ராஜஸ்தானில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு மண்ணுள்ளிப் பாம்பைப் பார்த்தோம். சேண்ட் போவா என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு தலையும் வாலும் இணையான அளவுள்ளது. லாடம்போல கிடக்கும். தலை எது வால் எதுவென எதிரிகளையும் இரைகளையும் குழப்பமடையச்செவது அதன் உத்தி.
அன்று அதன் பாதி உடல் ஒரு வளைக்குள் இருந்தது. அதைப்பிடித்து ஓட்டுநர் இழுத்தார். நானும் இழுத்துப் பார்த்தேன். வரவில்லை. உள்ளே எதையோ விழுங்கி தலைபெருத்திருந்தது என்று தெரிந்தது. விட்டுவிட்டோம்.
பாம்புகளுக்கு நிகழும் விபத்துகளில் முக்கியமானது இது. முன்பு பரம்பிக்குளத்தில் ஒரு ராஜநாகம் சாரை ஒன்றை தொடர்ந்து சென்று விழுங்கிவிட்டது. அந்த உடலே வயிறாகி வீங்க அந்த சிறிய கல்வளையில் இருந்து வெளிவர முடியவில்லை. செத்து மட்கியிருந்தது. அதை வெளியே எடுத்துப் போட்டார்கள். எலும்புக்கூட்டுக்குள் ஓர் எலும்புக்கூடு. யார் யாரைக் கொன்றது?
சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதை அந்த நினைவுகளை மட்டுமல்ல அந்நினைவுகள் உருவாக்கிய எண்ணங்களையும் ஒட்டுமொத்தமாக இழுத்துவந்தது. கவிதைவாசிப்பில் அது முக்கியமானது. ஆங்கிலத்தில் evocation என்பார்கள். ஆனால் கவிதையின் உயிரிலிருந்து நீளும் எண்ணங்களே அவ்வாறு சொல்லத்தக்கவை. அதன் செய்திகளிலிருந்து விரியும் எண்ணங்களை association fallacy என்று சொல்லவேண்டும். அது பிழைவாசிப்பு
உன் எறும்புகள்இறந்துகொண்டிருக்கின்றன
தனிமையும் காமமும் புற்றென
வளர்ந்துகிடந்தது
புற்றிலுள்ள
காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண
உன்னையே புற்றுக்குள் திணித்தாய்
பாதி உள் நுழைந்தும்
பாதி பிதுங்கியும்
விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி
மூச்சுத்திணறி இறந்தும் போனாய்
சாக்லேட்டை உண்பதுபோல
உன்னை உண்டன எறும்புகள்
பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை
இந்தப் பிறவியில்தான்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த
உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில்
இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை
புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
தெளிவான படிமங்களின் காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவிதை வந்திருப்பதைக் காட்டும் படைப்பு இது. அதை பிரித்து அடுக்க முற்படுவது வாசிப்பல்ல. தவிப்பை உண்டவை பசியறாது பிறந்து மீண்டும் தவித்தலைகின்றன. தவிப்பு தன்னை உணவாக்கி உண்டவைகளாக உருமாறி தவிப்பெனப் பரவியிருக்கிறது.
மறுபக்கம் மிக எளிமையான நேரடிக் கவிதைகளையும் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதியிருக்கிறார். இத்தகைய கவிதைகளில் மொழியின் வசீகரமும் வீச்சுமே அவ்வுணர்ச்சிவெளிப்பாட்டைக் கவிதையாக்குகின்றன. கூடவே வரும் படிமங்கள் எளிமையானவையாக இருக்கவேண்டும். இரவென பெருகும் மௌனத்தில் இரவென பெருகும் கூந்தலுடன் வருபவளைப்போல.
இந்த இரவின் அற்புதமே
இல்லாத வாழ்க்கையைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தோம்
அடம்பிடிக்கும் ஒரு சிறுமியை
சமாதானப்படுத்துவது போல
எங்களது துயரங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்
ஒரு குரல்
‘ஆமாம் எனக்கும் அப்படி நடந்திருக்கிறது ‘
இன்னொரு குரல்
‘ ஆமாம் எனக்கும் நடந்திருக்கிறது .
ஆனால் வேறு மாதிரி ‘
கோடையின் இரவு காற்றால் குளிர்ந்துகொண்டிருந்தது
கெஞ்ச நேரத்திலேயே
சொல்லவும்
கேட்கவும் ஒன்றுமில்லை
இனியும் ஏன் என்ற கேள்வி
அழ முடியாமல்
பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்
மௌனம் ஒரு மோசமான இரவைப்போல பெருகிக்கொண்டிருந்தது
எங்களது அபத்த இருப்பின்
நேரெதிர் திசையில்
நாயுடன் ஒருத்தி வாக்கிங் வந்தாள்
அவளது கூந்தல்
இரவென அசைந்தது காற்றில்
அது அற்புதம் போல இருந்தது
இந்த இரவின் அற்புதமே
எனக்கு வாழ வேண்டும்
இந்த இரவின் அற்புதமே
நானுனை இந்த ஒரு கணம் காதலித்துக்கொள்ளவா ?
எனக்கு வாழ வேண்டும்
எப்போதும் அழுதுகொண்டும் மௌனத்துடனும் அமர்ந்திருக்க முடியாது