நீலம் ஒரு நடனம்

அன்புநிறை ஜெ,

இந்நாட்களின் அகவிடுதலைக்காகத் தாங்கள் கூறியபடி தனிநடிப்புக்கென நீலத்திலிருந்து ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்க நீலத்திலேயே சில நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன். எதைத் தேர்ந்தாலும் இன்னொரு பகுதி கோபித்துக் கொண்டது. இன்னொரு புறம் பல பகுதிகளின் உணர்வுத் தீவிரம் தொடவியலா வண்ணம் வெகு உயரே நின்றது. எந்த அத்தியாயத்தைத் தொட்டாலும் காளிந்தியின் நீர்ச்சுழல் போல உடனே உள்ளிழுத்துக் கொண்டது. மூச்சுத்திணற மூழ்கித் திளைத்து வெளியேற மறந்து, எப்போதோ தலைதூக்கி மீண்டும் மீண்டும் திளைத்துக் கொண்டிருந்தேன். இன்று வரை வெண்முரசில் எதைக் குறித்து எழுதினாலும் இதுவரை நீலம் குறித்து எழுதியதில்லை. அது பித்தின் வெளி. எதிர்வந்து நிற்பவரை வெளியேற வழியின்றி விழுங்கிவிடும் மாய ஆடி.

நேற்றோடு இதை இனி சில காலம் படிக்க வேண்டாம் என்றெண்ணி எடுத்து வைத்தேன். ஆனால்

நீலம் மொத்தமும் ஒரு நடனமாக தொடரந்து உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நான் நடனம் அறிந்தவளல்ல, ஆனால் நீலத்தின் தாளமும் சுருதியும் உடல் உணர்ந்து கொண்டே இருக்கிறது. இது உரைநடையல்ல, மொத்தமும் இசை, காலமும் வெளியுமென காட்டிக் கொள்ளும் முடிவிலியின் லயத்தில் அச்சுப்பிசகாமல் நிகழும் ஒரு நடனம்.  இந்த நிலை தாளமுடியாததாக, வெளியேற முடியாததாக இருந்தது.

இன்று அதிகாலை முதலே காளியனிலாடிய கரியவனை (நீலம்-18) மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டே இருந்தது அகம். “கண்ணா குலக்கொழுந்தே. நில் அங்கே. அன்னை குரல் கேள் என்ற என் குரலைக் கேட்டு அவன் ஒருகணம் திரும்பினான். அம்முகத்தில் எழுந்த இளநகையைக் கண்டேன். மறுகணமே கால்நழுவி கருநீர்ச்சுழிக்குள் விழுந்தான்”. அந்தக் கருநீலக் குழந்தை ஒரு இளநகையோடு நீருள் விழுவது  ஒரு காட்சியாக பதைபதைக்க வைத்துக் கொண்டே இருந்தது.

மனதை வேறெதிலேனும் திருப்ப இணையத்தில் இசைக் கோர்வைகளைத் தேடத் தொடங்க இந்த நடனம் கண்ணில் பட்டது. கள்குடித்த குரங்குக்கு பித்தும் பிடித்தது போல ஆகிவிட்டது, நேரம் கிடைத்தால் பாருங்கள்

காளிங்க நர்த்தனத்துக்கு முன் வரும் பந்து விளையாடலில் இருந்து கணமும் கண்விலக்க முடியவில்லை. நாகமும் கண்ணனும் பார்த்துக் கொள்ளும் கணம் சிலிர்ப்பாக இருந்தது.

நீலத்தை மொத்தமும் இசைக் கோர்வையாக்கி நாட்டிய நாடகமாய் யாரேனும் வரும்காலத்தில் நிகழ்த்தலாம். ராமநாமம் உச்சரிக்கப்படும் நிகழும் இடத்தில் வந்தமரும் அனுமனைப் போல, நீலம் நிகழும் இடங்களிலெல்லாம் ராதை இருப்பாள்.

“அணைந்தது கருந்தழல். அலையடங்கி அமைந்தது கருநதி. அதிலாடி எழுந்தது என் கருநீலக் கண்ணன் கழல்” என்ற வரிகளின் சந்தம் இதோ இன்னும் செவியில் எஞ்சியிருக்கிறது.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைஇலக்கிய விருதுகளை ஏற்பது
அடுத்த கட்டுரைமதார்- கடிதங்கள் 6