ஞானமே இது பொய்யடா!

மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். எதற்காக நாம் மெய்ஞானம், ஆன்மிகம் பற்றிய பகடிகளை விரும்புகிறோம்? உண்மையில் அவற்றில் நம்பிக்கையில்லாத, அவற்றை அறியாத பெருங்கூட்டம் இவற்றுக்கு வருவ்தில்லை. இவை என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. பகடிகளும் புரியாது. இவற்றை விரும்பிப் படிப்பவர்கள், சிரிப்பவர்கள் மெய்த்தேடலில் இருப்பவர்கள்தான்.

மிக அந்தரங்கமான ஒன்று மிக தன்னுணர்வுடன் வெளிப்படுகையில் அது நமக்குக் கூச்சமளிக்கிறது. நிர்வாணமாக ஆவதன் கூச்சம் அது. ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் உடைகளை களைந்து நிர்வாணமாக ஆகிவிடுவோம். அதேபோல அந்தரங்கமான உணர்ச்சிகளையும், தேடல்களையும் நாம் சிலசமயம் அப்படியே வெளிப்படுத்திவிடவும்கூடும்.

“நீ சொன்னது சரிதான், முதல்ல கோட்டைய கட்டிட்டு அகழிய வெட்டியிருக்கணும்”

ஆனால் கொஞ்சம் தன்னுணர்வு வந்தால்கூட தயங்குகிறோம், கூசுகிறோம், குழம்பி முகம் சிவக்கிறோம். அப்போது நாம் செய்யும் ஒரே வழி அதை கொஞ்சம் பகடியாக ஆக்கிக் கொள்வதுதான். பகடி ஓர் ஆடைபோல ஆகிவிடுகிறது. அந்தரங்கத்தை மூடி மானத்தைக் காக்கிறது.

எண்ணிப்பாருங்கள், ஒரு காதலை திட்டமிட்டு யோசித்து வெளிப்படுத்தினோம் என்றால் அதில் நாம் கொஞ்சம் சுயபகடியும் கலந்துகொள்வோம். அதாவது அக்காதல் அந்தரங்கமான உணர்வு என்றால், அதை முன்வைப்பவர் நுண்ணுணர்வு கொண்டது என்றால். தன்னை, தன் காதலையேகூட பகடியாக ஆக்கிக்கொள்கிறோம்.

மறுபிறப்பு ஆராய்ச்சி சாலை மிதியடி. “மறுபடியும் வந்ததற்கு நல்வரவு”

பொதுவாக அறிவுஜீவி ஆண்களின் இயல்பு இது. ஆனால் பெண்களுக்கு நேரடியாக முன்வைப்பதே பிடித்திருக்கிறது. அதில் பகடி கலந்தால் பெண்களுக்கு அது பொய்யாக, ஒரு படி குறைவானதாக தோன்றுகிறது. தன்னையோ தன் உணர்ச்சிகளையோ கேலிசெய்வதாக எடுத்துக்கொள்வதுமுண்டு. கொஞ்சம் பகடி கலந்து சொல்பவர் மிகச்சூடான தோசைக்கல்லில் குளிர்நீர் தெளிப்பதுபோலத்தான் அதைச் செய்கிறார் என்று பெண்கள் புரிந்துகொள்வதில்லை.

ஆகவே அது இளைய தலைமுறையினருக்கு பரிந்துரைக்கத் தக்கது அல்ல. பழைய காலப் பெண்கள் கணவர்களின் எல்லா கொடுமைகளுக்கும் கொஞ்சம் இடம்கொடுப்பவர்கள். இன்றைய பெண்கள் ‘மோதிமிதித்துவிடு பாப்பா’ என்று பாரதி சொன்னதை தலைகொள்பவர்கள்.

எனக்குத் தெரிந்த மலையாள இயக்குநர் ஒருவர் மனைவியை காதல்செய்த நாட்களில் எழுதினார். “உன் நினைவை வருடிக்கொண்டிருக்கிறேன், அடுத்தபடியாகவே பிற வருடல்கள்”. மனைவி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின் அந்தப் பகடியை புரிந்துகொண்டு அதெப்படி எழுதப்போச்சு என்று ஒரே சண்டை. வயதுவந்த மகள்களுக்குத் தெரியாமல் அதை மறைக்க பெரிய பாடாகப் போய்விட்டது.

”ஸ்ஸ், இங்கபார். எனக்கு இதோ இப்ப ஞானம் வந்தது. இந்த தியானமெல்லாம் செம போர்” 

பகடியை கலக்கவில்லை என்றால் அந்தரங்கத்தின் மேல் மூடும் ஆடை என்பது கவித்துவம். உயர்கவித்துவமோ பைங்கிளிக் கவித்துவமோ. பிரமிளோ தபூசங்கரோ. இரண்டுமே வெறும் திரைகள்தான். அவை அளிக்கும் இடைவெளி அல்லது விலக்கம் அந்த தீவிரத்தை நாம் கையாளுமளவுக்கு ஆக்கி நமக்கு அளிக்கிறது. முன்பு பிரமிளின் ஒரு கவிதையைப் பற்றி தேவதச்சன் பகடியாகச் சொன்னார். “மூவாயிரம் ஆண்டுகளா கவிதை எழுதியும் காமத்தை ஒண்ணுமே செய்யமுடியலை பாத்தீங்களா?”

ஆனால் வெறுமே கவித்துவத்தைக் கையாள்பவர்கள் கொஞ்சம் குறைவானவர்கள் என்பது என் எண்ணம். ஏனென்றால் கவித்துவமே அந்தரங்கமானது, அதை அப்பட்டமாக முன்வைப்பது கொஞ்சம் கூச்சமளிப்பது. பலசமயம் நாம் அந்தப்பக்கம் கவித்துவம் இந்தப்பக்கம் பகடி என இரண்டு பக்கமும் கும்கி யானைகளை நிறுத்தி அந்த காட்டுயானையை ஊருக்குள் கொண்டுவருகிறோம்.

”அகஅமைதியே, சீக்கிரம் வந்து தொலை. ஆயிரத்தெட்டு வேலை கெடக்கு”

தோப்பில் பாஸியின் தன் வரலாற்றில் என ஞாபகம். 1950 களில் ஒருவர் தன் கல்யாணப் பத்திரிகையை கொண்டுவந்து தோழரிடம் காட்டுகிறார். தோழர் முகம்சுளித்து சொன்னார். “இப்டி அச்சடிச்சு ஊர் ஊரா குடுக்கிறியே, வெக்கமா இல்ல?”

என்ன ஆச்சரியமென்றால் அழைப்பிதழ் அச்சிட்ட இளைஞர் கூசிச் சுருங்கிவிட்டார். அழுகை வந்துவிட்டது. அத்தனை அழைப்பிதழையும் கிழித்து வீசிவிட்டார். “ஏன் தோழர்?” என்று கேட்கப்பட்டபோது இளைஞர் சொன்னார் “சேச்சே, படு கேவலம். இத்தனாம் தேதி இன்னாருடன் படுக்கப் போறேன்னு நானே அச்சடிச்சு ஊர் பூரா பரப்பிட்டிருக்கேன். இப்பதான் தெரியுது”. அந்தப் பெண்ணிடமும் சொல்லியிருந்தார் என்றால் அவர் குடும்பத்தில் புரட்சி நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு- ஆயுதப்புரட்சி.

 “உன்னைப்போல புத்திகெட்ட ஒருத்தனை பார்த்ததே இல்ல”

“ரொம்ப நன்றி மாஸ்டர்”  

அதேபோலத்தான் ஞானத்தேடலும், அந்தரங்கமானது, வெளியே வெட்டவெளிச்சமாக வைத்தால் அபத்தமானது. ஆகவே அதை கொஞ்சம் அபத்தமாக ஆக்கி வெளியே வைத்தால் அவ்வளவு கூச்சமளிக்காததாக இருக்கும். presuppressed பாலங்கள் என்று பொறியியலில் சொல்வார்கள். அந்தப்பாலத்தின்மேல் எவ்வளவு எடை ஏறுமோ அதே எடை ஏற்கனவே ஏறியதாக எண்ணி வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எடை ஏறும்போது எடை இல்லை என்றே அவை கொள்கின்றன.

presuppressed என்பது இலக்கிய அழகியலிலும் உகந்த கொள்கை. படைப்பு, படைப்பாளி என இரு நிலையிலும். ஒரு படைப்புக்குமேல் இந்துத்துவ, பெண்ணிய, பெரியாரிய, மார்க்சிய, கலகிய  misreaders என்னென்ன சொல்வார்கள் என ஊகித்து முன்னரே அதற்கான எதிர்வினையையும் படைப்பில் வைத்துவிட்டால் நீடித்து உழைக்கும். அதேபோல எழுத்தாளர் எஞ்சிய வாழ்நாளில் அடையப்போகும் அவமதிப்புகளுக்கெல்லாம் முன்னரே துன்புற்றுவிட்டு எழுத ஆரம்பித்தால் நோயெதிர்ப்புசக்தி வலுவாக இருக்கும். அனுபவ பாடம்.

“எதுக்குமே அர்த்தமில்லை”

”இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்”

[சூனியவாதமும் ஜென்னும்]

ஆனால் பகடியை ஜாக்ரதையாகச் சொல்லவேண்டும். என் மாமா ஒருத்தர் “ஞான் என்ற மலையாள வார்த்தையில் இருந்துதான் ஞானம் வந்தது. ஞான் ஞான் என்று நினைத்துக்கொண்டிருப்பது ஞானம்” என்று சீரியஸாக வாதிட்டார். அது அவருக்கு சரியாகப் பொருந்துவது. அவர் கோயிலுக்குப் போனால்கூட  ‘குருவாயூரப்பன் கண்ட நான்’ என்ற அளவில்தான் வர்ணனை இருக்கும்.

ஆனால் அது கேரளத்தின் கீதைப்பேச்சாளர் ஒருவர் பகடியாகச் சொன்னது. தன்முனைப்பு எப்படி ஞானமாகக் கருதப்படுகிறது என்று அவர் சொல்ல இவர் அப்படியே எடுத்துக்கொண்டார். என் அண்ணா ஒருவர் அருகே நின்று “சுவாமிஜி literal ஆகச் சொன்னதை இவர் literature ஆக எடுத்துக்கொண்டார். literally பேசுவதுதானே literature?” என்றார். ’போச்சுடா’ என நினைத்துக்கொண்டேன்.

“அந்தப்பக்கம் வர என்ன வழி?”

“பிரதர் ஏற்கனவே நீங்க அந்தப்பக்கம்தான் இருக்கீங்க” 

அப்படியே சாப்பிடுவேன் வகை மெய்ஞானத்தேடலின் ஆபத்துக்கள் பல. அந்தக்காலத்தில் பத்மநாபபுரத்தில் ஒரு பெரிசு “அகம் பிரம்மாஸ்மி, புறம் சிவாஸ்மி’ என்று சொல்லி டீக்கடையில் ஆவேசமாக விளக்கிக் கொண்டிருந்தது. அவருடைய குரு, முன்னாள் போலீஸ்காரர் சாமியாராக ஆனவர், சொன்ன பகடி அது.

நண்பர் கே.ஸி.நாராயணனிடம் அதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் “உலகத்திலுள்ள அத்தனை மதங்களும் literature ஐ literal ஆக எடுத்துக் கொண்டதனால் உருவானதுதானே என்றார். அதுவும் சரிதான். பகடி விடும்போது நாம் யோசிக்கவேண்டிய விஷயம் இது.

தியானத்தில் எச்சொல் கடைசியாக எஞ்சுகிறதோ அதுவே மெய்ஞானம்”

ஒரு சாமியார் சொன்ன கதை இது. ஒருவர் விபச்சாரிகளிடம் செல்லும் வழக்கம் கொண்டவர். ஒரு சாமியாரிடம் அவர் வந்தார். சாமியார் அவருடைய விதைக்கொட்டைகளைச் சுட்டிச் சொன்னார். “எத்தனை நூறு விபச்சாரிகளைச் சுமந்துகொண்டு அலைகிறான் இவன், பாவம்” ஆசாமிக்கு முகம் வெளிறி கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

பகடிவிடுபவர்கள் பல மதங்களை, தியானமுறைகளை, தத்துவங்களை மதங்களை விதைகளாக கவனமில்லாமல் அங்குமிங்கும் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்ரதையாகத்தான் இருக்கவேண்டும்.

நவயுக புத்தர். ஞானத்துக்கான வழி ஃபேஸ்புக்கிலே சண்டை போடுறதுதான்

முந்தைய கட்டுரைஒரு கதை விவாதம்
அடுத்த கட்டுரைவெண்முகில் நகரம் முடிவு