அன்புள்ள ஜெயமோகன்,
கதாநாயகி சிறுகதையைப்பற்றி வந்த கடிதங்கள் பெரும்பாலும் ஆண்களிடமிருந்தே வந்துள்ளது.இக்கதை முக்கியமாக எழுப்பி உள்ள பெண்களின் மன ஓட்டஙகளைப்பற்றி பெண் வாசகர்களின் மௌனம் வியப்பளிக்கிறது.
நெல்சன்
***
அன்புள்ள நெல்சன்
அது ஒரு நல்ல கேள்விதான். ஆனால் பெண்கள் எவருமே எழுதவில்லை
ஜெ
***
வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,
நல்லதொரு நாவலை அளித்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.
இதுபோன்றதொரு கதைக்கருவை வைத்து வேறு எவரேனும் இப்படி இதுவரை தமிழில் கதை எழுதி இருக்கிறார்களா என தெரியவில்லை. ஒரு மிகப் புதுமையான கதைக்களம். உங்களுக்கே உரிய செறிவான நடை.
இந்த நாவலைப் படித்து முடித்து பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன். முதலாவதாக பெண்களின் ஆழ்மன சிந்தனைப் போக்கு மற்றும் எண்ண ஓட்டங்கள், அடுத்ததாக ஏன் எல்லா விதமான சமூக அமைப்பிலும் ஒவ்வொரு முறையும் மென்மையானவர்கள் பலியிடப்படுகிறார்கள், மூன்றாவதாக ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் எப்படி ஒரிடத்தின் ஒட்டுமொத்த மலைவாழ் சமூக மாற்றத்திற்கு வழிகோலமுடியும் என்பது.
ஒரு பேய்களின் கதை என்பதையும் தாண்டி இந்தக் கதையை நான் மன அடுக்குகளை, உள்ளத்து ஆசைகளை, ஆழ்மன இடுக்கின் அழுக்குகளின் வெளிப்பாடுகளை காட்சிப்படுத்தும் ஒரு உன்னத கலைப்படைப்பாகவே கண்டேன்.
அமானுஷ்யமும் ஆன்மீகமும் அடிப்படையில் மனம் என்கின்ற கட்டமைப்பின் விந்தை இயல்புகளைச் சார்ந்தே இயங்குகின்றன. ஒருவகையில் பார்த்தால் இரண்டுக்குமே மன ஒர்மையும், ஆழ்ந்த ஈடுபாடும், நம்பிக்கையும் கொஞ்சம் கிறுக்குத்தனமும் தேவைப்படுகின்றன.
ஆன்மீக சாதனைகளின் பொழுதுஉருவெளிக் காட்சிகள் கிடைப்பதாக பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். சிலருக்கு கடவுளர்கள்,தேவதைகள், பிசாசுகள், பேய்கள், யட்சிகள், கந்தர்வர்கள் என பல்வேறு விதமான காட்சி அனுபவங்கள் கிடைத்திருப்பதாகவும் 100 சதவீத நம்பிக்கையோடு கூறியிருக்கிறார்கள். வேறு சிலருக்கு முன்னோர்கள், குருமார்கள், தான் வணங்கும் ஞானிகள் மற்றும் தன்னோடு வாழ்ந்து மறைந்தவர்கள் என மனிதர்களின் ஸ்தூல தரிசனம் இன்றளவும் கிடைத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
யதார்த்த உலகத்தைப் போலவே நிகரான ஒரு அமானுஷ்ய உலகத்தை மிகத் தீவிரமாக தாங்களே உருவாக்கி அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரை நான் அறிவேன். எந்த வகையிலும் இது ஒரு மனச்சிதைவு நோய் என்று நம்மால் அவர்களுக்கு புரியவைக்க முடியாது. அதுவும் முக்கியமாக ஆன்மீக சாதகர்களுக்கு இதைப் புரிய வைத்தல் சாத்தியமே இல்லை.
தங்களுக்கு அடிக்கடி கடவுளின் தரிசனம் கிடைத்துவிட்டதாக அல்லது கிடைத்துக் கொண்டிருப்பதாக மார்தட்டிக் கொள்வார்கள். அத்தகைய தரிசனங்களை அவர்களைத் தவிர வேறு யாருக்கேனும் அவர்கள் காட்ட முடியுமா என்றால், முடியாது என்றே பதில் வரும். பேய்கள் பிசாசுகள் போன்றவற்றை மறுத்து வாதிடுவதைப் போல அத்தனை எளிதாக கடவுள்கள் மற்றும் தேவதைகளின் காட்சி வெளிப்பாடுகளை சுலபத்தில் நம்மால் மறுத்து வாதிடமுடியாது. கடவுள் காட்சிகளும் கூட மனச் சிதைவின் அடையாளமே என நம்மால் அவர்களிடம் கூறிவிட முடியாது.ஏனென்றால் இது அவர்களின் ஆன்மிக சாதனையின் ஒரு பகுதி, இந்தப் பகுதியைக் கடந்து, அவர்கள் அரூப சாதனையை நோக்கியும், அதைக் கடந்து உருஅரு கடந்த உயர்தள தத்துவ தரிசனத்தை நோக்கியும் நகர முடியும். எனவே அவர்களிடத்தில் எதையும் வாதிக்காமல் விட்டுவடுவதே நாம் செய்யக்கூடியது. நமது பாரம்பரியமான ஆன்மீக சாதனை மரபுகளும் கூட இவற்றை அறிந்தே அனுமதித்துள்ளன. இவற்றை ஆன்மிக சாதனையின் படிநிலைகள் என புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டால் போதுமானது. மற்றபடி அறிவியல்பூர்வமாக அணுகுகிறேன் என்று உடைத்துப் போடத் துவங்கினால் விரக்தியே மிஞ்சும்.
இன்னும் ஒருபடி மேலே போய் சுல்பா, சரஸ், கஞ்சா, மேஜிக் மஷ்ரூம், வேறு சில ஆயுர்வேத மூலிகைகள் என பலவற்றை உட்கொண்டு, வலிந்து தாமே உருவாக்கிக் கொள்கின்ற உருவெளி புலன்காட்சி மயக்க சாதனை முறைகளும் கூட மனதின் அடுக்குகளை கலைத்துப் போட்டு மீளுருவாக்கம் செய்ய ஆன்மிக சாதனையின் துவக்க கால கட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பலர் இந்த முறைகளில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் போதை அடிமைகளாகவும், பைத்தியங்கள் ஆகவும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய இரவு நாவலில் ஓரளவுக்கு இவற்றை தொட்டுக்காட்டி சென்றிருப்பீர்கள்.
பல நேரங்களில் சித்த விருத்தி நிரோதத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்படுகின்ற சாதனைகள் கட்டுக்கடங்காத சித்த விருத்தியில் ஆழ்த்தி விடுவதுண்டு. சரியான குருவின் வழிகாட்டுதலும், உறுதுணையும் இல்லாதவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு சிதைந்து அழிந்து போகிறார்கள். நல்லவேளையாக மெய்யன் பிள்ளைக்கு ஒரு நல்ல மருத்துவர் கிடைத்தார், அதனால் அவர் மனச் சிதைவு நோயிலிருந்து விடுபட்டார். ஆனால் முற்றிலுமாக விடுபட்டாரா என்றால், இல்லை என்றே கதையின் முடிவு காட்டுகிறது. நீங்களே சொன்னது போல, அளவான அத்துமீறாத மனச்சிதைவும் கூட, செயற்கரிய செய்வதற்கு அவசியம்தான் போலும்.
கதாநாயகி புனைவில் உண்மையில் கதாநாயகி மெய்யன் பிள்ளையின் மனம்தான். தான் கண்டது கேட்டது படித்தது என அனைத்தையும் வைத்து அனைத்து கதாநாயகி வேடங்களையும் அந்த மனமே, உண்மை கற்பனை என இரண்டையும் கலந்து புனைந்துகொள்கிறது. தான் புரிந்து கொண்டவற்றை உருவெளிக் காட்சிகளாக மிக சாமார்த்தியமாக வடித்து அவற்றை ஐம்புலன்கள் வழியாக அனுபவம் பெறுவதாகவும் தனக்குத் தானே ஒரு உலகை சமைத்துக் கொள்கிறது.
தனக்கு மனச்சிதைவு நோய் இருக்கிறது என்பதை அறிந்தும், அதற்கான மருத்துவம் செய்து அதிலிருந்து ஓரளவு விடுபட்ட பின்பும் கூட, மெய்யன் பிள்ளையின் மனது பேய்களின் இருப்பை நம்ப விழைவதும், அவைகளை உருவெளி காட்சிகளாக காப்டன் மக்கின்சி மற்றும் கர்னல் சாப்மென் என அவ்வப்போது சமைத்து கொள்வதும் விந்தைதான். இயற்கை பரிணாமத்தின் உச்சத்தில் விளைந்த அற்புத கனியான மனித மனத்தை அத்தனை சுலபமாக விளங்கிக் கொள்ள முடியுமா என்ன.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தளத்தில் இந்த கதை தொடராக வந்து கொண்டிருக்கின்ற போதே சுக்கிரி குழுமத்தில் slack app இல் நாங்கள் நண்பர்கள் ஒரு பதினைந்து இருபது பேய்களை குறித்த அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். என்னை அமுக்கிய பேய் பெரியதா உன்னை அமுக்கிய பேய் பெரியதா, அந்த நான்கு வெள்ளைக்கார பேய்களில் எனக்குப் பிடித்த பேய் இதுவா அல்லது அதுவா என்கின்ற அளவிற்கு விவாதம் களைகட்டி விட்டது. உங்கள் கதையில் வந்த நான்கு கதாநாயகி பேய்களை விட எங்கள் சுக்கிரி குழுமத்தில் வந்து விளையாடிய பேய்கள் கொஞ்சம் பயங்கரமானவைகளாக இருந்தன. கதாநாயகி கதை ஒரு கொண்டாட்டம் என்றால் அதை குறித்த சுக்கிரியின் உடனடி அன்றாட விவாதங்கள், பகடைகள், அனுபவப் பதிவுகள் மற்றுமொரு நிகர் கொண்டாட்டம். எல்லாப் புகழும் ஜெயமோகன் என்கின்ற கதாநாயகி பேய்களை படைத்து உலவ விட்ட இலக்கிய பிரம்மாவிற்கே!
இந்த கூத்திற்கு நடுவே ஆஸ்திரேலியா கலா மேடமும் நம் வைஜயந்தி மேடமும் விஜயலட்சுமி மேடமும் நாங்களெல்லாம் இருக்கின்ற பொழுது எங்களை விட்டுவிட்டு அது எப்படி வேறு பேய்களைப் பற்றி நீங்கள் பேசலாம் என்று மிக அன்பாகவும் உரிமையோடும் எங்களைக் கடிந்து கொள்கின்ற அளவிற்கு சென்று விட்டது நிலைமை… சிட்னி கார்த்திக் சுக்கிரியில் வெளிப்பட்ட அனுபவ பேய்களை கண்டு பயந்துபோய் கொஞ்ச நாள் குழுவுக்கு வருவதையே நிறுத்திவிட்டார். இரவோடும் பேயோடும் எங்களை எல்லாம் நீங்கள் படுத்தி வைக்கின்ற பாடு கொஞ்ச நஞ்சமல்ல… நாலு பேயோடு இந்த மனுஷன் எப்படி ஐய்யா தினம் காட்டு பங்களாவில் குடும்பம் நடத்துகிறார் என்று எங்களை வியக்க வைத்து விட்டீர்கள்….. இவைகள் போதாதென்று மெய்யன் பிள்ளை பார்த்த புலி உண்மை புலியா? அல்லது பேய் புலியா? . உண்மை புலி எனில் அது எத்தனையாவது தலைமுறை புலி? என மிக ஐயம் கொண்டு கேள்வி வேறு கேட்கப்பட்டது!
அந்த முகில் இந்த முகில், குமரித் துறைவி மற்றும் இந்த கதாநாயகி என ஒவ்வொரு குறு நாவலும் ஒவ்வொரு தளத்தில் நின்று வாழ்க்கையை, மனித மனத்தை, அதன் இயங்குதளங்களை அது உருவாக்கிக் கொள்ளும் வெவ்வேறு வகையான உலகங்களை வெகு அற்புதமாக வடித்து காட்டுகின்றன. நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பெருவரம்.
உங்களுள்ளும் எங்களுள்ளும் அந்த அளவான, கிறுக்குத்தனம் மற்றும் கொஞ்சம் மனச்சிதைவு இருந்துவிட்டுதான் போகட்டுமே….என்ன குறைந்து விடப் போகிறது….
அப்போதுதானே நீங்கள் இலக்கியம் படைக்கவும் நாங்கள் அதை தூக்கம் கெடுத்துக்கொண்டு நள்ளிரவில் எழுந்து ஆழ்ந்து படித்து, குழம்பி தவித்து, மீனாட்சியோடும், ஸ்ரீ பாலாவோடும், கதாநாயகி பேய்களோடும் நிகர் வாழ்வு வாழ்ந்து அனுபவிக்கவும் முடியும்…. எல்லோரும் சித்தவிருத்தி நிரோதம் செய்து முக்தி அடைந்து விட்டால் யார் கதையை எழுதுவது, யார் படிப்பது!
ஆகவே…….
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
***
அன்புள்ள ஜெ,
ஸ்கிஸோபிரினியா போன்ற உளச்சிதைவுகள் இலக்கியத்தில் அடிக்கடிப் பேசப்படுகின்றன. நான் முதலில் வாசித்து மிரண்டது பின்தொடரும் நிழலின் குரல் நாவலில்தான்.அதன்பின் பல கதைகளில் வாசித்திருக்கிறேன். அது ஓர் உச்சநிலை, மிக கிரியேட்டிவானது என்று கதாநாயகியில் மெய்யன் சொல்கிறான். அதுதான் இலக்கியம் அதை பொருட்படுத்திப் பேச காரணமாக இருக்கமுடியும்.
சகஜநிலை என்பது ஒரு இறுக்கமான நிலை. அதை உடைக்காமல் மனித உள்ளத்தை அறியமுடியாது. அந்த சகஜநிலைகள் இல்லாமலாகும் சூழல்களையே கதைகள் எப்போதும் தேடிக்கொண்டிருக்கின்ரன
ஆர்.நாகராஜ்
***