‘ஒளி’ ஒரு சூம் நாடகம்
அன்புள்ள ஜெ
ஒளி நாடகத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன். எனக்கு பொதுவாக நாடகங்கள் பார்ப்பது பிடிப்பதில்லை. அந்த மேடையமைப்ப்பே செயற்கையானதாக இருக்கும். நடிப்பவர்களின் குரல், உடலசைவு இரண்டுமே செயற்கையானதாக இருக்கும். காரணம் வேறுவழியில்லை. அவர்கள் தூரத்தில் நின்று நடிக்கிறார்கள். நாம் பார்க்கவேண்டுமென்றால் அப்படி நடிக்கவேண்டும்.
ஆகவே ஒளி நாடகத்தை கொஞ்சம் தயங்கித்தான் பார்த்தேன். நாடகத்தின் கரு பிடிகிடைக்க ஐந்துநிமிடம் ஆகியது. அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வசனம் வழியாக விரிந்தது வியப்பை அளித்தது. அவர்கள் நால்வருமே சுதந்திரமானவர்கள். அது புறச்சுதந்திரம். அவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அளிப்பவர் புறச்சுதந்திரத்தை பொருட்படுத்தாத அகச்சுதந்திரம் கொண்ட ஒரு மனிதர்.
நாடகத்தின் தீவிரம் அந்த இருபது நிமிடமும் ஆழமாகப் பார்க்கச் செய்தது. சிறந்த நாடகம். சிறப்பான நடிப்புகள். அனைவருக்கும் பாராட்டு
ரவீந்திரன்
அன்புள்ள ஜெமோ
ஒளி ஒரு ஆழ்ந்த கவனத்தையும் திடுக்கிடலையும் அளித்த நாடகம். அதிலுள்ள முரண்பாடுகள் சுவாரசியமானவை. இசையை தன் அறைக்குள் நடத்திக்கொள்கிறான். ஒருவன் இலக்கியத்தை உள்ளத்தில் நடத்திக்கொள்கிறான். ஒருத்தில் நடனத்தை அந்தரங்கமாக ஆடுகிறாள். மலையேறுபவன் எப்படி இருப்பான்? அவன் மலைகளை அந்த அறைக்குள் அடைய முடியுமா?
சுதந்திரம் விடுதலை ஆகியவற்றைப்பற்றிய பல சிந்தனைகளை உருவாக்கிய நாடகம். நடித்தவர்கள் இயல்பாக அழகாக நடித்திருந்தனர். பிரபாகரனாக நடித்தவரின் தீவிரமான முகம் நினைவில் நிற்கிறது
எஸ். அருண்
அன்புள்ள ஜெ
நீலம் தனிநடிப்பு அழகாக இருந்தது. தமிழ் மொழிக்கு ஓர் அழகு உண்டு. அதை இளமையிலேயே தமிழை உச்சரித்துப் பழகினால்தான் அடைய முடியும். இன்று இளமையிலேயே ஆங்கிலம் உச்சரிப்பதனால் தமிழின் ஒலியழகே காதில் விழாமலாகிவிட்டது. நடிகர்கள், டிவி காரர்கள் எல்லாமே செயற்கையான மெல்லின ஓசையுடன் பேசுகிறார்கள். தமிழ் இடையின, வல்லின ஓசை கொண்ட மொழி. அதை சுபஸ்ரீ மிக அருமையாக பேசி நடித்திருக்கிறார். உண்மையான உணர்ச்சிகளும் தீவிரமான கண்களும் சொற்களை அழுத்தமானவையாக ஆக்குகின்றன.
ராஜ்குமார் ராமசாமி