கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 6

கதாநாயகி வாசிப்பை இப்படி நான் தொகுத்து கொள்ள விரும்புகிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் De Lannoy கருங்கல் கோட்டையாய் எழுப்பி இருந்த வட்டக்கொட்டைக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அதன் கருங்கல் படிகள் வழி மேல் தளம் செல்லும் பொழுது என் மகள்,” அப்பா இந்த வழியா தான ராஜா எல்லாம் நடந்து போய் இருப்பாங்க” என்றாள். “ஆமா யான வச்சு பீரங்கி ய மேல கொண்டுபோனாங்க. எல்லாரும் இந்த வழியாக தான் நடந்து போனாங்க” என்றேன். அவள் கால்களை அகலமாய் வைத்து, நெஞ்சை நிமிர்த்தி என் முன் ராஜநடை நடந்து சென்றாள்.கருங்கற்கள் காலத்தை தங்களுக்குள் சேமித்து வைத்து அதை தீண்டுபவரை காலங்கள் பின் நோக்கி கொண்டு செல்கிறது. காட்டின் அந்த கல் பங்களா 17ம் நூற்றாண்டு காலத்தின் அதிர்வை உள்ளடக்கிக்கொண்டு காத்திருக்கிறது.

காலத்தை புத்தன் சொன்னது போல ஒரு சக்கரமாய் கொண்டால், இந்த நிகழ்காலம் ஒரு மெல்லிய அடுக்காக கடந்த காலத்தின் மீது மறுபடி மறுபடி படிந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிறு திறப்பு மற்றும் நுண்ணிய மன அதிர்வின் துணை கொண்டு, வாய்க்கப்பெற்ற சிலர் இந்த அடுக்குகளின் ஊடே மேலும் கீழும் சென்று காலத்தின் நிலைகளை தொட்டுணர இயலும் என கொள்கிறேன். Burney, கதாநாயகன் என எல்லாரும் அதையே செய்கிறார்கள் . Burney யின் நாவல் அதற்கான WormHole.

ஆனால் அப்படிப்பட்டவர்கள் அசாதாரணமானவர்கள். அவர்கள் வாழும் உலகு அசாதாரணமானவை. ஒரு சாதாரண மனதால் தொட்டு உணர இயலாத பரிமணங்களை தொட்டு வரக்கூடியவர்கள். அசாதாரணங்களை நாம் ஏற்றுக்கொள்ள தயங்கி மருத்துவ மற்றும் மன ஆய்வுக்கு உட்படுத்தி schizophrenia அல்லது வேறு ஒன்றால் பெயரிட்டு விடுகிறோம்.ஆனால் அவர்களே மனித மனம் தொட்டுணராத விஷயங்களை கொண்டுவந்து எல்லா துறையிலும் சேர்கின்றனர். எல்லா அறிவு ஜிவிகளும், தத்துவ ஆசிரியர்களும் அந்த ரகம். எனக்கு ஜான் நாஷ்( The Beautiful mind திரைபடத்தின் நிஜ நாயகன்), நியூட்டன், பிகாசோ என்று என் பட்டியல் நீள்கிறது. நாம் அவர்களை நமக்கு தெரிந்த விதத்தில் விலக்கிக்கொண்டு அவர்களை extraordinary இல் இருந்து ordinary ஆக்கி கொள்கிறோம். கதாநாயகனின் வாழ்வியல் அறம் அவன் அசாதாரணமான மனிதன் என்பதற்கான சான்று.

Burney வாழ்த்த 17-18ஆம் நூற்றாண்டில் அவரை போல பல பெண்ணிய எழுத்தாளர்கள் ஆணாதிக்கத்தின் கசப்பின், ஆண்களுக்காக தங்களை தியாகம் செய்து கொள்ளும் பெண்களின் குரலாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு ஆண் தங்களை புரிந்து கொள்வானா என்ற ஏக்கம் இருந்திருக்கலாம். தன் உடன்பிறந்த இரு பெண்களுக்காக தன் வாழ்வை தியாகம் செய்யும் கதாநாயகனை காணும் Burney, Helena,Georgia தங்கள் கதைகளைப் அந்த ஆணுடன் பகிர்ந்து கொள்ளமுனைகின்றனர்.

இக்கதை Shutter Island, Inception, Tenent போன்ற திரைப்படங்களை பார்த்த ஒரு அனுபவம். Linear திரைக்கதைகளை கொண்ட படங்களை பார்ப்பதில் இல்லாத த்ரில் இந்த திரைப்படங்கள் தருபவை. இரண்டு கண்ணாடிகளை எதிர் எதிரே வைத்து முடிவிலியான பிரதிபலிப்புகள் கொண்ட கதைகள் மிக சுவாரசியமானவை. மேல் சொன்ன படங்களை பார்த்து விட்டு வரும் ஒருவரின் ‘ ஒரு எழவும் புரியல சார்.’ ரக மன பிம்பத்தை இந்த கதையும் தருகிறது. Long shot இல் தாத்தா அல்லது குடும்பத்தோடு சிரிக்கும் end card தேவை படும் ரசனையாளர்கள் இது போன்ற கதைகளை வெறுக்கவும் கூடும்.

மனதின் ஊடே சென்று விளையாடும் கதைகள் எனக்கானவை.மறுவாசிப்பு புதிய திறவுகொல்களை கையில் தந்து புதிய கதவுகளை திறக்கும்.இந்த கதை முடியவில்லை. இது ஒரு முடிவிலி. இப்பொழுது நானும் மற்றும் பல வாசகர்களும் அந்த புத்தகத்தின் உள் இருக்கிறோம். அந்த காட்டு பங்களாவில், மேஜை யின் ரகசிய அறையில், புழுதி படற காத்திருக்கிறோம். இன்னொரு கை அதை தீண்டும் வரை.

நன்றி

அன்புடன்

அரவிந்தன்

இராஜை

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

நலம் தானே ..

அடுக்கடுக்கான பணிச்சுமை. அலைபேசி நிறுவனங்களுக்கான உச்சகட்ட தொழில்நுட்ப முன்னேற்பாடுகள், அலைவரிசை மற்றும் தொடர்பான திறனாய்வு, அதோடு நுண் மேம்படுத்தல்களுமென இந்த தொற்று காலம் கழிகிறது.

அம்மா, தம்பி என இரண்டு மாத இடைவெளியில் பேரிழப்புகள். சொல்லிவைத்தாற்போல மாரடைப்பு. பெரிய வடுக்களை விட்டுச்செல்லும் இழப்புகள், நிரந்தர அதிர்வுகளை தண்டவாளத்தில்  விட்டுச்செல்லும் நீண்ட இரயிலென.

கிளை விட்டெழுந்தேயாகவேண்டிய பறவையின் கட்டாயத்துடன் படிக்க ஆரம்பித்த தொடரிது. பல்வேறு வகையிலும் மெய்யன் பிள்ளையை என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.ஆழத்தில் புதைத்துவிட்டதாக இறுமாந்து கொண்டிருந்த   பழியுணர்ச்சிகளும், ஏளனப்பார்வைகளும், குரூர எண்ணங்களும் அப்பா க்ரிஸ்ப்  ஃபான்னி – உரையாடலிலும், விர்ஜினியா – தந்தை உரையாடலிலும், ஹெலனா – சாப்மான் உரையாடலிலும், மெல்ல நமக்குள் எழும்போது திகைப்பெழுகிறது.

முதல் ஐந்து அத்தியாயங்களை முடித்த பின்னர் மீண்டும் முதலிலிருந்து வாசித்து என்னைத் தொகுத்துக் கொண்டேன்.தேர்ந்த மனநல மருத்துவர் நம் ஆழங்களைத் தோண்டி, மென்மையான நீரில் கழுவி, கண்ணாடியாய் நம்மிடமே காண்பிக்கும் பதற்றமெழுகிறது. உச்சாணியாய் இரண்டு மூன்று இடங்களில் விருந்துகளில் பரிமாறப்படும் குரூரமான முட்களை முன்கூட்டியே ஊகிக்க முடிந்ததில் நிஜமாகவே அதிர்ந்துதான் போனேன்.

சித்த பிறழ்வு கொண்டவர்களை சிறுவயதில் கடக்கும்போது மிகச்சரியாக தாங்கள் சொன்ன ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது.வீட்டுக்கு வந்தவுடன் குற்றவுணர்வுடன் பிரார்த்தித்ததும் நடந்திருக்கிறது.

 “அத்தனை உள்ளங்களிலும் ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. எஞ்சும் பெரும்பகுதி சிதைய வாய்ப்பு கொண்டதாக இருக்கிறது. மெல்லிய கோடு ஒன்றின் மேல்நடந்து செல்வது போல ஒவ்வொரு கணமும் சமநிலையை தேடியபடி சென்று கொண்டிருக்கிறோம். அந்த தரிசனம் திகிலூட்டுவது. “

மெல்லிய கோடொன்றின் மேல் நடந்து என்ற வார்த்தையைப் படிக்கும்போது உள்ளங்கால் இரண்டும் கூசி, பற்கள் கிட்டித்ததை இங்கே எழுதும்போதும் உணரமுடிகிறது. மெய்யனுக்கும் காணிக்குழந்தைகளுக்கும் முகிழ்க்கும் அந்த நெருக்கம் கண்ணீரை வரவழைப்பது. அம்மா ஆசிரியை என்பதால் முழாண்டு விடுமுறை முடியும் நாட்களில் சேரிப்பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்க்காய் அலைவாள். பலகட்ட வற்புறுத்தல்கள் செய்தும் பின்னடைவு ஏற்படும் கடைசி அஸ்திரமாக, எடுத்துக்கொடுக்கும் ஒரு பிஸ்கட் பொட்டலம் அந்தமுயற்சியை முன்னெடுப்பதைக் கண்டிருக்கிறேன். மெய்யனின் நெகிழ்தலை அதே தளத்தில் நின்று புரிந்து கொள்ளமுடிகிறது.

“காடு” அளித்த சித்தப்பிரமையை இங்கேயும் கொண்டாட முடிகிறது மீண்டும் மீண்டும். காடு, மழை பற்றிய பத்திகள் மட்டும் எத்தனை முறை வாசித்தாலும் உள்ளே பச்சையத்தை பெருக்குபவை. நீலிகள், யட்சிகள் ஈவ்லினாகவோ, ஹெலெனா வாகவோ, விர்ஜினியாகவோ தங்களில் எழுந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். கல்கியின் ‘நந்தினிகளுக்கு’ இன்றளவிலும் தேவைகள் இருந்து கொண்டே இருக்கிறதுதானே ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்…? இலண்டனின் பழைய வீதிகளில் நடந்திருக்கிறேன்; ஒவ்வொரு பாசம் பிடித்த  கற்சுவரிலும் வரலாறு புதையுண்ட, மாயையான நாகரீகத்தை பின்தொடர்ந்து அடையாளமிழந்த பெண்களின் குருதியையுணரமுடிகிறது.

வெகுநேரம் சமநிலையை குலைத்துப் போட்ட படைப்பிது. யாரோ ஒருவரின் இருப்பையுணர்த்திக்கொண்டே இருந்தது அதன் வரிகள். தங்களின் சமகாலத்தில் வாழும் பேற்றைவிட வேறென்ன வேண்டுமென கண்ணீருடன் நினைத்துக்கொள்கிறேன்…!!

அந்த புத்தகத்தைப் பற்றி இப்படியெழுதத் தோன்றியது:

புதுமகவின்
பூவயிறென குழைந்த
வெதுவெதுப்புடன் குளிர்ந்து
அமர்ந்திருக்கிறதென் உள்ளங்கையில் அது.
நாட்படு நீரளாவலின்
உரசல்களில் பளபளப்பும்
வெண்மையும் வந்திருக்கக்கூடும்.
தட்டையாகவிருப்பதென்னவோ நிஜம்தான்
கோட்டைக்கெனவும்
அஸ்திவாரத்திற்கெனவும்
அது தேவைப்படுவதில்லைதான்..
கண்டெடுக்கும் குழந்தைக்கைகளில்
சிறிது நேரம் அந்த
குழைவையும் திசையில்லா
விரிந்திருத்தலையும்
தவிர அதுவிடம் வேறெதுவுமில்லை…!!
சிலவமயம் நீரிலானதோவென
மாயங்காட்டி நெகிழ்வதால்தான்
அது கூழாங்கல்லோ …?

அன்புடன்,

இ. பிரதீப் ராஜ்குமார்

***

அன்புள்ள ஜெ

நீண்டநாட்களுக்கு முன் வில்லியம் பீட்டர் பிளாட்டியின் எக்ஸார்ஸிஸ்ட் என்ற நாவலை வாசித்தேன். அதன்பின் நூறு பேய்ப் படங்களை பார்த்திருப்பேன். பல நாவல்களை வாசித்திருப்பேன். அதுபோல எந்த படைப்பும் பாதிக்கவில்லை.

ஏனென்றால் அந்நாவலில் பேய் என்ற நிகழ்வுக்கு எல்லா உளவியல் விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கும். உளவியலின்படி எல்லாமே சாத்தியம்தான் என்று காட்டப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சின்ன எட்ஜ் பேய்க்கு அளிக்கப்பட்டிருக்கும். இத்தனை விளக்கங்களுக்கு அப்பாலும் ஒரு சின்ன மிச்சம்.அந்த மிச்சம் அதன் லாஜிக்கலான தன்மையால் மிரளச்செய்தது.

அதேபோலத்தான் கதாநாயகி. பேய் அல்ல. ஸ்கிஸோஃபிர்னியாதான். ஆனால் ஸ்கிஸோப்ரினியாவே எதற்கோ மனித மனம் அளிக்கும் எதிர்வினைதான். அந்த எதிர்வினையை உருவாக்கும் ஏதோ ஒன்று உண்மையில் இருக்கிறது என்கிறது நாவல்

ராத்திரி அதைப் படித்தேன். ஒருமாதிரி கைகள் நடுங்கிவிட்டன.

ஜெயக்குமார்

***

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 15
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 14
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 13
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 12
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 11
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 10
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 9
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 8
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 7
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 6
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 5
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 4
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 3
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 2
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 1
முந்தைய கட்டுரைஓ.என்.வி பற்றி…
அடுத்த கட்டுரைவரலாற்றுப் பெருக்கால் விழுங்கப்படுதல்