’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021
அன்புள்ள ஜெ
இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருது பெறும் மதாருக்கு வாழ்த்துக்கள். நான் அவருடைய கவிதைகளை இப்போதுதான் வாசிக்கிறேன். இளவயதிலேயே, முதல்நூலிலேயே அங்கீகாரம் பெறுவது என்பது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் பெரிய சவாலும்கூட. மிக அதிகமான எதிர்பார்ப்புகள் உருவாகும். அவற்றை சந்திக்கவில்லை என்றால் ஏமாற்றமும் உருவாகும்
நான் மறக்கவே முடியாத ஓர் அனுபவம் உண்டு. 1993ல் சிம்லாவில் ஓர் இலையுதிர்காலம். நான் ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். நல்ல குளிர். ஆகவே கண்ணாடிவழியாகப் பார்த்துக்கொண்டே சென்றேன். காடு பூத்து செக்கச்செவேலென்று இருந்தது. மனம் கனவில் மிதந்தது. அந்தப் பரவசத்தை நான் மறக்கவே இல்லை. மொத்தக்காடும் ஒரு பூ மாதிரி இருந்தது
சிம்லா சென்றபிறகுதான் அதெல்லாம் மரங்கள் காய்ந்து இலைகள் சருகாகி சிவந்து இருந்தது என்று தெரிந்துகொண்டேன். நான் அவற்றை மலர்கள் என்று நினைத்தேன். ரத்தச்சிவப்பிலும் பொன்னிறத்திலும் அவை காய்ந்திருந்தன. ஆனால் ஒரு பத்துநிமிடம்தான் அந்த ஏமாற்றம். அதன்பின் மீண்டும் அந்த காய்ந்த காட்டை நான் மலர்க்காடாகவே நினைக்க ஆரம்பித்தேன்,
அது என் ஹனிமூன் என்று சொல்லத்தேவையில்லை. அந்தக் காடு இதுவரை சிவந்த மலர்க்காடாகவே இருக்கிறது. வண்ணம் குறையவே இல்லை.
பிறகு வீரான்குட்டியின் ஒரு கவிதை படித்தேன். உங்கள் தளத்தில்தான்
பூத்தபடி
சமவெளியின்
பசுமைநடுவே
இலைகாய்ந்து
நிற்கும் மரமே
பூத்துநிற்கிறாயென்று
தூரத்தே நின்றஒருவன்
எண்ணி
நெஞ்சில் பிரதியெடுத்துக்
கொண்டுசென்றிருக்கிறான் உன்னை.
மரணம்வரை அவனிலிருப்பாய்
பூத்தபடியே நீ.
அவனிலிருந்து கேட்டு
பிறரும்
மேலும் பூக்களுடன்
உன்னைக் காண்பார்கள்.
பூக்காலமாக உன்னை
ஒருவன் வரையலாம்.
கவிஞனும் எழுதலாம்
சமவெளியின் பசுமைநடுவே
இலைகாய்ந்து நிற்கும் மரமே
ஒருநாளும் காயமாட்டாய் நீ!
அந்தக்கவிதை என்னுடைய வாழ்க்கைப் பிரகடனம் போலவே இருந்தது. மலரோ சருகோ அது நமக்குள்தானே பூக்கிறது. அதை மலராகவே கொண்டுசெல்வதே நம் பொறுப்பு.
மதாரின் இந்தக் கவிதை எனக்கு அந்த அனுபவத்தின் இன்னொரு பக்கத்தை அளித்தது.
பட்டுப்போன ஒரு மரத்தை
தூரக்காட்சியில் பார்த்தேன்
மேகத்திரட்சி ஒன்று
இலைகளைப்போல
பொருந்தியிருந்தது
பட்டுப்போன அந்த மரத்தில்
இப்போது
மழை காய்த்திருக்கிறது
மழைக்கு ஒதுங்கும் ஒரு சிறுவன்
மரத்தடி நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்
சுருக்கமான கவிதை. ஆனால் குளிர்மேகம் ஒரு பெரிய இலைத்தழைப்பு போல காய்ந்த மரத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கற்பனைசெய்துகொள்கிறேன். வெள்ளிபோல சுடர்விடும் மேகம். குளிர்ந்த இலைகள். மழையே இலையாக நின்றிருக்கிறது. அந்த காட்சியின் குளிர் உச்சிமண்டையில் ஒரு சொட்டு பனித்துளி விழுந்ததுபோல் இருந்தது
ஆனந்த்
வெயில் பறந்தது தபாலில் பெற :