இலக்கிய விருதுகளை ஏற்பது

தமிழக அரசின் இலக்கியவிருதுகள்

இலக்கியவிருதுகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது– என்ற உங்கள் வரி சோர்வை அளித்தது. ஏன் அபப்டி ஒரு நிபந்தனையை போட்டுக்கொள்ளவேண்டும் என்று புரியவில்லை. எவருக்காக உங்களை நிரூபிக்கிறீர்கள்? உங்கள் வாசகர்களில் சிலரையாவது இது வருந்தவைக்கும் என்று நினைக்கிறேன். எழுத்தாளர்கள் அரசு விருதுகளைப் பெறலாகாதென நினைக்கிறீர்களா?

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

இந்த வகையான சிபாரிசுகளைச் செய்யும் தகுதியின் முக்கியமான அடிப்படை என்பது அவ்வரிசையில் சென்று நிற்காமலிருப்பது.

நான் எழுதவந்த காலகட்டத்தில் சாகித்ய அக்காதமி விருதுகள் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. எல்லா முக்கியமான விருதுகளையும் கோவி.மணிசேகரன் பெற்றுக்கொண்டிருந்த காலம் அது. அதற்கு எதிராகப் பேச, இலக்கியத்தின் அழகியலையும் நேர்மையையும் முன்வைக்க, சுந்தர ராமசாமி அன்றி எவருமே முன்வரவில்லை.

1992ல் கோவி மணிசேகரன் விருது பெற்றபோது மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினேன். அடுத்த ஆண்டு அவருக்கும் எனக்கும் ஒரு விருது வழங்கப்பட்டபோது அவருடன் இணைந்து அவ்விருதைப் பெறமாட்டேன் என அறிவித்தேன்.  

அது நான் எழுதவந்த காலகட்டம். பலரும் அது ஒரு தற்கொலைத்தனமான போக்கு என எச்சரித்தனர். அசோகமித்திரன் இரண்டு கடிதங்களே எழுதியிருக்கிறார். நான் ஆற்றல் மிக்க பகைவர்களைச் சம்பாதிக்கிறேன், என் பெயரே வெளித்தெரியாமலாகிவிடும் என்றார்.

சுந்தர ராமசாமியும் “இழப்புகளை கணக்கிலெடுத்துக்கொண்டு முடிவெடுங்கள். இழப்புகளும் எல்லா தரப்பிலிருந்தும் வசைகளும் மட்டும்தான் மிஞ்சும். எங்கும் எந்த நன்றியும் இருக்காது. வரலாற்றில்கூட பெயரில்லாமலாகிவிடும்” என்றார். அன்று இன்றைய ஊடகமேதும் இல்லை. சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருந்த சூழல்.

ஆனால் “யாராவது ஒருவர் சொல்லவேண்டும் அல்லவா? தலைமுறைக்கு ஒருவராவது?”என்று நான் அவரிடம் சொன்னேன். அது நான் எடுத்த முடிவு. அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாக அதை என் இலக்கியப் பணிகளின் ஒரு பகுதியாகச் செய்துவருகிறேன். தகுதியானவர்களை முன்வைப்பது, அல்லாதபோது எதிர்ப்பை பதிவுசெய்வது. தமிழிலும் மலையாளத்திலும்.

பலமுறை எழுதியிருக்கிறேன் – இது விருதுச் சர்ச்சை அல்ல. இது இலக்கிய விழுமியங்களை முன்வைப்பது, தொடர்ந்து பேசி அவற்றை நிலைநாட்டுவது. க.நா.சு அதைச் செய்தார், சுந்தர ராமசாமி செய்தார். அவர்கள்மேலும் இப்போது சொல்லப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ’இவர்கள் தங்களுக்கு விருதுவேண்டும் என்றுதான் இதையெல்லாம் பேசுகிறார்கள், பிறருக்கு விருது அளிக்கப்படும்போது பொருமுகிறார்கள்’ — இதெல்லாம்தான் பாமரர் எப்போதுமே சொல்லும் எதிர்வினை.

அன்றுமின்றும் தொடர்ச்சியாக தகுதியானவர்களை முன்வைப்பது, தகுதியற்றவர்கள் விருதுபெறும்போது அதை கண்டிப்பது என்னும் இலக்கியச் செயல்பாட்டைச் செய்பவர்கள் எவர் என்று பாருங்கள். அரிதினும் அரிதாக தலைமுறைக்கு ஒருவர். பெரும்பாலும் எவரும் இதைச் செய்வதற்கு முன்வருவதில்லை. என் தலைமுறையில் நானன்றி எவர் இதைச் செய்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் எவர் செய்யக்கூடுமென தோன்றுகிறது? 

ஏனென்றால் இதைச் செய்வதற்கு முதலில் அனைவரையும் படித்து விமர்சனக் கருத்துக்களை உருவாக்கியிருக்கவேண்டும். விருதுச் சந்தர்ப்பத்துக்கு அப்பாலும் அந்த மதிப்பீடுகளை தெளிவாக முன்வைக்கவேண்டும். அதை பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வதில்லை.

இத்தகைய கருத்துக்களைச் சொல்பவர்கள் விருதுகள் உட்பட அனைத்தையும் துறக்கும் மனநிலை கொண்டிருக்கவேண்டும். எழுத்தாளர்களுக்கு இங்கே கிடைக்கும் குறைந்த பட்ச நன்மை என்பது விருதுகளே, அவற்றை அவர்கள் துறக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகாரக் கணக்குகளின்றி பேசவே முடியாது. அவர்களின் பணியிடங்களில் நெருக்கடிகள் எழும்.

ஆகவே எப்போதும் தனியாகவே குரல்கொடுக்கிறேன். ரகசிய ஆதரவுகளே கிடைத்துள்ளன. பொதுவெளியில் இலக்கியமறிந்தோர் மௌனமாக இருப்பார்கள். பாமரரும் இந்த விருதுகளுக்குள் ஊடுருவ முயல்பவர்களும் இணைந்து வசைபாடுவார்கள், அவதூறு செய்வார்கள், ஏளனம் செய்வார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் எல்லாரும் ஏதாவது சொல்ல முன்வருகிறார்கள்.

இப்போதே பாருங்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவுக்குரலெழுப்புவது, சொந்த எதிரிகளை ஆளுங்கட்சிக்கு எதிரானவர்களாக கட்டமைக்க முயல்வது, தன்னை முன்வைக்க பிறரை துதிப்பது தொடங்கி சம்பந்தே இல்லாமல் உள்ளே வந்து சலம்புவது வரை எத்தனை குரல்கள். ஆனால் இத்தருணத்திலாவது தங்கள் நோக்கில் தரமான படைப்பாளிகளை முன்வைப்பவர் எவர்? தரமற்றவர்களுக்கு அளிக்கப்பட்டால் எதிர்ப்பேன் என்பவர் எவர்? ஒருகுரல், ஒரே ஒரு குரலாவது உள்ளதா? 

இத்தகைய விஷயங்களில் அனைவருமே மிகத்தந்திரமான நிலைபாட்டையே எடுக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். இனிமேலாவது என் குரல் போல நாலைந்து குரல்களாவது ஒலிக்கவேண்டும் என விரும்புகிறேன்.

இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே அமைப்புகள்மேல் ஓர் அழுத்தம் உருவாகிறது. அமைப்புகளில் ஊடுருவும் தன்னலக் கூட்டம் கொஞ்சம் எச்சரிக்கை கொள்கிறது. அவ்வப்போது தகுதியானவர்கள் விருதுபெறுவது இப்படித்தான். [விருதுபெற்றபின் அவர்களே விழுமியங்களை முன்வைப்பவர்களுக்கு எதிராகப் பேசுவதும் உண்டு] கன்னடத்திலும் வங்கமொழியிலும் மலையாளத்திலும் இத்தகைய குரல்களை எழுப்பும் வலுவான தரப்பு எப்போதுமுண்டு – இப்போது வைரமுத்து விருதுவரை அதை நாம் கண்டோம்.

சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள்.  பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன்.

அதற்குக் காரணம் இந்த விமர்சனப்பார்வையை தொடர்ந்து முன்வைக்க நான் வெளியே நின்றாகவேண்டும் என்பதே. க.நா.சு முதியவயதில் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது அவர் அதுவரை சொன்ன விமர்சனங்கள் எல்லாம் அந்த விருதை அவர் பெறுவதற்காகவே என வசைபாடப்பட்டு, அவருடைய மாபெரும் வரலாற்றுப் பங்களிப்பு சிறுமைசெய்யப்பட்டது. அவருக்கு முன் அவ்விருதை வாங்கிய சில்லுண்டிகளெல்லாம் அவ்வாறு எழுதினர். “எனக்கு கண்சிகிழ்ச்சை செய்துகொள்ள பணமில்லை. இந்தப் பணம் அதற்கு உதவும் என்பதனாலேயே வாங்கினேன்” என அவர் பரிதாபமாக விளக்கம் அளிக்கநேரிட்டது.

இங்குள்ள பொதுமனநிலை அது.  அக்குரலுக்கு இடமளிக்காமலிருக்க நாம் விலகியாகவேண்டும். இல்லையேல் சொல்லப்படும் ஒவ்வொரு வரியையும் சூழ்ச்சி என்று திரிப்பார்கள். இல்லையென்றாலும் திரிப்பார்கள், ஆனால் நாம் விலகி நின்றால் வாசகர்களிடம் ஒரு நம்பகத்தன்மை உருவாகிறது. ஆகவேதான் அந்தக் கட்டுரையுடனேயே அவ்வறிவிப்பை வெளியிட்டேன்.

பாருங்கள், அக்கட்டுரையிலேயே அந்த தன்னறிவிப்பு உள்ளது. ஆனால் அதன் பின்னரும் அக்கட்டுரைமேல் ஏளனமும் வசையும் பொழிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அது நான் எனக்கு விருதுகொடுங்கள் என்று கோரி எழுதியது என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். இந்தப் பாமரக்கூட்டம் பெரும் எண்ணிக்கையில் இருப்பதனால் இவர்களின் கூட்டுக்கூச்சலுக்கு ஒரு பாதிப்பு உள்ளது, இளம்வாசகர்களை அது திசைதிருப்பக்கூடும். ஆகவே அவ்வாறு நம்மைப்பற்றி நாம் திட்டவட்டமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும் என்பதே நம் சூழல்.

*

அரசு விருதுகளை ஏற்பது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எழுத்தாளர்கள் அரசு அளிக்கும் விருதுகளை, கௌரவங்களை ஏற்பதில் பிழையோ குறைவோ ஏதுமில்லை. ஒட்டுமொத்தக் குடிமக்களின் பிரதிநிதியாக நின்றே அரசு அதை வழங்குகிறது. வழங்குபவர் மக்களின் பிரதிநிதி. அரசரோ தலைவரோ அல்ல. மு.க.ஸ்டாலின் என்பவர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாடேதான். அவருடைய அமைச்சர்களும் தமிழகத்தின் பிரதிநிதிகளே.

ஆகவே நாளை திமுகவின் செயல்பாடுகள்மேல், ஸ்டாலின்மேல் ஒரு விமர்சனம் எழுந்தால் இன்று விருது பெறுபவர்கள் அவ்விருதை துறக்க வேண்டியதில்லை.அந்த விருது தமிழகம் அளித்த கௌரவம். அதை ஒருவர் ஓர் அரசியல் உத்தியாக துறப்பது வேறு. துறக்கவேண்டும் என எவரும் சொல்லமுடியாது.  விருது பெறுவதனால் அவரை அல்லது அரசை விமர்சிக்கக்கூடாது என்றில்லை. விருதுக்காக அவரிடமோ அல்லது திமுகவிடமோ நன்றியுடன் இருக்கவேண்டும் என்பதும் இல்லை. 

நான் அரசுவிருதுகளை ஏற்கமாட்டேன் என்னும் என் நிலையைக் கூறுவது எழுத்தாளனாக நின்று அல்ல, அதற்கப்பால் ஓர் இடத்தை எனக்கென நான் உணர்வதனால். வெண்முரசு எழுதுவதற்கு முன்பு அரசு விருதுகள் பெறுவதில் எனக்கு தடையேதும் இருக்கவில்லை. அப்போது பத்ம விருது வந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். இன்று நான் வேறு ஒரு இடத்தில் இருக்கிறேன். இதை முன்னரும் பலமுறை எழுதிவிட்டேன்.

ஆனால் இதை பிறர் ஏற்கும்படி பொதுச்சூழலில் சொல்ல முடியாது. அதன்மேல் எழும் பிறருடைய மறுப்போ கேலியோ இயல்பானதுதான். ஏனென்றால் அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வையை நான் வடிவமைக்க முடியாது. நான் முன்வைப்பது என்னுடைய தன்னுணர்வு , எனக்கு அது முக்கியமானது.

ஒற்றைவரியில் இப்படி கூறுகிறேன். பல ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்படுவதுதான். ஒரு சாதகன் அவனுடைய குரு நிலையில் இருப்பவர்களிடம் அன்றி எவரிடமும் பணியலாகாது. அரசன் முன்னால் குறிப்பாக. அதைப்போல அவன் செய்யக்கூடாத மேலும் பல உண்டு. அது ஒரு நோன்பு என்றுகொள்ளுங்கள். 

ஜெ 

அன்புள்ள ஜெ,

நீங்கள் திராவிட இயக்க இணையக்கொழுந்துகளைப் பற்றிச் சொன்னது உண்மை. “நாங்க டிபியிலே தலைவர் படத்தை வைச்சுகிட்டு நேரடியா உழைச்சோம். இப்ப இவனுக தட்டை தூக்கிட்டு வந்துட்டானுங்க’ என்றவகையில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த கட்சியெழுத்தாளர்களுக்கு மட்டுமே விருதுகள் செல்லவேண்டும் என்று கூறுகிறார்கள். அனேகமாக அப்படித்தான் நடக்கும். மற்ற எழுத்தாளர்களுக்கு விருதுகள் சென்றால் அவர்கள் இக்கூட்டத்தவரால் அவமதிக்கப்படுவார்கள்.

[இவர்கள் ஒட்டுமொத்த்தமாக இலக்கியவாதிகளை சிறுமைசெய்து வசைபாடும் பதிவுகளை வெட்டி அனுப்பியிருக்கிறேன்]

இவ்விருதை வாங்குவதே ஒருவகையில் சேற்றை அள்ளிப்பூசிக்கொள்வதுதான் என்ற நிலைமையை உருவாக்கிவிடுவார்கள் இவர்கள்.

ஆர்.கணேஷ்

அன்புள்ள கணேஷ்,

இணையத்தில் கூச்சலிடுபவர்களுக்கெல்லாம் பெரிய இடம் கட்சியிலோ ஆட்சியிலோ இருக்காதென்றே நினைக்கிறேன். நம்பிக்கையை கொடுப்பதே நாம் இப்போது செய்யவேண்டியது. அது பொய்க்குமென்றால் மீண்டும் முன்பு போலவே சரியானவற்றை, சரியானவர்களை முன்வைத்துப் பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

ஜெ

விருதுகள், அமைப்புகள்

நமக்குரிய சிலைகள்

முந்தைய கட்டுரைசோஷியல் டைலமா- பிரவீன்
அடுத்த கட்டுரைநீலம் ஒரு நடனம்