வெண்முரசு ஆவணப்படம்- கடிதம்

[ஆஸ்டினில் நிகழ்ந்த வெண்முரசு ஆவணப்பட வெளியீட்டில் கி.ராஜாநாராயணனுக்கு மௌன அஞ்சலி]

வெண்முரசு, ஆஸ்டின்- பதிவு

வெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு

வெண்முரசு ஆவணப்படம் – அனுபவம்

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி

வெண்முரசு ஆவணப்படம் – கடிதம்

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு

வெண்முரசு ஆவணப்படம்- கடிதம்

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு

அன்புள்ள ஜெ,

சில படைப்புகள் தங்களது பொருண்மையாலேயே காலங்களைத் தாண்டி நின்றுவிடுபவை. இராமாயணம், மகாபாரதம், இலியட், ஒடிசி என நீளும் அப்படைப்புகளின் வரிசையில் வெண்முரசும் இயல்பாக சென்று இணைந்து கொண்டுள்ளது. அதன் முக்கியமான தடம் தான் இந்த ஆவணப்படம்.

இதன் முன்னோட்டக் காட்சி மட்டுமே நான் பார்த்துள்ளேன். இந்தியாவில் திரையிடப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன். அமெரிக்கவாழ் நண்பர்கள் இதைக் கொண்டாடித் தீர்ப்பதைப் பார்க்க ஏக்கமாகத் தான் இருக்கிறது. இருந்துவிட்டு போகட்டும். உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் இப்படைப்பு ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்பட வேண்டும். இதன் இருப்பு உலகின் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உணர்த்தப்பட்டாக வேண்டும்.

தொடர் சந்திப்புகள், விவாத நிகழ்வுகள், கட்டுரைகள், கடிதங்கள் என சற்றேனும் இலக்கிய ஆர்வம் இருப்பவர்கள் வட்டத்தில் மட்டுமல்ல, பொதுமக்கள் அனைவருக்குமே இப்படி ஒரு படைப்பு இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டாக வேண்டும்.

கம்பராமாயணம் பற்றி அறியாதவர்கள் குறைவு. அப்படி அறிந்தவர்களில் அதைப் படித்தவர்கள் புள்ளி ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இருப்பினும் அதன் இருப்பு தமிழ் மக்களுக்குத் தெரியும். வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கம் பணத்தாளாக, சில்லறை காசாக அவர்கள் கைகளுக்கு வந்து சேர்வது போல ஏதேனும் ஒரு வடிவில் கம்பனும் வந்து சேர்ந்து கொண்டுதான் இருப்பான். இந்நிலைக்குக் காரணமான கம்பன் கழகத்தையும், அதை உருவாக்கிய முன்னோடிகளான காரைக்குடி சா.கணேசன் மற்றும் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகியோர் என்றென்றும் தமிழ்க்குடியின் நன்றிக்குரியவர்கள்.

அதற்கிணையான படைப்பு தான் வெண்முரசும். ஏனெனில் இதுவும் கம்பராமாயணத்தைப் போல பண்பாட்டு கருவூலம். இப்பாரத தேசத்தின் முன்னைப் பழமைக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் அனைத்தையும் இணைத்து, முரணியக்கம் கொண்டு முன்னேறும் பண்பாட்டையே முழுமையாய்த் தொகுத்தளித்த, இப்புடவியின் எப்பகுதிக்குச் சென்றாலும் அப்பண்பாட்டை மீளுருவாக்கி தரக்கூடிய தகைமையைக் கொண்ட படைப்பு. நம் பண்பாட்டுக் கருவூலம். அது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதன் இருப்பைக் குறித்து, அதன் மதிப்பைக் குறித்து, அதன் சிறப்பைக் குறித்த பெரூமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

அதற்கு இந்த பிரம்மாண்டமான ஆவணப்படம் என்பது மிகப் பொருத்தமான துவக்கம். இப்படம் இந்தியாவிற்கு வரும் போது இன்னும் பெரிய கவனப்படுத்தலை நாம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் உலகின் மிகப்பெரிய நாவல் நம் தமிழில் தான் உள்ளது, அதன் பெயர் வெண்முரசு என்பதாவது அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.

ஒரு ஆவணப்படத்தை எடுப்பது என்பது சாதாரணமானது அல்ல. அதுவும் இத்தனை பிரம்மாண்டமாக, அபாரமான தரத்தோடு இந்த வீடுறைவு காலத்தில் அனைத்தையும் இணைய வழியாகவே தொடர்புறுத்தி முடித்துக் காட்டியது மிகப் பெரிய சாதனை. இதை சாத்லியமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும், முன்னோடியாய் இருந்து தளரா ஊக்கத்தோடு, சோர்வின்றி இசையமைத்தும், ஒருங்கிணைத்தும் பணியாற்றி இன்று ஓர் இனிய நிறைவை அனுபவித்துக் கொண்டிருக்கும் ராஜன் சோமசுந்தரம் மற்றும் ஆஸ்டின் சௌந்தர் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும். நம் அனைவரையும் ஒரு குடைக்கு கீழ் என்றும் இணைத்திருக்கும் ஜெ க்கும் என் நன்றிகள்.

விரைவில் திரையில் கொண்டாடுவேன் என்ற நம்பிக்கையில்….

என்றும் அன்புடன்,

அருணாச்சலம் மகாராஜன்.

முந்தைய கட்டுரைமோனா
அடுத்த கட்டுரைஒரு கல்லூரி மாணவியின் கடிதம்