சிந்தனையாளனும் செயல்படுபவனும்
மேலைநாட்டில் எல்லா நல்ல ஓவியங்களுக்கும் கார்ட்டூன்கள் உள்ளன. நம்மூரில் அவ்வழக்கம் இல்லை. ஏனென்றால் ஓவியங்கள் நமக்கு அவ்வளவு முக்கியமானவை அல்ல. நாமறிந்த ஓவியங்கள் ஜெயராஜ், மாருதி, மணியம்செல்வம் வரைபவை.அவை ஏற்கனவே பாதி கார்ட்டூன்கள்.
மேலைநாடுகளில் ஓவியங்கள் இளம் வயதிலேயே மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்ரன. சிறுநகரங்களிலேயே நல்ல கலைக்கூடங்கள் உள்ளன.உதாரணமாக சிறுநகரமான ராலேயில் உள்ள பெரிய கலைக்கூடத்தில் கிளாட் மோனேயின் அசல் ஓவியம் இருக்கிறது. சின்னக்குழந்தைகளை கூட்டிவந்து அவற்றை காட்டி அவை என்ன இசம், அவற்றின் வரலாறு என்ன எல்லாவற்றையும் அறிமுகம் செய்கிறார்கள். [மோனெட் என்று சொல்லக்கூடாது. கவியூர் பொன்னம்மா சொல்வதுபோல ‘ம்ம்மோனே’ என்று சொல்லவேண்டும்]
கிளாட் மோனேயின் கலைவாழ்க்கை முடிவுக்கு வந்த விதம்
அத்தனை சின்ன வயசில் இதெல்லாம் அறிமுகம் செய்வது நல்லதுதான். ஆனால் அதற்கு எதிர்வினையும் உண்டு. கற்பிக்கப்படும் எதற்கும் நையாண்டியால் எதிர்வினையாற்றுவது குழந்தைகளின் வழி. ஆகவேதான் இத்தனை ஓவியம்சார்ந்த ஜோக்குகள் அங்கே உருவாகியிருக்கின்றன.
பல ஜோக்குகளை ஓவியம் சார்ந்த சில நுட்பங்கள் தெரியாமல் ரசிக்கமுடியாது. உதாரணமாக எல்லாவற்றையும் மங்கலாகக் காட்டும் இம்ப்ரஷனிஸ்ட் ஓவியர் கிளாட் மோனே. அவர் முதல்முறையாக மூக்குக் கண்ணாடி மாட்டி உலகை யதார்த்தமாகப் பார்த்து பரவசம் அடையும் காட்சியின் பகடி இம்ப்ரஷனிசம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு என்னடா இது என்று இருக்கும்.
பள்ளிக்கூடம் போன்னு சொன்னா டிராமாவா போடுறே?
இங்கே நான் பகிரும் பல ஜோக்குகளை ‘இதிலே ஜோக் எங்கே?”என்று பலர் எனக்கு எழுதுவதைக் காண்கிறேன். ஜோக்குகளின் அடிப்படையே நமக்கு அது எதைப் பற்றிப் பேசுகிறது என கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்பதுதான். நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்றின்மீதான கோணல்பார்வையெ பகடி என்பது. மேலே உள்ள கார்ட்டூன் எட்வர்ட் மஞ்சின் The scream என்ற புகழ்பெற்ற எக்ஸ்பிரஷனிஸ ஓவியத்தை நினைவுக்கு கொண்டு வந்தாலொழிய சிரிப்பை வரவழைப்பதில்லை.
அந்த அறிதல் கலை, இலக்கியம், வரலாறு என விரிந்திருக்கவேண்டும். ஒன்றுமே தெரியாதவர்களுக்கு சினிமாவின் பழகிப்போன நகைச்சுவைகள், மற்றும் அரசியல் சார்ந்த வசைகளும் மட்டம்தட்ட்லகளும்தான் சிரிப்பதற்குரியவையாக உள்ளன. ஒரு நகைச்சுவை தனக்குப் புரியவில்லை என்பதை தன் தகுதியாகக் கொள்ளும் நகைச்சுவை தமிழில் பரவலாக உள்ளது.
“கலையிலே நுண்மையாக்கம்னு ஒண்ணு இருக்கு. வட்டத்தை சதுரமாக்கலாம். கோளத்தை கனசதுரமாக்கலாம். நான் ஒட்டகத்தை இப்டி ஆக்கியிருக்கேன்”
எங்களூரில் ஒரு விஷயம் கந்தரகோலமாக இருந்தால் “ஓவியமாத்தான் இருக்கு” என்பார்கள். நவீன ஓவியத்தை பார்த்து இதை உருவாக்கிக் கொண்டார்களா என்று தெரியவில்லை.
’ஒரு புளியமரத்தின் கதை’ நாவலில் சுந்தர ராமசாமி ஒரு பெண்ணை ‘அன்னாரின் மனைவி ஓவியத்தில் வரைந்ததுபோல் இருப்பாள்’ என்று எழுதியிருந்தார். ‘பிக்காஸோ ஓவியமா சார்?”என்று நான் கேட்டேன். பகபகவென்று சிரித்துவிட்டா. பிக்காசோ அவர் வரைந்த பெண்ணை [அமர்ந்திருக்கும் பெண்] தெருவில் நேருக்குநேராகப் பார்த்து பயந்துதான் செத்துப்போனார் என்று ஒரு கதை உண்டு.
”நீ இங்க படம் வரைஞ்சிட்டிரு… பக்கத்துவீட்டுக்காரன் அங்க தீய கண்டுபிடிச்சுட்டான்”
பிக்காஸோ நகைச்சுவைகள் என புத்தகங்களே உள்ளன. பிக்காஸோவின் வீட்டில் திருடன் புகுந்தபோது அவர் அவனை ஒர் ஓவியமாக வரைந்து அளித்தார். அதனடிப்படையில் போலீஸ் ஒரு கன்யாஸ்திரீ, ஒரு எருமை, ஒரு வாஷிங்மிஷின் ஆகியவற்றை கைதுசெய்தார்கள்.
வேற்றுக்கிரகவாசிகள் மண்ணுக்கு வந்தபோது அவர்கள் பிக்காஸோ வரைந்த அழும் பெண் ஓவியத்தை பார்த்துவிட்டு ”டேய் ஏற்கனவே நம்மாளுக இங்க வந்திட்டாங்கடா!” என்றார்களாம்.
பிக்காஸோ கார் ரிப்பேர் கம்பெனி
அமெரிக்க அதிபர் ரீகன் பிக்காஸோவின் பெண் என்னும் ஓவியத்தைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து பாராட்டியதாகவும், ஆனால் அதன்பின் “தபால்பெட்டியை எல்லாம் இப்படி கற்பனையோட வரைய முடியும்னு நினைச்சதே இல்லை” என்று மேலும் பாராட்டியதாகவும் சொல்வார்கள். [பெண், பிக்காஸோ]
முன்பு கேரள ஓவியர் ஒருவர் வரைந்த கார்ட்டூன் ஜோக். ஓவிய மாணவனிடம் ஆசிரியர் சொல்கிறார். “சரி நீ கியூபிஸ முறைப்படி பலாப்பழத்தை வரைகிறாய். அதற்காக ஒவ்வொரு முள்ளையும் கியூபாக ஆக்கவேண்டியதில்லை”.
பிக்காஸோவின் The Dream என்ற பெண்ணோவியம் கேரளத்தின் கலைவிவாதங்களில் no-ball realism என்னும் அழகியல் கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு- ஒரு லார்ஜ் ஏற்றிக்கொண்டபின்.பேட்மிண்டனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. [அல்லது ஒரு காலத்தில் பேட்மிண்டன் அப்படிப்பட்டவர்களால் ஆடப்பட்டிருக்குமோ?]
”இதான் கலையோட பயன். தலைதுண்டாகிறப்ப அவன் ஜாலியா சாகிறமாதிரி தெரியும்”
ஷிட் ஜோக் அடிக்கும் நண்பர் ஒருவர் உண்டு. “ஏங்க நாய் ஒருமாதிரி இளம்பச்சையா கழிஞ்சு வைச்சிருக்கு?” என்று மனைவி கேட்டதற்கு “வான்கோவோட starry night பெயிண்டிங்கை தின்னிருக்குமோ?”என்றார். மனைவி அவர் சீரியஸாக சொல்வதை மட்டுமே நகைச்சுவையாக எடுத்துக்கொள்பவர்.
எங்கள் அலுவலகத்தில் அந்தகாலத்தில் ஒர் அதிகாரி இருந்தார். பெயர் பன்னிருகைப் பெருமாள். நாலாபுறமும் லஞ்சம் வாங்குபவர் என்று சொல்லவேண்டியதில்லை. அந்தக்காலத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பன்னிருகையன் சிலையைப் பார்த்தபின் ஒரு கிறிஸ்தவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் “இந்த தெய்வத்தையெல்லாம் சிலுவையில் ஏற்றமுடியாது. ஏகப்பட்ட ஆணிகள் தேவைப்படும்” என்றாராம்.
”இதெல்லாம் நியாயமே இல்ல”
மறைந்த என் தந்தை பாகுலேயன் பிள்ளை நாயர்பற்று கொண்டவர். சரஸ்வதி, லட்சுமி எல்லாம் சம்பா அரிசிச் சோற்றில் தேங்காய்க்குழம்பு விட்டுச் சாப்பிடும் நாயர்ஸ்த்ரீகள் தான் என அவர் நம்பியது ரவிவர்மா ஓவியங்களைக் கொண்டுதான். துர்க்கை நாயர் ஸ்த்ரீயாகவே இருக்கமுடியும் என அவர் இளமையிலேயே புரிந்துகொண்டிருந்தார்.
ஆனால் சிவனுக்கு மீசை உண்டு என்பதை அவர் நம்ப மறுத்தார். அதெப்படி கழுத்தில் பாம்பு இருக்கும்போது சவரம் செய்துகொள்ள முடியும்? பத்துதலை ராவணனுக்கே மீசை இருக்கிறதே, இருபது கன்னங்களுக்கு அவன் சவரம் செய்துகொள்ளவில்லையா என்று அச்சு மாமா கேட்டபோது யோசித்துப் பார்த்தார்.
”அப்டியே ஓடிப்போய் குகை ஓவியமா வரைஞ்சிருவோம். இல்லேன்னா எவனும் நம்பமாட்டான்!”
ராஜா ரவிவர்மா பற்றி ஒரு கதை. அவர் ஒரு நாயின் படத்தை வரைந்தார். அதன் வாயில் நுரை சரியாக வரவில்லை. சலிப்படைந்து ஒரு கட்டத்தில் “நாசமாப்போக” என்று வண்ணம்பூசும் கடற்பஞ்சை எடுத்து ஓவியம் மேல் எறிந்தார். சர்ரியாக வாயில் பட்டது. நுரை கனகச்சிதமாக அமைந்துவிட்டது.
ராஜா ரவிவர்மாவின் ‘மத்ஸ்யகந்தி’ படத்தில் பராசரர் சத்யவதியை படகுத்துறையில் சந்திக்கிறார். [மத்ஸ்யகந்தி] சத்யவதியின் பக்கவாட்டு அழகு தெரிகிறது. பராசரர் உணர்ச்சிவசப்படும் காட்சி. ஓவியத்தை பார்த்துவிட்டு வள்ளத்தோள் நாராயணமேனன் சொன்னராம். “கொஞ்சம் பஞ்சோட குறைவு தெரியுது”
பிக்காஸோவும் டாலியும்
உலக அளவில் அதிகமாக கிண்டலடிக்கப்பட்ட ஓவியர் சால்வடோர் டாலியாகத்தான் இருக்கவேண்டும்.சர்ரியலிசக் கோரத்தை பிக்காஸோவின் கியூபிசம் வந்துதான் சமாளிக்க முடிந்தது. “கடிகாரத்தைக் கொண்டு ஆம்லேட் போடலாம் என்று கண்டுபிடித்தவர்” என்று விகேஎன் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். பிளாஸ்மா டிவியின் ஐடியாவே அந்த ஓவியத்தில் இருந்துதான் வந்தது என்று சொல்லப்படுவதுண்டு.[The Persistence of Memory]
குளோட் மோனே உட்பட இம்ப்ரஷனிஸ்டுகளின் கண்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து அவர்களின் படங்களைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். சால்வடோர் டாலியின் ஓவியங்களைப் புரிந்துகொள்ள அவருடைய இரவுணவைத்தான் ஆராயவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. வாயு பதாத்தங்கள் கெட்ட கனவுகளை உருவாக்குபவை. மறுநாள் ஆராய்வதுதான் உண்மையில் சர்ரியலிச அனுபவம்.
சார்ல்ஸ் டிக்கன்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் நாவலில் பிக்விக் ஓவியத்தை ரசிக்கும் நுட்பம் உண்டு. ஒரு நாளிதழை உருட்டி குழலாக்கி அதன் வழியாகப் பார்க்கிறார். ஓவியம் முப்பரிமாணம் கொண்டதாக இருந்தால் ஓகே என்கிறார். பாரீஸ் லூவர் அருங்காட்சியகத்திலேயே சிலர் அப்படிப் பார்ப்பதை காண்பது வரை அது பகடி என்று நினைத்திருந்தேன்.
கலைவிமர்சகர்களிலேயே யதார்த்தவாதிகள் உண்டு. மைக்கேலாஞ்சலோவின் டேவிட் சிலையில் டேவிட்டின் குஞ்சு அளவு proportionate ஆக இல்லை என்று ஒருவர் கவலையுடன் எழுதியிருக்கிறார். இந்தியாவில் கலையில் ஆண்குறி என்பதே கிடையாது , இருந்தால் அது கருவறையில் தனியாக பூதாகரமாக நின்றிருக்கும் என அவருக்கு கடிதமெழுதவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
வான்கோவின் அறை. உண்மையும், அவர் வரைந்ததும். கலை என்பது தெரிவுகளால் ஆனது! [அசல் ஓவியம்]
”ஸ்நேகிதனே ஸ்நேகிதனே செவிகொடு ஸ்நேகிதனே” பாட்டு பிரபலமாக இருந்தபோது அருண்மொழி சொன்ன ஜோக். “வான்கோ கிட்ட ஸ்நேகிதி கேட்டதை பாட்டா எழுதிட்டானுகளா?”
கல்லில் சிற்பம் வடிப்பது எளிது என்று ராய் சௌதுரி சொன்னார். “கல்லிலே இருந்து சிற்பம் அல்லாத எல்லாத்தையும் செதுக்கிட்டா போதும்”. அதைப்பற்றி விகேஎன் சொன்னார். “ஒரு சிற்பம் ஏன் அத்தனை கல்லை கூடவே வச்சிருந்ததுன்னு யாருமே யோசிக்க மாட்டீங்களாடா?”
கலைஞனும் யதார்த்தவாதியும்
கே.சி.நாராயணனை திருவட்டார் கோயிலுக்குக் கூட்டிச்சென்றேன். சுற்றுபிராகாரத்தில் வரிசையாக விளக்கு மங்கையர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முகம், வடிவம், அணிகலன்கள். “பாத்தீங்களா? இத்தனையையும் செதுக்க எவ்ளவு மாடல் பெண்கள் தேவைப்பட்டிருப்பாங்க?”
யதார்த்தவாதியும், வாழ்க்கைமுழுக்க அமெச்சூர் எழுத்தாளர்களின் படைப்புகளை திருத்திக்கொண்டிருக்கும் வேலை செய்தவருமான கே.சி.நாராயணன் சொன்னார். “ஒருவேளை ஒரு மாடலை நிக்கவைச்சு நூறு அமெச்சூர் சிற்பிகளை அவளைப் பாத்து செதுக்கச் சொல்லியிருப்பாங்களோ?”. ஒருவரே கடைசிவரை முயற்சி செய்து பார்த்ததாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அதன் பிறகுதான் அடைந்தேன்.
”என்னோட ஓவியங்களை நீங்க சிட்டி முழுக்க பாக்கலாம்”
கல்பற்றா நாராயணன் ஒரிசாவில் கல்லாலான யானையைப் பார்த்து வியந்து சொன்னார். “யானையாகிறதுக்கு கல்லுதான் நல்லது”. கடவுள் யானையை என்புதோல்தசையில் படைத்தார். நாம் கல்லில் இன்னும் நல்ல யானையை படைத்தோம். கடவுளையே கல்லில் படைத்திருக்கிறோம்.
கலையைப் பற்றிய பேச்சு வேடிக்கையானது. அருவமான ஒன்றைப்பற்றி தர்க்கபூர்வமாகப் பேசுவதன் அபத்தம். மூன்றுவருடங்கள் நாவலில் செக்காவ் அதை கிண்டலாக எழுதியிருக்கிறார். படம்வரையும் பெண் சீனியர் ஓவியரிடம் படத்தை காட்டுகிறாள். அவர் விமர்சனம் செய்கிறார்.
“ஓ சிவப்பு ஏன் இப்படி கூச்சலிடுகிறது. சரி சரி, பச்சைக்கு அது தேவையே. நீலம் கொஞ்சம் கனிவானது என்றாலும் கோடுகள் வானத்தில் என்ன செய்கின்றன?”
அவர் எந்த அளவுக்கு அபத்தமாகப் பேசினாரோ அந்த அளவுக்கு அவள் தெளிவாகப் புரிந்துகொண்டாள் என்கிறார் செகாவ்.
ஓவிய மாடல்களின் வரவேற்பறை
எழுபதுகளில் ஆதிமூலம் பழைய தமிழ் கல்வெட்டுகளின் பாணியில் எழுத்துருக்களை உருவாக்கி சிற்றிதழ்கள் மற்றும் கவிதைத் தொகுதிகளில் தலைப்புக்களை எழுதினார். சுசீந்திரம் சென்றுவிட்டு மீண்ட ஒருவர் சுந்தர ராமசாமியிடம் சொன்னார். “அங்க நெறைய கல்வெட்டு இருக்குசார். எல்லாமே ஆதிமூலம் ஸ்டைல்”.
நம்மூர் சிற்பங்களை இப்படி வேடிக்கையாக ஆக்கலாமா என்று நான் யோசிப்பதுண்டு. ஆனால் நம் அர்ச்சகர்களும் ஆலயத்திருப்பணியாளர்களும் அதைச் செய்திருக்கிறார்கள். இடதுபாதம் தூக்கி ஆடும் நடராஜனுக்கு கோவணத்தை கட்டிவிட்டிருக்கிறார்கள். தஞ்சையில் அகோரவீரபத்ரனுக்கு ஆசியன் பெயிண்டில் அண்டர்வேர் வரைந்திருக்கிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் பலர் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்களை நம் கலையுணர்வு பாதித்துவிடக்கூடாது என்று கவலை எனக்கு உண்டு. அங்கே போய் மைக்கேலாஞ்சலோவின் தாவீதுக்கு ஜட்டிபோட்டுவிடுவார்கள்.
ஆப்’
பகடை பன்னிரண்டு
சிரிக்கும் ஏசு
டேனியல் லாபெல்
ஊதிப்பெருக்கவைத்தல்
ஸாரி டாக்டர்!
ஆடல்
கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
மனம்
குருவும் குறும்பும்
இடுக்கண் வருங்கால்…
ஆன்மிகமும் சிரிப்பும்