சுருள்வில் – போகன் சங்கர்.

“ரூம்?” என்றார் அவர். நான் அந்தக் குரலைக் கேட்டு சற்று திடுக்கிட்டுவிட்டேன் என்றே சொல்லவேண்டும். அப்படியொரு மழையில் சுமார் நூறாண்டுகளாவது பழமையான, நல்ல வானிலையிலேயே அடைவதற்குச் சிரமமான அந்த மலை வாசஸ்தல விடுதிக்கு யாரும் வரக்கூடும் என்று நிச்சயமாக நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

மெழுகுவர்த்தி ஒளியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை கவனமாக பக்கக்குறிப்பானால் அடையாளம் வைத்துவிட்டு நிமிர்ந்து “நிச்சயமாக சார்” என்றேன்.

“எல்லா அறைகளும் காலியாகவே இருக்கின்றன. நானும் சமையல்காரனும் மட்டும்தான் இருக்கிறோம். விடுதியின் சிறந்த அறையை உங்களுக்கு அளிக்கிறேன்”என்றேன்.” உங்கள் பெயர் விலாசத்தை இதில் எழுதுங்கள். எங்கிருந்து வருகிறீர்கள்?”

அவர் “இங்கிலாந்திலிருந்து” என்றபடி அதை நிரப்பினார்.

“ஏதோ படித்துக்கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது”

“ஆம்.Taylor Caldwell எழுதிய The captains and the kings”

அவர் “ஓ அந்த அமெரிக்கப் பெண்மணி” என்றார். “மறுபிறவி,இல்லுமினாட்டி போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்”

நான் “உங்களுக்குக் கிடையாதா?” என்றேன். அவர் “இல்லை” என்றவர் “மன்னிக்கவும் எனக்கு நன்றாக பசிக்கிறது.குடிக்கவும் ஏதாவது வேண்டும்”

“ஓ சாரி “என்றவன் “சுப்பையா சுப்பையா” என்று கத்தினேன். பிறகுதான் அவர் உடைகள் நன்றாக நனைந்திருப்பது கவனித்து “ரொம்பவுமே நனைந்து விட்டிருக்கிறீர்களே. அது சரி நீங்கள் எதில் வந்தீர்கள்? உங்கள் லக்கேஜ் எங்கே?”

அவர் “அதுதான் வேடிக்கை. எனது லக்கேஜ் நாளைதான் வரும். அது வேறோரிடத்தில் சிக்கிவிட்டது”

நான் “அது வரை ஈர உடையுடனா இருப்பீர்கள்?” என்றபோது சுப்பையா வந்துவிட்டிருந்தான். தூக்கம் கலைந்த எரிச்சல் அவன் கண்களில்

“சுப்பையா சாருக்கு 101 ஐக் கொடு.அவர் சாப்பிடவும் இல்லை. சப்பாத்தி குருமா செய்ய முடிகிறதா பார். ப்ரெட் இருக்கிறதா?அத்தோடு நமது ஸ்டோரைத் திறந்து அவர் கேட்கிற உடைகளையும் கொடு”

சுப்பையா அதே எரிச்சலோடு அவரை அறைக்கு அழைத்துப் போனான். நான் மறுபடி என் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டேன்

“டெய்லர் கால்டுவெல் என்ன சொல்கிறாள்?” என்ற குரல் கேட்டுதான் நிமிர்ந்தேன். “அட்லாண்டிஸ் என்ற கண்டம் இருந்தது என்று சொல்கிறாளா?”

நான் புன்னகைத்தேன். “இதிலெல்லாம் தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே?”

அவர் “உண்மைதான் இவையெல்லாம் வெளியே இப்படி மழை செய்யும்போது படிக்க நல்ல புத்தகங்கள் அவ்வளவுதான்” என்றார். “குடிக்க ஏதாவது கேட்டேனே?”

நான் என் முதுகுக்குப் பின்பிருந்த மர பாரை எட்டித் திறந்து “பேக் பைபர்?”

அவர் அங்கேயே அமர்ந்து மெதுவாக மதுவருந்த ஆரம்பித்தார். பிறகு கேட்டார் “அப்போதே கேட்கவேண்டும் என்று நினைத்தேன். இவை என்ன இரண்டு ஆளுயர கடிகாரங்கள்? இங்கிலாந்தில் சில பழைய கோட்டைகளில்தான் பார்த்திருக்கிறேன்”

நான் “சரிதான். இவை இரண்டும் இங்கிலாந்திலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டவை. இந்த விடுதி முன்பு இரண்டு வெள்ளைக்கார சகோதரர்களின் வேட்டை பங்களாவாக இருந்தது. அதாவது ஏறக்குறைய சுதந்திர காலகட்டத்துக்கு முன்பு.பிறகு கை மாறி கை மாறி இப்போது ஒரு விடுதியாக இருக்கிறது பெங்காலி முதலாளி கல்கத்தாவில் இருக்கிறார். யாரிடமாவது விற்றுவிட தேடிக்கொண்டிருக்கிறார்.”

அவர் “ஓ!” என்றார். “நீங்கள் சொன்ன வெள்ளைக்கார சகோதரர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் இங்கிலாந்துக்கு போய்விட்டார்களா?”

“இல்லை இங்கேயே ஒரு வார இடைவெளியில் மலேரியாவில் இறந்து போய்விட்டார்கள்”

“பிட்டி!” என்றவர் அந்தக் கடிகாரங்களை மீண்டும் பார்த்தார். “இரண்டு மனிதர்களை ஒளித்து வைக்கக் கூடிய அளவு பெரிய கடிகாரங்கள்” என்றார். “அல்லது பிணங்களை”

அந்த உவமை என்னை சற்றே துணுக்குறச் செய்தது.

“ஆனால் இரண்டுமே இப்போது ஓடவில்லை.இல்லையா? இரண்டுமே இறந்துவிட்டன. அந்த வெள்ளைக்காரர்கள் போல”

“இல்லைதான். ஆனால் இவை இப்போது ஓட வேண்டிய அவசியமில்லையே. அலங்காரத்துக்காக வைத்திருக்கிறோம்”

அவர் “இல்லை கடிகாரம் என்றால் ஓடவேண்டும். துப்பாக்கி என்றால் சுடவேண்டும். சும்மா காட்சிக்கு வைத்திருப்பது சரியில்லை” என்றார்.

என் மனதில் அப்போதுதான் அந்த எண்ணம் உதித்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு விதத்தில் அவரைச் சற்று சீண்ட விரும்பினேன். நான் படித்த புத்தகத்தை என் நம்பிக்கைகளை அவர் சற்றே கேலி செய்ததால் இருக்கலாம்.

“இந்தக் கடிகாரங்கள் பற்றி ஒரு கதை உண்டு. வெள்ளைத் துரைமார்களில் முதலாமவர் இறந்துபோன அன்று இந்தக் கடிகாரம் நின்று போனது. ஒரு வாரம் கழித்து இரண்டாமவர் இறந்த அன்று இரண்டாவது கடிகாரம்” என்றேன் “ஆனால் இதெல்லாம் நீங்கள் நம்ப மாட்டீர்கள் அல்லவா?”

அவர் புன்னகைத்து “அப்கோர்ஸ் நிச்சயமாக நம்ப மாட்டேன்” என்றபடி மதுக்கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தார்.” உறங்கச் செல்கிறேன். மழைக்கால இரவிற்கு உகந்த கதை. குட் நைட்”

அவர் போய்விட்டார். நான் ஏனோ சற்று ஏமாற்றமாக உணர்ந்தேன். நான் என்னை முட்டாளாய்க் காண்பித்துக்கொண்டுவிட்டேனா?ஒரு மேஜிக் ஷோவில் தொப்பியிலிருந்து முயலை வரவழைக்கத் தவறிய மந்திரவாதி போல் உணர்ந்தேன். என்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. அது அடங்கியது மறு நொடி அந்த ஒலியைக் கேட்டேன்.

கடிகாரங்களில் ஒன்று சட்டென்று மீண்டும் ஓடும் ஒலி கேட்ட அதிர்ச்சியில் என் கையிலிருந்த மதுக் கோப்பையைத் தவற விட்டுவிட்டேன். அது கீழே விழுந்து நொறுங்கியது. வேகமாக திரும்பிப் பார்த்தேன். நான் ஒரு கணம் என்னையே இழந்துவிட்டேன் என்றே சொல்லவேண்டும். ஆம். அந்த ஆளுயர அறுபது வருடங்களுக்கும் மேலாக ஓடாத பிரிட்டிஷ் கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது!

நான் “சார்!சார்!” என்று மேல்தளத்தை நோக்கிக் கத்தினேன்.

நான் அவ்வாறு வெறிபிடித்தவன் போல் கத்திக்கொண்டிருக்கும்போதே யாரோ என்னை அழைத்தார்கள். நான் திரும்பினேன்.

அங்கே என் முன்னால் இன்னொருவர் நீர் சொட்டும் உடையுடன் நின்றுகொண்டிருந்தார்.

“ரூம் இருக்கா?” என்று கேட்டார். சற்று முன்பு வந்த மனிதரின் இளம்வயது பதிப்பைப் போல் இருந்தார்.

என் வாய் தானாகவே அசைந்து “இருக்கு” என்ற சொன்ன நொடியில் ஒரு செருமலுடன் இரண்டாவது கடிகாரமும் ஓட ஆரம்பித்தது.


தீபம்- போகன் சங்கர்

மழை இருகவிதைகள்:போகன் சங்கர்

விசாரணை.- போகன் சங்கர்

பகடி -போகன்- நேர்காணல்.

தீர்வுகள் – போகன்

பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை

1. பூ – போகன்

போகன்

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 5
அடுத்த கட்டுரைகதை, முகநூல், ஒரு விவாதம்