நண்பர் ஒருவர் பீதியுடன் அழைத்தார். தீவிர வலதுசாரி. “அருண்மொழி எழுதிய கட்டுரை படிச்சேன். அவங்க இடதுசாரியா?”
“அப்டித்தான் தெரியுது” என்றேன்.
“அப்ப உங்க பிள்ளைகளும் அப்டித்தானோ?”
“வேற எப்டி இருக்கும்?” என்றேன்.
சற்றுநேரம் சோகம். பிறகு “ஆனா காட்டிக்கிடவே இல்லியே?” என்றார்.
“அதெல்லாம் குடும்பப் பெண்கள் காட்டிக்கிட மாட்டாங்க. காப்பி டீ கொஞ்சம் லேட்டா வரும், அவ்வளவுதான்.”
மேலும் சோகமான அமைதி. பிறகு “அதிலே ஒண்ணும் கலந்திருக்க மாட்டாங்கள்ல? ஏன்னா நான் மோடியப் புகழ்ந்து நெறைய பேசியிருக்கேன்.”
“பேசின நாளிலோ மறுநாளிலோ உங்க உடம்புக்கு ஒண்ணும் ஆகலைல்ல?”
அவர் ஆழமாக யோசித்து “ஆகலியோ?” என்று என்னிடம் கேட்டார்.
“நான் உங்க கிட்டே கேக்கிறேன்”
“ஆகலைன்னுதான் நினைக்கிறேன்”
“அப்ப சரி”
அவர் நீள்மூச்சுடன் “பாருங்க, என்ன ஏதுன்னு ஒண்ணுமே தெரியமாட்டேங்குது” என்றார். கடைசிப்பெருமூச்சுடன் “சரி பாப்பம்.”
அவரை அப்படி விடக்கூடாது என்று தோன்றியது. “ஒண்ணுமில்லை, இவ உங்க வீட்டம்மாகிட்டே நெறைய பேசுறாளே..” என்றேன்.
“அப்டியா?” என்று மூச்சொலியாகச் சொன்னார்.
“சரிங்க, பாத்து சூதானமா இருந்துக்கிடுங்க. காலம் கெட்டு கெடக்கு” என்று போனை வைத்துவிட்டேன்.
பின்னே?