அஞ்சலி: குமரிமைந்தன்

குமரிமைந்தன் படைப்புகள்- வலைத்தளம்

இருபதாண்டுகளுக்கு முன்பு நான் நாகர்கோயிலில் வீடுகட்டி குடிவந்தபோது மாடியில் ஒரு கொட்டகை போட்டிருந்தேன். அன்று பின்னால் வீடுகள் இல்லை. தொலைவுவரை வயல்கள், அப்பால் வேளிமலை. மேலே நாற்காலிகள் உண்டு.

அனேகமாக தினமும் நண்பர்கள் தேடிவருவார்கள். என் வீட்டு மாடியில் ஒரு குட்டி சபை கூடும். வழக்கமாக வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், பேரா. மா.சுப்ரமணியம், எம்.எஸ். போன்றவர்களுடன் குமரிமைந்தனும் இருப்பார். அவர் அப்போது விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு மறவன்குடியிருப்பில் இருந்த அவருடைய பூர்விக வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

நண்பர்கள் ஆளுக்கொரு கருத்து கொண்டவர்கள். ஆகவே எப்போதுமே கருத்துப்பூசல். குமரிமைந்தனுக்கும் வேதசகாயகுமாருக்கும் எப்போதும் உச்சகட்ட மோதல். பல சமயம் அது எல்லைமீறிச் சென்று அருண்மொழி வந்து ஆளுக்கொரு அதட்டல்போட்டு அவையை அமையச்செய்ய வேண்டியிருக்கும். அதன்பின் இருவரும் கட்டித்தழுவிக் குலாவிப் பேசிக்கொள்வார்கள்.

அன்று அஜிதனும் சைதன்யாவும் குழந்தைகள். அவளுக்கு குமரிமைந்தனை அறிமுகம் செய்தேன். “பாப்பு இந்த தாத்தா பேரு பெரியநாடார்!”

தலைசரித்து அவள் சிந்தனை செய்தாள். பிறகு கேட்டாள், “அவரு சின்னக்குளந்தையா இருக்கும்போது?“

குமரிமைந்தன் சைதன்யாவுக்கு அன்பான தாத்தா. அவருடைய பெரிய மீசைக்கு அவள் அடிமை. அங்கே வருபவர்களில் அவரே உயர்ந்த சிந்தனை கொண்டவர் என்று அவள் நம்பியது மீசையால்தான். அவரை மறுத்துப்பேசும் வேதசகாயகுமாரை அடிக்க ஒருநாள் கம்போடு வந்துவிட்டாள்.

குமரிமைந்தன் என்னும் பெரியநாடார் பொதுப்பணித்துறையில் பொறியாளராக 1960 முதல் 1984 வரை 24 ஆண்டுகள் பணியாற்றினார்.விருப்ப ஓய்வுப் பெற்று தனியாக கட்டுமான ஆலோசகர் பணி செய்தார். அடிப்படையில் அவருடைய ஆர்வம் பழந்தமிழாய்வு, தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை நோக்கிய பயணம்.

குமரிமைந்தன் இளமையில் ஈ.வே.ராவின் திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அங்கிருந்து தேவநேயப் பாவாணரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தீவிரமான தமிழ்த்தேசிய சிந்தனைகளை வந்தடைந்தார். கடைசிவரை தமிழ்த்தேசியத்தின் பண்பாட்டு அடிப்படைகளை வரையறை செய்வதிலேயே ஈடுபட்டிருந்தார்.

தமிழ்ப்பண்பாட்டின் வேர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து தொடங்குகின்றன என அவர் நம்பினார். குமரிக்கண்டம் என்னும் நிலம் இருந்தால் மட்டுமே தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான வரலாற்றுப் புதிர்களுக்கு பதில் கூறமுடியும் என எண்ணினார். தமிழர் வானியல், தமிழர் மெய்யியல் போன்ற பல மரபுகளுக்கு அப்படி ஒரு பொதுவான தொன்மையான ஊற்றுமுகம் இருந்தாகவேண்டும்.

குமரிக்கண்டம் என்னும் நிலம் பற்றிய மறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தென்குமரிக் கடலடிநிலம் இதுவரைக்கும் முறையாக ஆய்வுசெய்யப்படவில்லை என்று அவர் நினைத்தார். எதிர்காலத்தில் அங்கே ஆய்வுகள் நிகழும்போது உண்மைகள் வெளிவருமென வாதிட்டார்.அந்தப் பற்றினாலேயே தன் பெயரை குமரிமைந்தன் என்று வைத்துக்கொண்டார்.

தமிழ் அறிவுச்சூழலில் பல அடுக்குகள் உண்டு. கல்கி,சாண்டில்யன்,சுஜாதா என்பது ஓர் அடுக்கு. அதுவே பெரும்பாலானவர்களால் அறியப்பட்டது. அதற்கு நேர் எதிரான சிற்றிதழ்ச்சூழல் இன்னொரு அடுக்கு. புதுமைப்பித்தன்,க.நாசு, சுந்தர ராமசாமி என அதற்கு ஒரு வரிசை.

அறியப்படாத இன்னொரு அடுக்கு கலைமகள் போன்ற பிராமண அறிவுச்சூழல். கமலா சடகோபன், கண்ணன் மகேஷ் போன்ற எழுத்தாளர்கள். திராவிட இயக்க எழுத்தாளர்கள் அறுபதுகளுடன் நின்றுவிட்டனர். அவர்கள் ஓர் அறிவியக்கமாகச் செயல்படவில்லை. இதைத்தவிர சைவ, வைணவ, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்குரிய அறிவுச்சூழல்கள் வேறு.

அறியப்படாத, ஆனால் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய ஓர் அறிவுச்சூழல் தனித்தமிழ் கூட்டம். இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் தென்மொழி, கண்ணிமை, தும்பை, தெசிணி போன்ற சிற்றிதழ்களில் அது வாழ்ந்தது. கா.அப்பாத்துரை,தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் என அங்கு ஒரு வரிசை உண்டு. குமரிமைந்தன் அங்குதான் எழுதிக்கொண்டிருந்தார்.

எனக்கு தனித்தமிழ் அறிவியக்கத்துடன்  ஈடுபாடும் தொடர்பும் உண்டு. அவ்விதழ்களில் எழுதியிருக்கிறேன். அவ்வாறுதான் குமரிமைந்தன் அறிமுகம். அன்றெல்லாம் நவீன இலக்கியச் சூழலில் வணிக இலக்கியம் எவ்வாறு வெறுத்து ஒதுக்கப்பட்டதோ அதேபோல தனித்தமிழியக்கமும் அடிப்படைவாதம் என அகற்றப்பட்டது.

நான் நவீன இலக்கியச் சூழலுக்குள் பாவாணரை மேற்கோள் காட்டி எழுதத் துணிந்தவன். சொல்புதிதை தொடங்கியதும் குமரிமைந்தனை அதில் எழுதவைத்தேன். அவருடைய மொழிநடையும் தர்க்கமுறையும் நவீன இலக்கியச் சூழலுக்கு ஒத்துப்போகின்றவை அல்ல. அவருடைய பெரும்பாலான கட்டுரைகளை நானே பத்தி பிரித்து, சொற்றொடர்களை ஒழுங்குபடுத்தி வெளியிட்டேன். அவர் சொல்புதிதில் நிறைய எழுதியிருக்கிறார்.

தமிழினி வசந்தகுமார் அவருக்கு என் வழியாக அறிமுகமானார். தமிழினியிலும் குமரிமைந்தன் தொடர்ந்து எழுதினார். குமரிமைந்தன் நவீனத்தமிழ் அறிவுச்சூழலில் திகழ்ந்தது இந்தக் குறுகிய காலத்தில்தான்.

குமரிமைந்தனுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு சிக்கின்குன்யா நோய் வந்தது. அவருடைய உடல்நலம் சீர்கெட்டது. அவர் நடமாடமுடியாதவராக ஆனார். அதன்பின் மதுரைக்குச் சென்றார். அவ்வப்போது சில கடிதத் தொடர்புகள் அன்றி தொடர்பில்லை. இன்று [3-6-2021] தன் 82 ஆவது அகவையில் அவர் காலமான செய்தி வந்துள்ளது.

குமரிமைந்தனின் பங்களிப்பு என்ன? சுருக்கமாக இப்படி வரையறை செய்கிறேன். ஒரு பண்பாட்டுச்சூழல் என்பது அதன் வரலாற்றுக்கு முந்தைய தொன்மையில் இருந்து எழுந்து வந்து நிலைகொள்வது. அதன் தன்னடையாளமும் தனிச்சிறப்பும் அந்த வேரில்தான் உள்ளது. அந்த தன்னடையாளத்தை இழந்தால் அது கட்டமைப்பு குலையும். தனிச்சிறப்பை இழந்தால் அது தன் பெருமிதத்தை இழந்து அழியும்

ஆகவே அதன் எதிரிகள் அந்த பண்பாட்டின் வேர்களைத்தான் மறுக்கவும் அழிக்கவும் முயல்வார்கள். அதற்கு அவர்கள் கையாளும் வழிகள் இரண்டு. ஒன்று, அந்த வேர்களிலிருந்து அதன் சமகாலத்தை துண்டிப்பது. இரண்டு, அந்த வேர்களை வேறுவகையில் விளக்கி அதன் தொடர்ச்சியை அழிப்பது. அதற்கு எதிராக அப்பண்பாட்டின்மேல் ஆர்வம்கொண்ட அறிஞர்கள் போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.

அதற்கு அவர்கள் எதிர்க்கவேண்டிய தரப்புகள் மூன்று. ஒன்று வைதீகம் மற்றும் ஆரிய இனவாதம். இரண்டு, நவீனமயமாகி மரபை மறுக்கும் பார்வை. மூன்று, பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றுணர்வில்லாத அன்றாடத்தர்க்கத்தை முன்வைக்கும் போக்கு.

மரபின் வேர்கள் சமகாலப் பண்பாட்டுடன் மூன்று வகையில் தொடர்புகொண்டுள்ளன. ஒன்று மெய்யியல் மற்றும் தொன்மங்களாக, இரண்டு, அன்றாடவாழ்க்கையிலிருக்கும் சடங்குகள் அடையாளங்கள் போன்ற பண்பாட்டுக்கூறுகளாக. மூன்று, தொல்லியலாக.

தமிழ்ப்பண்பாட்டின் வேர்கள் பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை. ஏனென்றால் ஆய்வுகள் பெருஞ்செலவில் முறையாகச் செய்யப்படவில்லை. ஆனால் தொன்மங்கள், பண்பாட்டுக்கூறுகள் ஆகியவை உள்ளன. அவை மொழியில் உள்ளன. ஆகவே மொழியை காப்பாற்றி வைத்துக்கொள்வதே இன்று செய்யவேண்டியது. மொழி அழிந்தால் அவையும் அழியும். தமிழ்ப்பண்பாடே அழியும்.

தொன்மங்கள், பண்பாட்டுக்கூறுகள் அழிந்தால் தொல்லியல்சான்றுகள் இருந்தாலும் பண்பாடு எஞ்சாது என்பதற்கு எகிப்தும் மெசபடோமியாவும் மாயன்நாகரீகமுமே சான்று. தமிழ்ப்பண்பாடு இன்றும் வாழ்வது தமிழ் மொழியாலும் அதிலுள்ள தொன்மங்கள் மற்றும் பண்பாட்டுக்கூறுகளாலும்தான்.

ஆகவே தொன்மங்களுக்கும் பண்பாட்டுக்கூறுகளுக்கும் எதிரான எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளவேண்டும். திரிபுகளை மறுத்து உண்மைகளை முன்வைத்தபடியே இருக்கவேண்டும். நம் பண்பாட்டின் சில கூறுகள் இன்று நமக்கு புரியாமல் இருக்கலாம். சில பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வாமையை அளிக்கலாம். ஆனால் அவற்றை நாம் பேணவேண்டும். அவை நாளை நமக்கு புரியலாம். அவற்றை இழந்துவிடக்கூடாது.

இக்காரணங்களால்தான் குமரிமைந்தன் தமிழ்ப்பண்பாட்டின் எதிரிகளாக  ஆங்கில ஆதிக்கத்தை, நவீனமயமாதலை அணுகினார். அதைவிட தீவிரமாக ஈவேராவின் பகுத்தறிவுப் பார்வையை அணுகினார். ஈவேரா தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை மறுத்து அழிப்பதற்காகவே பகுத்தறிவு என்பதை முன்வைத்தார், ஏனென்றால் அவர் தமிழ்ப்பண்பாட்டின்மேல் வடுக ஆதிக்கத்தை முன்வைக்க விரும்பியவர் என்றார் குமரிமைந்தன்.

அன்றாட வாழ்க்கையின் தேவைக்காக, அரசியல் நோக்கங்களுக்காக பண்பாட்டை மறுக்கவோ மறுவிளக்கம் கொடுக்கவோ கூடாது என்பது குமரிமைந்தனின் எண்ணம். அவர் பாம்புபஞ்சாங்கம் தமிழர்வானியலின் ஆவணங்களில் ஒன்று என எண்னினார். அவரும் அவர் நண்பர் வெள்ளுவனும் இணைந்து அதில் ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். அக்கட்டுரைகளை நான் சொல்புதிதில் வெளியிட்டேன்.

இந்தியத்துணைக்கண்டத்திலுள்ள ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் தெற்கே குமரிக்கண்டத்தில் இருந்து தொடங்கவேண்டும் என வாதிட்டவர் குமரிமைந்தன். இந்தியமெய்யியல் என்பதே குமரிக்கண்டத்தில் உருவானதே. அத்தனை தெய்வங்களும் அங்கே எழுந்தவைதான்.

இங்குள்ள பண்பாட்டுக்கூறுகளை முழுமையாகத் தொகுத்து ஆராய போதிய அளவில் கல்விசார் அமைப்புகள் இன்றில்லை. நிதி இல்லை. ஆய்வாளர்களும் இல்லை. ஆனால் என்றோ ஒருநாள் தமிழ்நிலம் தன்னை மறுதொகுப்பு செய்துகொள்ளும். அன்று அது ஆராய்வதற்காக நாம் பண்பாட்டுக்கூறுகளை அழியாது பாதுகாக்கவேண்டும்.

தமிழ்ச்சூழலில் இன்று பரவலாகப் பேசப்படும் ’வடுக எதிர்ப்பு’க் கொள்கையின் வேர்கள் குமரிமைந்தனில் உள்ளன. அவரை அன்று கடுமையாக எதிர்த்துப்பேசிய வேதசகாயகுமார் பின்னர் அவருடைய ஆதரவாளராகவும் அதிதீவிர கொள்கைப்பரப்புநராகவும் ஆனார். நான் எழுதிய ‘கொற்றவை’ நாவலின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு குமரிமைந்தனுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.

குமரிமைந்தன் சிந்தனைசெய்பவர்களிடம் மட்டுமே பேசிய சிந்தனையாளர். அசல்சிந்தனையாளர்களுக்கே உரிய கிறுக்குத்தனங்கள், அத்துமீறல்கள் எல்லாம் கொண்டவர். கொந்தளிப்பானவர். ஆனால் சிறுவனைப்போல உற்சாகமான மனிதர். அவருடன் செய்த பயணங்கள் எல்லாமே வெடிச்சிரிப்புகளாலானவை. அவருடைய மகளின் திருமணத்தின்போது தொல்நாடார்குடிக்குரிய அத்தனை மணச்சடங்குகளும் நிகழ்ந்தன. அவர் தலைப்பாகையும் கச்சவேட்டியுமாக நின்றிருந்தார். அன்று அவர் கண்கள் கலங்கி உணர்ச்சிப்பெருக்குடன் தோன்றியதை நினைவுகூர்கிறேன்.

குமரிமைந்தனின் அணுக்க மாணவர் இரா.எட்வின். நாகர்கோயிலில் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். எட்வினுடன் இணைந்து குமரிமைந்தன் நாகர்கோயிலில்  குமரிக்கண்ட ஆய்வுக்காக ஓர் அமைப்பை நிறுவி அலுவலகமும் வைத்திருந்தார். ஓர் ஆய்வாளன் அவன் மறைவுக்குப்பின் மீண்டும் தொடங்குகிறான். குமரிமைந்தன் எட்வினில் எழவேண்டும்

அஞ்சலி.

குமரிமைந்தன் நூல்கள் வாங்க

குமரிக்கண்ட வரலாறும் அரசியலும்

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்: நாடார்களின் வரலாறு

இராமர் பாலப் பூச்சாண்டி


தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரைபிறிதொன்று கூறல்
அடுத்த கட்டுரை‘மாமலர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்