நகைச்சுவை- கடிதங்கள்

வணக்கம் ஜெ

தொடர்ந்து நகைச்சுவை பற்றி எழுதிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

சென்ற வருடம் உலகம் வீடுறைவில் இருந்தபோது அச்சோர்விலிருந்து மீள பல ஆன்லைன் போட்டிகள் விளையாட்டுகள் நடத்தபட்டன. லண்டனின் தி நேஷனல் கேலரி அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ப்பெற்ற ஓவியங்களை பகடி செய்து அனுப்பசொல்லியிருந்தனர். நான் கரவாஜ்ஜியோவின் ஒரு ஓவியத்தை இப்படி அனுப்பியிருந்தேன்.  சலோமிடம் ஜான் பேப்டிஸ்ட்டின் வெட்டிய தலையை ஒரு அகலமான தட்டில் வைத்து கொடுப்பர். ‘புரியாத மொழியில் எழுதப்பட்ட

மெனுவிலிருந்து ஆர்டர் செய்தால் இப்படித்தான்’. இதை அவர்கள் பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர்.

இவ்வகையான ஒரு நகைச்சுவை, நம் கடவுள்களை பற்றியோ மதம், மரபை பற்றியோ செய்தால் அதை ஒப்புக்கொள்வார்களா தெரியவில்லை. சிறுவயதில் எனக்கு பிடித்த ஒரு விளம்பரம், இராவணணின் பத்து தலையிலும் வலி மற்றும் ஜலதோஷம் பிடித்து அவதிப்படுவார்; தைலம் தடவியப்பின் சரியாகிவிடும். ஒரு சிறுவனின் மனதுடன் பார்த்தால் அது நல்ல நகைச்சுவை. ஆனால் அந்த விளம்பரத்திற்கு எதிர்வினைகள் வந்ததை பின்னர் அறிந்தேன்.

அதே சமயம், ரிக்கி ஜெர்வேய்ஸ் என்ற பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ஒரு அமெரிக்க விருது விழாவில் சொன்னது அமெரிக்கா முழுதும் பேசுபொருளாகியது. விழா முடிவில் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி வந்து இறுதியில், “நன்றி, கடவுளே, என்னை நாத்திகராக்கியதற்கு” என்று கூறி முடித்தார். அமெரிக்காவின் சில சர்ச்சுகள் ரிக்கி ஜெர்வேய்ஸிர்காக சிறப்பு பிரசங்கம் நடத்தின.

கமலின் விஸ்வரூபம் படத்தில் ஒரு காட்சி:  விஸாமின் மனைவியை அமெரிக்க காவலர் இன்டராகேட் செய்வார். அப்போது “உன் கடவுளும் அல்லாவா?” என அக்காவலர் கேட்பார்.

“அது என் கணவரின் கடவுள். என் கடவுள்…அவருக்கு நான்கு கைகள் இருக்கும்,” என மனைவி சொல்வார்.

“நான்கு கைகளா? நான்கு கைகள் உள்ள கடவுளை எப்படி சிலுவையில் அறைவீர்கள்?”

“எங்கள் கடவுளை சிலுவையில் அறையமாட்டோம்.”

“பின்னே?”

“கடலில் மூழ்கடித்துவிடுவோம்.”

ஸ்ரீராம்

***

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இன்று தளத்தில் வந்த உங்களின் கல்வி குறித்த நகைச்சுவை கட்டுரையை படித்து, சிரித்து, வயிறு புண்ணாகிவிட்டது.

அப்படியே ஒரு நாற்பது ஆண்டுகள் பின்னாடி போய் என்னுடைய ஆரம்பப் பள்ளி நாட்களை அசை போட்டுக் கொண்டேன். அன்றைய நாட்களில் நமக்கெல்லாம் இருந்த சுதந்திரம் கூட இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு இல்லை என்பதே வேதனை. இதில் இந்த ஆன்லைன் படிப்பு என்பது அவர்களின் மீதான மிகப் பெரிய சாபக்கேடு.

பள்ளி என்பது வெறும் கல்விக்கூடம் மட்டுமல்ல வாழ்க்கை அனுபவத்தை பயில்வதற்கான ஒரு பயிற்சிக் களமும் கூட. இன்றைய ஆசிரியர்களும் கல்வித் தந்தையர்களும் இதை சுத்தமாக மறந்துவிட்டார்கள் போலும். ஆட்டுமந்தை போல அடைத்துவைத்து கல்வி என்ற பெயரில் எதை எதையோ திணிக்கிறார்கள்.

உங்களைப்போலவே எனக்கும் பல உன்னதமான ஆசிரியர்கள் ஆரம்பப் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கிடைத்திருந்தார்கள். பொறியியல் கல்லூரியில் வாய்த்த ஆசிரியர்கள் எல்லோரையும் உன்னதக் கணக்கில் எல்லாம் வைக்க முடியாது. ஆனாலும் அதிலும் கூட ஒருசில விதிவிலக்குகள் இருக்கவும் செய்தன.

இலக்கிய மற்றும் கலை ஆர்வம் உள்ள நம்மைப் போன்ற கிறுக்கல்லாத கிறுக்குகளை அந்த இளவயதில் சமாளிப்பது ஆசிரியர்களுக்கு உண்மையிலேயே பெரும்பாடுதான்.

என்னுடைய பதினோராம் வகுப்பில் சுதந்திர தினத்தன்று பள்ளி இலக்கிய மன்ற பேச்சுப் போட்டியில், எங்கே உள்ளது உண்மையான சுதந்திரம் என பேசத் துவங்கி, உண்மைச் சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பது கள்ளுக் கடைகளிலும் விபச்சார விடுதிகளிளும் மட்டுமே உள்ளது, எனவே அவற்றை ஜாதி மத பேதமற்ற உணர்வை வளர்க்கும் பொருட்டு நான் ஆதரிக்கிறேன் என பேசப் போக தலைமையாசிரியர் என்னை தனியாக அழைத்து டின் கட்டிவிட்டார். வகுப்பில் முதல் மாணவன், மற்றும் மிக நன்றாக படிக்கின்ற மாணவன், ஒரு ஆசிரியரின் மகன் என்கின்ற காரணத்தால் அன்று என்னை சும்மா விட்டார்கள்.

அதற்கு அடுத்த இலக்கியக் கூட்டத்தில் தலைமையேற்று காணாமல்போன தலைமையாசிரியர் அவர்களே என எனது நண்பன் ஒருவன் பேசப் போக அவனை இரண்டு வாரம் பள்ளியை விட்டு தூக்கி விட்டார்கள். அதன்பிறகு பேச்சுக்களை எழுதி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கிய பிறகே பேச வேண்டுமென சட்டம் எல்லாம் போட்டு, எங்கள் இலக்கிய வானில் நாங்கள் சுதந்திரமாக பறக்க முடியாதபடி வலை கட்டி விட்டார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பில் நாட்டு நலப்பணி திட்டத்தில் பத்துநாள் முகாமாக ஒரு அருகாமை கிராமத்தில் இருக்கின்ற பழமையான சிவன் கோயிலை தூய்மை செய்வதற்காக 30 மாணவர்கள் அந்தக் கோயில் வளாகத்திலேயே முகாமிட்டு இருந்தோம். தினந்தோறும் இரவில் மூன்று மணி நேரம் கலை நிகழ்ச்சிகளின் கொண்டாட்டம். அந்த கிராமத்து மக்கள் எல்லாம் கூடிவிடுவார்கள் எங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு. தினம் ஒரு நாடகம் என பத்து நாட்களுக்கு பத்து வகையான நாடகங்களை இயற்றி ஒரு ஐந்து நண்பர்கள் நடித்து அரங்கேற்றிக் கொண்டிருந்தோம். என்னுடைய இலக்கிய கைவண்ணத்தை காட்டுவதற்கு அது ஒரு பெரும் வாய்ப்பாக இருந்தது. கொஞ்சம் ஆர்வக்கோளாறு காரணமாக, பத்தாவது நாள் நாடகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்த ஒரு நாடகத்தை இயற்றி கொஞ்சம் காரசாரமாக வசனங்களை எழுதி நானே கதாநாயகனாக நடித்து வீராவேசமாக பேசினேன். என்னுடைய போறாத காலம், நான் வைத்திருந்த வசனங்களின் காரணமாக உயர் ஜாதி மற்றும் கீழ் ஜாதி என இரண்டு ஜாதி மக்களும் எங்கள் குழுவிற்கு எதிராக திரும்பி பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. அந்த ஊரில் ஏற்கனவே ஆந்திர ராஜூகளுக்கும் ஆதிதிராவிட பறையர் இன மக்களுக்கும் நீண்டகால ஜாதி பிரச்சனை பெரிய தகராறு ஆக இருந்துள்ளது. அங்கே காதல் கலப்புத் திருமணம் காரணமாக வெட்டுக்குத்துகளும் நடந்துள்ளன. இதை அறியாமல், நான் பாட்டுக்கு ஏதோ நாடகம் எழுதி கலப்புத் திருமணத்தை ஆதரிக்க போக நிலைமை சிக்கலாகிவிட்டது. ஒருவழியாக சமாளித்து மீண்டோம். இளமைக் காலங்கள் எவர் வாழ்விலும் பொற்காலங்கள் தானே! அதுவும் உங்களைப் போன்ற படைப்பாளிக்கு அது கற்பனைகளின் தங்கச்சுரங்கம் அல்லவா?

எங்கள் பள்ளியில் எங்களைப் பொருத்தவரை ஒரு ஆசிரியருக்கும் உண்மை பெயர் கிடையாது. நாங்கள் பெயர் வைக்கின்ற விதங்களும் எளிதில் அறிய முடியாதது. உதாரணத்துக்கு சில பெயர்கள், பசி வாத்தி, பட படா, ஆகவே எனவே, You See, சென்ட், கைமுட்டி, கார பக்கோடா, கார் முகில், சைடு பார்வை, மினுக்கி, வாத்து முட்டை, மோட்டார் மூக்கி, extra fitting, போண்டா கோழி, பொடி, என பலப்பல. இவற்றிற்கெல்லாம் காரணம் நான் எழுதினால் நீங்கள் என்னுடைய இமெயில் முகவரியை குவாரண்டைனில் போட்டு விடுவீர்கள். அப்புறம் என் கடிதங்களை தளத்தில் பார்த்து ஆனந்தப் படுகின்ற அந்த ஆனந்தம் இல்லாமல் போய்விடும். ஆனந்த் சுவாமி என்ற எனது பெயரை நானே கெடுத்துக் கொண்டதாகவும் ஆகிவிடும். ஆகவே அவற்றுக்கான ஊகங்களை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இந்த சில நாட்களாக நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு பகடைப் பதிவும் வெகு அற்புதம். அதுவும் அந்த மெய்யியல் குறித்த பதிவுகள் வேற லெவல். எம்மை எல்லாம் சிரிக்க வைத்து,  மூளை கொதிக்க முயன்று சிந்திக்கவேண்டிய அவசியமே இல்லாமல், எங்களுக்கெல்லாமும் சேர்த்து சிந்திப்பதற்கு என உங்களை கொடுத்த எல்லாம் வல்ல பெருங்கருணைக்கு மிகவும் நன்றி!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்
அடுத்த கட்டுரைஎது நவீன கவிதை- ஓர் உரை