வெள்ளிநிலம்- கடிதம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா,
வணக்கம். தங்களின் “வெள்ளி நிலம்” நாவலைப் படித்து மகிழ்ந்தேன். சுட்டெரிக்கும் சூரிய வெயில் உள்ள திருச்சியில் இருந்து திபெத்திற்கும், லடாக்கிற்கும், பூடானுக்கும் தங்களின் எழுத்து மூலம் நான் நொடிகளில் சென்றதுதான் ஆச்சரியம். நான் மிகவும் மூழ்கி போன கதைகளில் இதுவும் ஒன்று.
இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் நாக்போ என்கிற நாய் தான். மனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்து சலித்து கொள்ளும் அது நமக்குப் பல நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுக்கிறது.நோர்பா,பாண்டியன்,டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ் கதாப்பாத்திரங்கள் மூலம் மனிதர்கள் தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
 ‘மதம் என்பது ஒரு நம்பிக்கை என்ற நிலையை உடைத்து அது மக்களை ஒருங்கிணைக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஒரு வழிமுறை ‘ என்பதை எளிய முறையில் தாங்கள் வாசகர்களுக்கு விளக்கி உள்ளீர்கள். வரலாற்றில் ஆர்வம்
உள்ள எனக்கு 5000 வருடங்களுக்கு முன்பு அழைத்து சென்ற இந்தப் புத்தகம் ஒரு விருந்தாக அமைந்தது.
இந்த நாவலின் வாயிலாக மலைவாழ் மக்களின் உணவு முறைகள் குறித்து அறிந்து கொண்டேன்.அமைதிக் கோபுரம்பற்றிய தகவல் வியப்பளித்தது. சீனாவில் சீனர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால்  பல ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் அங்கே உள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.
புத்தகத்தின் சில பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் பெட்டிகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. கதையினைப் படங்கள் வாயிலாக காட்சிப்படுத்தியிருப்பது என்னை மிகவும் கவர்ந்து. சுவாரிசியமான கதையுடன் அரிய பல செய்திகளையும் அறிய செய்த வெள்ளி நிலம் நாவலை     அளித்ததற்குத்  தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
இப்படிக்கு,

மீ. அ. மகிழ்நிலா,

எட்டாம் வகுப்பு ,
ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ,
கூத்தூர்,
திருச்சி -621216
***
அன்புள்ள மகிழ்நிலா,
மகிழ்நிலா அழகான பெயர். உன் அப்பாவு- அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்.
வெள்ளிநிலம் உனக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளித்தது. மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது சுதந்திரம்தான். சுதந்திரம் என்பது மூன்றுவகைகளில் மனிதனுக்கு வருகிறது. ஒன்று, புதியபுதிய நிலப்பரப்புக்களில் அலையும்போது. இரண்டாவது, கற்பனைகளில் திளைக்கும்போது. மூன்று, புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும்போது. மூன்றுமே வெள்ளிநிலம் நாவலில் உண்டு. பூட்டான், திபெத், லடாக், ஸ்பிடிவேலி என புதிய நிலங்கள் உள்ளன. அவற்றில் கற்பனையில் அலையலாம். கூடவே புதியவற்றை கற்றுக்கொள்ளலாம்.
எதிர்காலத்தில் ஏராளமான நீ புதிய கதைகளை வாசிக்க, புதிய அறிவுகளை பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.கூடவே புதிய நிலங்களுக்கு நிறைய பயணங்கள் செய்யவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். லடாக், ஸ்பிடிவேலி, பூட்டான் எல்லாம் எளிதாகச் சென்றுவரத்தக்க இடங்கள்தான்.
வாழ்த்துக்கள்
ஜெ
முந்தைய கட்டுரை‘நீர்க்கோலம்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைஒளி- கடிதங்கள்-2