ரிச்சர்ட் பார்லெட் க்ரெக் , சில எண்ணங்கள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி

The Power Of Non Violence – Richard Barlette Gregg

புதன் வாசகர் வட்டம் என்னும் அமைப்பு, ஒவ்வொரு புதன் கிழமையும், காந்தியைப் பற்றிய புத்தகங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த அமைப்பை நடத்துபவர்களில் ஒருவரான சரவணன் ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்..

குமரப்பா பத்தி ஒரு கட்டுரைத் தொடர் எழுதலாம்னு ஒரு காலத்துல இந்த ரெஃபரன்ஸ் புத்தகத்தை கிண்டிலில் வாங்கி வச்சிருந்தது நினைவுக்கு வந்தது. அதுதான் இந்தப் புத்தகம். –  The Power of Non Violence.

இதை எழுதிய ரிச்சர்ட் க்ரெக், 1885 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அதன் பின்னர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, வெற்றிகரமான வக்கீலாக, தொழில்துறை, அரசாங்கம், தொழிலாளர் என்னும் மூன்று தரப்புகளுக்கிடையே வேலை நிறுத்தங்கள், ஒப்பந்தங்கள் என பல்வேறு நிலைகளில் பணிபுரிந்திருக்கிறார். இந்த மூன்றுதரப்புகளுக்குமிடையே ஊடாடியதில் அவர் மிக முக்கியமான சில மனநிலைகளை வந்தடைந்தார். இந்தக் காலகட்டத்தில் ஒருநாள், காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்து, அதில் தன் மனதைப் பறிகொடுக்கிறார். 1924 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ஆம் தேதி,அவருடைய அம்மா, உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தை, எழுதி வைத்து விட்டு இந்தியா கிளம்புகிறார்.

’நான் நமது அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறேன்.. பெரும்பாலான அரசுகளுக்கும் எதிராக.. அரசுகள் வன்முறையை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன.. வன்முறை வழியாகவே இயங்குகின்றன.

இயந்திரத் தொழில்முறைகளையும், வணிகக் கலாச்சாரத்தையும் வெறுக்கிறேன். இதன் பின்ணணியில் இருக்கும் முதலாளித்துவத்தையும்..

தொழிலாளர் நல அமைப்புகளும் இந்தக் கட்டமைப்புக்குள் தான் இயங்குகின்றனவே ஒழிய, இதை மாற்ற முயல்வதில்லை.

எனது இந்த நம்பிக்கைகள், நவீன அமெரிக்காவை விட, இந்தியாவுடன் தான் அதிகம் பொருந்தும்.. எனவே நான் இந்தியா போகிறேன்’, என உணர்வு பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, இந்தியா புறப்பட்டுப் போகிறார்..

ரிச்சர்ட் க்ரெக், தொழில் நிறுவனங்களுக்கும், அரசுக்கும், முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே இயல்பாக உருவாகும் முரண்கள், அதற்கான தீர்வுகள் போன்றவற்றை தன் வாழ்வினூடே அவதானித்த அவர், இந்தச் சிக்கல்களுக்கான தீர்வுகள் பெரும்பாலும் வன்முறையின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை வருத்தத்துடன் அவதானிக்கிறார்.  அப்போதுதான் காந்தியைப் பற்றிய ஒரு கட்டுரையை அவர் படிக்க நேர்கிறது.  தான் கண்ட பிரச்சினைகளுக்குக் காந்திய வழி ஒரு தீர்வாக அமையலாம் என்னும் நம்பிக்கையில் இந்தியா வருகிறார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையிலேயே அதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  1930-33 ஆண்டுகளில், இந்தியாவில் காந்தி முன்னெடுத்த உப்புச் சத்தியாக்கிரகம், காந்தியின் இந்த வழியின் வலிமையையும், அதன் நடைமுறைச் சாத்தியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

இது இந்தியாவில் சாத்தியமெனில், உலகில் பெரும் நாசங்களை விளைவிக்கும் போர்கள், வர்க்க மோதல்களுக்கான தீர்வுகளை, இதே போல அமைதியான வழியில் தீர்த்துக் கொள்ள முடியுமா?  இதன் உட்கூறுகளை நாம் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்குப் பயன் படுத்திக் கொள்ள முடியுமா. அறம் மற்றும் அறிவார்ந்த அளவுகோள்களில், இந்த முறை மேன்மையானதா? என்னும் கேள்விகளை கேட்டுக் கொள்கிறார்.

மேற்கத்திய நவீன வழிச் சிந்தனைகளிலும், செயல்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட மேற்கத்திய மனங்களுக்கு, அகிம்சை என்பது ஒரு ஆற்றொழுக்கான, இயல்பான தீர்வு என்பது புரியாது. இதைக் காந்தியே விளக்கினாலும், மேற்கத்தியர்களுக்குப் புரியாது என்கிறார் க்ரெக்.

இது பற்றிய காந்தியின் விளக்கங்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பின்ணணியில், வாழ்க்கை நோக்கங்களில் இருந்து எழுபவை.  இந்தியர்களின் அனுமானங்கள், சமூக அனுபவங்கள், சிந்தனை மரபுகள், வரலாறு – இவையனைத்தும் முற்றிலும் வேறானவை.  எனவே, இதை, நான் ஆராய்ந்து, இதன் முக்கியக் கூறுகளை, மேற்கத்தியக் கருதுகோள்கள், சொல்லாட்சிகள் வழியே விளக்க முயல்கிறேன் எனத் தன் நோக்கத்தை முன்வைக்கிறார். அகிம்சை என்னும் இந்த வழி, ஏன் வன்முறை மூலம் எட்டப்படும் தீர்வுகளை விட நீடித்து நிலைக்க வல்லது, மேலானது என்பதைச் சொல்வதே என் நோக்கம் என்கிறார்.

நுட்பமான மனம் கொண்டவர்கள், இவ்வழிமுறையில், அறம் சார்ந்த அழகியலைக் காண்பார்கள்.  அது அகிம்சை வழியின் ஒரு முக்கிய அம்சம் எனினும், இந்தப் புத்தகத்தில் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை.  பகுத்தறிவின் துணை கொண்டு, இவ்வழியை அலசுவதை மட்டுமே இந்த நூலில் நான் செய்யப் போகிறேன் என நம்மை முன் கூட்டியே எச்சரித்து விடுகிறார்.

இதை எழுத எனக்கு என்ன தகுதி எனக் கேட்டுக் கொள்ளும் க்ரேக், தனது தகுதிகளை முன் வைக்கிறார்.. ஹார்வர்ட் பல்கலையில் சட்டம் படித்தவர். 3 ஆண்டுகளாக வக்கீல் தொழிலில் இருந்தவர்.. அதன் பின்னர் நான்காண்டுகள், தொழில் துறைச் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் மத்தியஸ்தராக, நிபுணராகப் பணியாற்றியவர். நான்கு ஆண்டுகள் இந்தியாவில், காந்தியுடன் தங்கி, அவர் வழிகளை ஆழ்ந்து கற்றவர். பின்னர் உப்புச் சத்தியாக்கிரகம் உருவான காலத்தில் 6 வாரங்கள் அதை நேரில் ஆய்ந்தவர். இவை க்ரெக்கின் தகுதிகள்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயத்தில், அகிம்சை வழிப் போர்கள் பற்றிய சரித்திரத் தரவுகள் கொடுக்கப்படுகின்றன.. அவற்றுள் எவை வெற்றி பெற்றவை.. எவை வெற்றி பெறாதவை என்பன அலசப்படுகின்றன். பின்னர் அடுத்த சில அத்தியாயங்கள், ஜ்யூ ஜிட்சு என்னும் ஜப்பானியச் சிந்தனை முறை, அகிம்சை வழியில் மக்களின் உணர்வு என்னும் சக்தியை எப்படி ஒன்றிணைப்பது, இது போன்ற போராட்டங்களில் நிகழ்வன என்ன என்ன என்பதைப் பேசுகின்றன.  அதற்கடுத்த சில அத்தியாயங்கள், பெருமளவிலான அகிம்சைப் போர்கள் சாத்தியமா, ஏன் அகிம்சை வழி என்பது வன்முறைப் போருக்கு எதிரான மாற்று, இதன் அரசியல் அம்சங்கள், உயிரியல் பின்ணணி முதலியன பேசப்படுகின்றன

புத்தகத்தின் இறுதிப் பகுதிகள், அகிம்சை வழியில் ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள், தனி மனிதன் மற்றும் குழுக்களுக்குத் தேவையான ஒழுக்கம், வழிமுறைகள் இவற்றைப் பேசுகின்றன.

முடிந்த வரை எளிதாக எழுதியிருக்கிறேன் எனச் சொல்கிறார் க்ரேக்.. ஆனால், அவ்வளவு எளிதாக இல்லை என்பதே என் அனுபவமாக இருக்கிறது.. ‘என்னை இப்படி மாட்டி வீட்டீர்களே சரவணன்’, எனத் திட்டிக் கொண்டேதான் படித்தேன்.. ஆனால், படித்து முடித்து, இந்த உரையை எழுதும் போதுதான், இதன் அடிப்படைகளை, சாத்தியங்களை உணர்ந்து பிரமித்தேன்.

காந்தியம், அகிம்சை, போன்றவற்றைக் கேள்வி கேட்காமல், பக்தி மனநிலையில் பின்பற்றும் என் போன்றவர்களின் பக்தியின் பாசாங்கை அகற்றி, அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடி எது என்பதைச் சுட்டுகிறது இந்தப் புத்தகம்.

அகிம்சை, சத்தியாக்கிரக வழிகளின் அற அடிப்படை, உளவியல் , அரசியல், பொருளாதார மேன்மை, சமூகத்தின் உயர்வு, போன்றவை நவீன மேற்கத்திய, தர்க்க ரீதியான அளவுகோள்களில் அலசப்படுகின்றன.

காந்தியத்தின் மேன்மைகளை, தரவுகளின் அடிப்படையில் அறிந்து கொள்கையில், நம் மொத்த இருப்புமே காந்தியத்தின் உயர்வை, இம்மி கூடப் பிசகாமல் உள்வாங்கிக் கொள்கிறது.  ‘பசுமரத்தாணி’, என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே இதுநாள் வரை அறிந்திருந்தேன். இந்தப் புத்தகம் அறிவியல் வழியில், அதை நம் இதயத்தில் செருகுகிறது.

புத்தகத்தின் தொடக்கம், நவீன வரலாற்றில் நிகழ்ந்த பல அகிம்சைப் போராட்டங்களைப் பேசுகிறது.

இதன் முதல் உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹங்கேரியில் நிகழ்ந்த ஒரு போராட்டத்தைக் குறிப்பிடுகிறார் க்ரெக். ஆஸ்திரிய மன்னர் ஃபிரான்ஸ் ஜோசஃப், ஆஸ்திரியாவுக்கும், ஹங்கேரிக்கு இடையில் இருந்த நட்பு ஒப்பந்தத்தைச் சிதைத்து, ஹங்கேரியை ஆஸ்திரியாவுக்கு அடிமைப் படுத்த நினைக்கிறார். ஹங்கேரியின் மிதவாதிகள், பலவீனர்களாய், அதை எதிர்க்கச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதைக் கண்டு மனம் கொதித்து, ஃபிரான்சிஸ் டீக் என்னும் கத்தோலிக்க நில உடமையாளர், மிதவாதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். ‘நம் சட்டங்கள் மிதிக்கப்படுகின்றன.. ஆனால், மிதவாதிகளான நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.. இப்படிச் சட்டங்கள் மிதிக்கப்படுகையில் அமைதியாக இருக்கும் தேசத்துக்குப் பெரும் தீங்கு வந்து சேரும். இந்த அமைதி நம்மை அடிமைகளாக்கும்.  அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிர்க்குரல் எழுப்பாமல் பணிந்து போகும் தேசம் அழிந்தே போகும்’, என முழக்கமிடுகிறார்.

ஃப்ரான்சிஸ் டீக், ஆஸ்திரிய அரசாங்கத்தைப் புறக்கணித்துவிட்டு, ஹங்கேரிக்கான தனித்துவமான கல்வி, வேளாண்மை, தொழில் திட்டங்களை வடிவமைக்கிறார்.. ஆஸ்திரியப் பொருட்களைப் புறக்கணிக்கக் குரல் கொடுக்கிறார். அரச வன்முறையைக் கண்டு அஞ்ச வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார். ’ ‘நமது கொள்கை சட்டபூர்வமான, வலுவான பாதுகாப்பான ஒன்று.. நியாயம் நம் பக்கம் இருக்கிறது.

இதன் அடிப்படையில், ஆயுதங்களற்ற நாம், அரசின் ஆயுதப்படைகளை எதிர்த்து நிற்க முடியும்.. ஆயுதப்படையின் வன்முறையினால் ஏற்படும் துயரங்களை, தலைநிமிர்ந்து கண்ணியமாக ஏற்றுக் கொள்வோம்’, என வழிநடத்தினார். அவர் குரலை, மொத்த ஹங்கேரி நாடும் கேட்டு அதன் படி நடந்தது.

ஆஸ்திரிய வரி அலுவலர் வந்த போது, ஹங்கேரி மக்கள் அவரைத் தாக்க்கவில்லை.. எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.. ஆனால் வரியும் கொடுக்கவில்லை.  ஆஸ்திரியப் படைகள் மக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தன. அதை ஏலத்தில் விற்க அரசு முயன்ற போது, அவற்றை வாங்க எந்த ஹங்கேரியரும் முன் வரவில்லை..

வேறு வழியின்றி,ஆஸ்திரிய அரசு, ஆஸ்திரியாவிலிருந்து ஏலம் விடுபவர்களை அழைத்து வந்தது.. ஏலத்தில் அந்தச் சொத்துக்களை வாங்க எந்த ஹங்கேரியரும் முன் வரவில்லை. எனவே, சொத்துக்களை வாங்கவும் ஆஸ்திரியர்களை அழைத்து வரவேண்டியிருந்தது. இந்த முறை, அரசுக்கு மிகவும் செலவு பிடித்ததாக இருந்தது. இவ்வளவு செலவுக்குப் பின்னர் பெறப்படும் வரி, செலவை விடக் குறைவாக இருந்தது.ஹங்கேரியரை அடிமைப்படுத்தும் செயல் ஆஸ்திர்யாவுக்கு பொருளாதார நஷ்டமாக முடிந்தது.

ஆஸ்திரிய அரசு, தங்கள் படைவீரர்களை, கட்டாயமாக ஹங்கேரிக் குடிமகன்களின் வீடுகளில் தங்க வைத்தது. ஹங்கேரி மக்கள் அதை எதிர்க்க வில்லை.. ஆனால், வீடுகளில் தங்கிய வீரர்களை ஒருவரும் மதிக்க வில்லை. தங்களுக்கு மரியாதை இல்லாத வீடுகளில் வலுக்கட்டாயமாகத் தங்க வைப்பதை ஆஸ்திரிய வீரர்கள் வெறுத்தார்கள். எதிர்க்குரல் எழுப்பத் தொடங்கினார்கள்.

ஆஸ்திரியப் பொருட்களைப் புறக்கணிப்பதை, ஆஸ்திரிய அரசு சட்ட பூர்வமாகத் தடை செய்தது. ஆனால், ஹங்கேரி மக்கள் அந்தச் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.  மீறுவோர் சிறைப்படுத்தப்பட்டார்கள்.. விரைவில், சட்ட மறுப்பாளர்களால், சிறை நிரம்பி வழியத்தொடங்கியது. ஹங்கேரியின் மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்றத்தைப் புறக்கணித்தார்கள்.

இறுதியில், ஆஸ்திரிய அரசு இறங்கி வந்தது. ஹங்கேரி மக்களுக்கு, பாதி சுயராஜ்ய உரிமையைக் கொடுத்தார்கள்.. ஆனால், ஹங்கேரியர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.  முழு சுதந்திரம் கேட்டார்கள். அதை அடக்க ஆஸ்திரிய அரசு அனைவருக்கும் கட்டாய ராணுவ சேவைச் சட்டம் கொண்டு வந்தது. ஹங்கேரியர்கள் அதையும் மீறினார்கள். இறுதியில் 1867 ஆம் ஆண்டு ஆஸ்திரிய மன்னர், வேறு வழியின்றி ஹங்கேரிக்கு முழு சுதந்திரம் அளித்தார். இது நிகழ்ந்த இரண்டு ஆண்டுகள் கழித்துதான் காந்தி பிறந்தார்.

அகிம்சையும் சத்தியமும் இமய மலைகளைப் போன்றே புராதனமானவை எனக் காந்தி சொன்னது அவையடக்கமல்ல. உண்மை.

இதற்கு அடுத்ததாக, 1906 ஆம் ஆண்டு தொடங்கி, 8 ஆண்டுகள் நடைபெற்ற தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தைக் குறிப்பிடுகிறார் க்ரெக். அதன் பின்னர் 1917 ஆம் ஆண்டு சம்பாரனில் நடைபெற்ற, இண்டிகோ உழவர்களின் பிரச்சினையைக் காந்தி முன்னெடுத்த விதத்தில், சத்தியாக்கிரகப் போராட்டங்களில் தலைவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான அடிப்படை அணுகுமுறையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் க்ரேக்.

காந்தி சம்பாரனில் நுழையும் போதே, சம்பாரன் கலெக்டர், அவரை அடுத்த ரயிலில் திரும்பிப் போகுமாறு ஆணையிடுகிறார்.. அதற்கு, காந்தி, இண்டிகோ உழவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மையான தரவுகளைத் திரட்டுவதே தன் நோக்கம் எனவும், தேவைப்பட்டால், தான் சிறை செல்லத்தயாராக இருப்பதாகவும் பதில் சொல்லி அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து, காவலர்கள் காந்தியின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்.. காந்தி தன் வேலையைத் தொடர்கிறார்.. உழவர்களின் பாதிப்புகளை, விருப்பு வெறுப்பின்றி, உண்மைப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கிறார்.. தான் கைது செய்ய்யப்பட்டால், அதைத் தொடர்ந்து செய்ய அடுத்த இருவர், அதற்கடுத்த இருவர் என, அந்த வேலை தொய்வடையாமல் நிகழத் திட்டமிடுகிறார்கள். சில நாட்களில், காந்தி கோர்ட்டுக்கு அழைக்கப்பட்டு, விசாரிக்கிறார். நீதிபதியின் முன்னிலையில், தான் செய்வது சட்டப்படி தவறு, ஆனால், தனது மனசாட்சி, இந்த அநீதிக்குப் பரிகாரம் காணச் சொல்கிறது. எனவே, சட்டப்படி நான் குற்றவாளி என என்னைத் தண்டிக்கலாம் என முறையிடுகிறார். நீதிபதி குழம்பி தண்டனையை ஒத்தி வைக்க்கிறார்.

பின்னர் அப்பகுதியின் லெஃப்டினண்ட் கவர்னர், காந்தியை விடுதலை செய்ய உத்தரவிடுகிறார்.. இண்டிகோ உழவர்களின் குறைகளைக் களைய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தி அதில் ஒரு உறுப்பினராகச் சேர்க்கப்படுகிறார். உழவர்களுக்கான நீதி பெறப்படுகிறது.  போராட்டத்தில், அறிவியற் பூர்வமான முறையில் திரட்டப்படும் தரவுகள், போராட்டத்தின் அற அடிப்படையை உறுதி செய்ய முக்கியமானவை என்பதை இந்தப் போராட்டம் வழியே நமக்குச் சொல்கிறார்.

இப்படியான தயாரிப்புகள் இல்லாமல், நிகழ்ந்த போராட்டங்கள் பெரும் தோல்வியுற்றிருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக 1925 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த தொழிலாளர் போராட்டத்தைச் சொல்லலாம்.  பிரிட்டிஷ் தொழிலாளர்களின் தலைவர்கள், ஒரு ஆண்டாக போராடுவோம் என அரசைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்களே தவிர, போராட்டத்துக்கான ஆயத்தங்கள் எதுவுமே செய்ய வில்லை. ஆனால், அவர்களின் எதிர்த்தரப்பான அரசும், அதன் ரகசிய காவல் படையும் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்ள, பல முன்னேற்பாடுகளைச் செய்து தயாராக இருந்தனர்.

வேறு வழியின்றி, ஒரு நாள் தொழிலாளர் போராட்டம் தொடங்குகிறது. போராட்டம் தொடங்கிய மூன்றாம் நாளில், அரசாங்கம் இந்தப் போராட்டத்தை சட்டத்துக்கு எதிரானது எனச் சொல்லி, நெருக்கடி நிலையை அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் சங்கங்களின் நிதிகள் முடக்கப்பட்டு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டன.. தொழிலாளர் போராட்டத்தின் போது நிகழும் சேதங்களுக்கு, அவர்களின் தலைவர்களே பொறுப்பு என்றும், அதற்கான நஷ்ட ஈட்டை அவர்களே தனிப்பட்ட முறையில் தரவேண்டும் என அரசு அறிவித்தது.

அரசின் இந்த எதிர்வினைகளுக்குக் கொஞ்சமும் தயாராக இல்லாத தொழிலாளர் தலைவர்களும், யூனியனும் நிலை குலைந்து போயினர்.. அரசின் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள், இத்தலைவர்கள், தொழிலாளர் குழுக்களுடனோ மற்றவர்களுடனோ கலந்தாலோசிக்காமல், பிரதமர் முன்பு நிபந்தனயற்ற சரண் அடைந்து, போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.  ஆனால், இதன் பின் விளைவுகளாக தொழிலாளர்கள் பலர் பழி வாங்கப்பட்டனர். தொழிலாளர் யூனியன்கள் பலமிழந்து போயின..

இதுவும் ஒரு அகிம்சைப் போராட்டம்தான் எனினும், பெரும் தோல்வியில் முடிந்தது. முதலில் தொழிலாளர் தலைவர்களிடம் போராடும் உத்வேகம் இருக்கவில்லை.. போராட்டத்தின் விளைவாகச் சிறை செல்லும் மன உறுதி அவர்களிடம் இருக்கவில்லை. போராட்ட காலத்தில் அவர்கள் நடவடிக்கைகள் ஏதேச்சதிகாரமாக இருந்தன. போராட்டத்தின் விளைவுகளை எதிர்பார்த்துத் திட்டமிட்டிருக்கவில்லை. போராட்டத்தின் நியாயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பத்திரிகைகளை அவர்கள் இயங்க அனுமதிக்க வில்லை.. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதிக்க வில்லை. பொய்களைப் பேசினார்கள்.. அவர்கள் பேச்சில் வன்முறையும், வெறுப்பும் வெளிப்பட்டது. இதனால், போராட்டத்துக்குப் பொது மக்களின் ஆதரவு இல்லாமல் போனது.  1925 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் போராட்டம், ஒரு போராட்டத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

போராட்டத்தில் ஈடுபடும் பலரும் மறந்து விடும் ஒரு விஷயம் – போராட்டத்துக்கான சமூக ஆதரவு முக்கியமானது என்பதாகும். எல்லாத் தரப்பு மக்களுமே, சமூகம் என்னும் கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். சமூகத்தின் ஆதரவில்லாத அல்லது அதைப் பாதிக்கும் எந்தச் செயல்களையும், பொதுமக்கள் விரும்புவதில்லை. அந்த ஆதரவின்மை என்பது. போராட்டத்திற்குப் பெரும் பின்னடவை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக 2018 ஆம் ஆண்டு, ஒரு உழவர் போராட்டம் மஹராஷ்ட்ராவில் நிகழ்ந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கிசான் சபை என்னும் பிரிவு, இதை முன்னெடுத்தது. நாசிக் நகரில் இருந்து மும்பை வரை கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் கால்நடையாகச் சென்றார்கள்.. சரியாகத் திட்டமிடப்பட்டு, உணவு, மருத்துவம் என அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உழவர்கள் சாலையின் ஒரு பக்கமாக போக்குவரத்துக்கு எந்த பாதிப்புமில்லாமல் நடந்து சென்றார்கள்.. இறுதி நாள் ஞாயிறு மாலை மும்பை நகரை அடைந்தது அவர்கள் பயணம்.. அடுத்த நாள் மகராஷ்ட்ராவில் பிள்ளைகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வு. பகலில் பயணம் செய்வது மும்பை நகரத்தில் போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்திக் குழந்தைகளுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படும் என்பதைக் குழு உணர்ந்தது. மக்கள், பகல் எல்லாம் நடந்து களைத்திருந்தாலும், சுணங்காமல், புறப்பட்டு இரவே மும்பை நகருக்குள் நுழைந்து, தாங்கள் தர்ணா செய்ய இருந்த மைதானத்தை அடைய முடிவெடுத்தார்கள். இதைக் கேள்விப்பட்ட மக்கள், தெருவுக்கு வந்து, போராட்டக்காரர்களுக்கு தண்ணீர், உணவு, பிஸ்கெட் முதலியவற்றை வழங்கினார்கள்.. அடுத்த நாள் அனைத்து ஊடகங்களும், இந்தக் காட்சிகளை நெகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தன.. இது சமூகப் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அடுத்து அகிம்சா வழியின் அடிப்படைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஜ்யூ ஜிட்ஸு

அகிம்சை வழியின் அடிப்படைகள், ஜப்பானிய போர்முறைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பது க்ரேக் அவர்களின் பார்வை..

ஒரு மனிதர் இன்னொருவரை வன்முறை மூலம் தாக்குகிறார் என வைத்துக் கொள்வோம். தாக்கப்படுபவர் திருப்பித் தாக்கும் போது, முதலில் தாக்கியவருக்கு, வன்முறையைத் தொடர ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது. தாக்க்கப்படுபவர் திருப்பிக் கூடத்தாக்க வேண்டியதில்லை… அவர் முகத்தில் அவர் வெளிப்படும் கோபமோ அல்லது பயமோ கூட, முதலில் தாக்கத் தொடங்கியவருக்கு, தாக்குதலைத் தொடர ஒரு காரணத்தைத் தருகிறது.

இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் – இங்கேயும் ஒருவர் இன்னொருவர் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறார்.. ஆனால், தாக்கப்படுபவர், பயமின்றி, நிதானமாக, அமைதியாக, சுய கட்டுப்பாட்டுடன் அந்தத் தாக்குதலை எதிர்கொள்கிறார்.. வன்முறையை, வன்முறையினால் எதிர் கொள்ள வில்லை.. மாறாக, அடிகளை, தன் தரப்பிலுள்ள வலுவான காரணத்தினால் வாங்கிக் கொண்டு, அமைதியாகத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். அந்த எதிர்ப்பு, அறத்தின் மீதானது மட்டுமே. தன் தரப்பு நியாயத்தின் மீதுள்ள உறுதியான நம்பிக்கையால், அடிகளை வாங்கிக் கொள்கிறார். திரும்ப அடிப்பதில்லை.  எதிராளியின் கண்களை நேரில் பார்த்து,  பயமோ வெறுப்போ இல்லாமல், ஒவ்வொரு அடியாக வாங்கிக் கொள்கிறார். வன்முறைக்கு எதிராக அகிம்சையை முன்னிறுத்துகிறார்.

வன்முறையைத் துவங்குபவரின் எதிர்பார்ப்பு, எதிரி, தன் வன்முறையைக் கண்டு பயப்பட வேண்டும் என்பதே. பயந்து தோல்வியை ஒப்புக் கொள்வார் என்பதே. ஆனால், அடியை வாங்கும் அகிம்சாவாதியின் பார்வையிலும், தோற்றத்திலும் தென்படும் தைரியம், வன்முறையைத் தொடங்குபவருக்கு ஒரு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. அவர் அகிம்சை வழியில் தெரிவிக்கும் எதிர்ப்பு அவர் பணிந்து போகமாட்டார் என்பதைக் காட்டுகிறது. அமைதியாக, தொடர்ந்து வன்முறை விளைவிக்கும் உடல்வலியை அவர் தாங்கிக் கொள்வது அடிப்பவரைத் துணுக்குறச் செய்துவிடுகிறது.

வன்முறையினால் பாதிக்கப்பட்டவர், திருப்பித் தாக்காத நற்பண்பு, வன்முறையைத் தொடங்குபவரின் அறச்சமநிலையைக் குலைத்து விடுகிறது.  வழக்கமாகப் பாதிக்கப்படுபவர் போல, திருப்பித் தாக்குதலோ, பயமோ ஒரு சத்தியாகிரகியிடம் இல்லாததனால், வன்முறையைத் தொடர்ந்து நடத்த, தாக்குபவரிடம் எந்தக் காரணங்களும் இல்லாமல் போகிறது.

இப்படி எதிர்பாராமல் புதிதாக உருவாகும் சூழல், தாக்குபவரை ஒருவித பாதுகாப்பின்றி உணரச் செய்கிறது. அதை எதிர்கொள்ளத் தெரியாத அறியாமை அவரிடம் வெளிப்படுகிறது. அவர், தனது தன்னம்பிக்கையும், நிதானத்தையும் இழக்கிறார்.  தனது அன்பினால், பெருந்தன்மையினால், வன்முறையின் வலியை சுயமாக ஏற்றுக் கொள்ளும் பண்பினால், அவர் எதிரியை  தன்பால் ஈர்க்கத் துவங்குகிறார். பாதிக்கப்படுபவரிடம், தான் என்ன செய்கிறோம் என்னும் தெளிவும், தாக்குபவரை விட மேலான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறோம் என்னும் அறிதலும், அவரை மேலான ஒரு சமநிலையை அடையச் செய்கிறது. வன்முறையின் துயரை, தன் மேலான அறிவார்ந்த நிலையால் வெல்கிறார்.

இதை இன்னொரு விதமாகவும் பார்க்க முடியும். வன்முறையின் மூலம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இருவர், ஏதோ ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால், அவர்கள் இருவரும், தங்கள் வேறுபாடுகளை, வன்முறையினால் தீர்த்துக் கொள்ளலாம் என்னும் ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள என்னும் மிக முக்கியமான கோணத்தை நம்மைப் பார்க்கச் செய்கிறார் க்ரெக்.

ஆனால், இதை விடுத்து, வேறுபாடு கொண்ட இருவர்களில் ஒருவர், இதுவரை வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் வழியான வன்முறையைக் கைவிட்டு, வேறுபாடுகளை, தரவுகளின், நியாயத்தின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளலாம் என முன்வைக்கையில், வன்முறை வழியை முன்னெடுப்பவர் திகைத்து விடுகிறார். இந்த முறையில், வன்முறையை முன்னெடுப்பவர், தன் அறமின்மையாலும், அகிம்சையின் இந்த நவீனமான அணுகுமுறையாலும் வீழ்த்தப்படுகிறார்..

இது ஜப்பானிய யுத்த முறையான ஜ்யூ ஜிட்ஸூ முறை போன்றது. வன்முறையை எதிர்க்க வன்முறையைப் பயன்படுத்தாமல், வன்முறையின் விசையைக் கொண்டே வன்முறையை வீழ்த்துதல் போல என்கிறார் க்ரேக்.. ஜ்யூ ஜிட்ஸூ தான் ஜூடோ போன்ற ஜப்பானியக் கலைகளுக்கு அடிப்படை.. இதை இன்றைய மொழியில் சொல்வதென்றால் – இப்படிச் சொல்லலாம். நீங்கள் க்ரிக்கெட் விளையாடுகிறீர்கள்.. உங்களை நிலைகுலைய வைக்கும் நோக்கில், பந்து வீச்சாளர் உங்களை நோக்கி ஒரு பவுன்சர் போடுகிறார்.. நீங்கள் சற்றே விலகி, பந்து வரும் திசையிலேயே, மட்டையால், ஹூக் செய்து, பந்தின் விசையை உபயோகித்தே,  பந்தை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பி விடுதல் போன்றது.

க்ரேக், வன்முறையாளரின் இன்னொரு முகத்தையும் காட்டித்தருகிறார். வேற்றுமைகளைத் தீர்த்துக் கொள்ள வன்முறையை நாடும் மனிதர், முழுக்க முழுக்கத் தீயவரில்லை. வன்முறையைத் தாங்கிக் கொண்டு, அகிம்சையை முன் வைப்பவர், வன்முறையில் ஈடுபடுபவரின் ஆளுமையின் நற்பக்கங்களிடம் உரையாடலைத் தொடங்குகிறார்.

இது போன்ற தருணங்களில், இதைச் சில நடுநிலையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் போது, வன்முறையாளர், தன் அணுகுமுறை பற்றிய சங்கடத்தில் ஆழ்கிறார்.. அவரிடம் தயக்கம் உருவாகத் தொடங்குகிறது.

பொதுவாக, சமூகம் வன்முறையின் அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் முறையின் மீது ஒரு ஒவ்வாமை கொண்டிருக்கிறது. அது அறமல்ல எனக் கருதுகிறது. எனவே பிரச்சினையில், சமூகத்தின் நிலை, தாக்கப்படுபவருக்குச் சாதகமாக மாறுகிறது.

வன்முறையாளர்களிடம் தென்படும் குரூரம், கோபம், பயம், தற்பெருமை என்னும் உணர்வுகளின் கலவையாகும். ஆனால், வன்முறையை அகிம்சை முறை எதிர்கொள்கையில் இந்த குரூரங்கள் மெல்ல மெல்ல மங்கி விடுகின்றன.. அவை அழிகின்றன என்று பொருளல்ல.. அவற்றின் தேவை இங்கே இல்லாமல் போகிறது என்பதே. These traits are not a  valid currency against non-violence.

ஜ்யூ ஜிட்ஸுக் கலையின் மிக முக்கியமான அம்சம் – ஒரு உயர் மனச்சமநிலையைப் பேணுதலாகும். இந்த உயர் மனச்சமநிலை என்பது, ஒரு மனிதன், ஒரு உயர்ந்த அறத்தினுடன் வைத்திருக்கும் உண்மையான உறவாகும். இதை இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அன்பு எனச் சொல்லலாம். மனிதர்களின் மீதும், எல்லையற்ற மனித சாத்தியங்கள் மீதும் ஆழமான நம்பிக்கை.. என்றும் மாறாத மானுட விழுமியங்களின் மீதான பெரு மதிப்பு, சத்தியத்தின் மீதான தீராத வேட்கை, எல்லா உயிரும் ஒன்றெனக் கருதும் மனநிலை.. இப்படிச் சொல்லிக்  கொண்டே போகலாம்.

இது எல்லா மனிதர்களிடமும் பல்வேறு அளவுகளில் உள்ளது. சுய பயிற்சிகளின் மூலமும், ஒழுக்கத்தின் வழியாகவும், இந்தக் குணங்களை பெரிதளவு வளர்த்தெடுக்க முடியும் என்கிறார்.. இந்த வழிமுறைகள் வழியே தன்னை மேம்படுத்தி, ஒரு உயர் சமநிலையை அடைவதே ஒரு சத்தியாக்கிரகிக்கான இலக்கு.

கோபம், அன்பு – இவ்விரண்டு குணங்களுமே மனித சக்தியின் வெளிப்பாடுகள்.. இரண்டுமே படைப்பூக்கச் சக்திகள்தாம். ஆனால், அன்பின் சக்தி பெரிது. அது நீடித்து நிலைக்க வல்லது. அன்பு என்பது உயிரின் தொடர்ச்சியின் அடிப்படை. கோபம், அந்தத் தொடர்ச்சியை மறுக்கும் உணர்வு. அன்பு என்பது, அனைத்து உயிர்களும் வாழ வேண்டும் என்னும் நேர்மறை உணர்வு. கோபம் என்பது, எதிர்த்தரப்பு வாழக்கூடாது என்னும் எதிர்மறை உணர்வு

அன்பை ஆயுதமாகக் கையாள்கையில், கோபம் என்னும் ஆயுதத்தை விட மிகுந்த நிதானத்துடனும், செயல் திறனுடனும், துல்லியத்துடனும், தன் இலக்கை எய்துகிறது. அது மனித சமூகத்தின் அங்கீகாரத்தை என்றென்றைக்குமாகப் பெறுகிறது. நீண்ட கால நோக்கில், அன்பே கோபத்தை வென்று அழிவில்லாப் பெருங்குணமாக மனித சமுதாயத்தின் முன் நிற்கிறது.

கோபம், அன்பு, வீரம் என்னும் இந்தக் குணங்களைப் பற்றிய க்ரெக் அவர்கள் எழுதியிருப்பது மிக ஆழ்ந்து கற்க வேண்டிய பகுதிகளாகும். அகிம்சை வழியின் மீது ஆர்வமுள்ளவர்கள், அதை தன் ஆளுமையின் பகுதியாக மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் செல்ல வேண்டிய வழி.

இந்தப் போராட்டத்தில், அகிம்சை வழி போராடுபவர், ஒரு முக்கியமான விஷயத்தை மனத்தில் நிறுத்திக் கொல்வது அவசியம் – வன்முறை போலல்லாமல், எதிராளியை ஒடுக்கி, அவமானப்படுத்தி, அவரது மன உறுதியைக் குலைக்கச் செய்வதல்ல அகிம்சை வழி என்கிறார்.  எதிராளியின் நற்குணங்களுடன் உறவாடி, அவரது புரிதலை மேம்படுத்தி, அவர் மனதை மாற்றி, இரு தரப்புக்கும் ஒத்துவரக்கூடிய ஒரு இலக்கை எட்டுதலே அகிம்சை வழியின் குறிக்கோளாக இருக்க வேண்டும், பரஸ்பர மரியாதை மற்றும் சுயமரியாதை ஒரு குன்றிமணியளவு கூடக் குறையாமல் இது நிகழ வேண்டும் என்கிறார் க்ரெக்.

ஒரு அகிம்சைப் போராளி, தன்னைத் தாக்கவருபவரை, அவர் தாக்கும் போது என்ன தளத்தில் இருந்து தாக்கினாரோ, அதைவிட அதிக உயர் அறத் தளத்தில், தனது செயல்கள் மூலமாக கொண்டு வைக்க வேண்டும் என்கிறார் க்ரெக், அறப்போராட்டத்தின் முடிவில், இரு தரப்புமே முன்பு இருந்ததை விட, அதிக பாதுகாப்பான, மகிழ்ச்சியான, உண்மையான படைப்பூக்கம் நிலவும் சூழலைச் சென்றடைய வேண்டும். அவர்களுடைய உறவு, பல்வேறு திசைகளிலிருந்தும், ஒன்றிணைந்தும் மானுட ஒருமைப்பட்டை அடைவதாக இருக்க வேண்டும் என்கிறார்.

அகிம்சை வழியில் போராடுபவர், தான் முன்னெடுக்கும் கொள்கைக்காக, வன்முறையின் கொடுமையைத் தாங்கிக் கொள்வதைக் காணும் தாக்குபவர் மற்றும் பொதுமக்கள் மனம் நெகிழ்கிறது என்னும் க்ரேக், இதன் காரணங்களை ஆராய்கிறார்

  1. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே, தனது உயிரைக் காத்துக் கொள்ள பெரும் துன்பங்களையும், வலிகளையும் எதிர்கொண்டே வந்திருக்கிறது. துவக்க காலத்தில் விலங்குகள், இயற்கைக்ச் சீற்றங்கள், பின்னர் படையெடுப்புகள் என. எனவே, வன்முறையினால் நிகழும் துன்பங்களை நம் நரம்பு மண்டலம் இயல்பாகவே உணர்ந்து கொள்கிறது. மனம் அதை அனுதாபத்துடன் பார்ப்பது மிக இயல்பான ஒன்றாக இருக்கிறது.
  2. இரண்டாவது, அடிப்படையில் எல்லா மனிதருமே மிகவும் வீரமானவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.. எனவே, தான் கொண்ட கொள்கைக்காக, சுயமாகச் சென்று வன்முறையின் கொடுமையை எதிர்கொள்வதை வியந்து பார்க்கிறார்கள். ஆழ்மனத்தில், அவ்வாறு போராடுபவர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

வன்முறைப் போருக்கும், அகிம்சை வழிக்கும் உள்ள வேறுபாடுகளை க்ரேக் விரிவாகப் பேசுகிறார்.. வன்முறைப் போர் பொதுவாக எதிரியின் முற்றழிவிலோ அல்லது அவரது அவமானத்திலோ முடிகிறது. அப்படி நிகழ்ந்து முடிந்த போரின் இறுதியில் தோற்றவரிடம் வஞ்சம் குடி கொள்கிறது. அது பழிக்குப் பழி என்னும் மாறாத வன்முறைச் சங்கிலியாகத் தொடர்கிறது.

பழங்காலத்தில், தோற்ற அரசன், மீண்டும் போர் தொடுத்து வன்முறையின் மூலம் தன் நாட்டை விடுவித்த வரலாறுகளை நிறையப் படித்திருக்கிறோம். சமீப கால வரலாறு எனில், அது முதலாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனியை மற்ற நாடுகள் நடத்திய விதம்

முதலாம் உலகப்போரின் இறுதியில் ஜெர்மனி பெரிதாக அவமானப்படுத்தப்பட்டது. இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம், ஜெர்மனியின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, ஜெர்மனி தன் நாட்டின் 14% நிலப்பரப்பை இழந்தது. அதுதான் ஜெர்மனியின் இரும்புத்தாது மற்றும் நிலக்கரி கிடைக்கும் பகுதி. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத் தவிர, போர்ச்செலவுகளுக்கான நஷ்ட ஈடும் கொடுக்குமாறு வற்புறுத்தப்பட்டது. இதனால், பண வீக்கம் பெருகி, ஜெர்மனியைப் பொருளாதார வீழ்ச்சியில் கொண்டு நிறுத்தியது. அரசாங்கத்தால், இதை எதிர்கொள்ள இயலவில்லை.  நாட்டின் பல இடங்களில் மக்கள் எழுச்சி நிகழ்ந்தன. மிகுந்த பொருளாதார சிரமத்தில் இருந்த ஜெர்மனி, போர் நஷ்ட ஈட்டை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அது மறுக்கப்பட்டது.

இது போன்ற ஒரு சூழலில் தான், ஜெர்மானியர்கள் தான் உயர் இனம் என்னும் தேசியவாதக் குரல் எழுந்தது. அதுவரை அவமானத்தைச் சந்தித்த ஜெர்மானியர், அந்தக் குரலுக்கு மயங்கினார்கள். அதனூடே ஹிட்லர் என்னும் ஃபாசிஸ்ட் எழுந்து, யூதர்களை வேட்டையாடி அது இரண்டாம் உலகப் போரில் முடிந்தது.

ஆனால், பிரச்சினைகளை அகிம்சை வாதம் எப்படி அணுகுகிறது?

1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணி கிராமத்தில், கூலி உயர்வு கேட்டுப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்களில், 44 பேர் – முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு எதிர்த்தரப்பாக மூன்று அணுகுமுறைகள் இருந்தன. ஒன்று அரசு. இன்னொன்று, தொழிலாளர் தரப்பில் போராடிய அரசியல் தரப்பு. மூன்றாவது காந்தியத் தரப்பு.

முதல் தரப்பு அரசு. அது குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தியது. அவர்களுக்கு, கீழ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தது. குற்றவாளிகள், உயர் நீதி மன்றம் சென்று, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியே விடுதலை பெற்றார்கள்.

இரண்டாவது அரசியல் தரப்பு, அப்படி விடுதலை பெற்று வந்த குற்றவாளியை, கீழ்வெண்மணி மரணங்களுக்குப் பழிவாங்கும் விதத்தில், கொலை செய்தது. இந்தக் கொலையினால் ஆவேசமுற்ற அவர்களின் உறவினர்கள், மீண்டும் கீழ்வெண்மணியின் ஏழைத் தொழிலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள்.

ஆனால், காந்தியத் தரப்பு, நிகழ்ந்த வன்முறையில் நெகிழ்ந்தது. வன்முறையின் ஆணிவேரைக் கண்டது. உணவுக்காக நிலம் உடையவர்களை அண்டிப் பிழைப்பதுதான், ஏழைகளை இது போன்ற கையறு நிலையில் வைத்திருக்கிறது என உணர்ந்து, அவர்கள் அனைவருக்கும் 1 ஏக்கர் நிலம் என்னும் நோக்கத்தை முன்வைத்து, பல ஆண்டுகள் உழைத்து, அதை நிறைவேற்றியது. இதனால், பாதிக்கப்பட்ட தரப்பின் பொருளாதார நிலை உயர்ந்தது. வன்முறைக்குப் பதில் வன்முறை என்னும் சங்கிலித் தொடர் உடைக்கப்பட்டது. நிலையான தீர்வு எட்டப்பட்டது.

அகிம்சைத் தரப்பின் வழி ஏன் உயர்ந்தது என்பதை க்ரேக், ‘utilising emotional energy’, என்னும் அத்தியாயத்தில் மேலும் விளக்குகிறார்.

வன்முறைப் போராட்டத்தில், போராட்டம் முடிந்த பின்னும் அந்த வன்முறை உணர்வுகள் எஞ்சுகின்றன. தோல்வியுற்ற தரப்புக்கு அவமானமே மிஞ்சுகிறது. தாற்காலிகமாகத் தோல்வியை ஒப்புக் கொண்டாலும், கோபம் மிச்சமிருக்கிறது. காலப்போக்கில் அது வெறுப்பாக மாறி, பழிவாங்கும் நோக்க்கத்தை உருவாக்குகிறது. இது தோற்ற தரப்பின் சக்திகளை உறிஞ்சி, அவர்களின் படைப்பூக்கத்தை நிறுத்திவிடுறது. வென்ற தரப்பின் மீதான வெறுப்பே மனத்தை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது. ஒரு நோக்கில், வென்றவர்களின் மீதான வெஞ்சினத்துக்கு, தோற்றவர்கள் அடிமைகளாகி விடுகிறார்கள்.

ஆனால், அகிம்சை வாதி, கோபம் என்னும் சக்தியை விரயம் செய்யும் எதிர் உணர்வை நிறுத்தி விட்டு, அந்த நிகழ்வை விடப் பெரிதான ஒரு உலகத்தை யோசிக்கிறார். கோபம் இல்லாத மனநிலை, அமைதியையும், நிதானத்தையும், படைப்பூக்கத்தையும் தருகிறது. முரண்களுக்கான தீர்வு, வன்முறை நிகழும் ஒரு கீழான தளத்தைத் தாண்டி இருப்பதைக் கண்டு கொள்ள முடிகிறது. நிலையான தீர்வு கிடைக்கிறது.

சமூகத்தின் இரு பெரும் உணர்வுகள் கோபமும், பயமும் என்கிறார் க்ரெக்.. தான் எதிர்கொள்ளும் தரப்பு, தன்னைவிடப் பலவீனமாக இருக்கையில் கோபமும், பலமாக இருக்கையில் பயமும் இயல்பாக எழுகிறது.

எனவே, இந்த இரு உணர்வுகளைத் தாண்டி, தன்னம்பிக்கையை ஊட்டி, ஒரு குழுவாக வெல்ல முடியும் என்னும் உணர்வை உருவாக்க, பயிற்சி தேவைப்படுகிறது. தொடர்ந்த பயிற்சி, வீரர்களுக்கு உடல் உறுதியையும், போர் முறைகளையும் கற்றுத் தருகிறது. இதனால், வீரர்களிடையே போரை எதிர்நோக்கும் உறுதியை, வீரத்தை வளர்த்தெடுக்க முடிகிறது.

அகிம்சை வழிப் போராட்டத்துக்கும் இது பொருந்தும் என்கிறார் க்ரெக். அகிம்சை வழிப் போராட்டத்துக்குத் தேவையான குணங்களான, வன்முறைத் தாக்குதலைத் தாங்கும் மன உறுதியை அடைதல் மிக முக்கியமானது. எந்த நேரத்திலும், எந்தத் தூண்டுதலுக்கும் மயங்காமல், வன்முறையைத் தவிர்த்தல், பொறுமை முதலியன முக்கியமானவை. தனது குறிக்கோளை ஒரு கணமும் மறவாத ஒழுக்கம் கொண்ட படையே, ஒன்றிணைந்து ஒரு போரை வெல்ல முடியும்

அப்படித் தயாரான போர் வீரர்கள் கொண்ட படை இல்லாத குறையை, காந்தி சௌரி சௌராவில் உணர்ந்தார். தன் முதல் பெரும் போரைப் பாதியிலேயே நிறுத்தினார்.  ஆனால், அடுத்த சில ஆண்டுகள் கழித்து, ஒரு சிறு போரில், காந்தி, படையைத் தயார் செய்து, ஒரு தளபதியின் தலைமையில் உருவாக்கி நிறுத்தினார். அது பர்தோலி சத்தியாக்கிரகம். வல்லப் பாய் படேலின் தலைமையில் அது நடந்தது. அந்தத் தாலுக்காவில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும், பல்வேறு மக்களின் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் உதவியோடு, படேல் அனைத்து மக்களிடமும் உரையாடினார். நில வரிகளின் உண்மையான பாரத்தை தரவுகளோடு மக்களிடம் அமர்ந்து திரட்டினார்..

அதன் பின்னர், மக்களுக்கு இந்தப் போராட்டத்தின் விளைவுகளை எடுத்துச் சொன்னார். வன்முறை, சொத்துக்கள் பறிமுதல் என நடக்க சாத்தியமான எல்லா நஷ்டங்களையும் மிகையின்றி, உண்மையாக அவர்கள் முன் வைத்தார். நீண்ட நாள்ப் போராட்டமாக இருக்கலாம்.. பல சோதனைகளை, பட்டினியைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். ஆனால், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், கோரிக்கைகளை வென்றெடுத்தல் சாத்தியம் எனச் சொன்னார். எனவே, ஒவ்வொரு கிராமமும், தங்களுக்குள் விவாதித்து இந்தப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட முடிவு செய்ய கால அவகாசம் கொடுத்தார். இறுதியாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், மக்களின் ஆதரவை உறுதி செய்து கொண்ட பின்னரே போராட்டத்துக்கான தயாரிப்புகளைத் தொடங்கினார்.

இது ஒரு முக்கியமான விஷயம். வழக்கமாக, உணர்வெழுச்சியில், துவங்கும் போராட்டங்கள் பலதும் எதிர்பாராத பின் விளைவுகளினால், மக்கள் மன உறுதி குலைதலால் வீழ்ந்த வரலாறுகள் உண்டு.  போராட்டத்தின் விளைவுகள் பற்றிய சரியான அறிதல் கொண்ட படை, விளைவுகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கும். விளைவுகளை விட, விளைவுகளை ஏற்றுக் கொள்ளத் தயாரான மனநிலையே, போராட்டத்தை  தொடர்ந்து முன்னெடுக்க உதவும்.

போராட்டத்துக்கான தயாரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கையிலேயே, வல்லப்பாய் படேல், அரசுக்கு, உழவர்களின் கோரிக்கைகளை, அதில் உள்ள நியாயங்களை மனுக்களாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்.. அரசு அதிகாரிகளைச் சந்தித்து, விஷயத்தை எடுத்துச் சொல்கிறார். ஆனால், அரசும், அதிகாரிகளும் பிடிவாதமாக இருக்கவே போராட்டம் தொடங்குகிறது.

வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நிலம் அபகரிக்கப்படுகிறது. அபகரிக்கப்பட்ட நிலங்கள் வெளியூரிலிருந்து வரும் பத்தான்கள் என்னும் வட்டிக்காரர்களுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் உள்ளூர் மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால், மக்கள் எதற்கும் அசரவில்லை.. ஏனெனில், படேல் அவர்களுடன் உரையாடி, இதுபோன்ற நஷ்டங்களுக்கு அவர்களைத் தயார் செய்திருந்தார்.

தினமும் தங்கள் தரப்பை படேல் ஊடகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.. இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுதும் ஆதரவு கிடைத்தது. மாகாண சபைகளில் விவாதிக்கப்ட்டது.  5.5 மாதப் போராட்டத்துக்குப் பின்னர் அரசு இறங்கி வந்தது. நிலவரி குறைக்கப்பட்டது. பழிவாங்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. ஒரு போர் வெற்றிகரமாக முடிந்தது

மனிதன் விலங்கிலிருந்து, சிந்திக்கத் தெரிந்த விலங்காகப் பரிணாமம் கொண்டெழுந்து வந்த பாதை உலக வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல். விலங்காக இருந்த காலத்தில், அவன் பெரும்பாலும் சக விலங்குகள் அல்லது இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த அபாயங்களுக்கு அவன் உடனடி எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவையும் இருந்தது. ஒன்று எதிர்த்துப் போரிடுதல் அல்லது போர்க்களத்திலிருந்து ஓடிவிடுதல்.

ஆனால், சிந்திக்கத் துவங்கியதன் பின்னால், மனிதனின் ஆற்றல் பன்மடங்கு கூடியுள்ளது. அவன் கண்டுபிடித்த கருவிகள் அவனது அடிப்ப்டைத் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்து கொள்ள உதவின.

உடல் சக்தியின் தேவைகள் மனிதனின் கண்டுபிடிப்புகளால் மிகவும் குறைந்து விட்டது. உணவுக்காக அலையாமல், வேட்டையாடாமல், வேளாண்மையைத் தொடங்கினான். அதைச் செய்ய இயந்திரங்களைக் கண்டுபிடித்து, உடல் உழைப்பின் அவசியத்தை மேலும் குறைத்துக் கொண்டான்.

இயந்திரங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்றவை மனிதனை, மண்ணில் பெரும் ஆதிக்க சக்தியாக மாற்றியிருக்கிறது.

அபாயங்களை முன்னுணரும் சக்தி அதிகரித்திருக்கிறது.  எனவே ஆதி காலம் போலல்லாது, அபாயங்களுக்கு வன்முறை அல்லது பயம் என்னும் உணர்வால் உடனடி எதிர்வினை ஆற்றும் தேவை இன்று இல்லை.

இன்று மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், சமூகம், பொருளாதாரம், உடல் நோய், ஏழ்மை போன்ற தளங்களைச் சார்ந்தவை. இன்றைய நிலையில் சுற்றுச் சூழல் சீர்கேடும் நம் கண் முன்னே நிற்கும் பெரும் பிரச்சினையாகும். இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள பண்டைய காலம் போல உடனடி எதிர்வினைகள் உதவாது.

நிதானம், தீர்க்கதரிசனம், அறிவாற்றல் போன்றவற்றை உபயோகித்து, பிரச்சினையின் ஆணிவேரை அறிந்து கொண்டு, அதைத் தீர்க்க நிதானமாக எடுக்கப்படும் தீர்வுகள்தான் சரியாக இருக்கும். இதற்கு மனித சக்தி தேவை – உடல் சக்தி அல்ல – அறிவு மற்றும் அறம் என்னும் மனத்தின் சக்திகள்.

மனித பரிணாம வரலாற்றில், இன்று வன்முறை, பயம் போன்ற ஆதி உணர்வுகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அவை மனித வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லத் தடைகளாகவும் இருக்கின்றன என்கிறார் க்ரேக்.

They have become hygienically bad for the Individual and the race என்னும் அவரது வாக்கியம் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இதை இன்றைய காந்தியச் செயல்பாட்டாளர்கள் உணர்ந்து, சமூகத்திற்கு கொண்டு சென்று, உணர்த்த வேண்டும்.

உடல் வேலைகளின் போது, தசைகளின் சக்தி செலவழிக்கப்படுகிறது. அதனால் உடல் தளர்வடைகிறது.. கோபம், பயம், துயரம் போன்ற உணர்வுகள் மேலெழும் போது, உடலின் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் தளர்வடைந்து அதைவிட அதிகமான சக்தி விரயமாகி, மனதைத் தளரச் செய்கிறது என, ஒரு பெரும் அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணரை மேற்காட்டிச் சொல்கிறார் க்ரேக்.

இது உடல் செயல்பாடுகளில் பெரும் மற்றங்களை உருவாக்குகிறது.

இது ரத்தத்தில் அட்ரினலின் ஹார்மோனையும், சர்க்கரை அளவுகளையும் அதிகரிக்கிறது. ஆனால், பண்டைக் காலம் போல, இவையிரண்டும் செல்வழிக்கப்படாத தால், அது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது என்கிறார் க்ரெக்.

கோபம், பயம் என்னும் ஆதி உணர்வுகள் ஒரு காலத்தில் மனிதனுக்கு, தனக்கு ஏற்படும் அபாயங்களைக் காத்துக் கொள்ளும் உடனடித் தீர்வுகளைக் காண உதவின.. ஆனால், பரிணாம வளர்ச்சி பெற்று, அந்தப் பேரிடர்கள் இல்லாத காலத்தில், இவை தேவையற்றவை மட்டுமல்ல, மனிதனின் உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும் தீங்கு விளைவிப்பவை. எனவே உயிரியல் ரீதியாக, அவை செயல் திறன் மிக்க உணர்வுகளல்ல என்கிறார் க்ரெக்.

இந்த உணர்வுகள் மனித மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அதனாலேயே இவை முக்கியமானவை அல்ல. கோபம், பயம் போன்ற உணர்வுகளுக்கு மாற்றாக, அன்பு என்னும் நேர்மறை உனர்வைப் பயிற்சிகள் மூலம் வளர்த்தெடுத்தல், மனித சக்தியின் செயல் திறனை அதிகரிக்க வல்லது.

அடுத்தபடியாக அகிம்சைப் போராட்டத்துக்குத் தயாராவது எப்படி என்பதைப் பேசுகிறார் க்ரெக்.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும், யாரோ ஒரு தலைவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார் எனக்காத்திருக்காமல், அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கமுடியும் என்கிறார்.   உலக அமைதியையும், ஒருமைப்பாட்டையும் காப்பது தலைவர்களிடம் மட்டும் உள்ள பொறுப்பல்ல.. நம் ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்கி, தொடர்ந்து செல்ல வேண்டிய ஒன்று. அப்படி எடுக்கப்படும் சிறு அளவு நேர்மையான, தைரியமான முன்னெடுப்புகளின் விளைவுகள்கூட நம் அறிதலுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டவை என்கிறார் க்ரெக்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பள்ளி செல்லாமல், சுற்றுச் சூழலுக்காகக் குரல் கொடுத்த க்ரெட்டா துன்பர்க் என்னும் பதின்பருவச் சிறுமி, உலகில் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வே இதற்கு சாட்சி.

அகிம்சை ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக மாற வேண்டுமெனில், அதைப் பின்பற்ற முடிவெடுக்கும் மனிதர்கள், அதை மனதுக்குள் வாங்கி, மிகப் பெரும் ஒழுக்கத்துடன் அந்தக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். அதன் முதல்படி, அகிம்சையின் முக்கியக் கூறுகளை அறிந்து கொள்வது. அடுத்தபடி, மனதுக்குள் அதற்கான எண்ணங்களையும், உணர்வுகளையும் திட்டமிட்டு வளர்த்துக் கொள்வது. தொடர் பயிற்சிகளின் மூலம் அந்த உணர்வுகளை இயல்பான மனநிலையாக மாற்றி அதன் அடிப்படையில் செயல் திட்டங்களைத் தொடங்குவது.

அகிம்சை வழியில் செல்பவர், சமூகப் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளின்றி, அனைத்து மனிதர்களிலும், தெய்வாம்சமும், வளர்ச்சி மேம்பாட்டுச் சாத்தியங்களும் உண்டு என்பதை உறுதியாக நம்புபவர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து, அகிம்சை வழிகளை நீண்டகாலம் பயிற்சிகளில் ஈடுபடும் ஒரு அமைப்பு, விழிப்புணர்வு கொண்டதாக, வலிமையானதாக, அறங்களினால் உந்தப்பட்டதாக, சமூக நல்லிணக்கம் கொண்டதாக, பெருங்கருணை கொண்டதாக, படைப்பூக்கத்தால் இயக்கப்படுவதாக உருமாறுகிறது என்கிறார் க்ரெக்.

1922 ஆம் ஆண்டு, சௌரி சௌரா என்னும் இடத்தில் நிகழ்ந்த வன்முறையின் காரணமாக அதை நிறுத்திய காந்தி, தன் போராட்டங்களுக்கென, அகிம்சையை வாழ்வியலாகக் கொண்ட தொண்டர்களை உருவாக்குகிறார். அனைத்து உயிர்களின் சமத்துவம், கொல்லாமை, மது உண்ணாமை, உடல் உழைப்பின் முக்கியத்துவம், புலனடக்கம், ஒழுக்கம், பிரார்த்தனை, சத்தியத்தின் மீதான முழு நம்பிக்கை முதலியன அவர் தொண்டர் படைக்கான பயிற்சிகளாக மாறுகிறது. தன் குழுவை விட அதீத ஒழுக்க விதிகளைத் தனக்கு விதித்துக் கொள்கிறார்.

அதன் ஒரு பகுதிதான், ஆசிரம வாசிகளும், தொண்டர்களும், தங்கள் கழிவுகளைத் தாங்களே சுத்தம் செய்து கொள்வது என்பது. ஒரு உயர்சாதி மனிதர், குறிப்பாக பிராமணர் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்தால், அவருக்கான முதல் பணி கழிவறையைச் சுத்தம் செய்தல்தான் என ஒரு வழக்கே இருந்தது. இது வெறும் ஒரு குறியீட்டுக்காகச் செய்யப்பட்டிருந்தால், அது போலித்தனமாக இருந்திருக்கும். ஆனால், அதை காந்தி முதல் அனைவரும் செய்கையில், அது ஒரு அடிப்படை அறமாக மாறுகிறது. மானுட சமத்துவமும், ஒற்றுமையும் உயிர்த்திருக்கும் விழுமியமாக நிலைகொள்கிறது.

உணவுகளில் அவர் செய்த பல பரிசோதனைகள், உணவை, அடிப்படை ஊட்டத்துக்காக மட்டுமே இருக்க வேண்டிய ஒன்று என இன்னொரு விழுமியமாக மாறியது. காந்தி ஆசிரமத்தில் புதிதாகச் சேர்ந்த ஜே சி குமரப்பாவுக்கு, முதலில் காந்தி பரிமாறியது வேப்பிலைச் சட்டினி.

இதைப் பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள். படேல், ‘குமரப்பா.. பாபு, முதலில் ஆட்டுப்பால் குடித்துக் கொண்டிருந்தார்.. இப்போது ஆடு சாப்பிடுவதையே சாப்பிடத் தொடங்கி விட்டார்’, எனச் சொன்னதாகக் குறிப்பு இருக்கிறது. ஆனால், அவர்கள் எவருமே புரிந்து கொள்ளாத விஷயம் என்னவெனில், மானுட மேன்மையை லட்சியமாக வையத்தலைமை ஏற்ற ஒருவருக்கு உணவில் கூட புலன்களின் இன்பம் ஒரு தேவையாக இருக்க முடியாது..எனெனில், புலன்களின் இன்பத்தைத் தீர்க்க வேண்டுமெனில், தேவைக்கு மேல் உண்ண நேரிடும். அது இன்னொருவருக்கான உணவு. காந்தியைப் பொருத்த வரை, உணவு என்பது உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து மட்டுமே.

காந்தியப் போராட்டத்தின், மற்றொரு முகம் உண்மைக்கான தேடல்.  இந்தியா வந்ததும், அவர் கோகலேவின் ஆலோசனையின் பேரில் செய்த முதல் காரியம், ஒரு ஆண்டு இந்திய நிலப்பரப்பை மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து சுற்றி வந்தது என்பதை நாம் அறிவோம். மற்ற தலைவர்களும் பயணம் செய்தார்கள்.. ஆனால், காந்தி அந்தப் பயணங்களூடே சாமானிய மனிதர்களுடன் வாழ்ந்தார்.

அதன் வழியே, இந்தியர்களுக்குத் தேவை, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல.. கடைநிலை மனிதனும், சமூகப் பொருளாதார விடுதலை பெறுவது என்பதை அறிந்து கொண்ட அவரின் இலக்கு, மற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் கொண்டிருந்ததை விட விரிவான ஒன்றாக இருந்தது. இதை அவர் தென்னாப்பிரிக்க அன்பவத்திலேயே உணர்ந்திருந்தாலும், ஒரு ஆண்டுகாலம் அவர் செய்த களப்பணி, நிலையை அவருக்கு மேலும் துல்லியமாக உணர்த்தியது.  தன் உடை கூட ஆடம்பரம் என்னும் நிலைக்கு வருகிறார் – அரையாடை அணியத் துவங்குகிறார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்ற அவர் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். வெளியே வந்ததும், பொருளாதாரம், சமூகம் என இரண்டு தளங்களிலும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினார். கதர் இயக்கமும், ஹரிஜன மேம்பாட்டுச் செயல்பாடுகளும்  முக்கியத்துவம் பெற்றன.  அவரது தாக்கம் காங்கிரசில் இருந்தாலும், அவரது செயல்பாடுகள், காங்கிரஸைத் தாண்டிய ஒரு விரிவான தளத்தில் இருந்தன.

பல்லாயிரக்கணக்கான அகிம்சைப் போராளிகளை கிராமங்களில் பணி புரிய அனுப்பி வைத்தார். அங்கே அவர்கள் கதர்த் தொழில் உருவாக்கத்துக்கும், ஹரிஜன மேம்பாட்டுக்கும், மிகக் குறைந்த ஊதியத்தில், எளிமையாக வாழ்ந்து உழைத்தார்கள். அந்த சத்தியாக்கிரகப் படை, மானுட சமத்துவத்தை, எளிமையை, சேவையை, பிரார்த்தனையை, சுய ஒழுக்கத்தைத் தன் ராணுவப் பயிற்சியாக தினமும் செய்து வந்தது.

முதலாம் உலகப் போர் முடிந்த அந்தக் காலகட்டத்தில், உலகில் செய்தி ஊடகங்களும், பத்திரிகைகளும் பெரும் அளவில் வளரத் தொடங்கின. இதனால், இந்தியாவில் நிகழும் செய்திகளும் உடனுக்குடன் உலக அரசியல் அரங்குகளில் தெரிய ஆரம்பித்தன.. காந்தி, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருந்தார். ஹரிஜன், யங் இந்தியா போன்ற பத்திரிகைகள் வழியே தன் சீடர்கள் மற்றும் உலகத்துடன் உரையாடிக் கொண்டே இருந்தார்.

1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்தி,வைசிராய்க்கு 11 வேண்டுகோள்களை முன்வைத்து, ஒரு கடிதம் எழுதுகிறார். நிலத்தின் மீதான அதீத வரி, ஆங்கில அரசு ஊழியருக்குக் கொடுக்கும் அதீத ஊதியம், மது விலக்கு, உப்பின் மீதான வரி, இந்திய-பவுண்ட் ஸ்டெர்லிங் பண மாற்று மதிப்பைக் குறைத்தல், கடல் வாணிகத்தை இந்தியர்களுக்கு ஒதுக்குதல் முதலியவை அதில் முக்கியமானவை.

இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், தான் சத்தியாக்கிரகத்தை தொடங்கப் போவதாகத் தெரிவித்தார். அவர் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், சபர்மதி ஆசிரமத்திலிருந்து, மார்ச் மாதம் 12 ஆம் தேதி, 240 மைல் தொலைவில் உள்ள தண்டி என்னும் கடற்கரைக்கு நடை பயணம் துவங்கினார்.

வழிநெடுக, காந்தி, பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டும், கட்டுரைகள் எழுதிக்கொண்டும் செல்கிறார்.  24 நாட்கள் கழித்து, தண்டி என்னும் ஊரின் கடற்கரையில், அவர், தன்னை ஆளும் அரசின் சட்டத்தை மீறி உப்பை அள்ளுகிறார். இதை அள்ளுவதன் மூலம், வல்லமை மிக்க ஆங்கில அரசாங்கத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன் என முழக்கமிடுகிறார்.  ‘நீங்கள் எங்களை ஆளுவதன் அடையாளமாகிய சட்டத்தை நாங்கள் பொருட்படுத்தவில்லை. நீங்கள் எங்களை ஆள்பவர்களல்ல’, என்பதை மறைமுகமாக அறிவிக்கிறார். அதன் பின்னும் எதிர்த்தரப்பு புரிந்து கொள்ளவில்லை.  நாடெங்கிலும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்களும் தொண்டர்களும், சட்டத்தை மீறிய குற்றத்துக்காகக் கைதாகிறார்கள்.

தரசானா உப்புத் தொழிற்சாலையை முற்றுகையிடப் போவதற்கு இரண்டு நாட்கள் முன்பு, போர்ப்படைத் தலைவரான காந்தியைக் கைது செய்கிறார்கள். ஆனால், போர் நிற்கவில்லை. போரின் உச்சகட்டமாக, தரசானா உப்புத் தொழிற்சாலை முற்றுகையில், தொண்டர்கள் அணி அணியாக முன்னேறுகிறார்கள். முன்னேறும் ஒவ்வொரு அணியும், காவலர்களால் அடித்து வீழ்த்தப்படுகிறார்கள்.

Bala

இதை நேரில் பார்த்த வெப் மில்லர் என்னும் பத்திரிகையாளர்,

“கடந்த 18 ஆண்டுகளில், 22 நாடுகளில், பல்வேறு குடியுரிமைப் போராட்டங்களை, கிளர்ச்சிகளை, கலவரங்களை நேரில் கண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம்விட, தரசானாவில் சத்யாக்கிரகிகளுக்கு நிகழ்ந்த கொடுமை,  என்னை மிகவும் பாதித்த ஒன்றாகும். வாயில்லா ஜீவன்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதை நேரில் காணுவது போன்ற அருவெறுப்பையும், துயரத்தையும் உணர்ந்தேன்.  மனதில் கோபமும், அவமானமும் ஒரே சமயத்தில் எழுந்தன. சில சமயம், அந்தக் கொடுமையைக் காண சகிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டேன்’, எனப் பின்னர் சொன்னார்.

இந்தக் காட்சியை, அட்டன்பரோ, காந்தி திரைப்படத்தில் மிகத் துல்லியமாகப் படமாக்கியிருப்பார். அன்று வெப்மில்லர் அனுப்பிய செய்தி உலகில் 1350 பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அமெரிக்க செனட்டிலும் அது படிக்கப்பட்டது. பல வெளிநாட்டுப்பத்திரிகையாளர்களும், மும்பைத் திரைப்படக் கம்பெனிகளும், அவரது யாத்திரையை ஒளிப்படமாக எடுத்து அதை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.

நியுயார்க் டைம்ஸ் நாளிதழ், தண்டி யாத்திரையின் போது, பல கட்டுரைகளை எழுதியது.  காந்தி தண்டியில் உப்பை அள்ளிய ஏப்ரல் 6 ஆம் தேதி, மற்றும் 7 ஆம் தேதி,  தன் முதல் பக்கத்தில் கட்டுரைகளை வெளியிட்டது. 1930 ஆம் ஆண்டு, ‘டைம்’, இதழ் காந்தியை, உலகின் மிக முக்கியமான மனிதர் எனக் கௌரவித்து, அட்டைப்படத்தில், காந்தியின் புகைப்படத்தை வெளியிட்டது. இவையனைத்தும் சேர்ந்து, உலக நாடுகளில், காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்குப் பெரும் ஆதரவைத் தேடித்தந்தது. உலகெங்கும், ஆங்கில அரசின் காலனி ஆதிக்கத்துக்கு, எதிரான மனநிலை உருவாகத் தொடங்கியது. உப்புச் சத்தியாக்கிரகத்தின் வெற்றி, இந்தியர்களின் ஒப்புதலின்றி, இனிமேலும், இந்தியாவை ஆட்சி செய்தல் கடினம் என ஆங்கில அரசை உணரவைத்தது.

அகிம்சைப் போர்களிலேயே மிக உன்னதமான போர் இந்த உப்புச் சத்தியாக்கிரகம்தான்.  அகிம்சை வழியில், ராணுவ ஒழுக்கத்தோடு பயிற்றுவிக்கப்பட்ட படை, படைகளினால் உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி, படையை வழிநடத்த சரியான தளபதிகள், எதிரி எதிர்பார்க்காத போர்த்தந்திரம் என வழக்கமான போர்களின் வழிகளில், ஆனால் முற்றிலும் மாறுபட்ட போரை நடத்தி வெற்றி பெற்றார் காந்தி.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஸ்தம்பித்துப் போனது என்பதே உண்மை.

இந்தப் புத்தகத்தை முடிக்கையில், க்ரேக், கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

This book is only an elementary statement of the values and possibilities of non-violent resistance. Some day we shall know them more clearly and fully. Much more than there is in this book can be learned from the words and lives of the great leaders and practisers of this idea.

Yet many of their truths need restatement in modern phraseology in order to be clearly understood. Men have become so disillusioned by ages of greed. violence and war that few now really believe that the kingdom of God can actually be created here on earth. But I believe that this ideal can be realised. This book is an attempt to describe the practical instrument by which we can make very great progress towards that goal.

காந்தியைச் சில ஆண்டுகள் முன்பு வரை, ஒரு பௌராணிகரைப் போலவே அணுகி வந்தேன்..  நண்பர்களுடனான உரையாடல்களில், குறிப்பாக இளம் தலைமுறையினர், காந்தியை, காந்தியத்தை ஒரு காலாவதியான ஒரு ஆளுமையாகவும், கருதுகோளாகவும்  நினைக்கிறார்கள் என அறிகையில் வருத்தமாக இருந்தது.

சுதந்திரச் சந்தை என்னும் கருதுகோள் சமூகக் கருத்தியலில் செய்யும் மேலாதிக்கம் காரணமாக, காந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வது நின்று போய், அது இன்றைய காலகட்டத்துக்கு உதவாத ஒரு முறை என்பதை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள்.

அது தவறு. காந்தியம் என்பது அறிவியற்பூர்வமான, மேலான பொருளாதாரக் கொள்கை. சுதந்திரச் சந்தை என்பது வலுவான மக்களுக்கு நன்மை செய்து, வலுவற்ற மக்களை வெளியே தள்ளுகிறது.. ஆனால் காந்தியம் சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மனிதனையும் அணைத்து, அனைத்து மக்களுக்குமான முன்னேற்றத்தைக் கொடுக்க வல்லது. காந்தியப் பொருளியல் அடிப்படையில் இயங்கும் அமுல், அர்விந்த் கண் மருத்துவக் குழுமம் போன்றவை, எந்தத் தனியார் துறையையும் விடப் பலமடங்கு செயல்திறன் கொண்டது என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக கட்டுரைத் தொடர் எழுதினேன்.

ஆனாலும் கூட, காந்தியைப் பொருளாதாரம், சூழலியல் என்னும் இரு குறுகிய சாளரங்கள் வழியேதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் புத்தகம், காந்தியை முழுமையாகப் பார்க்காமல், சில குறுகிய சாளரங்கள் வழியே பார்க்கும் பார்வை தவறு என மனதில் மிக ஆழமாகப் பதித்துவிட்டது.

காந்தியம், ஏட்டுச் சுரைக்காய் அல்ல. ஒவ்வொருவரும் தன்னுள் ஆழ்ந்து அவற்றின் பல்வேறு பரிமாணங்களை, ஊடு பாவுகளை, தொடர்புகளை அறிந்து கொள்கையில், நாம் வேறு மனிதராக மாறுகிறோம். சத்தியமும் அகிம்சையும்தான் மனித குலத்தை மேம்படுத்தும் வழி என்பதை அறிவியற்பூர்வமாக உணர்கையில், நம் நம்பிக்கை அசைக்க முடியாததாக மாறுகிறது. நான் இந்தப் புத்தகத்தை முழுவதும் உணர்ந்து, ஆழ்ந்து கற்றுக் கொண்டேன் எனச் சொல்ல மாட்டேன். இது எளிதான புத்தகமும் அல்ல.

ஒவ்வொரு வாக்கியத்தையும் கற்று, உள்ளுணர்ந்து, தியானிக்க வேண்டும். அப்படித் தியானிக்கையில், நம்முள் இருக்கும் அறப்பிசிறுகள், அறியாமை, அறிவியல் அடிப்படையல்லாத மூட நம்பிக்கைகள் எனப் பலதும் மெல்ல மெல்ல விலகும் என நம்புகிறேன்.. சில பத்திகளைப் படித்து விட்டுப் பலநேரம் செயல் மறந்து சிந்தித்ததன் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.

காந்தியத்தை நம்பும் என் போன்ற பலரும், அது இன்றைய வேக ஓட்டத்தில் பின் தள்ளப்படுவதை ஒருமாதிரியாக ஒத்துக் கொண்டோம் எனத்தான் சொல்ல வேண்டும்.. ஆனால், இந்தப் புத்தகத்தை ஒருவர் ஆழ்ந்து கற்று உணர்ந்தால்,  மனதில் ஒரு paradigm shift ஐ உருவாக்க வல்ல ஒரு ஆயுதம்.  இதுவரை படித்ததிலேயே, என்னை மிகவும் பாதித்த புத்தகம் இதுதான்.

ஒரு முறை, காந்தி தன் சக விடுதலைப் போராட்டத் தலைவர்களுடன் பேசுகையில், ‘ரிச்சர்ட் க்ரேக் என்னைப் புரிந்து கொண்ட அளவுக்கு, நீங்கள் என்னைப் புரிந்து கொண்டுவிட்டால், நான் நிம்மதியாகச் சாவேன்’, எனச் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு கணமும் உயிர்ப்புடன், உயர் அறநிலையில், மானுட சாத்தியங்களின் உச்சத்திலேயே வாழும் காந்தி போன்ற ஒருவர், ரிச்சர்ட் க்ரேக்கைப் பற்றி இவ்வாறு சொல்லியிருக்கிறார் எனில், காந்திய வழியை ரிச்சர்ட் க்ரெக் எவ்வளவு ஆழமாக உள்வாங்கியிருக்கிறார் என அறிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகம் காந்தியர்களால் படிக்கப்பட்டு, உள்வாங்கப்பட்டு, இதற்கான பொழிப்புரைகள் எளிய மொழியில் எழுதப்பட வேண்டும் என ஆசையாக இருக்கிறது. பல ஆண்டுகள் முன்பு, நவீன மேற்கத்திய இசையில், திருவாசகத்தை புதிய வடிவில் மக்கள் முன் வைத்தார் இளையராஜா.. அப்படி ஒரு தருணத்திற்காக இந்தப் புத்தகம் காத்துக் கொண்டிருக்கிறது.

.

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 3
அடுத்த கட்டுரைஎஸ்.என்.நாகராஜன் -அஞ்சலிகள்