கல்வி

”அவ்ளவு விசயம் தெரிஞ்சவங்கன்னா ஏன் உங்கள டீவியிலே காட்டல?”

என் வீட்டுச் சபைகளில் அடிக்கடி நிகழும் ஒரு சோகம், குடும்பத்திலேயே குறைவான கல்வித்தகுதி கொண்டவன் நான் என்பதுதான். அதைவிடச் சோகம் நம் நண்பரவைகளில் பெரும்பாலும் குறைவாகப் படித்தவன் நான். அப்போதெல்லாம் ஆர்.சுந்தரராஜன் சொன்னதாக ஒரு நகைச்சுவை நினைவுக்கு வரும்.

இப்ராகீம் ராவுத்தர் கம்பெனியில் ஆர்.சுந்தர்ராஜன் படம் செய்தபோது ஒரு பையன் சாம்பார் ஊற்ற வந்திருக்கிறான். அவனிடம் சுந்தர்ராஜன் கேட்டார். “டேய், என்னடா படிச்சிருக்கே?”

“அண்ணே ரெண்டாம் கிளாஸ்ணே”

“சரி, ஆனா இந்த ஆபீஸ்லேயே ஜாஸ்தி படிச்சவன்கிற திமிர் என்னிக்குமே உனக்கு வரக்கூடாது…பாத்து நடந்துக்கோ,போ”

”எங்க டீச்சர் சொன்னாங்க, பொண்ணுகள் நினைச்சா என்ன வேணுமானாலும் ஆகலாம்னு. நீங்க ஏன் கிளவியானீங்க?”

கல்விக்கூடங்கள் என்றைக்குமே நகைச்சுவையின் பிறப்பிடமாகவே இருந்திருக்கின்றன.உலகிலேயே மகிழ்ச்சியான செயல்பாடு என அரிஸ்டாட்டில் சொல்வது கற்றுக்கொள்வதுதான். அது அத்தனை துயரமானதாக ஆவது எப்படி? அதை அப்படி ஆக்கியதுதான் நவீன நாகரீகத்தின் உச்சகட்ட நகைச்சுவை என நினைக்கிறேன். அதை நகைச்சுவையால்தானே எதிர்கொள்ளவேண்டும்?

நான் பள்ளிநாளில் படிக்கையில் உருவாக்கிய நகைச்சுவைகள் பல உண்டு. அவற்றையெல்லாம் பகிரமுடியாதபடி நாகரீகமானவனாக ஆகிவிட்டேன். ஆனால் பல வெண்பாக்கள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன என்று தெரிந்துகொண்டேன்.

இது பாலா ஜோக். சிங்கம்புலி சொன்னது, ஆகவே பொய்யாகத்தான் இருக்கும். நான்கடவுள் படத்தில் எடுக்கப்பட்ட, பின்னர் படத்தில் இல்லாத ஒரு காட்சி. தாண்டவனின் அறிமுகம். அவன் மேல் ஒரு வாத்தியார் புகார் அளித்திருக்கிறார். அவனை வரவழைத்து ’விசாரணை’செய்கிறான்.

”நீதான் புரிஞ்சுகிடணும். அவன் அன்புக்குறைபாட்டு மனசிக்கல் உள்ள குழந்தை”

வழக்கமாக வில்லனை கொடூரமானவனாக அறிமுகம் செய்யும் காட்சிதான். வாத்தியாரை சிக்ஸ்பேக் வைத்த மொட்டைராஜேந்திரன் அடித்து தூக்கி பஞ்சாமிர்த அண்டாவில் போட்டு அங்கிருந்து தூக்கி விபூதி குண்டானில் போட்டு அங்கிருந்து தூக்கி குங்கும தொட்டியில்போட்டு…

அதற்கு பன்னிரு ரீடேக். கடைசியில் அடிவாங்கியவரின் கால்முறிந்து விட்டது. என்ன கொடுமை என விசாரித்தபோது தெரிந்தது, பயனர் பாலாவின் முன்னாள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர். ஓய்வுபெற்றபின் கலைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்பி வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

“ஃபோன் பண்ணிப் பாருங்க சார்” என்றார் சிங்கம்புலி. அழைத்தால் ஆஸ்பத்திரியிலிருந்து ஆசிரியரின் ரிங்டோன். “கலையே என் வாழ்க்கையின் நிலைமாற்றினாய்!”

”தாத்தான்னு சொல்லிக்குடுத்தேன். டேட்டான்னு சொல்லுது”

நான் என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது சந்திப்பதுண்டு. அவர்களில் பலர் எண்பது வயதானவர்கள். ஆனாலும் அவர்கள் என்னை மறக்கவில்லை. ஒருவர் தன் மனைவியிடம் சொன்னார். “ஆழமான டவுட்டெல்லாம் கேப்பான். ஏழும் மூணும் கூட்டினா பத்து வரும்னு சொல்லிக் குடுத்தேன். இங்கிலீஷ்லே எழுதி கூட்டினாலும் அதுதான் வருமான்னு கேக்கிறன்”

“பொறவு என்ன சொன்னீங்க?”

“அதுதான் வரும்னு சொன்னா அடுத்த டவுட்டு. அப்ப ஏன் கஷ்டப்பட்டு இங்கிலீஷ்லே எழுதணும்? கணக்கிலேயே எழுதினா போருமேன்னுட்டு. கணக்குங்கிறது ஒரு பாசை இல்லைன்னு சொல்லி புரியவைக்க எனக்கு ஏலில்ல. ஒரு தட்டு தட்டி இருத்தி வைச்சேன்”

”ஸ்ஸ்… இதை எப்டி ஆன் பண்றதுன்னு தெரியுமா?”

என்னை பிற்பாடு நெடுநாள் சந்திக்காத ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைச் சந்திக்கும்போது அவர்கள் கொஞ்சம் துணுக்குறுவதை கண்டிருக்கிறேன். “லே, என்ன செய்யுதே?”

“போனாப்பீஸ் வேலை சார்”

”என்ன வேலை?” குழி தோண்டுகிறானோ என நினைத்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியும்.

“கிளார்க்கு”

அவர்கள் ஐயமாக இருபக்கமும் பார்த்து “உனக்கா? நீ என்ன படிச்சே?”

“பீயூசி பாஸ்”

“நீயா?”

”டேய், அதை ஸூம் பண்ண முடியாது”

நான் ஆரம்பப் பள்ளியில் கற்றல்குறைபாடு, அறிவுக்குறைபாடு, நாணயக்குறைபாடு மற்றும் அடக்கக்குறைபாடு போன்ற பல கொண்டவனாக கருதப்பட்டிருக்கிறேன். எனக்கு நினைவுச்சிக்கல் உண்டு என நம்பிய ஆசிரியர் ஒருவர் நான் ’பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா’ என்னும் மெட்டில் அல்லது ’பிற்போக்கு, வகுப்புவாத,ஃபாசிச, தரகுமுதலாளித்துவ, பூர்ஷுவா,ஏகாதிபத்திய…’ மெட்டில் “லே, நாறத்….” என ஆரம்பித்து இருபது கெட்டவார்த்தைகளை வரிசையாகச் சொல்வதைக் கண்டு திகைதிருக்கிறார்கள்.

நான் படிக்கும் காலங்களில் பாடமெல்லாம் எளியது. கணக்குகள் எல்லாம் எட்டும் எட்டும் பதினாறு மாதிரி எளிமையானவைதான். அறிவியல் இல்லை, இயற்கைப் பாடம். புவியியல் இல்லை, பூகோளம். கணக்கு தவிர புத்தகங்களை எல்லாம் பள்ளி திறந்த முதல்வாரத்திலேயே ஆர்வமாக வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன். அன்றெல்லாம் முழுநாளும்  திருவிழாக்கள், சந்தைகள், கபடி விளையாட்டுப் போட்டிகள், காட்டில் மாடுமேய்ப்பது, ஊருக்கும் ஊருக்குமான மானச்சண்டைகள்… தேர்வுக்கு முந்தையநாள் அவசரமாகப் புரட்டிப் பார்ப்பேன். எழுதுவேன்.

“ஹோம்வர்க்கை ஹேக் பண்ணிட்டாங்க மிஸ்”

அன்றெல்லாம் வீட்டிலும் எதுவும் கேட்கமாட்டார்கள். பாஸானால் போதும். எந்த ஊருக்கு போயிருப்பான் என ஊகிக்கும்படி இருந்தால்போதும். மார்க் பட்டியலை அப்பா பார்த்ததே இல்லை.  “அவனுக்கு வேணுமானா அவன் படிக்கணும்.அவனவன் பிள்ளைய அவனவன் உண்டாக்கிக்கணும்” என்னும் கொள்கை கொண்டவர்.  [ஊரில் பலபேர் அப்படி இல்லை என்பதும் அவருக்கு தெரியும்] மார்க் குறைவைப் பற்றி அவர் கேட்டதே இல்லை. அவர் பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். மிகச்சிறந்த ஆங்கில அறிவுள்ளவர். ஆகவே நான் பின்னர் பள்ளி முதல்மாணவனாக வென்றபோதும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

நல்ல ஆசிரியர்கள் இருந்தார்கள். எதையும் எம்ஜியார் படங்களின் கதைகளில் இருந்து ஆரம்பிப்பவர்கள். ”நான் காற்று வாங்க போனேன், ஆக்சிஜன் வாங்கி வந்தேன்!’. கல்கியின் பொன்னியின்செல்வனை ஐந்துநாட்களில் முழுமையாகச் சொல்லி முடித்த அறிவியல் ஆசிரியர். ஜெயகாந்தனுக்கு கடிதமெழுதி அவர் அளித்த பதிலை வகுப்பில் காட்டி கண்கலங்கிய அண்ணாமலை சார், நேஷனல் ஜியாக்ரஃபிக்கில் வெட்டி ஒட்டிய படங்கள் கொண்ட ஆல்பத்தை வகுப்பில் காட்டி பெருமிதம்கொண்ட ஞானஸ்டீபன் சார்….

பண்படுதல்

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி வரும்வழியில் வேறுபள்ளி மாணவர்களின் போராட்டம். நின்று வேடிக்கை பார்த்தேன். அவ்வழியாக என் ஆசிரியர் முத்தையா நாடார் பஸ்ஸில் போனதை பார்க்கவில்லை. வகுப்பில் அவர் ஒரு கதை சொன்னார். ராமன் சீதையை மீட்டு கொண்டுவந்தபின் வானரங்கள் அத்தனைபேருக்கும் அயோத்தி பாணியில் ஒரு சாப்பாடு போட்டார். ராமன் ஒரு நாயர் ஆனதனால் அது கேரள பாணி ‘சத்யவட்டம்’. ஏழுவகை பிரதமன் உண்டு.

குரங்குகளுக்கு அதெல்லாம் பழக்கமில்லை. எப்படி சாப்பிடுவதென்று தெரியாது. ஆகவே ஒரு மூத்த குரங்கைப் பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டன. அப்போது மூத்தகுரங்கு பாயசத்தில் ஊறிய முந்திரிப்பழத்தை கைசுருட்டிஅள்ள அது பிதுங்கித் தெறித்தது. குரங்கியல்பால் அந்த பழத்தை பிடிக்க குரங்கு தாவிக்குதித்தது. அதைக்கண்டு மொத்த குரங்குகளும் தாவிக்குதித்தன.

அழிந்துவரும் உயிரினம்

முத்தையா நாடார் என்னை எழச்செய்து “கைய நீட்டுலே” என்றார். நீட்டியதும் “உனக்க முந்திரிய நீ பிடிலே” என்று சொல்லி மூன்று அடி வைத்தார்.

அடி வாங்கியபின் நான் சொன்னேன். “நான் முந்திரி பிடிக்கல்ல சார், கொசுவாக்கும் அடிச்சேன்”

சிரித்துவிட்டார். “செரிலே மக்கா, மூணு அடி உனக்க அக்கவுண்டிலே நிக்கட்டு. அடுத்த அடியிலே குறைச்சுகிடுதேன்”.

அவர் என் அப்பாவின் தோழர். அப்பாவிடம் “உம்ம பயலுக்க அக்கவுண்டிலே மூணு அடி மிச்சம் நிக்குதுவே” என்றார்.

“அவன் விடமாட்டான். அதை வாங்குறதுக்கு இனி கடுமையாட்டு உளைப்பான்” என்று அப்பா சொன்னார். மறுநாளே வசூல் செய்துவிட்டேன்.

”ஸ்கூலுக்கு ஏன் போகலைன்னா? அதுக்கு தனியா ஒரு ஆப் வைச்சிருக்கேன்”

நான் கல்லூரியில் பியூசி என்னும் புகுமுகவகுப்பு [அதை ஜகபுக வகுப்பு என்போம்] படிக்கையில் எகனாமிக்ஸும் காமர்ஸும் மாறிமாறிச் சொல்லித்தருவார்கள். அடிப்படைகள். எகனாமிக்ஸில் “வாட் இஸ் எ எக்கனாமிக் பிராப்ளம்?”என்பது முதல்பாடம். சோஷியல்பிராப்ளம், பொலிடிக்கல் பிராப்ளம், மாரல் பிராப்ளம் எல்லாம் எகனாமிக் பிராப்ளம் அல்ல என்ற தெளிவை அடையவைப்பார்கள். மோடி என்ற ஒரே மனிதர் நான்கு பிராப்ளமாகவும் ஒரேசமயம் ஆகமுடியும் என்று உணர லைசாண்டர் சார் உயிருடன் இல்லை.

காமர்ஸ் வகுப்பில் அக்கவுண்ட் என்பதன் விதிகள் சொல்லித்தரப்படும். ஒரு கணக்கை முதலில் கதையாக எழுதவேண்டும். ’ராமசாமி என்பவர் ஜனவரி 22 அன்று மருதமுத்துவுக்கு நூறு ரூபாய் கொடுத்தார்’ இதில் ’என்பவர்’ என்பது தேவையில்லை. ஆகவே அதை தவிர்க்கலாம். ’கொடுத்தார்’ என்பது தேவையில்லை அதை தவிர்க்கலாம். “It is unimportant, hence it must me omitted”  இப்படி தவிர்த்துத் தவிர்த்து அவசியச் செய்தி மட்டுமே ஆனதுதான் கணக்கு.

லைசாண்டர் சார் கேட்டார் “What is an economic problem?”. நாங்கள் ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் கவற்சி ஸ்டில்லில் கருத்தழிந்து இருந்தமையால் கவனிக்கவில்லை. “கமான், டெல்மி ராதாகிருஷ்ணன்”

ராதாகிருஷ்ணன் எழுந்து அனிச்சையாக இருபாடங்களையும் ஒருங்கிணைத்து “An economic problem is unimportant, hence it must me omitted” என்றான்.

லைசாண்டர் சார் பெருமூச்சுடன் “அதாம்லே எனக்க அபிப்பிராயமும்” என்றார்.

”ஸ்கூல் கம்யூட்டரை ஹேக் பண்ணி என் மார்க்லிஸ்டை அழிச்சுட்டேன். அவங்க என் கம்ப்யூட்டரை இப்ப ஹேக் பண்ணியிருக்காங்க”

ரதிநிர்வேதம் வந்த ஆண்டு அது. அதில் தன்னைவிட பத்து வயது மூத்த பெண்ணை பதினாறு வயதுப் பையன் காதலித்து உறவும் வைத்துக் கொள்வான். படம் முழுக்க ஜெயபாரதியை கிருஷ்ணசந்திரன் என்னும் பயல் அன்பாக ரதிச்சேச்சி என்று அழைப்பான் .நான் அந்தப்படத்தில் உணர்ச்சிபூர்வமாக ஈடுபட்டு ஸ்ரீலக்ஷ்மி என்னும் எம்.ஏ மாணவியை “ரதிச்சேச்சி! ரதிச்சேச்சி!” என அழைத்துவிட்டு ஓடிப்போய்விட்டேன்.

மறுநாள் அடிவாங்க சித்தமாக கல்லூரிக்குச் சென்றாலும் ஒன்றும் நடக்கவில்லை. பத்துநாள் வரை அடிவாங்கும் மனநிலையில் நீடித்தேன். அதன்பின் நான் அவள் நேர் எதிரில் வந்தேன். என்னை பார்த்து ”டேய் செறுக்கா, என்ன வெளையுறே? அடி வேணுமா உனக்கு?”என்றாள்.

நான் மங்கலான சிரிப்புடன் பம்மி நின்றேன்.

“இந்தா இந்த புக்கை கொண்டுபோயி லைப்ரரியிலே போட்டு கார்டை வாங்கி என் கிளாசுக்கு கொண்டுவா… அங்க இங்க வாய் பாத்துட்டு நிக்காதே… ஓடு”

நான் அக்கணமே பையனாக மாறி அவளுக்கு பணிவிடை செய்பவனாக ஆனேன். அதன்பின் ஸ்ரீலக்ஷ்மியுடன் நெருக்கமாகி அவளுக்கு முட்டத்துவர்க்கி நாவலெல்லாம் கொண்டுபோய் கொடுத்தேன்.

”உலகம் சிக்கலாய்ட்டே போகுது மிஸ்,பழைய எளிமையான விடைகளுக்கெல்லாம் இப்ப இடமில்ல”

முப்பதாண்டுகளுக்குப் பின் ஒருநாள் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் ஒர் அம்மாள் என்னிடம் “டேய் நீ ஜெயன்தானே?”என்றாள்.

“ஆமாம்” என்றேன். ஆளைத் தெரியவில்லை.

“நான்தான் ஸ்ரீலக்ஷ்மி!” என்றாள். கூட அவள் மகன், அவனுக்கே இளநரை.

ஒருவழியாகத் தப்பித்துக் கடந்து வந்ததுவிட்டதனால்தான் கல்விக்கூடங்கள் அழகானவை.

முந்தைய கட்டுரைஇரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
அடுத்த கட்டுரைவெண்முரசு -குந்தி மணத்தன்னேற்பு