பழம் கிழம்

”ஒரு நிமிஷம், ஜிபிஎஸை செட் பண்ணிக்கறேன்”

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நான் அடிக்கடிக் கவனிப்பவர்கள் முதிர்ந்த ஜோடிகள். எண்பது தொண்ணூறு கடந்தவர்கள். கிழடும் கிழடும் முணுமுணுவென்று பேசிக்கொண்டே அலுமினிய தடிகளை ஊன்றியபடி  மிகமெல்லச் சென்றுகொண்டிருப்பார்கள். இந்தியா போல நாம் எவரையும் முட்டித்தள்ளி மேலே செல்லமுடியாது. நமக்கு முன்னால் இவர்கள் வந்தால் நமக்கும் நூறு வயதாகி விடுவதாக உணர்வோம்.

அங்கே கிழவர்கள் உயரமானவர்கள், வயதாகும்போது அவர்களின் முதுகு நன்றாகவே கூன்விழுந்துவிடுகிறது. நிலம்நோக்கிய நாணநடையை அங்கேதான் இப்போது பார்க்கமுடிகிறது. மூக்கு பெரிதாகப் புடைத்து காரட் போல சிவப்பாக இருந்தாலும் அவர்கள் எவர் விஷயத்திலும் மூக்கைநுழைப்பதில்லை. உதடுகள் உள்ளே மடிந்து சிவப்பு கோடாகக் கூட தெரிவதில்லை. வாயே இல்லாதவர்கள். பேச்சும் பெரும்பாலும் இருக்காது. மனிதர்கள் நடக்கும்போது கழுத்துத் தசை அலைபாய ஆடுவதை அங்குதான் கண்டிருக்கிறேன்.

”சீக்கிரம் சாப்பிட்டிரு….பத்து நிமிஷத்திலேநம்ம டயட் கண்ட்ரோல் புத்தாண்டு சபதம் ஆரம்பிச்சிரும்” 

கிழவிகள் பெரும்பாலும் குண்டு. இடுப்புத்தசை அகன்று தொய்ந்து தனியாக ஆடும் – தானாடாவிட்டாலும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் அங்கே முகச்சுருக்கம் அதிகம். பாலிதீன் தாளை நீரில் நனைந்து கசக்கியதுபோல கண்டபடி சுருங்கியிருக்கும். முகத்தில் +, ^,< > என எல்லா அடையாளங்களையும் காணமுடியும். கூர்ந்து கவனித்தால் L, X.Z,A,Y T,V,F,W போன்ற எழுத்துக்களையும் காணமுடியும். பெரும்பாலான பிராமி எழுத்துக்கள் தெரியும்.

வாயைச் சுற்றிய சுருக்கங்கள் ஒரு சுருக்குப்பையின் முடிச்சு இறுக்கியதுபோல. அவை ஓயாது அசைந்து சொல்லுதிர்த்துக்கொண்டிருக்கும். சுருக்குப்பை விரிந்தால் உள்ளே பொய்ப்பற்கள். அவற்றை நொறுநொறுவென கடித்துக்கொண்டிருப்பார்கள். நுரைபோல வெண்மயிர்.

”ரெண்டுபேருக்குமே மெமரி லாஸ் இருக்கு. அதனாலே தினசரி புதிய ஆளோட படுக்கிறமாதிரி இருக்கு… அப்டியே இருக்கட்டும்”.

நான் பெரும்பாலும் கோடையில்தான் மேலைநாடுகளில் பயணம் செய்திருக்கிறேன். கோடையில் கிழவர்கள் காரேமூரே என பூப்போட்ட சட்டையும் காக்கி கால்சட்டையும் அணிந்திருப்பார்கள். கிழிந்த அரை ஜீன்ஸ் அணிந்தவர்கள்கூட உண்டு. கையில் வாட்ச் கட்டுபவர்கள் அவர்கள் மட்டுமே.

கிழவிகள் நம்மூர் நைட்டிகள் போன்ற கவுன்கள், பாவாடைகள் அணிந்திருப்பார்கள். பாசிமணி மாலைகள், கல் தொங்கும் காதணிகள், களிமண் நகைகள், மரநகைகள், சிப்பி நகைகள் என பயணம்செய்யும்போது வாங்கிய சகலத்தையும்கொண்டு அலங்காரமும் செய்துகொண்டிருப்பார்கள். லிப்ஸ்டிக் போட்டிருப்பதனால் அவர்களுக்கு வாய் தெரியும்.

நம்மூர் போல மூத்தோர் வழிபாடு அங்கில்லை. அதாவது அவர்களை எவரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அமெரிக்காவே ஒரு வேகத்தில் செல்ல அவர்கள் இன்னொரு வேகத்தில் வேறொரு காலப்பரிமாணத்தில் வாழ்கிறார்கள். நத்தைகளும் பூச்சிகளும் வேறு வேறு உலகில் வாழ்வதுபோல

அவர்கள் பெரும்பாலும் பஸ்ஸில்தான் பயணம் செய்கிறார்கள். பஸ்ஸில் அவர்கள் ஏறுவதற்குரிய தாழ்வான சிறப்புப் படிகள் ஓட்டுநரால் இறக்கி தரப்படும். பஸ்ஸில் நின்று பயணம் செய்யவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் வெளியே பார்ப்பதில்லை. பேருந்து காத்திருக்கும் இடத்தில் நாளிதழில் குறுக்கெழுத்துபோடுவது கிழவர்கள் மட்டுமே. கைநடுங்க அவர்கள் எழுத்துக்களை தேடும்போது நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

”என்னோட ஞாபகமறதி ஜாஸ்தியாயிட்டே போகுது”

“எவ்ளவு ஜாஸ்தி?”

“எது?”

பெரும்பாலும் கடைகளின் முன் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் கையில் ஒரு பீருடன் அமர்ந்திருப்பார்கள். ஒருமுறை நான் எதற்கோ காத்திருந்தேன். ஒரு கிழவரும் கிழவியும் நாற்பது நிமிடங்களில் ஒருமுறைகூட பீரை உறிஞ்சிக்கொள்ளவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்கள். பீரை நறுமணப்பொருளாக பயன்படுத்தலாமென அன்று அறிந்தேன். பறவைகள் வரிசையாக மின்கம்பிகளில் அமர்ந்திருப்பதுபோல மால்களில் தென்படுகிறார்கள். சதுக்கங்களில் அமர்ந்திருக்கிறார்கள். சர்ச்சுகளில் ஓரிருவர் அமர்ந்திருப்பதுண்டு.

நமக்கு அத்தகைய இணைகளை பிடித்திருக்கிறது. ஏன் என்று சிந்தனை செய்தால் நீண்ட அன்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என நினைக்கிறோம். நீண்ட மாரத்தானில் மறு எல்லைவரை வந்துவிட்டவர்கள்.

”சே, டிவியிலே மறுபடியும் அதே பழைய சமையல் நிகழ்ச்சிய போடுறான்”

“அது மைக்ரோவேன் அடுப்பு… அந்தாலே போங்க”

அந்நம்பிக்கையை அந்நாட்டு நண்பர் ஒருவர் உடைத்தார். “இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்தாறு ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துகொள்பவர்கள்… எண்பது வயதுக்குப் பிறகுகூட திருமணம் செய்துகொள்வார்கள்”

”ஏன்?”என்றேன் பீதியுடன்.

“தனிமை தாங்காமல்தான்”

தனிமை என்றால் என்ன என்று உடனடியாகப்புரியவில்லை.

“எண்பது வயதுக்குள் அவர்கள் தங்கள் சொந்தங்களிலிருந்து முழுமையாக தனிமைப்பட்டுவிடுவார்கள். அவர்கள் நாலைந்து முறை மணந்து பிரிந்திருப்பார்கள். ஆகவே மனைவிகளுடனோ கணவர்களுடனோ தொடர்புகளே இருக்காது.பிள்ளைகளையும் பதினெட்டு பத்தொன்பது வயதுக்குமேல் இங்கே கவனிப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக வாழ்வார்கள். அவர்களுடன் மேலோட்டமான தொடர்பே இருக்கும், தொடர்பே இல்லாமலிருக்கவும் வாய்ப்புண்டு. பிள்ளைகள் இருக்கும் வரைத்தான் அந்தத் தொடர்பும். பிள்ளைகளுக்கே அறுபதாகியிருக்கும். பேரப்பிள்ளைகளுடன் ஒரு ஹலோ என்ற அளவில்தான் தொடர்பிருக்கும். வேறென்ன?”

”நீங்க என்னைய செல்லமா ஹனின்னு கூப்பிட்டது நல்லா இருக்கு”

”சட்னு பேரு மறந்துபோச்சு, அதான்”

நான் பீதியுடன் தலையசைத்தேன்.

“சேமிப்புகளுடன் ஓய்வுபெற்றிருப்பார்கள். வீட்டை விற்று அப்பார்ட்மெண்டில் வாழ்வார்கள்.பிறகு அப்பார்ட்மெண்டை விற்றுவிட்டு முதியோர் விடுதிக்கு வந்துவிடுவார்கள். இனி சாவு வரை வாழவேண்டும். கிழங்களின் உலகம் வித்தியாசமானது. பொதுவாக கிழங்கள் சகமனிதர்களை சந்தேகப்படுகின்றன. மிகநெருக்கமாகச் சிலரை விட எஞ்சியவர்களுடன் தொடர்புகொள்ள விரும்புவதில்லை. ஆகவே தனிமை. அந்த தனிமைக்குத் துணை இப்படி இன்னொரு கிழத்தை மணந்துகொள்வதுதான்… ”

“ஓகோ” என்றேன்.

”நான் என்ன சொன்னாலும் நீங்க சரியா கவனிக்கிறதில்ல!”

“தேங்க்ஸ் டியர், சீனி கொஞ்சம் ஜாஸ்தி போட்டிரு”

“ஒரு கிழம் செத்த்தால் இன்னொரு கிழத்துக்குச் சொத்து கிடைக்கும். அத்துடன் சண்டைபோட உடல்வலு இருக்காது. ஆகவே ஒற்றுமையாக இருப்பார்கள்” என்றார் நண்பர் “ஆனால் விவாகரத்துகளும் நடக்கும். சண்டைகளும் நடக்கலாம். ஆனால் அவர்களை யாரும் கவனிப்பதில்லை. யாரும் கவனிக்காத சண்டை நடக்காத சண்டைதானே?”

ஆனால் கிழவாழ்வின் சுகம் என்பதே அனத்தல்தானே? “என்னமோ போங்க, நான் சொல்றதைச் சொல்லியாச்சு. எங்க காலத்திலே இப்டி ஒண்ணும் கெடையாது. நாங்களும்தான் வாழ்ந்தோம். அப்பல்லாம் ஒரு பொண்ணு இப்டி கூடத்துக்கு வந்து பேசிர முடியுமா? நான்லாம் ஏழாவது பிள்ளை பிறந்த பிறகுதான் புருசன் மூஞ்சியையே பாத்தேன். மூத்தபய சாடையிலே இருக்கிறதுதான் புருசன்னு கண்டுபிடிச்சப்ப அப்பிடி ஒரு சந்தோசமா இருந்தது தெரியுமா” என்றெல்லாம் திண்ணைமூலையில் கேட்கும் குரல் அல்லவா குடும்பத்தை முழுமைப்படுத்துகிறது?

இங்க பாருங்க, சாக்லேட் பாரை வைச்சுகிட்டு சேனல் மாத்த முடியாது…”

“மூத்தபய சாடையிலே பக்கத்துவிட்டு தாத்தா இருந்தா என்ன செஞ்சிருப்பே?”என்று கேட்கும் கொள்ளுப்பேரனை “கட்டேலே போக. நாசமத்து போக. என்ன பேச்சு பேசுதான் பாரு. இவன்லாம் என்னத்தை படிச்சு என்னத்தை வெளங்கி… நான் ஒண்ணையும் பாக்காம தெக்காலே போனாப்போரும்”

“தெக்க உனக்கு ஆரு இருக்கா பாட்டி?”

“உம்? உன் தாத்தன்… போடா” கிழவிகளின் ஓசை குடும்பங்களின் மங்கலத்தை கொஞ்சம் கூட்டத்தானே செய்கிறது.

”நான் சொன்னதிலே உனக்கு கோவம் வந்தா நான் வேற அர்த்தத்திலேதான் அப்டி சொன்னேன்”

கிழங்கள் குடும்பங்களின் பிரிக்கமுடியாத அம்சங்களாக இருந்தன. குடும்பம் என்ற அமைப்பு கடைசியாக எங்கே கொண்டுசேர்க்கும் என்ற எச்சரிக்கை கட்புல உண்மையாக இருப்பது ஒரு சமநிலையை கொண்டுவருகிறது. “அந்தக்காலத்திலே காலம்பற மூணுமணிக்கு தோசை ஊத்தணும். ஒம்பதுக்கே மதியச்சோத்துக்கு அரிசி களையணும்… ராத்திரிச்சோறு முடிய பத்தாயிரும்…அதுக்குமேலே பாத்திரம் களுவிட்டு…”

கிழங்கள் இல்லாத ஊர்களை நினைத்தே பார்க்கமுடியவில்லை. சிற்றூர்களில் இறங்கி “இங்க ராதாகிருஷ்ணன்னு ஒருத்தரு…” என்று ஆரம்பிப்பதற்குள்ளாகவே “சுவருமுட்டி ராதாகிஸ்னன்தானே? மூலத்தெரு நாகம்மை இப்பதான் தண்ணிபிடிக்கப் போனா. இவன் பொறத்தாலே போயிருப்பான்… அங்க போயி பாரு… இல்லேன்னா அவனுக்க பெஞ்சாதி இந்தா சாணிஅள்ள போனா அவகிட்டே கேளு. அவளுக்க ஒப்பம் பேசிட்டு நிக்குறது ஆறாம்வெரல் நாராயணனாக்கும்…” என்று முழுச்சித்திரத்தையே அளித்துவிடுவார்கள்.

“என்னை வாழ்க்கை முழுக்க சந்தோஷமா வைச்சுக்கிறேன்னு சொன்னீங்க”

“இவ்ளவு நீளமான வாழ்க்கைன்னு நினைக்கலை”

நண்பர் சொன்னார். “கிழங்களை உள்ளே இடம்கொடுத்து வைத்திருக்கும் சமூகங்கள் தேங்கிப்போனவை. படகில் பெரிய எடையை தூக்கி வைத்துக்கொண்டிருப்பதுபோல. படகு அலைகளில் ஆடாது. ஒரே இடத்தில் நின்றிருக்கும். மீன்பிடிக்க அப்படிச் செய்வதுண்டு. ஆனால் விரைவான சமூகங்கள் அவர்களை வைத்திருக்காது. உரிய மரியாதை வசதிகளுடன் ஒதுக்கிவிடும். அமெரிக்கா ஒரு டைனமிக் நாடு. மோட்டார் போட் மாதிரி”

“இந்தியாவும்தான் டைனமிக் ஆகிக்கொண்டிருக்கிறது” என்று நான் சொன்னேன்.

“வைரஸ்களை குவாரண்டைன் செய்வதுபோல நாம் வயசாளிகளை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துவிடுகிறோம். அவர்கள் வலுக்குறைந்த வைரஸ்களைப்போல தடுப்பு சக்தியாகவும் செயல்படுகிறார்கள்” என்று நண்பர் சொன்னார்.

”வயசானா பார்வை கொஞ்சம் மங்கும், மத்தபடி ஒண்ணுமில்லை”

மனநோயர்கள் கூட்டங்களை நாடுகிறார்கள். கிழங்கள் இளைஞர்களை நாடுகின்றன. உற்று கவனிக்கின்றன. ஏதாவது சந்து கிடைத்தால் உள்ளே நுழைய முயல்கின்றன. அதற்காக அவர்கள் வேடிக்கையாகப் பேசும்போதுதான் அவை அபத்தமாக ஆகின்றன. அந்த முண்டியடித்து நுழைதலில் உள்ள உயிர்வேட்கை அபாரமானது.

அக்காலத்தில் அபிலாஷா நடித்த ’மேற்படி’ படம் ஒன்றுக்கு ஒரு கிழம் வந்தது. பிந்தி வந்ததனால் இருட்டில் கண் தெரியாமல் அலைமோதி “கண்ணு தெரியல்லியே…”என்றது

”நம்ம காதலுறவெல்லாம் ஏன் இப்டி ஆச்சு?”

”ஆமா ஒருத்தர்கூட லெட்டர் போடுறதில்ல”

அமர்ந்திருந்த இளைஞன் “பாட்டா வயசானா வீடடங்கி கிடக்கப்பிடாதா?”என்றான்

“ஏலே நீயெல்லாம் பெண்ணு கெட்டலாம். எனக்கு இந்த வயசிலே இனி அது நடக்குமாலே? இது நாங்க பாக்குற படம், நீயெல்லாம் வீட்டுக்குப்போலே”

அது நியாயம் என இளைஞன் கருதியது அவன் எழுந்து பாட்டாவை கைபற்றி அமரச்செய்ததில் தெரிந்தது.

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 8
அடுத்த கட்டுரை‘ஒளி’ ஒரு சூம் நாடகம்