மதார்- தமிழ் விக்கி
’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021
அன்புள்ள ஜெ,
எனக்கொரு பழக்கமுண்டு. கவிதையில் எந்த அளவுக்கு silliness இருக்கிறதென்று பார்ப்பேன். உலகியல் பார்வையில் அபத்தமும் சில்லறைத்தனமுமான ஒரு நடத்தை. ஒரு மனநிலை. அது கவிதையில் இருந்தால் மட்டுமே அது நல்ல கவிதையாக ஆகிறது. அந்த innocence கவிஞனுக்கு மிக அவசியமானது.
நமக்கு இந்த அரசியல்கவிதைகள், கொள்கைக்கவிதைகள் எல்லாம் ஏன் எரிச்சலூட்டுகின்றன என்றால் அவர்களிடம் அந்த innocence இருப்பதில்லை என்பதனால்தான். புரட்சி, சீர்திருத்தம், பெண்ணியம் என்றெல்லாம் பேசும் கவிதையின் சிக்கலே நாம் கவிதையில் எதிர்பார்க்கும் அந்த கள்ளமில்லாத ஒரு குழந்தைத்தனம்தான் அந்த பாவலாக்களுக்கு முதல்பலி என்பதனால்தான். கவிதை வேதாந்தமும் பிரபஞ்ச தத்துவமும் பேசும்போதும் இதேபோல அது கருங்கல்லாக ஆகிவிடுகிறது.
ஆனால் புரட்சியும் கலகமும் சீர்திருத்தமும் வேதாந்தமும் எல்லாம் கவிதையில் வரும். அந்தக் குழந்தைத்தனத்தில் இருந்தே அதெல்லாம் இயல்பாக கிளம்பிவரவேண்டும்.தேவதேவன் கவிதைகள் குழந்தைத்தனம் இருக்கும் கவிதைகள். ஆனால் அவை ஞானமும் அறிவும் எல்லாம் வெளிப்படுபவையும்கூட.
இந்தக் குழந்தைத்தனம் எங்கே வெளியாகிறதென்றால் கவிஞன் உலகத்தை வெறும் காட்சிகளாகவே வேடிக்கைபார்ப்பதில்தான். மனிதர்களின் நடத்தையை அவன் கொஞ்சம் விலகிநின்று வேடிக்கை பார்க்கிறான். கவிதை என்பதே ஒரு வேடிக்கைபார்த்தல்தான் என்றுகூட நான் நினைத்ததுண்டு.
மதாரின் கவிதைகளை இப்போதுதான் வாசிக்கிறேன். அவருடைய குழந்தைக் கண்கள்கொண்ட பார்வை வெளிப்படுமிடங்கள் எல்லாமே அழகானவை.
வெண்ணிற ஆடொன்ன்று
யாரோ போட்ட கோலத்தில்
தவறி விழுந்து புரண்டது
“மாறுவேடப்போட்டி முதல்பரிசு
மான்வேடமிட்ட ஆடு”
பின்னிருந்து வந்த பரிகாசக்குரல்
கேட்டு எழுந்த அது
சக ஆட்டை செல்லமாக
ஒருமுறை முட்டிக்கொண்டது
என்ற வரி அளித்த மகிழ்ச்சிதான் எனக்கு கவிதையனுபவம். இதிலுள்ளது ஒரு கற்பனையான காட்சி அளிக்கும் குதூகலம்தான். குழந்தைகள் இப்படி கேட்பதுண்டு. யானைக்கு சிறகு முளைச்சா எப்டி இருக்கும்? என்று என் பையன் ஒருமுறை கேட்டான். இந்த நாடகத்தில் ஆடு அடையும் வேஷ மாறுதலுக்கு குறியீட்டு அர்த்தமெல்லாம் அளிக்கவேண்டியதில்லை. நேரடியாகவே அழகான ஒரு காட்சியனுபவம். காட்சிக்குள் ஊடுருவும் அந்தக் குழந்தைத்தனம் அதை ஒரு அருமையான பிரபஞ்சநாடகமாக ஆக்கிவிட்டது
எஸ்.சத்யராஜ்