அதற்காக நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நம் சிந்தனை முறைமையைச் சிறிதுகாலம் வழக்கத்தில் இருந்து கொஞ்சம் மாற்றி வைத்து அதுபோன்ற ஆக்கங்களை வாசிக்கப் பழகுதல் நலம் அல்லது அவற்றைக் குறித்த அறிமுகத்தையாவது பெறலாம். பிறகு அவற்றை ஏற்கலாம் அல்லது தவிர்க்கலாம்” என்றும் சொன்னேன்.
பள்ளிக்காலத்தில் என் சிந்தனை முறைமையை அடியோடு தகர்த்தெறிந்த பெருமைக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. கணித ஆசிரியர் இரா.காளியண்ணன் அவர்களால் பெரியாரின் சிந்தனைகள் சிலவற்றை வாசித்தபோது, என் அப்போதைய சிந்தனை முறைமை குறித்த நடுக்கம் எழுந்தது. அவ்வதிர்ச்சியினால், ஆத்திகனாய் இருந்த நான் நாத்திகனாய் மாறினேன். என்றாலும், திராவிட இயக்கங்களில் உறுப்பினராகப் பங்கு கொள்ளவில்லை. பெரியார் என்னை அதிபுத்திசாலியென நம்ப வைத்தார் அல்லது அவரின் சிந்தனைகள் வழி நான் அப்படி நம்பி இருந்தேன். கோவில்கள், கடவுளர்கள், பிராமணர்கள் போன்றவற்றை ஒழித்துக் கட்டிவிட்டால் தமிழகம் நலமும் வளமும் பெற்றுவிடும் என உறுதியாய் நம்பவும் தலைப்பட்டேன்.
கொடுமையைப் பாருங்கள், பத்தாம் வகுப்பிலேயே தமிழ்த்தேசிய உணர்வு என் சிந்தனை முறைமையைப் புரட்டிப் போட்டது. இரா.காளியண்ணன் அவர்களின் இல்லத்தில் தோழர் தியாகு மற்றும் சுப.வீரபாண்டியன் போன்றோர் ஆறுமணி நேரம் தமிழ்த்தேசியம் குறித்து எங்களுடன் உரையாடினர். அப்போது சுத்தமாய்ப் புரியவில்லை. எனினும், பண்பாடு அரசியல் போன்ற சொற்கள் அவ்வுரையாடலில் அதிகம் புழங்கின. பெரியார் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதான குற்றச்சாட்டு எனக்குப் பிடித்திருந்தது. ஒன்பதாம் வகுப்பில் யாரைத் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடினேனோ, அவரை(பெரியாரை) அதலபாதாளத்திற்கு உருட்டி விட்டேன். சில வருடங்கள் பெரியாரை எதிரியாக நெருக்கமானவர்களிடம் புலம்பிச் சலித்திருக்கிறேன்.
தமிழ்த்தேசிய வெறியும் வெகுநாள் நீடிக்கவில்லை. சித்தர்களின் பக்கம் எட்டிப்பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. கொஞ்ச வருடங்கள் சித்தர் பித்து. தொடர்ந்து பாலகுமாரனும், ஓஷோவும். குறிப்பாக, பாலகுமாரனை வெறித்தனமாக வாசித்தேன். ஒருமுறை, அவரைச் சந்தித்தே ஆக வேண்டும் எனச் சென்னை கிளம்பி விட்டேன். பல்சுவை நாவல் அலுவலகம் சென்று ஆசிரியர் பொன்.சந்திரசேகரைச் சந்தித்து ஆசையைச் சொன்னேன். நாளைக்குக் காலை போகலாம் என்றார். ஏனோ, சந்திப்பு அமையவில்லை. அச்சமயத்தில அதிகம் வருந்தினேன். தலையணைப் பூக்கள், கரையோர முதலைகள், பந்தயப்புறா, அகல்யா, இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள் என மாய்ந்து மாய்ந்து பாலகுமாரனை வாசித்த காலகட்டம் அது. அக்காலகட்டத்தில்தான் பேனா நணபராக கவிஞர் வே.பாபு அறிமுகமானார். இருவரும் பல வருடங்கள் தொடர்ந்து நட்பில் இருந்தோம்.
இவ்விடத்தில் ஒன்றை நினைவூட்ட வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் பெரியார் அறிமுகமான சமயத்திலேயே தமிழ் மொழித் துணைப்பாடநூல் வழியாக அசோகமித்திரனும் வல்லிக்கண்ணனும் அறிமுகமாகி இருந்தனர். அவர்களின் கதைகள் பெரியாரின் சிந்தனையைப் போன்று என்னை ஈர்க்கா விட்டாலும்.. தொடர்ந்து என்னோடு வந்தன. அக்காலகட்டத்தில் விளையாட்டுத்தனமாக அசோகமித்திரனுக்கும், வல்லிக்கண்ணனுக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அவற்றுக்கு இருவரும் பதில் எழுதி இருக்கின்றனர். பெரியார் என் சிந்தனை முறைமையில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு அவர் எதிரிகளை எனக்கு அடையாளம் காட்டியதுதான் என இப்போது ஊகிக்கிறேன். எதிரிகளால்தான் நாம் வீழ்ந்தோம் என்பதான அக்கருத்து தமிழ்தேசிய உணர்வில் இருந்தபோது இன்னும் வலுப்பட்டது. அசோகமித்திரனோ, வல்லிக்கண்ணனோ அப்படி எதிரிகளைக் காட்டவில்லை என்பதோடு கழிவிரக்க மனிதர்களையே கதைகளின் மாந்தர்களாகப் பெரிதும் கொண்டிருந்தனர்.
பல ஆண்டுகள் ஆளுமைகள், சித்தாந்தங்கள் என மாறி மாறிச் சென்றபோதும் அடிப்படையான குறைந்தபட்சத் தெளிவு புலப்படவில்லை. நேர்மாறாக, குழப்பம் அதிகமாகிக் கொண்டே போனது. அச்சமயத்தில்தான் கோவை ஞானி போன்ற விமர்சகர்களின் கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதுவிதமான சிந்தனைமுறைமை ஒன்றை அடைந்தேன். பெரியாரின் சிந்தனைகளை நான் நேரடியாகப் படித்திருக்கவில்லை என்பது உறைத்தது. அதைப்போன்றே பிறர் சிந்தனைகளையும். பெரியாரின் கட்டுரைகளை நேரம் ஒதுக்கிப் படிக்க ஆரம்பித்தேன். வாழ்ந்த காலத்தின் சமூகப்பிரச்சினைகளுக்கு அவர் ஆற்றிய எதிர்வினைகளே அவை என்பது விளங்கியது. மேலும், பெரியார் வாழ்ந்த காலத்தில் பகுத்தறிவுக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. அதனால் பகுத்தறிவு கொண்டு சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் எனும் கருத்து தீவிரமானது. பெரியார் அதைக் கண்மூடித்தனமாக நம்பினார்(ஒரு பக்தன் கடவுளை நம்புவதைப் போல). அதைத் திராவிட இயக்கங்கள் மேலதிகமாய் வளர்த்தெடுத்தன.
பகுத்தறிவுக்கு எதிரானது பண்பாடு என்பதான தொடர் பிரச்சாரத்தை பெரியார் தொடர்ந்து மக்கள் மன்றங்களில் மேற்கொண்டிருந்தார். அதன் பயனாக, நவீன அறிவியல் கோட்பாடுகளும் கண்டுபிடிப்புகளும் கொண்டாடப்பட்டன. பகுத்தறிவுக்குப் பொருந்தாத சமூகப் பண்பாட்டு அசைவுகள் காரணமின்றி எள்ளி நகையாடப்பட்டன. சமூக வாழ்வைப் பகுத்தறிவு மட்டுமே கொண்டே மதிப்பிடும் நவீன மூடநம்பிக்கைக்கு வந்து சேர்ந்தோம். பகுத்தறிதலை, சமூக வாழ்வின் ஏற்றத் தாழ்வுக்கான காரணங்களை ஆராய்வதை ஒருபோதும் நான் குறைகூறவில்லை. பகுத்தறிதலை எப்படியான அளவுகோல் வழியாக பெரியார் மேற்கொண்டார் என்பதே முக்கியம். தெளிவாகச் சொல்வதாயின், சமுகப் பண்பாட்டு இயங்கியலைப் பெரியார் உள்வாங்கிக் கொண்டிருக்கவே இல்லை. அதனால்தான் கோவில், கடவுளர், சடங்குகள் போன்றவற்றின் பண்பாட்டுத் தேவையை அவர் பகுத்தறிய முயலவில்லை. மாறாக, அவர் அவற்றைக் களைகளாகக் கருதி அகற்றிவிடுவதில் தீவிர முனைப்பு காட்டினார்.
பண்பாட்டைப் பகுத்தறிவு கொண்டு மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்பது பெரியார் பாணியில் சொல்வதானால்.. காட்டுமிராண்டித்தனம்; பச்சை அயோக்கியத்தனம். பண்பாட்டைப் புரிந்து கொள்ள பகுத்தறிவு உள்ளிட்ட பல சமூக அறிவியல் காரணிகளைக் கணக்கில் கொள்வது அவசியம். சமூக வாழ்வு இயங்கி வந்த விதத்தை உற்றுக் கவனிப்பது மிகவும் முக்கியம். அதற்காக பெரியாரை முற்றிலும் ஒதுக்கிட மாட்டேன். அவராலேயே ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் அரசியல் தளங்களை நான் அறிந்து கொண்டேன். துவக்கத்தில் அவரே பண்பாட்டின் போதாமையை அல்லது கோளாறுகளைப் புரிந்து கொள்ளும் சிந்தனை முறைமைக்கு என்னைத் தயார்படுத்தினார். இப்போது யோசித்துப் பார்க்கையில், அது தெளிவாகவே தெரிகிறது.
நாம் எங்கு தவறு செய்கிறோம் எனும் இடத்திற்கு வருகிறேன். ஒன்று பெரியாரைக் கொண்டாட வேண்டும் அல்லது தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும். அவரின் சிந்தனைகளை அல்லது அவர் பங்களிப்பைப் பொதுநிலையில் நின்று ஆராய்ந்துவிடக் கூடாது. ஒன்று அவரைப் புனிதனாக்கிக் கோவில் கட்ட வேண்டும் அல்லது அபுனிதனாக்கி தரைமட்டமாக்க வேண்டும். அவரை ஆராய்வதன்வழி ஒருவன் தனிப்பட்டு சமூக வரலாற்று இயக்கத்தை எவ்வகையிலும் தெளிந்து விடக் கூடாது. ஒற்றைப்படையான சித்தாந்த உறுதியில் நாட்டைச் சுடுகாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படும் சங்பரிவார் அமைப்புகளை எதிர்க்கும் முற்போக்கு அமைப்புகளில் பன்முகப்பரிமாணங்களுக்கு இடம் தரும் சித்தாந்தத் தெளிவு இருக்கிறதா? அமைதியாய் யோசித்துப் பாருங்கள்.
ஒரு சமூகம் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று, பண்பாடு. மற்றது, அரசியல். பண்பாடு என்பது சமூகத்தின் அகவுணர்வு. அரசியல் என்பது புறவடிவம். இன்றைக்கு இரண்டுதளங்களும் திரிபாக்கப்பட்டு வெறுப்பரசியல் எனும் மாயத்தளம் மட்டுமே சமூக யதார்த்தத்தில் இருக்கிறது. ஒருவன் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் அல்லது இந்துவாக இருக்க வேண்டும். நான் இந்து கம்யூனிஸ்ட் என ஒருவன் சொல்ல இயலாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். நான் இந்து எனக்குறிப்பிடுவது பண்பாட்டுத்தளத்தை. கம்யூனிஸ்ட் எனக்குறிப்பிடுவது அரசியல்தளத்தை.
பண்பாட்டைக் கொண்டாடுவதாகச் சொல்லிக் கொள்ளும் வலதுசாரிகளும், அரசியல் புரட்சிக்குத் தயாராவதாய்ச் சொல்லி மாளும் இடதுசாரிகளும் வெறுப்பரசியலுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றனர். வெறுப்பரசியலின் கனல் தணிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள.. தங்கள் முன்னோடிகளின் பெயர்களைத் தொண்டை புடைக்க அலறுகின்றனர்; கற்பனைச் சமூகத்தை முழக்கங்களாக்கிப் பொங்குகின்றனர். மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், காந்தி, விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்களைத் தங்கள் அரசியல் இலாபங்களுக்காக அடையாளங்களாக நிறுவிக் கொண்டதில் பெருஞ்சாதனை செய்திருக்கின்றனர் நவீன அறிவுஜீவிகள்.
சமூகவலைதளங்களில் தங்கள் ’விசாலமான அறிவை’ வெறுப்பரசியலுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கும் ஆளுமைகளைக் காணும்போது வருத்தமே எஞ்சுகிறது. அவ்வெறுப்பரசியலில் வெண்முரசு போன்ற ஆக்கங்கள் பந்தாடப்படுகின்றன. உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் திரிபுக்குள்ளாக்கப்பட்டு வசைபாடப்படுகின்றனர்; பேராசிரியர் தருமராஜைப் போன்ற ஆய்வாளர்கள் திட்டமிட்டே ஓரங்கட்டப்படுகின்றனர்.
வெண்முரசு உரையாடலுக்கு வருகிறேன். ஒரு வாசகியாய் அருண்மொழி அக்கா பகிர்ந்து கொண்டிருந்த கருத்துக்கள் வெண்முரசை ஒருவர் வாசிக்கத் தூண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால், வாசித்துக் கொண்டிருப்பவர்களை உறுதியாய் உற்சாகப்படுத்தும். வெண்முரசு கதாபாத்திரங்களின் பெயர்களையும், உறவுகளையும், உணர்வுகளையும் சொல்லும்போது அவரின் முகத்தில் அவ்வளவு கொண்டாட்டம். அக்கொண்டாட்டத்தின் அகமாய் உங்களின் எழுத்து முகமே முண்டியடித்து நின்று கொண்டிருந்தது.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்