”பிரிஸ்கிரிப்ஷன் எழுதி தாறேன். தினசரி மூணுவேளை சாப்பாட்டுக்கு பின்னாடி அஞ்சு நிமிசம் சந்தோஷமா இருக்கணும், அதான்”
தமிழகத்தின் ஆன்மிகவிவாதங்களை கூர்ந்து கவனித்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் மெய்ஞானம் என்பது ஒரு மேற்கோளாகவே இருக்கும் என்பதுதான். பெரும்பாலான மெய்ஞானத் தேடல்கொண்டவர்கள் மேற்கோள்களை மட்டுமே படிக்கிறார்கள். மேற்கோள்களையே ஞாபகம் வைத்திருக்கிறார்கள். மேற்கோள்களைச் சிந்திக்கிறார்கள். புத்தகங்களே அவர்களுக்கு மாபெரும் மேற்கோள்கள். கடவுளே கூட ஒரு நல்ல மேற்கோளாக இருக்கவே வாய்ப்பு.
விளைவாக அவர்கள் மேற்கோளர்களாக மாறிவிடுகிறார்கள். மேற்கோள்களாகப் பேசுகிறார்கள். “குரு என்ன சொல்றார்னா…” என்றுதான் பேச ஆரம்பிக்கிறார்கள். அல்லது “பிரஸ்னோபநிஷத்திலே ஒரு வரி வருது. சூரியனும் அவனே, மேகமும் அவனேன்னு…அவனே பிரகாசிக்கிறான், அவனே மூடிக்கிறான். மாஸ்டர் ஒரு சிங்கிள் டீ. சக்கரை கம்மி”. கால்தடுக்கினால்கூட அவர்களால் மேற்கோளாகவே முனக முடியும்.
கபே: தன்பரிமாற்றம்
புத்த கபே: தானிலா பரிமாற்றம்
ஆரம்ப கட்டத்தில் அந்தக் குருவே சொன்ன எளிமையான வரிகளை நினைவிலிருந்து சொல்கிறார்கள். “பாத்தீங்கன்னாக்கா, ஆன்மாவுக்கு எந்த சந்தோசமும் கிடையாது.ஆன்மாவை அடைச்சு வைச்சிருக்கிற பெட்டிதான் இந்த உடம்பு. இதிலேதான் சந்தோசம் இருக்கு…”
நானும் நீண்டநாட்களாக ஆன்மா என்பது கூரியரில் அனுப்ப அழுத்தி கட்டப்பட்ட பொட்டலம் என்றுதான் நினைத்திருந்தேன். பெண்களுக்கு மேல் “Fragile handle with care” என்று எழுதப்பட்டிருக்கும் என்று. ஆண்களுக்குமேல் “If undelivered return to this address” என்று அம்மாவின் விலாசம்.
உள்ளே என்ன இருக்கும் என்ற ஆர்வத்தை எழுப்புபவை. போலியா அசலா? அமேசான் வந்தபின் தெரியவந்தது, எந்தப் பொட்டலத்தையும் திறந்து உள்ளடக்கத்தை பார்க்கும் கணத்தை வீடியோ எடுத்துக் கொள்ளவேண்டும். ஆத்மா சுயம்பிரகாசமானது. பெட்டிக்குள் அது ஒளிவிட்டால் அது ஒளியா? ஷ்ரோடிங்கரின் தத்துவக்குழப்பம்!
”ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஞானம் கிடைச்சுது. ஆனா இப்ப அதுக்கு மார்க்கெட் இல்லை”
மேற்கோளர்கள் கொஞ்சம் கூவித்தெளிந்து கொக்கரக்கோ ஆனதும் சொந்தமாக மேற்கோள்களைச் சொல்கிறார்கள், அதை குருவின் பெயரில் சாற்றிவிடுகிறார்கள். “ஆன்மாவை எப்பவும் சீண்டிக்கிட்டே இருக்கக்கூடாது. அது பாட்டுக்கு அங்க இருக்கட்டும். நாம பாட்டுக்கு நாம இருப்போம். அதுக்கு வேணுங்கிறத அதுக்கு குடுத்தா அது நம்மள என்ன செய்யப்போகுது? நான் சொல்லல, குரு சொல்றார்”
ஆன்மா இப்போது ஒரு கூண்டுவிலங்கு ஆகிவிடுகிறது. கூண்டிலேயே தின்று, கூண்டிலேயே கழிந்து வைத்து, அதையே மிதித்து மிதித்து சுற்றிவந்து, சுவர்களை அறைந்து உறுமியபின் அப்படியே படுத்து தூங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அந்த கூண்டே பழகி பெரும்பாலான நேரம் மப்படித்ததுபோல பீளை பிதுங்கிய கண்களுடன் படுத்துக்கிடக்கிறது. சந்தடி கேட்டால் எழுந்து வாய்பிளந்து கொட்டாவிவிடுகிறது.
”வேண்டாம், வேலை கிடக்கு. கொண்டுட்டுப்போயி சேக்கணும்ல?”
இப்படியே மேலேபோய் , கொஞ்சம் முற்றிவிட்டால் சொந்தமாக மேற்கோள்களைச் சொல்லலாம். அது ஞானியாவதன் முதல்நிலை. “ஆத்மாங்கிறது டிரைவர் மாதிரி. சிந்தனைங்கிறது ஸ்டீரிங்கு. ஒளுக்கம்னா பிரேக்கு…நல்லா சிந்திச்சுப்பாக்கணும். இப்ப நாம ரோட்டிலே நேராட்டு போறோம்…”
ஆனால் இதை தகுதியானவர்களிடம் சொல்லவேண்டும். சின்னப்பிள்ளைகளிடம் சொல்லப்போய் “அப்ப ஹெட்லைட்டு?”என்று கேட்டு குழப்பிவிடும். என்னைப்போன்ற இலக்கியக்குழப்பர்கள் ஆத்மா ரைட் திரும்பவேண்டும் என்றால் கையை வெளியே விட்டு சிக்னல் காட்டி ஆட்டுமா என்று ஆழமாகச் சிந்தித்துக்கொண்டு விலகி நின்றிருப்ப்போம். போகன் சங்கர், அனீஸ்கிருஷ்ணன் போன்ற பேய்பிடியர்கள் டிரைவருக்கு பேக்சீட் டிரைவராக இருந்து ஆட்டிப்படைப்பது முற்பிறவியாக இருக்குமோ என நினைத்து பீதியுறுவார்கள்.
”கல்லுருண்டைய கீழே இறக்கிற வேலைக்கு நடுவே கொஞ்சம் சாப்பாடும் ரெஸ்டும்”
அடுத்தகட்டம் நாமே ஞானியாக ஆகிவிடுவது. தொடர்ந்து முயன்றால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் ஞானியாக ஆகிவிடலாம். யூடியூப் கமெண்டுகளை வைத்து கணக்கிட்டு தமிழகத்தில் பன்னிரண்டு லட்சத்துக்குமேல் மெய்ஞானிகள் இருப்பதாக கூகிள் சொல்கிறது. கூகிள் லாகிர்தம் அவர்களுக்கான விளம்பரங்களை இப்போது தயாரிக்கிறது. “ஞானிகளுக்கான தனி மேற்கோள்கள்” “நாற்பதுவகையில் மேற்கோள் தயாரிப்பது எப்படி?” “மேற்கோள்களை ஒடிப்பதும் திரிப்பதும், செயல்முறை விளக்கம்” “ஞானிகளுக்கான வாயுலேகியம்”.
ஞானியர் மேற்கோள்கள் இருவகை. அன்பான அறிவுரைகள். “அன்புநண்பரே, அன்பே உலகின் ஆதாரம். நான் யார் என எண்ணிப்பாருங்கள். நானே என்று எண்ணிக்கொண்டிருக்காதீர்கள். உங்கள் யூடியூப் உரையை நான் கேட்கவில்லை. என் உரையை கேட்க இணைப்பை சொடுக்கவும்” இது எளியவகை. யூடியுபில் கமெண்ட் போடுவதற்கு அப்பால் ஃபேஸ்புக் பதிவுபோடவும் உதவும். அடுத்த கட்டம் அலட்சியமான ஹாஸ்யம். “ஆத்மாவை கொண்டுட்டுப்போயிக் குடுத்தா அரைக்கிலோ சீனிகூட குடுக்கமாட்டான், என்ன நான் சொல்றது?”
”பரவால்ல டாக்டர், சொல்லட்டும். ஆனா நான் மூணாவது ஒப்பீனியனும் எடுத்த பிறகுதான் ஆப்பரேஷன் பண்ணிக்குவேன்”
ஒரு கட்டத்தில் நாம் பேசுவதெல்லாமே மேற்கோள்களாக ஆகிவிடுகின்றன. ஆத்திர அவசரத்துக்கு மேற்கோள் அல்லாத சொற்றொடர்க்ளைச் சொல்ல மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்கிறது.”ரொம்ப தாகமாக இருக்கு, ஒரு டம்ப்ளர் தண்ணி கிடைக்குமா?” என்பதை “தாகம் என்பதை தணிக்கும் ஆற்றலுள்ள தண்ணீருக்காக காத்திருப்பதுதானே வாழ்க்கை?”என்றுதான் சொல்ல வருகிறது. “தணிக்கிறதனாலேதான் அது தண்ணி’ என்ற சொல் எழுந்து நாக்கை முட்டுகிறது. ஆபத்தான கட்டம்தான். ஆனால் நாம் ஞானியாக ஆகிவிட்டோம்.
மேற்கோள்களின் மூலப்பொருட்கள் நான்கு.
1. அரைகுறை அறிவியல். “இப்ப co2ன்னா என்ன? கார்பன் டை ஆக்ஸைட். கார்பன் செத்த பிறகு உருவாகிற ஆக்சைடுன்னு வெள்ளக்காரன் சொல்றான். செத்தவாயு, அதனாலேதான் அதை வெளியே விடறோம். பிராணவாயுமான ஆக்ஸிஜனை இழுக்கிறோம்.”
2. அறிவியல்கடந்த அறிவியல் .”சூரியன் சின்னதாக ஆனா அது கருந்துளையா ஆகிறதுங்கிறாங்க. கருந்துளை சின்னதா ஆனா என்ன ஆகும்? கேட்டா முழிக்கிறானுங்க. ஹெஹேஹெ.அறிவியலுக்கு புரியாத விஷயம் அது. கருந்துளை சின்னதானா சிறுதுளை. இத நாம சொல்லவேண்டியிருக்கு! தால்வளையுள்ளே தயங்கிய சோதின்னு திருமூலர் சொல்றார்… என்ன? வளை! வளைன்னா என்ன துளை!]
”அவரோட மூளை குழம்பிட்டுதுன்னு தோணுது. பேக்கப் எடுத்து வச்சிருக்கீங்கள்ல?”
3. அன்றாட விவேகம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவேண்டும். [சாப்பிடுறதுக்கு முன்னாடி தட்டிலே என்ன பரிமாறியிருக்கான்னு நல்லா பாத்துக்கிடணும். அப்பதான் எவ்ளவு சாப்பிடறதுன்னு கணக்கு போடமுடியும். எவ்ளவு முடியுமோ அவ்ளவு சாப்பிட்டுட்டு மிச்சத்தை நொறுக்குத்தீனியா எடுத்துக்கலாம். தட்டிலே வர்ர சாப்பாடு பிரார்த்தம். நாம சாப்பிடுறது சஞ்சிதம். கையிலே எடுத்துண்டு போறது ஆகாமியம். பெரியவா சும்மா சொல்லலை!]
4. அதை ஒரு மாயத்துடன் பிணைக்கவேண்டும். [நாம சாப்பிடுற சோறு என்ன ஆகுது? அதிலே இருக்கிற அக்கினி அக்கினியைச் சேருது. தண்ணி தண்ணியைச் சேருது. வாயு வாயுவா சோன்னு வெளியே போயிடுது.அன்னம் என்ன ஆகுதுன்னு உங்களுக்கு தெரியும். இங்க பேசினா அசூசி. சரி, ஆகாசம் எங்க போகுது? அது ஓங்காரத்திலே கலந்துடுது. ஓங்காரம் சரியா கலக்கலேன்னா அது ஆங்காரம்]
“அதாவது நீங்க என்ன சொல்றீங்கன்னா, கடவுள் என்னைய காப்பாத்த நான் விடலேன்னா கடவுள் என்னை என்ன செய்வாரோ அதிலே இருந்து என்னைய காப்பாத்துறதுக்கு கடவுளை நான் அனுமதிக்கணும்னு கடவுள் விரும்புறார், சரியா?”
இந்த நான்கு வகை மேற்கோள்களைக் கலந்து சொல்ல ஆரம்பித்தால் நாம் முழுமையான ஞானியாக ஆகிவிடுகிறோம். நாம் ஞானியாக ஆகவேண்டும் என்றால் நம்மை ஞானியாக மற்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் நம்மை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றால் நாம் அவர்களை ஞானிகளாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஓஷோ உலகுக்குக் காட்டிய வழி அதுவே. அத்தனைபேரையும் ஓஷோவாக ஆக்குவது. அதன் பின் எவரும் ஓஷோவை மறுக்க முடியாது. எவர் தன்னைத்தானே மறுக்க முடியும்? ஓஷோ ஆவதற்கான எளிய வழியையே நாம் ஓஷோவியம் என்கிறோம்.
”தப்பு செய்றது மனுஷ இயல்பு. அதை இன்னொருத்தன்மேலே குற்றம்சாட்டுறது அடிப்படை மனுஷ இயல்பு”
ஓஷோ ஆனபிறகு என்ன செய்யவேண்டும்? ஓஷோவை பரப்ப வேண்டும். அது நம்மை நாமே பரப்புவதுபோல. இந்த உலகில் வைரஸ் முதல் அரசியல்வாதி வரை அனைவரும் செய்வது அதைத்தானே? ஓஷோ ஞானி என்றால் நானும் ஞானி என்று பொருள். ஓஷோவை சாமானியர் புரிந்துகொள்ள முடியாது என்றால் நான் சொல்வதையும் புரிந்துகொள்ள முடியாது என்று பொருள். ஓஷோவை கேள்விகேட்கக்கூடாது என்றால் என்னை கேள்விகேட்டால் கோபம் வரும் என்று பொருள்.
கொசுபோல அனைத்தின்மேலும் பறந்து ஒரே பாட்டை பாடிக்கொண்டிருக்கையில் நாம் ஞானப்பரப்பலைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே மேற்கோள்கள் தேவை. மேற்கோள்கள் என்பவை தங்களை வந்தடையும் அனைத்தையும் மேற்கோளாக ஆக்கிவிடுபவை. கரம்சிரம்புறம் நீட்டாதீர், சாப்பிட்டபின் இலையை எடுக்கவும் எல்லாமே மேற்கோள்தான்.
தன்னை அறிந்து அடங்கி அமைதல்
மேற்கோள்களைத் திரட்டுவது மிக எளிது. ஓஷோ புத்தகங்கள் ஐந்து போதும். [ஐந்திலும் ஒரே உள்ளடக்கம்தான் என்பதனால் படிப்பது எளிது] ஜித்து கிருஷ்ணமூர்த்தி என்றால் ஒரே புத்தகமே போதும். [அதை ’நீபாட்டுக்கு இரு ராசா’ என ஒற்றைச்சொற்றொடராக ஆக்கிவிடலாம்]. ஸ்ரீபகவத் புத்தகம் என்றால் அட்டையே போதும். ஆசான்ஜி போன்றவர்கள் என்றால் நாம் பல்விளக்காமலிருந்தாலே போதும், பேசுவதெல்லாம் மேற்கோளே.
ஒரு கட்டத்தில் நாம் கண்டடைகிறோம். ஒரு குறிப்பிட்டவகையில் அழுத்திச் சொல்லப்படும் எல்லாமே ஞானமேற்கோள்தான். ’போறப்ப கதவைச் சாத்திட்டுப்போய்யா’ என்றால் அது ஒரு கோரிக்கை. ஆழ்ந்த குரலில் ‘போகும்போது கதவைச் சாத்திவிட்டுச் செல்லுங்கள்’ என்றால் அது ஒரு மெய்ஞானம். அவ்வளவுதான், ரொம்ப சிம்பிள்.
‘ரொம்பநாள் சொற்கத்துக்கும் நரகத்துக்கும் தான் அனுப்பிட்டிருந்தோம். அப்றம் ரீசைக்கிளிங் சிஸ்டம் வந்திட்டுது”
20 ஊதிப்பெருக்கவைத்தல்
11ஆப்’
10பகடை பன்னிரண்டு
9சிரிக்கும் ஏசு
8டேனியல் லாபெல்
7ஸாரி டாக்டர்!
6ஆடல்
5கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
4 மனம்
3குருவும் குறும்பும்
2இடுக்கண் வருங்கால்…
1ஆன்மிகமும் சிரிப்பும்