அஞ்சலி எஸ்.என்.நாகராஜன்
கோவை ஞானியின் பெயர் அறிமுகமானபோதே எஸ்.என்.நாகராஜனின் பெயரும் இணைந்தே அறிமுகமானது. தமிழில் கோட்பாட்டு விமர்சகர்கள் எங்கு சுற்றினாலும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இவர்களை சொன்னார்கள். கோவை ஞானியை மதிப்பிடுவது போல எஸ்.என்.என் ஐ மதிப்பிடுவது அத்தனை எளிதாக இல்லை.
கட்சி மார்க்ஸீயர்கள் ஏதோ ஒருவகையில் இருவரையுமே வறுத்தெடுத்தார்கள்.மார்க்ஸீய மூலநூல்வாதம் ஒரு வைதீகத்தைப்போல இறுகிப்போயிருந்த நிலையில் இவர்களின் கீழைத்தேயம் சார்ந்த மார்க்ஸீய அணுகுமுறை அவர்களை பதற்றத்திற்குள்ளாக்கியது. ஆனால் நவமார்க்ஸீயரும் இத்தாலிய அறிஞருமான அன்டனியோ கிராம்ஷியில் இருவருக்குமான வேரை காணமுடியும். கிராம்ஷிய அரசியல் பள்ளியில் ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் கோவை ஞானியும், எஸ்.என்.நாகராஜன் ஆகியோரின் மரபு மீதான முற்றுவிலக்கமற்ற அணுகுமுறையை புரிந்து கொண்டேன்.
வரலாற்றின் தடத்தை நொண்டி விளையாட்டு கட்டங்களைப்போல கால்பரப்பி அழித்து விடமுடியாது. மரபை நம் சமகாலத்திலிருந்தும் முற்றாக தூக்கியெறியவும் முடியாது.
வெகுமக்கள் மனநிலையினுள் ஆயிரம்காலமனிதகுலத்தின் எல்லா இயல்புகளும் கூட்டுநனவிலியாக நீடிக்கிறது. எனவே ஒரு சமூகமாற்றம் ஓரு இரவில் நிகழ்வதில்லை. அப்படியானால் புரட்சியின் வரையறைகளாக இயக்க மார்க்ஸீயர்கள் முன்வைத்தவற்றை நவ மார்க்ஸீயர்கள் மறுத்தார்கள். இந்த திறப்பை தமிழில் அழுத்தமாக துவங்கியவர்கள் என கோவை ஞானியையும் எஸ்.என்.நாகராஜனையும் கொள்ளலாம்.
ஆனால் கோவை ஞானி தனது நிலைப்பாட்டை நிறுவ முன்வைக்கும் தர்க்க ஒழுங்கை எஸ்.என்.என் இடம் காணமுடியாது.. அது சலசலக்கும் காட்டாறு போல.. நம் துல்லியமான கவனம் இருந்தால் ஒழிய நாகராஜனிடம் குழப்பமே எஞ்சும். இந்த ஒழுங்குகளுக்கு உட்படாத சிந்தனை தெறிப்புகளே நாகராஜனின் பலமும் பலவீனமும். மார்க்ஸீயத்தின் நவீன தர்க்கத்தையும் வைணவத்தின் நர நாராயணியத்தையும் இணைத்து முன்வைத்த அவரின் நோக்கு மார்க்ஸீயர்களின் கடும் விமர்சனத்திற்குரியவராக அவரை ஆக்கியது.
ஆனால் ஒரு நவமார்க்ஸீயரின் இடம் அதுவே. அதன்படியே நவீன அறிவியலை அவர் சந்தேகித்தார். அந்த புள்ளியில் காந்தியை நெருக்கமானவராக கண்டார். நேரு அம்பேத்கர் ஆகியோரின் மையப்படுத்தப்பட்ட அரசு என்கிற பார்வையை விமர்சிக்கிறார். மொழி நிகர்மையை மறுப்பதாக இந்திய தேசியத்தை காண்கிறார். இந்த பார்வைகளை முன்வைக்கும் போதே அவரின் போதாமை வெளிப்படுகிறது. நகரங்கள் சாதியை ஒழித்துவிட்டதா? என்கிறார். ஆனால் சாதியின் வீச்சை நீர்க்கச்செய்ததில் நகரமயம் ஒரு முக்கியக்காரணி என்பது நடைமுறை உண்மை. ஆனால் அது வேறுவேறு வடிவங்களில் நுட்பமாக வெளிப்படுவதாக உருமாற்றம் அடைந்துள்ளதும் உண்மை.
“உண்மை ஒன்றல்ல.. மாறாக ஒரு வைரத்தின் பல பட்டைகளைப்போன்றது” என காந்தி நித்யசைதன்யதியிடம் சொன்னதை புரிந்து கொள்ள முற்பட்டால் நாம் எஸ்.என்.நாகராஜன் முன்வைத்தது அந்த பல உண்மைகளில் ஒன்றை என்பதை உணரலாம்.
கிராம்ஷியின் கருதுகோளின்படி எந்த அதிகாரத்தின் இருப்பும் மக்கள் திரளின் கருத்தியல் அங்கீகாரமின்றி நீடிக்க இயலாது. அரசியல் அதிகாரத்தை மாற்ற அதற்கான கருத்தியல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.
அதற்கான கருத்தியல் செறிவை அடைய நிறைய ஆசான்கள் தேவை. நாம் நினைப்பதை சொல்ல மறுப்பவர்களையே ஆசான்களாக கொள்ள வேண்டும்.
எஸ்.என்.நாகராஜன் அப்படியானவர்தான்..
அவருக்கு அஞ்சலி..!
முருகானந்தம் ராமசாமி
[முகநூலில்]
அன்புள்ள ஜெ
எஸ்.என்.நாகராஜன் என்ற பெயரை நான் நீங்கள் அயோத்திதாசர் பற்றிய கட்டுரையில் தமிழின் முதற்சிந்தனையாளர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டபோதுதான் கேள்விப்பட்டேன். நான் தொடர்ச்சியாக்ச் சிற்றிதழ்களை வாசிப்பவனாகவும், இணையத்தில் தேடித்தேடி வாசிப்பவனாகவும்தான் இருந்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றி 1990களில் காலச்சுவடு போன்ற சிற்றிதழ்களில் ஒரு பேச்சு இருந்ததை பிறகு கவனித்தேன். கிட்டத்தட்ட மறைந்துவிட்டார். அதன்பிறகு உங்கள் குறிப்பு வழியாக அறிமுகமானார். நான் தலித் சிந்தனைகளில் ஆர்வமுடையவன் என்றவகையில் எஸ்.என்.நாகராஜனை அதன்பிறகு கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு தமிழ்ஹிந்து அவருடைய பேட்டியை வெளியிட்டது. அவருடைய கீழைமார்க்சியம் என்னும் நூலையும் வாசித்தேன்.
கீழைமார்க்ஸியம் என்ற அவருடைய சிந்தனையில் அவர் ஆதிக்கத்தன்மை இல்லாத, மக்களிடம் கற்றுக்கொள்கிற, மக்களுக்கு ஆணையிடாமல் மக்களுக்குச் சேவை செய்கிற ஒரு மார்க்ஸியத்தை கனவு காண்கிறார். மார்க்சியம் அதன் பெருந்தொழில் உற்பத்தி பற்றிய கனவுகளையும், பெருங்கட்டுமானங்களையும் கைவிட்டுவிட்டு சிறிய அளவிலான, இயற்கையை அழிக்காத தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று சொல்கிறார். அவை பலவகையிலும் இன்றைய சிந்தனைகளுக்கு நெருக்கமானவை. அன்பு ஒரு மெய்காண்முறை என்கிறார். அது குறிப்பிடத்தக்க ஒரு கருத்து. மக்களை ஆட்சிசெய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களைப்பற்றி எழுதப்படும் எந்த ஆய்வும் பொய்யே ஆகும். அது மார்க்ஸியத்தின் பெயரால் எழுதப்பட்டாலும்கூட.
ஆனால் அவரிடம் நான் கண்ட சிக்கல் அவருடைய மாவோ வழிபாடு. அவர் தான் சொல்வதெல்லாம் மாவோ செய்ய முயன்றவை அல்லது செய்தவை என்கிறார். ஆனால் அவர் சொல்வதற்கும் மாவோவின் வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஒரு மதப்பற்றாகவே அவர் மாவோவை அணுகினார் என நினைக்கிறேன்.
முன்னோடியான சிந்தனையாளர். அவருக்கு அஞ்சலி
எம்.மகேந்திரன்
எஸ்.என்.நாகராசன் : காந்தியமும் மார்க்சியமும் சந்திக்கும் புள்ளி