அன்புள்ள ஜெ
வெண்முரசை முழுக்க வாசித்திருந்தாலும் அந்த கதைகளை எவராவது உணர்ச்சிகரமாக சொல்லும்போதோ நடிக்கும்போதோ வேறொருவகையான உணர்ச்சிகரம் உருவாகிறது. வெண்முரசின் கதையைச் சொல்லி பதிவிடப்பட்டிருந்தவற்றை நானும் என் குழந்தைகளுடன் அமர்ந்து கேட்டேன். வேறொரு உலகத்துக்குச் சென்றதுபோல் இருந்தது.
ஏனென்றால் மகாபாரதக் கதை என்னதான் எழுதப்பட்டாலும் அடிப்படையில் சொல்லும் கதைதான். செவியில் விழுந்து வளர்வதுதான். வாசிப்பு வேகம் கூடாத நம் குழந்தைகளுக்காக மொத்த வெண்முரசையும் கதையாகச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்
அத்துடன் சுபஸ்ரீயின் தனிநடிப்பு நெகிழச்செய்தது. நீலம் நாவலே காதில் இசையுடனும் உணர்ச்சியுடன் ஒலிக்கும் ஒரு பெரிய செய்யுள். அதை அப்படி டிரமாட்டிக் மோனோலாக் ஆக கேட்டது ஒரு அற்புதமான அனுபவம்
சாரதா
அன்புள்ள ஜெ,
மகாபாரதக் கதைகளை நாமெல்லாம் கதையாகவே கேட்டிருப்போம். வெண்முரசின் கதைகளை கதைகளாகக் கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன். நாவலை அப்படியே வாசித்துப் பதிவேற்றுவது வேறு. கதையாகத் திருப்பிச் சொல்லும்போது சொல்லுபவர்களின் பங்களிப்பும் அதில் உள்ளது.
அப்படிச் சொல்லிக் கேட்கும்போது கதை புதியவகையில் நம்முள் விரிகிறது. இந்த நோய்க்காலத் தனிமையில் அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கிறது. ஆடியோ மட்டுமாக இருந்தாலும் சிறப்பான அனுபவம். உணர்ச்சிகரமான நடிப்புடன் சுபஸ்ரீ முன்வைக்கும் நீலம் பகுதி கண்ணில் நீர்வரச்செய்தது. நீலம் எப்போதுமே நெகிழச்செய்யும் நாவல். தமிழ் மொழியின் அழகை காதால்தான் நம்மால் முழுமையாக ரசிக்கவே முடியும்
அர்விந்த்குமார்