சோஷியல் டைலமா- பிரவீன்

அன்புள்ள ஜெ,

 ‘The Social Dilemma” என்ற ஆவணப்படம் பார்த்தேன். அதன் சுட்டியை கீழே டுத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=uaaC57tcci0

https://www.netflix.com/in/title/81254224

பொதுவாக நாம்  ஒரு செயலை செய்து கொண்டே இருப்போம், அது நமக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் கூட. உதாரணமாக, காலையில் எழுந்து முதலில் மொபைல் பார்ப்பது நல்லதல்ல என்று தெரிந்தும் அதை நாம் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் ஏதாவதொரு நிகழ்வு நடக்கும் போதோ அல்லது யாரவது நம் பின் மண்டையில் அடித்து சொல்லும் போதோ தான், அந்த தவறின் விளைவுகளை பற்றி தெரிந்து அதை கைவிட முயல்வோம்.

அப்படி ஒரு பின் மண்டையில் அடித்து சொல்லும் ஆவணப்படம் தான் ‘The Social Dilemma’. நாம் இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரன்டு வகையாகவே அதன் உபயோகத்தை வைத்து பிரிப்போம். ஒன்று அது நிகழ்த்தி இருக்கும் சாதனைகளை. அடுத்து அது மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவை. ஒன்று அதை முழுமையாக ஏற்போம் அல்லது அதனை வசைபாடுவோம்.

`இந்த “cellphone” வந்ததிலிருந்து, எல்லாம் நாசமா போச்சு` போன்ற வசைகள். `இந்த செல்போன் வந்து நம் அன்றாட வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கியது`, போன்ற புகழ்ச்சியை. ஆனால்  நாம் உண்மையிலே அதன் நன்மை/தீமைகளை பட்டியலிட்டு ஒரு விவாதப்பொருளாக்கி அதில் இருக்கும் ethical/moral சவால்களை நாம் சீண்டியதே இல்லை.

அந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறது இந்த ஆவணப்படம். ஒருவன் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் போது, அவன் மொபைலுக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் `செயற்கை நுண்ணறிவுடன்` விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. இந்த `செயற்கை நுண்ணறிவு` நாம் கற்பனை செய்ய முடியாத அளவு மிகவும் பெரியது. நம் ஒவ்வொரு ரகசியமும் அதற்குத் தெரியும். அதை வைத்து நாம்  என்ன செய்வோம் என்றும் அதற்குத் தெரியும். அதன் அடிப்படையிலேயே அது நமக்கு ‘Suggestions’ஐ சொல்கிறது.

இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கும். இந்த சமூக ஊடகங்கத்தின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்று தான். “நம் ScreenTimeஐ அதிகரிப்பது”. இது தான்  இங்கு சந்தை. நம்முடைய நேரம் தான் சந்தைப்பொருள். இந்த சந்தைப்பொருளுக்குத்தான் எல்லா சமூக ஊடகங்களும் போட்டி போடுகின்றன.

“If you are not buying any product, then you are the product”

அடுத்து நமக்கு இரு முக்கியமான கேள்விகள் வருகிறது.

  1. இதனால் அந்த ஊடகங்களுக்கு என்ன லாபம்?
  2. இதனால் நமக்கு என்ன நஷ்டம்?

சமூக ஊடகங்கள் லாபம் அடைவது “Advertisement” வழியாகவே. நீங்கள் பார்க்கும் விடீயோவையோ, போடும் போஸ்டாயோ வைத்து, உங்கள் விருப்பங்களை அது ஊகிக்கும். அதன் பொருட்டு, Advertisement வரும். உதாரணமாக, நீங்கள் “How to cook gulab jamun” என்று Search செய்தால், அதற்கு தகுந்தவாறே “Jamun” கம்பெனி விளம்பரங்கள் வரும். அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போதும், அது சம்பந்தபட்ட வீடியோக்களே வரும். நீங்கள் ஒரு சந்தைப் பொருள் ஆகிறீர்கள்.

நாம் ஒரு போஸ்ட்ஐ, ஒரு போட்டோவை போடுகிறோம் என்றால், நாம் அதற்கு “likes” எதிர்பார்ப்போம். நம் எதிர்பார்ப்பு தான் இங்கே சந்தைப்பொருள். நம்மை மேலும் மேலும் இந்த எதிர்பார்ப்பை தூண்டிக்கிட்டே இருக்க செய்வது தான் அந்த செயற்கை நுண்ணறிவு programsஇன் வேலை. நம்மை அதற்கு அடிமை ஆக்குவது. இது தான் இங்கு நிகழ்வது. நாம் இதனை மறக்கச் செய்தால் கூட “Notifications” மூலம் நம் ஆசையினை கிளறச்செய்வது.

நாம் இதற்கு அடிமை ஆகிறோம் என்பது நம்மை அறியாமலேயே நடக்கும். மிகவும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடக்கும். நம் அரசியல் நிலைப்பாட்டை, காதலை, அன்றாட விருப்பங்களை, என்று அனைத்தும் அதற்குத் தெரியும்.  இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இந்த சமூக ஊடகங்கள் நம் “Data”வை  விற்கலாம். ஆனால் அதனை விற்காமலே நம் அனைத்து விருப்ப/வெறுப்புகளை பயன்படுத்தி, நம் எந்த ஒரு நிலைப்பாட்டினையும்  மாற்றலாம். உதாரணமாக, நம் அரசியல் நிலைப்பாட்டினை. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த சமூக ஊடகங்கள் நேர்முகமாக, இதில் ஈடுபடுவதில்லை. அது ஒரு “platform”ஐ நமக்குத் தருகிறது. அதில் நம் அத்தனை வெறுப்புகளையும் , காள்புகளையும் நாம் ஏற்றுகிறோம். இதனால் ஒரு மெய்நிகர் தளத்தில் நடக்கும் வெறுப்புகளை, நம் அன்றாட பொதுவெளிக்கு மாற்றி சண்டையிடுகிறோம்.

சமூக ஊடகத்தினால் ஏற்படும் சமூகம்,அறம், உளவியல்   சார்ந்த சிக்கல்களின் ஆய்வுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இது இங்கே வந்து 10 வருடங்கள் தான் ஆகின்றன என்றாலும், அதன் தாக்கம் எந்த ஒரு தொழில்நுட்பமும் செய்யாத அளவு மிகவும் பெரியது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நம்மை அதற்கு அடிமை அடையச்செய்கிறது. நம் குழந்தைகளின் நேரத்தை நம்மிடமிருந்து பிரிக்கிறது. நாம் என்ன பார்க்க வேண்டும் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. நாம் நம் கையில் வைத்திருப்பது (Mobiles) நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம், அதன் சாத்தியங்கள் எல்லையற்றது. அதனாலே அது மிகவும் பயங்கரமானது.

எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதனுக்கு உதவவே உருவாக்கப்படுகிறது. அதை யாரும் இங்கே மறுக்க முடியாது. இந்த தகவல் தொழில்நுட்பமும் அவ்வாறே. ஆனால் இது வளர்ந்து வளர்ந்து மனிதனை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது.  நம் ஒவ்வொரு clickஉம் சேமிக்கக்ப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் அதனை கையாள்வதாக நினைத்துக் கொண்டாலும், உண்மையில் அதுவே நம்மை கையாளுகிறது.

இந்த ஆவணப்படத்தில், இதை ஒரு விவாதமாகவே கொண்டு செல்கிறார்கள். இது ஒரு தொடக்கமே. நாம் உருவாக்கிய பொருள் நம் கையையே கடிக்கும் போது, அதன் தேவையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் என்ன தான் முற்றிலும் இதனை தவிர்க்க முடியாமல் போனாலும், நமக்கு உகந்தவாரு நாம் அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். நம் குடும்பத்துடன் உரையாடி, நமக்கு நாமே ஒரு கொள்கையினை வைத்துக் கொண்டு தான் இதனை இப்போது சமாளிக்க தொடங்க வேண்டும்.

அன்புடன்,

பிரவின்

***

முந்தைய கட்டுரைமதார்- கடிதம் -5
அடுத்த கட்டுரைஇலக்கிய விருதுகளை ஏற்பது