“சயன்ஸ்!”

”கடவுளே! என் பிரேயர் வந்து சேந்துச்சுன்னா ஒரு அறிவிப்பு குடு”

எழுபதுகளில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கண்ணனின் பார்பர்ஷாப்பில் ஒரே கூட்டம். பரவசக்குரல்கள். நான் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்த அம்புரோஸ் பெருவட்டரிடம் “என்னவாக்கும்? என்ன காரியம்?” என்றேன்

“சயன்ஸு!” என்று அவர் சொன்னார். “காலம் கெட்டளிஞ்சு நாசமத்து போவுது. எல்லாம் இந்த சயன்ஸினாலேல்லா?”

சயன்ஸை பார்க்க நான் ஓடிச்சென்றேன். கண்டேன். அது ஓர்  இரண்டுமடக்கு குடை. துபாயிலிருந்து அச்சுநாயரின் மகன் மணிகண்டன் கொண்டுவந்தது. அவர் அதை வெற்றிலைபாக்கு வாங்க வந்தபோது கொண்டுவந்திருந்தார். அறிவியலின் தூயவடிவம். ஒரு தொழில்நுட்பச் சாதனை!

தொழில்நுட்பத்தின் எதிர்காலம்!

அதை நானும் தொட்டுப் பார்த்தேன். கூட்டத்திலிருந்தவர்கள் விதவிதமாக மடித்து பார்த்தனர். “வௌவால் மாதிரில்லாடே இருக்கு!”என்ற வியப்பொலி. அக்கணமே அது வௌவால்குடை என்று பெயர் பெற்றது. உண்மையிலேயே அதன் மடிப்பு வௌவாலின் கால் அல்லது கை அல்லது சிறகு மாதிரித்தான் இருந்தது. நாய்க்குட்டி மாதிரியான பாவமான முகம்தான் இல்லை.

முறைவைத்து அதை வாங்கி மடித்து விரித்து பார்த்தனர். அது டப் என விரிந்தபோது “சிறகடிக்குது” என்று குரல். “எளவு கையிலே அடிச்சுப்போட்டுதே… வெசமுண்டாலே?” என்று ஐயங்கள்.

”இதை இப்டியே சஞ்சியிலே வைச்சுகிடலாம்”என்று அச்சுநாயர் சொன்னார். “அங்கெல்லாம் வீடுகளை இதேமாதிரி சுருக்கி மடக்கி சஞ்சியிலே வைச்சு கொண்டு போறாங்களாம். எனக்க மவன் சொன்னான்… சயன்ஸு போற போக்கே!”

”நீ செஞ்சதெல்லாம் ஃபேஸ்புக் அக்கவுண்டிலேயே இருக்கு, பாத்துக்கிடறேன்”

“அமெரிக்காவிலே பஸ்ஸையில்லா இப்டி சுருட்டி மடக்கி வீட்டுக்குள்ள ஓரமா கொண்டுபோயி வைக்கான்!” என்று நல்லதம்பி சொன்னார்.

அச்சுநாயர் குழம்பிவிட்டார். அதை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. மறுத்தால் தான் சொன்னதும் மறுக்கப்படும். ஏற்றால் தான் சொன்னது சின்னதாக ஆகிவிடும்.

சகாவு ஸ்ரீகுமார் “ரஷ்யாவிலே ஏரோப்பிளேனை சுருக்கி வைச்சிருக்கான்… ஆயிரம் ஏரோப்ளேனை ஒரு வீட்டுக்குள்ளே கொண்டுபோயி அடுக்கி வைச்சிருவான். வேணுங்கிறப்ப எடுப்பான். அதக்கண்டு பயந்துல்லாவே அமெரிக்கா அந்தால பொத்திக்கிட்டு இருக்கு” எங்களூரில் சகாவு சொல்வதே அறிவியக்கத்தின் அறுதிச் சொல்.

வாரிசு

ஆனால் என்னால் நவீனத் தொழில்நுட்பத்தின் அந்த வெற்றியை மறக்கவே முடியவில்லை.தங்கையா நாடாரிடம் சொன்னேன். “அந்தக்காலத்திலே இங்கே ஓலைக்குடையாக்கும். அப்பதான் இந்தச் சீலைக்குடை வந்தது. மடக்கி கக்கத்திலே வைக்குத குடை. காக்காய் சிறகு விரிக்கிற மாதிரி விரிஞ்சுகிடும். அதனாலே அதுக்கு காக்காக்குடைன்னாக்கும் அப்ப பேரு. காக்கா போயி வௌவால் வந்திருக்கு…”

தங்கையாநாடார் தொழில்நுட்பம் அறிந்தவர். வால்வ் ரேடியோவை பழுதுபார்ப்பார். ஏதாவது கேள்விகேட்டால் பேசுவதற்குமுன் அப்பு அண்ணா “ம்ம்ம்ம் ஆஆஅ…ங்ங்ங்ங்” என நீண்ட ஒலியெழுப்பி மெல்ல சொல்லெடுப்பதைக் கண்டு நான் வியந்தபோது “அவன் தலைக்குள்ள வால்வு சூடாகி வரணும்லா?”என்றார். நான் நெடுநாட்கள் மனித மண்டைக்குள் வால்வுகள் உண்டென்றே நம்பியிருந்தேன்.

எங்கள் தமிழய்யா அறிவியல் கிறிஸ்தவர். ஏசு கன்னி வயிற்றில் பிறந்தது முதல் தண்ணீரை ஒயினாக்கி, தண்ணீர்மேல் நடந்து, உயிர்த்தெழுந்தது வரை அறிவியல்பூர்வமானவை என்றும் மற்றவை மூடநம்பிக்கை என்றும் நம்புபவர்.”ஏலே சிவனுக்க தலையிலே நிலா இருக்கு. நிலாவிலே கிறிஸ்தவன் காலை வைச்சாச்சு. கிறிஸ்தவன் சவிட்டின தலையாக்கும்லே சிவனுக்கு!” என்பார். சிவனை வெள்ளைக்காரன் மிதித்தமைக்காக நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

நிலாவில் ஆம்ஸ்ட்ராங் போன பிறகு கிராமங்களில் அறிவியல்புரட்சி உருவானது. பிள்ளைகள் சயண்டிஃபிக் என்ற சொல்லுக்காக எதையும் செய்தார்கள். எழுபதுகளில் சயண்டிபிக் பட்டன் என்று ஒன்று வந்தது. ஜாக்கெட்டில் வைத்து தைப்பது. அழுத்தினால் சட்டென்று ஒட்டிக்கொள்ளும். இழுத்தால் வரும். “நாம எப்ப மூடுதோம் எப்ப திறக்கிறோம்னு அதுக்கு தெரிஞ்சிருக்கு பாரேன்” என்றார் சண்முகம் பிள்ளை மாமா. கணேசண்ணன் சோகமாக “சிலசமயம் நல்ல நேரத்திலே புரிஞ்சுகிடாம சள்ளை பண்ணிப்போடும்”என்று சொன்னார்

ஊரடங்கின் கடைசித் தொழில்நுட்பர்

பின்னர் ஸிப் வந்தது. “வலிச்சா திறக்கும் மறுக்கா வலிச்சா மூடிரும்” கிராமங்களில் பரபரப்பு. “முதலைக்க வாயி மாதிரி இருக்கு” என்று உவமை. அதன் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ள கடுமையான ஆராய்ச்சிகள் நடந்தன. கைப் பையில் சிப் வைத்துக்கொள்ள பெரும் ஆர்வம் இருந்தது.

“ஒண்ணுமில்ல காந்தம் வச்சிருக்காண்டே…”

ஆனால் பலர் மறுத்தனர். “அது சயன்ஸாக்கும். சமயங்களிலே மக்கர் பண்ணிப்போடும். திறக்கல்லேன்னா வெள்ளக்காரன விளிக்க முடியுமாலே?”

“ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் பண்ணின தக்காளியிலே என்னமோ பயங்கரமா தப்பா போயிடிச்சு” 

பெரும்பாலானவர்க்ள் பாண்டில் ஸிப் வைத்துக்கொள்ள அஞ்சினர். பலருடைய மென்நுனிகள் அதில் சிக்கி கதறி கண்ணீர்விட்டு அப்படியே ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல நேரிட்டபின் “அங்க வேண்டாம் கேட்டியளா? இனி வாழ்க்கைக்கு இருக்குத ஒற்றை ஒரு நம்பிக்கை அதாக்கும்”. எண்பதுகளில் ஜீன்ஸ் வருவது வரை அங்கே மட்டும் ஜிப் இல்லை.

மூன்றாம்பிறையிலோ என்னவோ கமல் சில்க் ஸ்மிதாவின் உடையின் நீண்ட ஸிப்பை திறப்பார். unzip என எங்கே படித்தாலும் அது நினைவில் வந்து தொலைகிறது. winzip என்று இன்னொன்றும் கண்ணில் படுகிறது. கமல் செய்தது அதுதானோ?

”குழந்த நல்லா வளந்திட்டிருக்கு. நீங்க விரும்பினா அதுக்கு ஒரு இமெயில்கூட அனுப்பலாம்”

”சயன்ஸுக்கு ஒரு இது உண்டு, அது நாம ஒண்ணை பளகிட்டா அதை அப்பமே விட்டுப்போயிரும். பளகாத்த விசயமாக்கும் சயண்டிஃபிக்” என்று எங்கள் சரித்திர ஆசிரியர் ஆறுமுகம் பிள்ளை சொல்வார். “பளகிப்போன விசயமாக்கும் சரித்திரம்…” என்று சேர்த்துக் கொள்வார்.

அது உண்மைதான். சென்ற அறுபதாண்டுகளில் நான் ஆண்டுதோறும் திகைப்பூட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகளை சந்தித்தபடியே இருக்கிறேன். மையை தானாக உறிஞ்சும் பேனா, பென்சிலின் தலையிலேயே ரப்பர், பாக்கெட் ரேடியோ, பென்சில்டார்ச், முடிவெட்டும் எந்திரம், டேப்ரிக்கார்டர், கால்குலேட்டர், டிஜிட்டல் வாட்ச், ஆட்டமேட்டிக் பல்தேய்க்கும் பிரஷ், கேஸ் அடுப்பு, கயிறைப்பிடித்து இழுத்தால் தண்ணீர்கொட்டும் கழிப்பறை, டிவி, கம்ப்யூட்டர், செல்போன், மைக்ரோவேவ் அடுப்பு, டிரோன், எஸ்கலேட்டர், சொன்னபடி கேட்கும் கார்  என்று எவ்வளவோ விஷயங்கள்.

எங்களூரில் சயன்ஸ் என்ற சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்! என் அப்பா அந்தக்கலத்தில் சுயசவரம் செய்பவர். பயன்படுத்திய ரேசர் பிளேடை வாங்க ஏகப்போட்டி. முன்னரே சொல்லி வைத்திருப்பார்கள். ராமன் வந்து என்னிடம் அதில் ஒன்றை எடுத்து தரச்சொல்லி கேட்டான். அதற்கு அவன் சொன்ன வார்த்தை எனக்கு புரிய நெடுநேரமாகியது. “சயன்ஸுகத்தி”

இப்போதெல்லாம் சயன்ஸ் என்றாலே வாயைப்பிளப்பதற்கு தயாரான மனநிலையை படிப்படியாக வந்தடைந்துவிட்டேன். கடைசியாக ப்ளூடூத் தொழில்நுட்பத்தை கண்டு திகைத்தேன். அஜி எங்கோ எவரிடமோ ஏதோ பேசி, குரல் கேட்காமல் கத்த, என்னருகே ஒரு விந்தையான பொருள் பேய் போல பேசிக்கொண்டிருந்தது.

“வேலைபாக்கிறவங்க ரெகுலனா இமெயில் பாக்கணும். உங்க டிஸ்மிசல் ஆர்டரை போனமாசமே அனுப்பிச்சாச்சு”

பழையகாலம் முதல் அறிவியலில் மக்களுக்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது. நிலைக்கல் குகையில் சக்கரங்களின் கற்குடைவுப் படங்கள் இருக்கின்றன. கற்காலத்திலேயே சக்கரங்களை உருட்டலாம் என்னும் பிரபஞ்ச உண்மையை கண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் வண்டுருட்டிப்பழம் என்னும் இயற்கை நிகழ்விலிருந்து கண்டடைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் அறிவியலை நாம் இரண்டு வகையாகப் பார்க்கிறோம். நமக்கு உடனடியாகப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்பது ஒரு பொம்மை. பயன்படுவதே பரவசம் அளிப்பது. நெடுங்காலம் முன்பு கோதையாறு மலைக்குச் சென்றபோது காணிக்காரர்கள் சயன்ஸ் என்ற வார்த்தையை சகஜமாகப் பயன்படுத்துவதை கண்டேன். அப்போது அங்கே பாதையோ வண்டிகளோ வருவதில்லை. கழுதைகள்தான். கழுதை கொண்டுவரும் ஒருவரிடம் ஒரு பொருள் உண்டு என்று காணி சொன்னார். கண்கள் விரிய பரவசத்துடன் “அது சயன்ஸாணு”

”போனை மறந்துட்டேன். எல்லாத்தையும் மூளையிலேயே வைச்சுகிட வேண்டியிருக்கு…”

அவர் சொன்னது தீப்பெட்டியை. தீயை மடியில் கட்டிக்கொண்டு அலையலாம் என்பதை அவரால் பல ஆண்டுகளாகியும் நம்ப முடியவில்லை. தீப்பெட்டி வந்தபின்புகூட நெடுங்காலம் காணிகள் மரக்கட்டைகளையும் கற்களையும் உரசித்தான் தீ உருவாக்கினார்கள். தீ ‘மண்ணுகாருக்கு’ அதாவது சமநிலத்தவருக்கு மட்டுமே கட்டுப்படும் என்று நினைத்தார்கள்.

அதன்பின் அவர்களில் தலைமைப்பண்பும் ஆய்வுமனநிலையும் கொண்டவர்கள் மட்டும் தீப்பெட்டிக்கு வந்தார்கள். அப்போதுகூட அது அபாயகரமான ஓர் அறிவியல் உபகரணம் என்று நினைத்தார்கள். மடியிலிருக்கும் தீப்பெட்டியை தொட்டு “என்றெ கையில் தீயிண்டு! தீ”என்று சொல்லிக்கொள்பவர்களை கண்டிருக்கிறேன். தீப்பெட்டியை தொட்டு சத்தியம் செய்வார்கள்.

நானே வியந்திருக்கிறேன், நமக்கு சின்னவயசிலேயே பழகிவிட்டது. ஆனால் தீயை அப்படி ஒரு சாத்தியக்கூறாக, ஒரு பொருளில் வைத்திருப்பதுபோல திகைப்பூட்டும் கண்டுபிடிப்புகள் குறைவுதானே?

“இவ்ளவு பழைய டெக்னாலஜிய பயன்படுத்துற நீங்க சொல்ற டேட்டாவ எப்டி நம்புறது?”

ஆனால் பழங்குடிகளைப் பொறுத்தவரை பயன்பாடற்ற, ஆகவே குதூகலமான அறிவியல் கண்டுபிடிப்பு என்பது வண்டிகளின் ’ஆரன்’ தான். அதை அடித்து சத்தம் உருவாக்க அப்படி ஆசைப்படுவார்கள். பழைய பலூன் பாணிஆரன்.

லாரிக்காரர்கள் ஒருமுறை ஆரன் அடிக்க ஒரு பலாப்பழம் என்ற மேனிக்கு கூலி பெற்றுக்கொண்டு அனுமதிப்பதை, ஆரன் அடித்தபின் முகம் மலர கண்கள் இடுங்க பரவசத்துடன் செல்லும் காணிகளை நான் கண்டிருக்கிறேன்.

ஒரு முறை ஒரு நூறுவயதான காணி ஆரன் அடித்தபின் நவீன அறிவியலை நேருக்குநேர் சந்தித்த உத்வேகத்தில் கண்ணீர் விட்டது. நான் கேட்டேன்  “காணி சயன்ஸ் எப்டி இருக்கு?”

காணி முகம் பல்லாயிரம் சுருக்கங்களால் நெளிபட சொன்னது. “சயன்சு கொள்ளாம். நல்லதாக்கும்” மேலும் வெட்கத்துடன் “பஸ்ஸும் வெக்கப்படாம நின்னு குடுத்துது”

அது அப்படித்தான். முப்பதாண்டுகளுக்கு முன் அஜந்தாவில் ஒரு ஜப்பானியர் ஒருவன் விற்றுக்கொண்டிருந்த ஒரு பொம்மையை கண்டு வியந்து மகிழ்ந்து துள்ளிக்கொண்டிருந்தார். அது ஒரு கட்டையில் ரப்பர் பாண்டை சுற்றிவைத்து இழுத்து இழுத்து ஓடவிடும் டிராகன் போன்ற காகிதப்பொம்மை. அவர் அது தன்னருகே வந்தபோது சிறுவன் போல துள்ளி விலகினார்.

பின்னர் எனக்கு அறிமுகமானார். அவருடன் சுற்றினேன் அவர் டொயோட்டோ கம்பெனியில் உயர்பதவியிலிருக்கும் பொறியாளர் என அறிந்துகொண்டேன். “நீங்க எவ்ளவோ டெக்னாலஜி பாத்திருப்பீங்க”

“டெக்னாலஜியா? நானா?”

“பின்ன?”

“டெக்னாலஜி எல்லாம் மிஷினுக்குத்தான் தெரியும்”

“அப்ப நீங்க?”

“எந்த மிஷினுக்கு என்ன தெரியும்னு மட்டும்தான் எனக்குத்தெரியும்”

முந்தைய கட்டுரைஅடங்குதல்
அடுத்த கட்டுரை’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021