கடவுள் மாபெரும் ஏரிகளை உருவாக்கியது எப்படி?
கடவுளைக் கலாய்ப்பது என்பது ஓர் ஆன்மிகச் செயல்பாடு மட்டுமல்ல, அன்றாடச் செயல்பாடும்கூட. கொஞ்சநாள் முன்னால் ஒருவர் செத்துப்போய்விட்டார். அதைப்பற்றி வெற்றிலைப் பாக்குக் கடையில் பேச்சு. ஒருவர் “கடவுளுக்கு கண்ணில்லியா?”என்றார்.
அருகே இருந்த மூத்த நாடார் “உண்டுலே, ஆனா அங்கேருந்து இங்க பாக்குத தூரக்கண்ணாடி இல்ல பாத்துக்கோ”என்றார்.
”முதல் அஞ்சு கட்டளைதான் ஃப்ரீ. மிச்சம் வேணும்னா சந்தா கட்டு”
இது இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. இங்கே நிகழும் எல்லாவற்றையும் ஒருத்தரே செய்கிறார், அல்லது அவர்தான் காரணம் என்றால் எவ்வளவு முரண்பாடு. அதுவே நகைச்சுவைதான். அளவிலாக் கருணைகொண்ட அருளாளன் கொரோனாவை ஏன் அனுப்பினான் என்றால் அவனுடைய அளவிலாக்கருணையை நாம் நம்பவில்லை என்பதற்குத் தண்டனையாக என்கிறார்கள். குழப்பமாகத்தான் இருக்கிறது.
சின்ன வயசில் நான் கடவுளை புரிந்துகொண்டது பழைய பொருட்களை வாங்குபவர் மாதிரி ஒருவர். நமக்கு பெரிய உபயோகம் இல்லாத தேங்காய், வாழைப்பழம், சமந்திப்பூ போன்றவற்றை வாங்கிக்கொண்டு பரீட்சையில் மார்க், லாட்டரியில் பரிசு போன்றவற்றை தருபவர். அத்தனைபேரிடமும் இப்படி நஷ்டவியாபாரம் செய்யும் அவரை எண்ணி நான் அனுதாபப்பட்டதெல்லாம் உண்டு.
கடைசியா இதையும் கொஞ்சம் சேத்தா விறுவிறுப்பா இருக்கும்…
கடவுள் ஜோக்குகளுக்கு அத்வைதத்தில் முதன்மையான இடம் உண்டு. சகுணப்பிரம்மத்திடம் நிர்குணப்பிரம்மம் தலைதலையாக அடித்துக்கொண்டதாம் “வேண்டாம் வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா? இப்ப இதையெல்லாம் யாரு அள்ளி கூட்டி பெருக்கி ஒண்ணாக்குறது?”.
பெருவெடிப்பு பிரம்மம் கைதவறி கீழே போட்டது என்றுகூட சொல்லப்படுவதுண்டு. அப்படியென்றால் கருந்துளை பிரம்மத்தின் மாபெரும் துடைப்பம். இந்தப்பக்கம் கூட்ட அந்தப்பக்கம் சிந்திக்கொண்டே இருக்கிறது.
”நானும் பிரம்மம் நீயும் பிரம்மம், பிரம்மம் பிரம்மத்திடம் கடனை திரும்பக்கேட்கலாமா?” வகை நகைச்சுவைகள் பேச்சுவழக்கிலேயே சாதாரணம்.
பிரபஞ்ச சிருஷ்டி
சிவனை ஒன்றரைக் கண்ணன் என்று ஒரு பேச்சில் வாரியார் சொன்னார். முக்கண்ணன், ஆனால் பாதி உடல் பார்வதிக்கு. அப்படியென்றால் ஒன்றரைக் கண்தானே? அம்மைக்கும் ஒன்றரைக் கண்தான். நல்ல ஜோடிப்பொருத்தம்.
“கடவுள் எங்கயும் இருக்காருன்னு சொல்லுதியே, அப்ப நீ எங்க ஒண்ணுக்கடிப்பே?” என்று ஒரு கிராமத்து நாத்திகனாகிய கேசவன் கேட்டபோது “கேசவனுக்க மனசுன்னு எழுதி அங்க ஒண்ணுக்கடிக்கவேண்டியதுதான்” என்று ஆத்திகனாகிய மாதவன் பதில் சொன்னதாக ஒரு கதை
”பழைய ஏற்பாடு கடவுளே நல்லாருக்கு. இவரு ரொம்ப மாடர்னா இருக்காரு”
கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவ ஜோக் நிறையவே சொல்வார்கள். மற்ற கிறிஸ்தவர்கள் சீரியஸாக இருப்பதே ஒருமாதிரி ஜோக்காக இருக்கும். பாவம் செய்யாதவர்கள் முதற்கல்லை எறியுங்கள் என்று ஏசு சொன்னதும் பிதா “அப்ப நான் எறியட்டாலே?” என ஆவலாக கேட்டதாக எங்களூரில் ஒரு பேச்சில் தங்கையாநாடார் சொன்னார்.
தங்கையா நாடாரின் இறையியல் உரைகள் ஆழமானவை. “ஏலே, ‘என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்’னு ஏன் பைபிள் சொல்லுது? அவரு முன்னாலே போனா இவன் அங்க இங்க வாய்பாத்துட்டு நின்னிருவான். அவரு அந்தாலே பிதாகிட்டே போயி திரும்பிப் பாத்தா பின்னாலே ஒத்த ஒருத்தன் இருக்கமாட்டான். அதனாலே பின்னால வாறாரு. சூத்தாம்பட்டியில் அடிச்சு பத்தி கொண்டு போணும்லாடே?”
கடவுளின் கம்ப்யூட்டர் கேம்
”மண்ணிலும் விண்ணிலுமுள்ள அனைத்தும் அறிந்தது பரிசுத்த ஆவி மட்டுமே” என்று பாதிரியார் பேசியபோது விசுவாசி எழுந்து “அப்ப கத்தோலிக்க சர்ச்சுக்கு எவ்ளவு சொத்து இருக்குங்கிற முழுவிவரம் அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு, இல்ல ஃபாதர்?” என்று கேட்ட ஒருவரைப் பற்றி நண்பர் பேச்சில் ஒருமுறை சொன்னார்.
கடவுள் நகைச்சுவைகளை ஆங்கிலத்தில் நிறையவே காண்கிறோம். எல்லாமே தாடிவைத்த வயதான கிழவர். டக்ளஸ் ஆடம்ஸின் The Hitchhiker’s Guide to the Galaxy கதையில் வரும் கடவுள் அமெரிக்க அதிபர் போலிருக்கிறார். அழகான, கம்பீரமான, ஆழ்ந்த குரல்கொண்ட அடிமடையர். ஆகவே ஆழ்ந்த தன்னம்பிக்கைக் கொண்டவராகவும் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறவராகவும் இருக்கிறார். அவருக்கு பிரபஞ்சம் பற்றி ஒன்றுமே தெரியாது. அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதைப் படிப்பார்.
”ஆறுநாள் கடுமையா உழைச்ச களைப்பிலே குழம்பிப்போய் கைதவறி மனுஷனை படைச்சிட்டீங்க… பரவாயில்லை”
சின்னவயசில் சைதன்யா பள்ளியிலிருந்து கற்றுவந்த ஜோக். “எட்டையும் மூணையும் கூட்டினா பதிமூணு வரும், எப்டி?”
பலகோணங்களில் யோசித்து கடைசியில் நான் சொன்னேன். “தெரியல்ல பாப்பு, எப்டி வரும்?”
“இதுகூட தெரியல்லியா? கணக்க தப்பாப் போட்டா வரும்”
இந்த எல்கேஜி ஜோக் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது. கடவுள் கணக்கு தெரியாத ஒரு சின்னப்பயல். முதலில் விடையை எழுதிவிடுகிறான். அதற்கேற்ப கணக்கை தப்பாக போடுகிறான். அதைத்தான் நமக்கு சுற்றும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கடவுள் :”எப்பவுமே மகிழ்ச்சியா இருக்கிற,தீராத அன்புள்ள, முடிவில்லாம மன்னிக்கக்கூடிய ஒண்ணுன்னு சொன்னப்பவே நீ ஊகிச்சிருக்கணுமே?”
ஓயாமல் கடவுள் நாமம் சொல்பவர்கள் உண்டு. ஞானபண்டிதா, முருகா, நமச்சிவாயம் என்றெல்லாம். நம்பூதிரி வாய் ஓயாமல் நாராயணா என்பார். எந்நேரமும் நாராயணா என்னும் ஜெபம்தான். ஒருநாள் நல்ல பாம்பு வழியில் படமெடுத்து நின்றது. நாராயணா என்று கத்தினார். பயனில்லை, கடித்துவிட்டது.
மேலே வைகுண்டம் போனதும் பெருமாளிடம் மனத்தாங்கலுடன் கேட்டார். “என் குரல் உனக்கு கேக்கலியா நாராயணா?”
கொஞ்சம் சம்மலுடன் நாராயணன் சொன்னார். “கேட்டேன். ஆனா நீ வழக்கம்போல அனத்திட்டிருக்கேன்னு நினைச்சுட்டேன்”
ஆப்’
பகடை பன்னிரண்டு
சிரிக்கும் ஏசு
டேனியல் லாபெல்
ஊதிப்பெருக்கவைத்தல்
ஸாரி டாக்டர்!
ஆடல்
கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
மனம்
குருவும் குறும்பும்
இடுக்கண் வருங்கால்…
ஆன்மிகமும் சிரிப்பும்